இலங்கையில் போர் நிறுத்தக் காலத்தில்- பன்னாட்டுக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய உல்ப் ஹென்ரிக்சன் தமிழ்நெட் இணைய தளத்திற்கு வழங்கிய நேர்காணல் :
கேள்வி : வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில்- பன்னாட்டுச் சமூகம் போரை நிறுத்த வேண்டும் என கோரி உலகெங்கும் வாழ்ந்த தமிழர்கள் பெருந்திரளாக வீதிகளில் வந்து போராடினார்கள். ஆனால் பன்னாட்டுச் சமூகம் அதனை வற்புறுத்தவில்லை. தற்போது வெளிவந்துள்ள அனைத்து அறிக்கைகளிலும் பன்னாட்டுச் சமூகம் தவறு செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து வரும் இனப்படுகொலையை நிறுத்த வேண்டும் என மீண்டும் தமிழர்கள் கோரி வருகிறார்கள். ஆனால் பன்னாட்டுச் சமூகம் அதனையும் செய்யத் தயாராக இல்லை. இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கவும் மறுக்கிறது. இது தொடர்ச்சியான தோல்வியா?
ஹென்ரிக்சன் : ஆம். நான் அதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இதை நாம் காண்பது இலங்கையில் மட்டுமல்ல. எடுத்துக் காட்டாக சிரியாவில் நடக்கும் போரிலும் இதனைப் பார்க்கலாம்.
பன்னாட்டுச் சமூகம் எல்லாப் போர்களிலும் பங்கெடுக்க முடியாது. அதை விரும்பவும் செய்யாது. அதற்கான வளங்கள் அதனிடம் இல்லை. அதற்கு செலவு செய்யவும் தயாராக இல்லை. அப்படி பங்கெடுப்பதற்கு எதிராக பல நாடுகளில் கருத்து நிலவுகிறது.
சொல்வதற்கு வருத்தமாக இருந்த போதும், மேற்கு அய்ரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து இலங்கை வெகு தூரத்தில் உள்ளது என்பதே உண்மை.
கருத்து உருவாக்கம் மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றின் அழுத்தங்களின்றி எதுவும் நடப்பதில்லை. அதுதான் சிக்கலே. அது இலங்கையிலும் நடக்கிறது. பிற இடங்களிலும் நடக்கிறது.
பெரும்பாலான நாடுகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. ஸ்வீடனுக்கு அது வெகு தூரம். அதை அலட்சியப்படுத்துவது எளிது. ஒரே ஒரு போர்தான் நடக்கிறது எனில் பங்கெடுப்பது எளிதாக இருந்திருக்கலாம்.
அத்துடன், உங்களுக்கு வடக்கே, பெரும் பங்கை ஆற்றக்கூடிய ஒரு நாடும் உள்ளது. இந்தியா. இந்த பிராந்தியத்தைப் பொருத்த வரையில் இந்தியா சொல்வது மிக முக்கியமானது. இந்தியா இதில் பங்கெடுப்பதில் பெரும் ஆர்வம் காட்டுவதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், தார்மீக அடிப்படையில் தவறுதான். ஆனால் பங்கெடுப்பது என்பதில் சிக்கல் உள்ளது.
கேள்வி : போஸ்னியா மற்றும் இலங்கை ஆகிய இரு இடங்களிலும் அமைதியைக் கண்காணிக்கும் அனுபவம் உங்களுக்கு உள்ளது. போஸ்னியாவில் நடந்தது இனப்படுகொலை என்று வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டது. பன்னாட்டுச் சமூகம் ஒரு சரியான அரசியல் தீர்வை அதற்கு வழங்கியது. ஆனால் ஈழத் தமிழர்களின் நிலையை ஓர் இனப்படுகொலை என்று அங்கீகரிப்பதில் உலக நிறுவனங்களால் எழுதப்படாத தடை இருப்பதாகத் தெரிகிறது. இதில் பன்னாட்டுச் சமூகம் எதுவும் இரட்டை வேடம் போடுவதாக உங்களுக்குத் தெரிகிறதா?
ஹென்ரிக்சன் : முன்னாள் யூகோஸ்லேவியாவில் நடந்தவற்றிற்கு எதிர்வினையாற்றவும் அதில் பங்கெடுக்கவும் பன்னாட்டுச் சமூகத்திற்கு முழுதாக இரண்டு ஆண்டுகள் பிடித்தது. யூகோஸ்லேவியாவிலும் சரியான நடவடிக்கைகள் இன்றி இதே போன்றே மோசமான நிலையில்தான் இருந்தோம்.
அய்ரோப்பியர்களைப் பொருத்த வரையில் அது எங்களுக்கு மிக அருகில் இருந்ததால் பெருத்த வேறுபாடு இருந்தது. அது எங்கள் பின் முற்றத்தில் இருந்தது.
அய்ரோப்பிய நாடுகளின் கருத்துக்கள் எதிராக திரும்பி, அரசியல்வாதிகள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்ட போதுதான் நிலைமை மாறியது. மக்கள் கருத்துக்கள் மூலமும், ஊடகங்கள் மூலமும் அழுத்தம் தரப்பட்டது. அதுவே அரசுகள் மற்றும் அய். நா.வை செயல்பட வைத்தது. இதுதான் வேறுபாடு. இந்த அழுத்தம் இலங்கையில் இல்லை.
என்னைப் பொருத்த வரையில் இந்தப் போர்கள் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை என்பதைவிட அதிகமாக ஒரே மாதிரியானவையாகவே தோன்றுகின்றன.
நான் இலங்கை சென்ற போது 'போஸ்னியாவுக்குச் செல்வதைப் போன்று நினைக்காதீர்கள்' என்று என்னுடன் பணியாற்றும் பிரெஞ்சு நண்பர் ஒருவர் கூறினார், ஆனால் போரின் பின் இயங்கும் சக்திகள் ஒன்றேதான். பணம், சொத்து, அதிகாரம். எல்லாப் போர்களிலும், சிரியாவோ எங்கோ, அது இனத்தைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ அல்ல. அது போரை நீட்டிக்கப் பயன்படும் கருவி மட்டுமே. ஒரு நேர்மையான சமூக பொருளாதார நீதி இருக்குமாயின் போர் இருக்கப் போவதில்லை.
கேள்வி : இலங்கையைப் பொருத்த வரையில் உலக ஊடகங்களிடமிருந்து அழுத்தம் இல்லை என்று குறிப்பிட்டீர்கள். எதனால் இது நேர்கிறது?
ஹென்ரிக்சன் : முதலில், இலங்கை குறித்து பணி செய்வதில் ஊடகங்களுக்கு உள்ள சங்கடங்கள். தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ள ஒரு நாட்டின், ஓர் அரசின் கட்டுப்பாடுகள் உள்ளன. நீங்கள் அங்கு வரவேற்கப்படுவதில்லை. அது ஒரு காரணம்.
மேற்குலகில், வட அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் உள்ள பெரிய ஊடகங்களுக்கு அது மக்களுக்கு ஆர்வமூட்டக் கூடிய செய்தியாக இல்லை. இதை வைத்து விற்க முடிவதில்லை. அது ஒரு கடினமான உண்மை.
இதை எப்படிச் செய்ய வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. கருத்து உருவாக்கத்தைச் செய்ய வேண்டும். பன்னாட்டுச் சமூத்தைச் செயல்பட வைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக.. அய். நா. வை. ஆனால் அய். நா. என்பது அதன் உறுப்பு நாடுகளின் கூட்டு. அதில் இலங்கையில் பங்கெடுப்பது குறித்து ஆர்வமற்ற பல நாடுகள் உள்ளன.
எடுத்துக்காட்டாக சீனாவும் இந்தியாவும். அவர்களின் பின் முற்றத்தில் நீங்கள் இருப்பதால், இலங்கையில் நடப்பது குறித்து நீங்கள் எதிர்வினையாற்றத் தொடங்கினால், நீங்கள் வேறொரு பிராந்தியத்திற்குள் சென்று எதிரிவினை யாற்றுவதற்கு முன்னுதாரணமாகிப் போகிறீர்கள். தங்கள் பிராந்தியத்தில் பன்னாட்டுச் சமூகம் வருவதை சீனாவும் இந்தியாவும் பிற நாடுகளும் விரும்புவதில்லை.
இதனால்தான், இந்தியா அய். நா. வை விரும்பாத காரணத்தால் மட்டுமே இலங்கை கண்காணிப்புக் குழு நார்வேயால் முன்னெடுக்கப்பட்டது.
கேள்வி : 2009-க்குப் பிறகு, நார்வே மற்றும் அய். நா. விடமிருந்து நடந்தவற்றைக் குறித்த ஆய்வறிக்கைகள் வந்துள்ளன. இந்த அறிக்கைகள், பலரின் பங்கு குறித்தும் அவர்கள் செய்யத் தவறியவை குறித்தும் சொல்கின்றன. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரப்பட வேண்டிய அரசியல் தீர்வு குறித்து எந்த அறிக்கையும் திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை. ஜெனிவாவில் முன் வைக்கப்பட உள்ள அமெரிக்கத் தீர்மானம் கூட போர்க் குற்றங்கள் மீதான சர்வதேச விசாரணை பற்றி மட்டுமே இருக்கப் போகிறது. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையைத் தடுப்பதற்கான பன்னாட்டு செயற்பாடுகள் குறித்து எதுவும் இருக்கப் போவதில்லை. இப்படி 5 ஆண்டுகளாக நடந்து வருபவை, இலங்கை தனது இனப்படுகொலையை முடிப்பதற்கான நேரத்தையும் இடத்தையும் அளிப்பதாகவே உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். திட்டமிட்ட அநீதி இழைக்கப்படுவதாக நீங்கள் கருதுகிறீர்களா?
ஹென்ரிக்சன் : 2006-க்குப் பிறகு நான் இலங்கைக்குச் செல்லவில்லை. ஆனால் அது குறித்து வாசித்திருக்கிறேன். அதனால் நீங்கள் சொல்வது சரி என்றே சொல்வேன்.
இலங்கை ஒரு தீர்வை விரும்பவில்லை என்பது வெளிப்படையானது.
என்னைப் பொருத்த வரையில் இலங்கையில் மிக முக்கியமானவராக நான் கருதுவது கோத்தபாய இராஜபக்சேவை. அவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் வரை உங்களுக்குத் தீர்வு கிடைக்காது. எந்த அமைதியான தீர்வுக்கும் இந்த மனிதர் தயாராக இல்லை.
கேள்வி : ஆனால் இனப்படுகொலையும் அநீதியும் தொடர்கிறதே?
ஹென்ரிக்சன் : அதை நான் சொல்ல முடியாது. அதே நிலை தொடர்கிறது என்று நான் சொல்வேன். மக்கள் கொல்லப்படுவதும் காணாமல் போவதுமான நிகழ்வுகள் தொடர்கின்றன. 2006-இல் இந்த நிலை இருந்தது. இப்பவும் அது இருக்கிறது. அனைத்து மக்களின் கருத்துக்களுக்கும் செவி சாய்க்கும் ஒரு ஜனநாயக அரசு இல்லாமல் இதை நீங்க தீர்க்கவே முடியாது. தற்போதைய அரசு எதையும் காது கொடுத்துக் கேட்பதில்லை. ஒரு அமைதியான தீர்வை நோக்கி அது செல்லவில்லை.
கேள்வி : தீவில் செயற்பட்ட அமைதிக் குழுவின் தலைவர் என்ற முறையில், 2006-இல் மூதூரில் அமைதிப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு மற்றும் தீவில் போரை மீண்டும் தொடங்கக் காரணமான நிகழ்வாகச் சொல்லப்படும் மாவிலாறு நிகழ்வு ஆகியவற்றில் நீங்களும் பணியாற்றியுள்ளீர்கள். அது குறித்து நீங்கள் ஏற்கெனவே அறிக்கைகள் கொடுத்து அவை அச்சாகி வெளிவந்தும் உள்ளன. பின்னோக்கிப் பார்க்கும் போது, இந்தப் போரும் அதன் 'முடிவும்' முன்பே திட்டமிட்ட ஒன்றாக நினைக்கிறீர்களா? அல்லது நார்வே அமைதிப் பேச்சுவார்த்தைகளின் முன்னெடுப்பாளர் எரிக் சோல்ஹெய்மும், அமெரிக்காவின் முன்னாள் துணைச் செயலாளர் ரிச்சர்ட் அர்மிடாகேவும் சொல்வது போல் 'அது துரதிருஷ்டவசமானது' என்று நினைக்கிறீர்களா?
ஹென்ரிக்சன் : மாவிலாறு மற்றும் மூதூர் நிகழ்வுகள் இறுதித் தீர்வை நோக்கி நகர்த்தின. ஆனால் அவை முன்பே திட்டமிட்டவை என்றே நான் நினைக்கிறேன். நாங்கள் அதைத் தடுக்க நினைத்தோம். அணையைத் திறக்கச் சொல்லி நாங்கள் விடுதலைப் புலிகளிடம் கேட்டோம். அதற்கு நிறைய நாட்கள் ஆனது. நான் அரசிடம் பேசினேன். இதைத் தொடங்க வேண்டாம் என்றும், அணைகளைத் திறக்கச் செய்யலாம் என்றும் கூறினேன். ஆனால் யாரும் கேட்கவில்லை.
இரண்டு தரப்பினருமே போரைக் குறித்து தவறான பார்வை வைத்திருந்தனர். அதுதான் என் கருத்து. மூதூர் நிகழ்வு பாதுகாப்புப் படையினராலோ அல்லது அவர்களுடன் தொடர்புடைய எவராலோதான் நடத்தப்பட்டது என்பது வெளிப்படையான உண்மை. ஏனெனில் நாங்கள் அவ்விடத்தில் சூழலை கண்காணித்துக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் இது குறித்து உறுதி செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதனாலேயேதான் இந்தப் படுகொலையை நிச்சயமாக பாதுகாப்புப் படையினர்தான் செய்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
கேள்வி : விடுதலைப் புலிகள் மீதான அய்ரோப்பிய ஒன்றியத்தின் தடை அய்ரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்றும் அது பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகியவற்றின் அதீத அழுத்தத்தின் காரணமாக புருசெல்சின் உணவு விடுதிகளில் தீர்மானிக்கப்பட்டது என்றும் அதிகாரப்பூர்வமாகவே சொல்லியிருக்கிறீர்கள். 2006-இல் அய்ரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கும் முன் இது குறித்து நீங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்நேரத்தில் நீங்கள் என்ன ஆலோசனை தந்தீர்கள்?
ஹென்ரிக்சன் : இலங்கையில் இருந்த பன்னாட்டுச் சமூகத்தினர், இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு, பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் மற்றும் அய். நா. ஆகிய அனைவருமே தமிழ்ப் புலிகளுக்குத் தடை விதிக்க வேண்டாம் என அய்ரோப்பிய யூனியனுக்கு ஆலோசனை கூறினோம். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் மீது தடை விதிப்பதற்கு இது காலம் அல்ல என்று கூறினோம். இலங்கை குறித்துப் பணியாற்றிய அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு பதில் வந்தது - சரி. நாங்கள் காத்திருக்கிறோம்.
ஆனால் எல்லாம் மிக விரைவாக நடந்தன. இலங்கை அரசிடமிருந்து இதற்கு பெரும் அழுத்தம் வந்தது. அமெரிக்க அழுத்தம் வேறு. முல்லைத் தீவின் கடல் புறத்தில் கடலில் நடந்த நிகழ்வு வேறு. அது குறித்து இலங்கை அரசின் தரப்பை மட்டுமே அய்ரோப்பிய ஒன்றியம் கேட்டது.
என்ன நடந்தது என்று எங்களை அவர்கள் கேட்கவே இல்லை. ஏனெனில் அது குறித்து எங்களுக்கு வேறு ஒரு பார்வை இருந்தது. அதன் பிறகு பாய்வது மட்டுமே பாக்கி இருந்தது. தடை வந்தது. அதன் பிறகு அரசுக்கு ஏறக்குறைய என்ன வேண்டுமானாலும் செய்வதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டதாகவே இருந்தது. ஏனெனில் அப்போது விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளாகிவிட்டனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான பெரும் போரின் ஒரு பகுதியாக அது இருந்தது. உலகமெங்கும் பெரும் சக்திகளிடமிருந்து வந்த விருப்பம் அது. அதில் விடுதலைப் புலிகளும் சிக்கிக் கொண்டனர். ஆனால் என்னைப் பொருத்த வரையில், அது தவறு.
நீங்கள் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் விடுதலைப் புலிகளை சேர்க்கிறீர்கள் என்றால், இலங்கை அரசையும் அப்பட்டியலில் சேருங்கள். ஏனெனில் அவர்களும் அதே வழிமுறைகளையே பின்பற்றினர். அது மிகவும் வெளிப்படையானது. எனவே அது மிகப் பெரும் தவறு என்று நான் கூறுவேன். ஏனெனில் ஓர் அமைதியான தீர்வுக்கும் பேச்சு வார்த்தைக்குமான சாத்தியங்களை அது தடுத்தது. அதனை இலங்கை அரசு விரும்பவில்லை என்று நான் கூறுவேன். இந்தச் சூழலில் விடுதலைப் புலிகள் மிக சாமர்த்தியமாக நடந்து கொண்டனர். அவர்கள் பிடிவாதமாக இருந்தனர்.
கேள்வி : இன்றைய உலகமயமாக்கச் சூழலில், ஒட்டுமொத்த மனித இனத்தைப் பாதிக்கும் முடிவுகள் வெகு சிலரால் எடுக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மை மக்கள், இராணுவ அதிகாரிகள், மக்கள் பணி அதிகாரிகள், வெளியுறவு அதிகாரிகள் மற்றும் ஊடகத்தினர் அந்த முடிவுகளை செயற்படுத்த நிர்பந்திக்கப்படுகின்றனர். அவற்றில் பெரும்பாலானோருக்கு மனசாட்சி உள்ளது. மனித இனத்தின் எதிர்கால மேம்பாட்டிற்காக, இவ்வாறு மனசாட்சி உள்ளவர்கள், தங்களுக்குள் ஒருங்கிணைந்து மேம்பட்ட உலகை உருவாக்க என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்?
ஹென்ரிக்சன் : அது பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள கேள்வி. எனக்குத் தெரியாது. மக்களைப் பங்கெடுக்க வைக்க வேண்டும். ஆனால் எப்படி? அது கடினமானது.
நாங்கள் அது குறித்து முன்பே பேசியிருக்கிறோம். சாதாரண மக்கள், சாதாரண நாட்களில் செய்வதற்கு நிறைய வேலைகள் வைத்துள்ளனர். அவர்களுக்கு குடும்பம், குழந்தைகள் உள்ளனர். கார், வீடு எல்லாம் உள்ளது. எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்.
இலங்கை மற்றும் சிரியாவில் ஏற்பட்டதைப் போன்ற சூழல்கள், உங்கள் வாழ்க்கையில் சிறு பங்கை மட்டுமே வகிக்கின்றன. அதில் பங்கெடுப்பதற்கான சக்தி உங்களுக்கு இருப்பதில்லை. அது மிகவும் கடினமானது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இலங்கையோ அல்லது வேறு எங்குமோ நடக்கும் ஒரு போரைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானது. நாங்கள் வேறொரு உலகில் வாழ்கிறோம். அதுதான் சிக்கல்.
நான் பால்கனில் பணியாற்றத் தொடங்கியது முதல் மக்களை இது குறித்து பங்கெடுக்க வைக்க நான் பெரும் நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன். அவர்கள் பங்கெடுத்தார்கள். அது குறித்து ஓர் உரையில் நாம் பேசினால் அவர்கள் வருத்தமடைகிறார்கள். பிறகு அது மெதுவாக மறைந்து போகிறது.
ஒரு பாதுகாப்பான சூழலும் அன்றாட உணவுத் தேவையை நிறைவேற்றுவதுமே நமக்கு பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதுதான் இலங்கைக்கும். பெரும்பான்மை மக்கள் போரை விரும்புவதில்லை. பெரும்பான்மை மக்களுக்கு பாதுகாப்பும் அன்றாட உணவைப் பெறுவதும் மட்டுமே தேவையாக உள்ளது.
அப்பறம் நாம் இலங்கையில் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறோம். நீங்கள் பட்டினி கிடந்தால், பாதுகாப்பற்று வாழ நேர்ந்தால் ஜனநாயகத்தைப் பற்றி உங்களுக்கென்ன அக்கறை இருக்கப் போகிறது? உங்கள் வாழ்வை காப்பாற்றுவதே உங்களின் பெரும் பணியாக இருக்கும் போது வேறு எதைப் பற்றியும் உங்களுக்குக் கவலை இருக்கப் போவதில்லை.
நீங்கள் கல்வி அறிவு பெற வேண்டும். மக்களை ஒடுக்குவதற்கான சிறந்த வழி அவர்களுக்குக் கல்வி அறிவு மறுக்கப்படுவதே ஆகும். கல்வி அறிவு நிலையை உயர்த்த முடிந்தால், மேம்பட்ட ஓர் உலகை நீங்கள் படைக்கலாம். ஆனால் அதற்கு குறுக்கு வழி எதுவும் இல்லை. பல ஆண்டுகள் ஆகும். ஏன் நூற்றாண்டுகளே ஆகக் கூடும். இதுவே சிக்கலை எதிர்நோக்கி உள்ள தமிழர்கள் குறித்து எனது பார்வை.
கேள்வி : ஒரு மேம்பட்ட உலகை உருவாக்க மனித சமூகத்திடமிருந்து எம்மாதிரியான பங்கை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
ஹென்ரிக்சன் : பணியாற்ற மனமும் ஆற்றலும் உள்ள நிறைய பேர் நமக்குத் தேவைப்படுகிறார்கள். நாம் சிறிய சிறிய அடிகளையே எப்போதும் எடுத்து வைக்கிறோம். ஆனால் அவற்றை வேகமாக வைப்பதில் நாம் முனைப்புக் காட்டுகிறோம். ஆனால் அது விரைவாக நடக்காது. ஏனெனில் பெரும் பின்னடைவு உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகாரத்தில் தொடர விரும்புகின்றனர். இப்போது நீங்கள் உக்ரைனைப் பாருங்கள், அதிகாரத்தில் தொடரவே விரும்புகின்றனர். தங்கள் சொத்தையும் பணத்தையும் பாதுகாக்க விரும்புகிறார்கள். வேறு யாரும் அவ்விடத்திற்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. இதுதான் இலங்கையிலும் நடக்கிறது. அரசியல் உயர் நிலையில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சில நலன்கள் உள்ளன. பணமும் சொத்தும் உள்ளவர்கள் ஊடகங்களை கட்டுப்படுத்துகிறார்கள். அவர்களே கருத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். - நன்றி தமிழ்நெட்
|