தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3-3-2014 அன்று தமிழகம் தழுவிய ஒரு நாள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளது.
மாணவர் கோரிக்கைகள் :
1. இந்திய அரசு கீழ்க்கண்ட கோரிக்கைகளை ஏற்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானமாக முன்மொழிய வேண்டும்.
அ. இலங்கையிலும், இந்தியாவிலும் மற்றும் உலக நாடுகளிலும் பரவி வாழும் ஈழத் தமிழர்களிடம் தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் அளிக்கும் தீர்ப்புக்கேற்ப ஐ.நா. பேரவை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆ. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் கூடவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் "இலங்கையில் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை' புரிந்ததற்காக இராசபட்சே கும்பல் மீது விசாரணை நடத்த தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க தீர்மானம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ. இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் 23 ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களில் முதல் மூவரின் கருணை மனுக்களை 11 ஆண்டு காலத்திற்கு மேல் எத்தகைய முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்ததன் காரணங்காட்டி உச்சநீதிமன்றம் மூவருக்கும் தூக்கு தண்டனையை இரத்து செய்ய முடிவு செய்தது.
தமிழக அமைச்சரவை கூடி, இந்த 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என முடிவு செய்தது அரசியல் சட்ட வரம்பிற்கு உட்பட்டதாகும். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராகவும், தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிராகவும் கூப்பாடு போடுகிறவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த ஏழு பேரையும் விடுவிக்க முன்வந்த தமிழக முதல்வர் செயலலிதா அவர்களுக்கு நன்றியினையும் பாராட்டையும் தெரிவிப்பது என மாணவர்கள் முடிவுசெய்துள்ளனர்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் 03-03-14 திங்கட்கிழமையன்று தமிழ்நாடு தழுவிய ஒருநாள் வகுப்புப் புறக்கணிப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து மாணவர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.
|