தமிழர் தாயகத்திலிருந்து சிறீலங்கா படைகள் வெளியேறாவிட்டால், மீண்டும் ஆயுதப் போராட்டத்தை நோக்கியே தமிழர்கள் தள்ளப்படுவர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2014 13:13

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பலமாகத் திகழ்ந்த ஆயுதப் போராட்டத்தை அடியோடு ஆட்டம்காண வைத்துள்ள சிறீலங்கா அரசாங்கமும் சிங்களப் படைகளும் இன்று

தமிழர் தாயகத்தை முற்றுமுழுதாக இராணுவ மயமாக்கி வருகின்றன. எவருமே எதிர்பார்க்காத வகையில் தமிழர் தாயகம் எங்கும் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. இதன் திறப்பு விழாக்களையும் படைத்தரப்பு மிக ஆடம்பரமாகவே கொண்டாடி வருகின்றது. தமிழ் மக்களின் வீட்டு முற்றங்களிலும் இராணுவக் காவலரண்கள் முளைத்த வண்ணம் இருக்கின்றன. இதனால் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் தொடர்ச்சியான இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது. சிங்கள அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த ஆக்கிரமிப்பைத் தட்டிக்கேட்பதற்கு சர்வதேசம் முன்வராத நிலையில் இது தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து இங்கே சிங்களவர்களின் ஆட்சியே மேலோங்கியிருக்கின்றது. தமிழினம் இரண்டாவது இனமாகவே நோக்கப்படுகின்றது. இரண்டாவது இனம் என்பதற்கு அப்பால் சிங்களவர்களின் அடிமை இனமாகவே தமிழினம் கணிக்கப்படுகின்றது. ஆட்சி முறை தொடக்கம் சாதாரண விடயங்கள் வரை அனைத்திலும் சிங்களவர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கின்றது.

மொழி, மதம், கலை, கலாசாரம் போன்ற அனைத்திலும் சிங்களத்தின் சர்வாதிகாரம் மேலோங்கியிருக்கின்றது. நாட்டில் இரு மொழிக் கொள்கை நடைமுறை என்று மகிந்த அரசு உலகுக்கு தம்பட்டம் அடித்துக்கொண்ருக்கின்ற நிலையில் தமிழர் தாயகத்திற்கு அனுப்பப்படுகின்ற சுற்று நிருபங்கள், நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் அனைத்தும் சிங்கள மொழியிலேயே காணப்படுகின்றன. இந்த நிலையில் சிங்களவர்களே மேலானவர்கள் என்ற எண்ணம் இயல்பாகவே அவர்களிடம் எழுந்திருக்கின்றது.
சிங்களம் மேலோங்கியதற்கு முற்றுமுழுதான காரணம் சிங்களவர்கள் மட்டுமல்ல, எங்களை ஆண்ட பிரித்தானியர்களேயாவர். அவர்கள் 1948 ஆம் ஆண்டு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை சிங்களவர்களின் கையில் மட்டும் ஒப்படைத்துச் சென்றமையே இதற்கு முக்கிய காரணமாகும். அன்று அவர்கள் வெளியேறியபோது சிங்ளவர்களிடமும் தமிழர்களிடமும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது. அன்று தமிழர்களின் பிரதிநிதிகளாக இருந்த தலைமைகள் இன்றைய சம்பந்தன் போலவும் சுமந்திரன் போலவும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு வால்பிடித்தார்களே தவிர, தமிழ் மக்களுக்குச் சம உரிமை கோரவில்லை. "நாங்களும் இலங்கைத் தீவில் சம பிரசைகள். இந்த நாட்டின் விடுதலைக்காகப் போர்த்துக்கீசியருடனும் ஒல்லாந்தருடனும் உங்களுடன் நாங்களும் போராடினோம். எனவே இந்த ஆட்சியில் எங்களுக்கும் பங்குண்டு. ஆட்சிப் பொறுப்பை எங்களிடமும் ஒப்படையுங்கள்'' என்று அன்று தமிழ்த் தலைவர்கள் கோரியிருந்தால் இன்று நாங்கள் இத்தனை தியாகங்களைச் செய்திருக்கத் தேவையில்லை. எமது மக்கள் இரத்தம் சிந்தியிருக்கத் தேவையில்லை. எமது மக்கள் இலட்சக்கணக்கில் செத்து மடிந்திருக்கத் தேவையில்லை.

ஆனால், பிரித்தானியர் செய்த தவறுக்காக, பிரித்தானியருடன் அன்று சிங்களவர்கள் இணைந்து செய்த சூழ்ச்சிக்காக, அதற்குத் துணைபோன தமிழ்த் தலைமைகள் என்ற கோடரிக் காம்புகளின் துரோகத்தனத்தால் தமிழினம் இன்று சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றது. இன்று எமது முற்றத்தில் எதிரி வந்து குந்தியிருக்கின்றான். இந்த எதிரியை விரட்டுவதற்கு நாம் மீண்டும் ஒரு போராட்டம் தொடங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் நிலங்கள் இன்று சிங்களப் படைமுகாம்களாக மாறியிருக்கின்றன. கடந்த வாரமும் யாழ்ப்பாணத்திற்கு வந்த கோத்தபாய ராஜபக்ச இங்கு இரண்டு படை முகாம்களைத் திறந்துவைத்துள்ளார். வன்னியிலும் ஒரு படை முகாமைத் திறந்துவைத்துள்ளார். ஊர்மனைகள் தோறும் படை நிலைகள் தோன்றியிருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் படை நிலைகள் அமைந்திருந்த இடங்களிலும் அவர்களின் நிர்வாக காரியாலயங்கள் அமைந்திருந்த இடங்களிலும் புதிய புதிய படை முகாம்கள் தோன்றியிருக்கின்றன. அதைவிட முக்கியமாக மாவீரர்கள் உறங்குகின்ற துயிலும் இல்லங்கள் படையினரின் டிவிசன் முகாம்களாக மாறியிருக்கின்றன.

போர் வீரர்களின் கல்லறைகளுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டியது யுத்த விதி. அதுவே மனித நீதியும் கூட. ஏன், சிங்கள மன்னர்களின் சிறந்த மன்னன் என்று கூறப்படுகின்ற துட்டகைமுனு சூழ்ச்சியினால் தமிழ் மன்னனான எல்லாளனைத் தோற்கடித்த போதிலும் எல்லாளனைத் தோற்கடித்த இடத்தில் நினைவுச் சிலை ஒன்றை எழுப்பியதுடன் அந்த இடத்தைக் கடக்கின்ற அனைவரும் (சிங்களவர்கள் உட்பட) அதற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று கட்டளையிட்டான். அந்த வீதியூடாக ஊர்வலங்கள், பேரணிகள் செல்லும்போது எந்தவொரு இசைக்கருவியையும் இசைத்துச் செல்லக்கூடாது என்றும் அதை மீறி அந்த இடத்தின் அமைதிக்கு பங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டான்.

ஆனால், நவீன துட்டகைமுனு என்று சில பிச்சைக்கார அமைச்சர்களால் வர்ணிக்கப்படுகின்ற மகிந்த ராஜபக்ச பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் உறங்குகின்ற துயிலும் இல்லங்களை அடியோடு புரட்டியெடுத்துவிட்டு அங்கு படைமுகாம்களை அமைத்திருக்கின்றார். எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அராஜகம் இலங்கையில் நடைபெறுகின்றது. போர் விதிகளை அறிமுகப்படுத்திய தேசங்கள், போர் ஆயுதங்களை உற்பத்தி செய்கின்ற தேசங்கள் இதனைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கின்றன. அவர்களின் நோக்கம் அனைத்தும் ஆயுதங்களையும் விற்பனை செய்ய வேண்டும். ஒரு குண்டு எத்தனை பேரைக் கொல்லும் என்று கணக்கிட்டு தயாரிப்பு பணியில் ஈடுபடுகின்ற நாடுகளுக்கு அதனால் மடிகின்ற மக்களின் வேதனை எங்ஙனம் புரியும்?

தமிழர் தாயகத்தில் வந்து தங்கியிருக்கின்ற சிங்களப் படையினரால் ஒரு நாளுக்கு ஒரு பெண் என்ற ரீதியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றாள். தமிழர் தாயகத்தின் எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறு பிஞ்சு அல்லது இளம் மொட்டு அவர்களால் சருகாக்கப்படுகின்றது. வெளியே சொன்னால் வெட்கம், மானம் போய்விடும் என்ற பிரச்சினைகளால் அவை மூடி மறைக்கப்படுகின்றன. குந்தி இருக்க ஒரு குடிநிலம் கேட்ட தேசத்தில் வந்து குந்தி இருக்கின்ற படைகளால் எங்கள் பெண்கள் நொந்து சாகின்றனர். வீதியில் இருந்த பல காவலரண்கள் இன்று குடிமனைகளுக்குள் மாற்றப்பட்டுள்ளன.

தற்போது குடாநாட்டுக்கு அடிக்கடி சர்வதேச இராஜதந்திரிகள் வருகை தருகின்றனர். ஐ.நா பிரதிநிதிகள் வருகை தருகின்றனர். ஏன் பலம் மிக்க நாடுகளின் பிரதமர்கள் கூட வருகை தருகின்றனர். இதனால் வீதிகளில் இருந்தால், தமிழர் தாயகத்தில் இத்தனை படை நிலைகளா என்று அவர்கள் கணக்கெடுத்துவிட்டு சிறீலங்கா அரசுக்கு எதிரான அழுத்தங்களை அதிகரிப்பார்கள் என்பதால் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் நூற்றுக்கணக்கான காவலரண்கள் குடிமனைகளை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. இது படையினருக்கு மிகவும் செளகரியமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
படையினர் பொது மக்களின் குடிமனைகளுக்கு நடுவே காவலரண்களை அமைத்து தங்கியுள்ளமையால் மக்கள் தினமும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையில் மனைவிமாரை கைவிட்டு வந்து இங்கே தங்கியுள்ள படையினருக்கு எமது தமிழ்ப் பெண்கள் குளிக்கின்ற காட்சி, ஆடை மாற்றுகின்ற காட்சி என்பன அமிர்தமாக இருக்கின்றன. மதில்களுக்கு மேலாகவும் வேலிகளுக்கு நடுவாகவும் எட்டிப் பார்த்து ரசிக்கின்ற படையினர், சில வாரங்களின் பின்னர் இரவு வேளைகளில் அந்த வீடுகளுக்குள் நுழைகின்றனர். சில பெண்கள் அச்சுறுத்தப்பட்டு காரியம் நிறைவேற்றப் படுகின்றது.

ஆனால், சில பெண்களோ அச்சுறுத்தல்களையும் மீறி அலறியடிக்கின்றனர். இதனால், ஏனையோர் விழிப்படைய படையினர் ஓடித் தப்பிவிடுகின்றனர். சில நேரங்களில் மாட்டப்பட்டு முறையாக கவனிக்கப்படுகின்றனர். இதேபோன்றதொரு நிலைதான் கடந்த சனிக்கிழமை வட்டுக்கோட்டை பிளவத்தை என்ற இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது. குடிமனைகளுக்கு நடுவே கேணி ஒன்றுக்கு அருகாமையில் காவலரண் அமைத்திருக்கின்ற படையினர் அங்கு தங்கியிருக்கின்றனர். யுத்த காலத்தில் அமைக்கப்பட்ட இந்தக் காவலரண் இன்றுவரை அகற்றப்படவில்லை. இங்குள்ள படையினர் மதில்களுக்கு மேலாக பெண்கள் குளிக்கின்ற காட்சிகளை எட்டிப்பார்த்தல், அதனை அந்தப் பெண்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் படையினர் இடையிடையே நள்ளிரவு நேரம் வீடுகளுக்கும் புகுவதற்கு எத்தனிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது. பெண்ணின் வீடொன்றுக்குள் நுழைந்து அவருடன் தவறாக நடக்க முற்பட்ட சிப்பாய் ஒருவரை மக்கள் மடக்கிப் பிடித்து முறையாகத் கவனித்தனர். இதன் பின்னர் கடந்த 11ம் திகதி சனிக்கிழமையும் படையினர் இதேபோன்றதொரு செயற்பாட்டில் ஈடுபட்டனர். இதனால் பொது மக்கள் நள்ளிரவு வேளை என்றும் பாராமல் படையினருக்கு எதிராக குரல் கொடுத்தனர். இதனால் அந்த மக்களை சுடுவோம், வெட்டுவோம் என்றெல்லாம் படையினர் அச்சுறுத்தியுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் சிங்களப் படையினர் இருக்கின்ற வரை இவ்வாறான செயல்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கும். இதனால்தான் படையினரை உடனடியாக வெளியேற்றுமாறு தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சிறீலங்கா அரசாங்கமோ பாதுகாப்பு அமைச்சோ எந்தவொரு அக்கறையும் எடுக்கவில்லை. கடந்த காலத்தில் படையினர் உட்பட எவரும் துணிந்து எதையும் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டிருந்தபோது அதற்கு எதிராக மக்கள் குரல் கொடுத்தனர்.
ஆனால், அன்றைய அரசுகளோ படைத்தரப்போ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அநீதிகளுக்கு எதிராகப் போராடினார்கள். சிறீலங்கா அரசாங்கமே கலங்கடிக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு நிலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கே சிங்கள அரசாங்கமும் படைகளும் விரும்புகின்றன. வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்திலிருந்து சிறீலங்காப் படைகள் வெளியேறாவிட்டால் அவர்களை வெளியேற்றுவதற்கு தமிழ் இளைஞர்கள் மீண்டும் ஓர் ஆயுதப்போராட்டத்தை நோக்கித் தள்ளப்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறான ஒரு நிலை வந்தால் இனிமேல் போராட்டம் வடக்கிலோ, கிழக்கிலோ மட்டும் நடக்கப்போவதில்லை என்பது தெரிகின்றது. அது தென்னிலங்கை வரையும் வியாபிக்கும் என்பது உறுதியாகத் தெரிகின்றது.
- தாயகத்தில் இருந்து வீரமணி
நன்றி : ஈழமுரசு, ஜனவரி 21-27 2014

ஞாயிற்றுக்கிழமை, 09 மார்ச் 2014 15:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.