தமிழ் மண்ணையும், தமிழர் வேளாண்மையையும் மிகமிக நேசித்தவர் மறைந்த வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் ஆவார்.
நாடெங்கும் பசுமைப் புரட்சி தீவிரமாகப் பரவிய காலக்கட்டத்தில் இயற்கை வேளாண்மை தொடர்பாக.. உறுதியுடன் தனது இலட்சியப் பயணத்தைத் தொடங்கியவர் நம்மாழ்வார். அதற்காக தான் பார்த்து வந்த அரசு வேலையான மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனப் பணியையும் உதறித் தள்ளினார்.
பசுமைப் புரட்சி என்ற பெயரால் இரசாயன உரங்களை பயன்படுத்தும்படி விவசாயிகளை அரசு ஊக்குவித்துக்கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராக இயற்கை உரத்தைப் பயன்படுத்துமாறு கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளைச் சந்தித்து இரசாயன உரப் பயன்பாட்டால் எந்த விதத்தில் நமது மண் பாழ்பட்டுப்போகும் என்பதைப் பற்றி விளக்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டிய பெருமை நம்மாழ்வாருக்கு உண்டு.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மூலம் மண்ணுக்கு மட்டுமல்ல. அந்த விளை பொருட்களை உண்ணும் மனிதனுக்கும் கேடு ஏற்படும் என்பதை விளக்கி அதற்கு எதிராக விவசாயிகளை அணி திரட்டினார். அதே வேளையில் நமது பாரம்பரிய ஒட்டு இரகங்களை ஊக்குவித்தார்.
ஒற்றை நடவுமுறை அல்லது செம்மைநெல் சாகுபடி என்பது தமிழர்களுக்குப் புதிதல்ல. இம்முறையை உலகிற்கே அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள் என்ற உண்மையை ஆதாரங்களுடன் நிரூபித்து அதற்கான பரப்புரையை மேற்கொண்டவர் நம்மாழ்வார்.
1960 மற்றும் 1970களில் கலப்பின இரகங்களை தமிழ்நாட்டில் புகுத்தும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தபோது. அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர் அவரே.
நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி மட்டுமல்ல. மிகச்சிறந்த சுற்றுச்சூழல் இயலாளரும் ஆவார். நமது காடுகள் அழிக்கப்படுவதை எதிர்த்துப் போராடினார். சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை தொடர்பாக இயங்கி வந்த பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு அமைக்கப்பட்டதற்கு நம்மாழ்வாரின் வேண்டுகோளே காரணமாகும்.
நமது பாரம்பரிய தானியங்களான சாமை, கம்பு ஆகியவை இன்றைக்கு வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன என்றால் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளே காரணமாகும்.
இவற்றையெல்லாம் தமிழக இளைஞர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக கரூர் மாவட்டத்தில் அவர் தொடங்கிய வானகம் பண்ணையில் 6000த்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இயற்கை வேளாண்மைப் பயிற்சியை முடித்திருக்கிறார்கள்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே'' என்று கூறிய திருநாவுக்கரசரின் வாக்கிற்கேற்ப வாழ்ந்து காட்டியவர் நம்மாழ்வார்.
தமிழர் ஈக வாழ்க்கையின் சின்னமாகவும் பண்பாட்டுச் சின்னமாகவும் திகழும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நீரியல் அறிஞர் பழ. கோமதிநாயகம் அவர்களது நூலை வெளியிட்டுப் பேசியதே அவர் கடைசியாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சியாகும்.
அவரது மறைவின் மூலம் தமிழகம் பயன் எதிர்பாராது தொண்டாற்றிய அறிஞர் பெருமகனை இழந்திருக்கிறது. தமிழ் மண்ணையும் தமிழக விவசாயிகளையும் அவர் நேசித்த அளவிற்கு வேறு யாரும் நேசிக்கவில்லை. எந்த இயற்கை வேளாண்மையை இடைவிடாமல் அவர் வற்புறுத்தினாரோ அதை அப்படியே பின்பற்றுவதன் மூலம்தான் அவருக்குத் தமிழர்கள் உண்மையான அஞ்சலியைச் செலுத்த முடியும்.
|