1-2-2014 சனிக்கிழமையன்று மாலை 3 மணியளவில் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க வருகிற 20-2-14 வியாழக்கிழமையன்று சென்னையிலும் மற்றும் மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் :
1. இந்திய அரசு கீழ்க்கண்ட கோரிக்கைகளை ஏற்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானமாக முன்மொழிய வேண்டும்.
அ. இலங்கையிலும், இந்தியாவிலும் மற்றும் உலக நாடுகளிலும் பரவி வாழும் ஈழத் தமிழர்களிடம் தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் அளிக்கும் தீர்ப்புக்கேற்ப ஐ.நா. பேரவை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆ. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் கூடவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் "இலங்கையில் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை' புரிந்ததற்காக இராசபட்சே கும்பல் மீது விசாரணை நடத்த தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க தீர்மானம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை பெரும் திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
இலங்கையில் எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உண்டு. அதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை மிக வெற்றிகரமாக நடத்துவதற்குத் துணை நிற்க வேண்டுகிறேன்.
|