நஞ்சு கக்கும் "இந்து' ராம் - பாலசிங்கம் வெளியிட்ட உண்மைகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 ஜனவரி 2014 15:17

இந்து நாளிதழ் குழுமத்தின் தலைவர் என். ராம் "இந்து' தமிழ் நாளிதழுக்கு 1-1-14 அன்று அளித்த நேர்காணலில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் எதிராக நஞ்சு கக்கியுள்ளார்.

பிரபாகரன் ஒரு போல்பாடிஸ்டு. துப்பாக்கி மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கை, பேச்சுவார்த்தைகளில் கிடையாது. இராசீவ்-செயவர்த்தனா உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போதே இது எனக்குத் தெளிவாகிவிட்டது என்றும் இன்னும் விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தியும் கூறியுள்ளார்.

ஆனால், உண்மை என்ன? இராசீவ்-செயவர்த்தனா உடன்பாட்டின் பின்னணியில் என். ராம் செய்த இரண்டக வேலைகளை விடுதலைப் புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம் அம்பலப்படுத்தியுள்ளார். (பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் பக்கம் 361 - 363)

இந்திய-இலங்கை உடன்பாடு உருவாக்கப்பட்ட பின்னணி நிகழ்வுகளை இலங்கையில் இந்தியத் தூதுவராக இருந்த தீட்சித் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கொழும்பில் எனது பணி என்னும் தலைப்பில் எழுதிய நூலில் விவரித்துள்ளார்.

ஒப்பந்தம் உருப்பெற்றதன் மூலக் கதையை விவரித்துச் சொல்லும் தீட்சித், விடுதலைப் புலிகள் சம்பந்தமான ஒரு விசித்திர நிகழ்வையும் சொல்கிறார். சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட புலிகளின் பிரதிநிதி ஒருவர், இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து அதனை "இந்து' பத்திரிகை ஆசிரியரான ராம் அவர்களுக்குத் தெரியப்படுத்தினாராம். இத் தீர்வுத் திட்டம் ஆறு அம்சங்களைக் கொண்டதாகத் தீட்சித் எழுதுகிறார்.

1) சிங்கள இராணுவம் தனது படை நடவடிக்கைகளை முற்றாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
2) தமிழ்த் தாயகமாக வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும்.
3) 1983-86 கால இடைவெளிக்குள் பேசப்பட்ட தீர்வு யோசனைகளின் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.
4) தமிழ் மொழி தேசிய மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் ஏற்கப்பட வேண்டும்.
5) இறுதித் தீர்வுக்கு முன்னராக ஒரு இடைக்காலத் தீர்வு செயற்படுத்தப்பட வேண்டும்.
6) இன விகிதாச்சாரத்தின் அடிப்படையில் சிங்கள இராணுவக் கட்டமைப்பில் தமிழர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.

இந்த ஆறு அம்ச யோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் போருக்கு நிரந்தர ஓய்வு கொடுத்துத் தமிழீழத் தனியரசுக் கோரிக்கையையும் கைவிடும் என ராமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம். இந்த யோசனைகள் உள்ளடங்கியதாகத் தயாரிக்கப்படும் ஒப்பந்தத்தில் தமிழர்கள் கைச்சாத்திட வேண்டும் எனவும் புலிகளின் சிங்கப்பூர் பிரதிநிதி ராமுக்குத் தெரிவித்தாராம். சீனாவுக்கு விஜயம் செய்த பின்பு சிங்கப்பூரில் தங்கி நிற்கும்பொழுது, தொலைபேசி மூலமாக ராமுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டதாக தீட்சித் எழுதுகிறார். புலிகளின் பிரதிநிதி மூலம் தனக்குக் கிடைத்த செய்தியைக் காணி, மகாவலி அபிவிருத்தி அமைச்சரும் தனது நண்பருமான காமினி திசநாயகா வாயிலாகச் சிங்கள அரசுக்குத் தெரியப்படுத்தினாராம் "இந்து' பத்திரிகையாசிரியர். இப்படியான ஒரு விசித்திரமான கட்டுக்கதை தீட்சித்தின் நூலில் தரப்படுகிறது.1

தீட்சித்தின் இந்தக் கதையைப் பாலசிங்கம் அடியோடு மறுத்திருக்கிறார். அவரது நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :

"விடுதலைப் புலிகளின் சிங்கப்பூர்ப் பிரதிநிதியால் ராமுக்குத் தெரிவிக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையிலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டதாக எழுதுகிறார் தீட்சித். இதில் சர்ச்சைக்குரிய கேள்வி என்னவென்றால், "விடுதலைப்புலிகள் இயக்கம் இப்படியான யோசனைகளை அல்லது கோரிக்கைகளை "இந்து' பத்திரிகை ஆசிரியர் மூலம் இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததா?' என்பதுதான். அதுவும் பெயர் குறிப்பிடப்படாத மர்மமான நபர் ஒருவர், புலிகளின் சிங்கப்பூர்ப் பிரதிநிதி என உரிமை கோரி, அரசியல் தீர்வு யோசனைகளைத் தொலைப்பேசியில் தெரிவித்தார் என்ற இந்தக் கட்டுக்கதைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் இலட்சியத்தையும் ஒட்டுமொத்தத்தில் தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் இந்தப் புனைகதையை யார் புனைந்தார்களோ தெரியவில்லை. எனினும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் உருவாக்கத்திற்கு விடுதலைப் புலிகளையும் சம்பந்தப்படுத்தி, நியாயப்படுத்தும் நோக்குடன் இந்த விபரீதமான சம்பவம் சோடிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் எவ்விதமான உண்மையும் இல்லை என்பதையும் நான் உறுதிபடக் கூறுவேன். "இந்து' ஆசிரியர் ராம், இந்தியத் தூதுவர் தீட்சித், சிங்கள அமைச்சர் காமினி ஆகியோரும் "ரா' புலனாய்வுத் துறையினரும் சேர்ந்து திரித்த கட்டுக் கதை என்றே இதை நான் கருதுகிறேன். இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு விடுதலைப் புலிகளின் இந்த யோசனைகளே அடிப்படையாக அமைந்திருந்தால் பிரபாகரனும் நானும் இந்தியப் பிரதமர் ராசீவ் காந்தியைச் சந்தித்தபொழுது இவ்விடயம் பற்றி அவர் எதுவுமே பேசவில்லையே? ராமும் தீட்சித்தும் அனுபவ முதிர்ச்சிபெற்ற புத்திஜீவிகள் என்றதால், விடுதலைப் புலிகளின் சிங்கப்பூர்ப் பிரதிநிதி என உரிமை கோரி யாரோ இனம்தெரியாத நபர் இனப் பிரச்சினைக்கு ஒரு யோசனைத் திட்டத்தைத் தொலைப்பேசியில் தெரிவித்தபோது, அதன் நம்பகத்தன்மை பற்றிப் புலிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கத் தவறியது ஏன்? அடுத்த முக்கியமான விடயம் என்னவென்றால் விடுதலைப்புலிகளின் அரசியல் இலட்சியத்திற்கும் கொள்கைக்கும் மாறுபட்டதாக இந்த யோசனைகள் அமையப் பெற்று இருப்பதை எவரும் இலகுவில் கண்டு கொள்ளலாம். குறிப்பாக, புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழரின் சுய நிர்ணய உரிமை போன்ற அடிப்படைக் கோரிக்கைகள் எதுவுமே இந்த யோசனைத் திட்டத்தில் அடங்கவில்லை. இவற்றிலிருந்து ஒரு உண்மை புலனாகும். அதாவது, இந்த சிங்கப்பூர் நாடகம் ஒரு கட்டுக்கதையன்றி வேறொன்றும் அல்ல என்பதுதான்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.