திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013 12:45 |
1918ஆம் ஆண்டு சூலை மாதம் 18ஆம் தேதி எளிய குடும்பத்தில் பிறந்த நெல்சன் மண்டேலா 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மறைந்தார். 95 ஆண்டுகள் வாழ்ந்த அவர் அதில் 27 ஆண்டுகளை தனிமைச் சிறையில் கழித்திருக்கிறார்.
தனது 44ஆம் வயதில் சிறை புகுந்த அவர் 72ஆம் வயதில் வெளியில் வந்தார். உலக நாடுகளில் விடுதலைக்காக போராடிய தலைவர்கள் யாரும் இவரைப் போல் நீண்ட காலம் சிறைவாசம் செய்தது இல்லை. அவருடைய வெஞ்சிறை வாசம் நீக்ரோ மக்களை விழித்தெழ வைத்தது. நிறவெறிக் கொடுமைக்கெதிராக தனது மக்களைத் திரட்டி, போராடி வெற்றிப்பெற்றவர் அவர் என்று சொன்னால் மிகையாகாது. நீண்ட கால சிறைவாசத்தை முடித்து வெளியில் வந்தபோது தன்னைச் சிறை வைத்தவர்கள் மீது அவருக்கு எத்தகைய கோபமும் இல்லை. எல்லோரையும் மறப்போம் மன்னிப்போம் என்றுகூறிய பேருள்ளம் அவருக்கு இருந்தது.
தொண்டு, துன்பம், தியாகம் இம்மூன்றின் வடிவமே மண்டேலா ஆவார். ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள அத்தனை நாடுகளிலும் அடிமைகளாக வாழ்ந்த நீக்ரோ மக்களை விழித்தெழ வைத்து, அவர்கள் விடுதலை பெறவும் வழிகாட்டியவர் மண்டேலா.
1994ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவராக அவர் பதவியேற்றார். சிறைவாசியாக இருந்த போது எத்தகைய மனதிட்பம் கொண்டு விளங்கினாரோ அதே மனதிட்பத்துடன் பதவியையும் அணுகினார். அதுமட்டுமல்ல 5 ஆண்டுகள் முடிவடைந்தபோது, பதவியைத் துறந்து வெளியேறினார். அவர் விரும்பியிருந்தால் சாகும்வரையில் அவரே குடியரசுத் தலைவராக நீடித்திருந்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்ய அவர் விரும்பவில்லை. தன்னுடன் சிறைக்கொடுமைகளை அனுபவித்த தனது தோழர்கள் அந்தப் பதவியில் அமர்வதற்கு வழிவிட்டு விலகினார். இந்தத் தியாக உள்ளம் யாருக்கும் வராது. அதனால்தான் இன்று எந்தப் பதவியிலும் இல்லாது அவர் மறைந்த போது 100 நாடுகளுக்கு மேற்பட்ட அரசு அதிபர்களும் மற்ற தலைவர்களும் அவருக்கு வீரவணக்கம் செலுத்த கூடினார்கள். பதவியில் இல்லாமல் இத்தகைய மதிப்பை பெற்றவர் காந்தியடிகள் ஆவார். அவருக்குப் பின் இந்த மதிப்புக்குரியவராக மண்டேலா திகழ்ந்தார்.
உலகம் முழுவதிலும் விடுதலைக்காகப் போராடும் மக்களுக்கு அவர் ஒரு கலங்கரை விளக்கம். அவருடைய ஒப்பற்றத் தியாகமும் தன்னலமற்றத் தொண்டும் இன்னும் நீண்ட காலத்திற்கு மக்களால் மறக்க முடியாது.
|