இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புணர்வு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது என்று அய். நா. வின் மனித உரிமைக் குழுவில் கடந்த 27-03-2014 அன்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தென்னாசியாவில் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.
முதலாவதாக, 1948 முதல் எவ்வித தடையுமின்றி நீதிக்கு அப்பாற்பட்டவர்களாக நின்று தமிழர்களை மோசமாகவே நடத்தி வந்த தொடர்ந்த இலங்கை அரசுகளின் நிலை இன்று சர்வதேச அளவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, இலங்கையில் உள்ள தமிழர்களைப் பொருத்த அளவில் ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் போல செயற்பட்டு வந்த இந்திய அரசு புறந்தள்ளப்பட்டு, தற்போது இந்தியாவின் ஆதரவுடனோ, இல்லாமலோ தமிழர்கள் தாங்களாகவே முன்னே செல்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று தமிழர்களிடையே அரசியல் தன்னம்பிக்கை முன் எப்போதும் இருந்திராத அளவுக்கு அதிகமாக உள்ளது.
மூன்றாவதாக, வட அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அய்ரோப்பிய ஒன்றியத்தின் பிற உறுப்பு நாடுகள் தமிழர்களின் எதிர்காலம் மற்றும் தென்னாசியாவின் அரசியலில் சம பங்குதாரர்களாக ஆகியுள்ளனர். இந்திய அரசும் அதன் தலைமையும், அண்மைக் காலங்களில், தொடர்ச்சியாக, தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நிற்க வேண்டிய தனது வரலாற்றுப் பொறுப்புகள், தார்மீக கடமைகள், புவியியல் முக்கியத்துவம், அரசியல் ஆற்றல் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டது. பர்மா, திபெத் மற்றும் இலங்கையில் நிலவும் உண்மை நிலை இதற்கான சில சான்றுகள் மட்டுமே. இந்திய செல்வாக்கு ஊடுருவப்பட்டுவிட்டது.
நான்காவதாக, வட அமெரிக்கா, அய்ரோப்பிய ஒன்றியம், லத்தின் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றின் ஆதரவுடனும், பாகிஸ்தான், சீனா, கியூபா (இதனை ரஷ்யா என்று வாசிக்கலாம்) ஆகியவற்றின் எதிர்ப்புடனும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதானது, புதியதொரு பிளவை காட்டியுள்ளது. இந்தப் பிளவு தொடரும். நீடிக்கும். பிறவற்றிற்கும் பரவும். அந்த நிலையில், தன்னம்பிக்கையோ, எதையும் செய்வதற்கான துணிச்சலோ அற்ற இந்தியா, எப்பக்கமும் சாய இயலாமல் இரண்டுக்கும் இடையில் சரிந்து விழும்.
இறுதியாக, இலங்கைக்கு எதிரான வாக்கு என்பது, ஆசிய ஜனநாயகத்தின் செயற்பாடுகள், உள்நாட்டுத் தீர்வுகளால் மட்டும் நியாயப்படுத்தப்படவோ வளர்த்தெடுக்கப்படவோ முடியாது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்திற்கான அங்கீகாரம் என்பது இலங்கையிலிருந்து விலகிச் சென்று நிற்கும் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் நிலைப்பாடுகளிலிருந்து எழுகிறது. (2009 மற்றும் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த இந்தோனேசியாவும் பிலிப்பைன்சும் இந்த 2014-ஆம் ஆண்டு தீர்மானத்தில், வாக்களிக்காமல் விலகி நின்று விட்டன)
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பணர்வு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது - என்ற மனித உரிமைக் குழுவின் தீர்மானத்தைத் தோற்கடிக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து விட்ட பிறகு இலங்கை உண்மையில் பாகிஸ்தான் மூலமாகவே சுவாசித்துக் கொண்டிருந்தது. அதை விட மோசம் என்னவென்றால், பாகிஸ்தானிடமிருந்து தனது ஜனநாயகத்துக்கான நற்சான்றிதழை இலங்கை எதிர்பார்த்து நின்றது. 26-03-2014 அன்று தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, இலங்கையில் அரசியல் நிறுவனங்களும் ஜனநாயகமும் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதை குறிப்பிட்ட போது, அரங்கில் அவநம்பிக்கை கொண்ட பெருமூச்சு எழுந்தது. மறுநாள், 27-03-2014 அன்று பாகிஸ்தானி பிரதிநிதி மற்றுமொரு கேள்விப் பட்டியலுடன் வந்தார். பன்னாட்டு நடைமுறைகளை செயற்படுத்துவதில் உள்ள பொருளாதார சிக்கல்கள், வளங்களின் இருப்பு ஆகியவற்றைக் குறித்து கேள்வி எழுப்பினார். இவை தீர்மானம் வடிவமைக்கப்பட்ட போது நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டங்களில் விவாதித்திருக்க வேண்டியவை.
தீர்மானத்தின் உள்ளடக்கம், வழிமுறைகள் மற்றும் வரைவு குறித்து ஏற்கெனவே மூன்று கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு விட்டன என்பதையும் அவற்றில் விளைவுகள் குறித்தும் பொறுப்பேற்பது குறித்தும் முழுமையான புரிதல் எற்படுத்தப்பட்டன என்றும் பொருளாதார சிக்கல்கள் குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தான், சீனா மற்றும் பிற உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கப் பிரதிநிதி நினைவூட்டினார். பாகிஸ்தானிடமிருந்து சீனா அமைதியாக பொறுப்பை தன் வசம் எடுத்துக் கொண்டு, இந்தப் பிரச்னையை காலவரையின்றி தள்ளிப் போட்டு, மேலும் சிக்கலாக்கும் நோக்கத்துடன், பாகிஸ்தான் எழுப்பிய கேள்விகளை விதிமுறை 116-இன் கீழ் வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று கோரியது. தமக்குள்ளும் இலங்கை அரசுடனும் நல்லுறவைப் பேணும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் இத்தகைய பங்காற்றலை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கியூபா தொடர்ந்து வட அமெரிக்கா எனும் காமாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. தனது சொந்த ஆன்மா மற்றும் தார்மீக கடமைகள் குறித்து கியூபா நேர்மையுடன் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பணர்வு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது - என்று குறிப்பிடும் பத்தாவது பத்தியை நீக்க வேண்டும் (விதிமுறை 129-இன் கீழ்) என்ற கோரிக்கையுடன் பன்னாட்டு விசாரணைகளை தடுப்பதற்கான இறுதி முயற்சியை பாகிஸ்தான், சீனா மற்றும் கியூபா ஆகியவை இணைந்து முன்னெடுத்தன. தனது தீர்மானம் குறித்த அமெரிக்காவின் தெளிவான விளக்கங்களுக்குப் பின்னரும் இந்த இரண்டு கோரிக்கைகளும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. இறுதியில் அமெரிக்கத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுவது என்ற முடிவே வென்றது.
இறுதி வாக்கெடுப்பின் போது விலகி நின்றதை விட, இந்த இரு சூழல்களிலும் இந்திய அரசு நடந்து கொண்ட முறையின் ஊடாகவே இந்திய அரசின் உண்மை நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். விதிமுறை 116-இன் கீழ் கோரப்பட்ட காலவரையின்றி தள்ளிப்போடுதல்' என்ற கோரிக்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. பின்னர் சீக்கிரமே, "இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பணர்வு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது' என்று குறிப்பிடப்பட்டுள்ள பத்தாவது பத்தியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாகவும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இணைந்து இந்தியா வாக்களித்தது.
இறுதி வாக்கெடுப்பின் போது இந்தியா எடுத்த நிலைப்பாடு முன்பே தீர்மானிக்கப்பட்டது எனில், இந்த இரண்டு வாக்கெடுப்புகளிலும் இந்தியா எடுத்த நிலைப்பாடுகள், இந்திய அரசின் கருத்தை மிக அவசரமான நேரடித் தொடர்பு ஊடாக கேட்டறியப்பட்டிருந்தால் ஒழிய, அவை இந்திய அரசின் தூதர் அல்லது நிரந்தர பிரதிநிதியின் தன்னிச்சையான முடிவுகளாக இருக்க வேண்டும். வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் விலகி நிற்பது என்று நாம் ஏற்கெனவே முடிவு செய்திருந்தால், "விதிமுறை 116'-இன் கீழ் "காலவரையின்றி தள்ளிப்போடுதல்' கோரிக்கைக்கும், விதிமுறை 129-இன் கீழ் பத்தாவது பத்தியை நீக்கும் கோரிக்கைக்கும் ஏன் வாக்களிக்க வேண்டும்?
பன்னாட்டு பங்கெடுப்பிற்கான செயற்பாடுகளை சீர்குலைக்க தயாராக இருந்த இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சீனாவோடு ஏற்கெனவே இந்தியா கைக் கோர்த்து விட்டது. இந்தியத் தூதர் ஏற்கெனவே இப்படியான செயல்களில் பெயர் வாங்கியவர். தீர்மானத்தை எப்படியாயினும் கொல்ல வேண்டும் என்ற திட்டத்தில் இந்தியா உள்ளிழுக்கப்பட்டது. வெளியுறவு அமைச்சகத்தின் இத்தகைய எதேச்சதிகாரப் போக்குத் தொடரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும் அரசும், இந்திய அரசிடம் இதனை அதிகாரப்பூர்வமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
இறுதி வாக்கெடுப்பிலிருந்து தான் விலகி நிற்பதற்கான காரணத்தை விளக்கி இந்தியா அளித்த அதீத குழப்பமான மூன்றாம்தர விளக்கத்திற்கு பிறகு அய்.நா.வின் மனித உரிமைக் குழுவுக்குள் அரசியல் வெப்பத்தில் இந்தியாவின் முகமூடி உருகிவிட்டது. பின்னர் இந்தியா தான் வாக்கெடுப்பிலிருந்து விலகி நிற்பதான தனது தீர்மானத்தை அறிவித்தது என்பதும் அதனைத் தொடர்ந்து நடைபெற்றவையும் வரலாறாகி விட்டன. இதன் விளைவு என்னவெனில், இந்தியா இலங்கையுடன் நிற்கிறது என்பதும் பன்னாட்டு விசாரணைக்கான அனைத்து செயற்பாடுகளையும் தடுக்கவும் தகர்க்கவும் தன்னால் இயன்ற அனைத்தையும் இந்தியா செய்யும் என்பதும் தெளிவானது. இது இந்தியாவுக்குப் புதிதல்ல. நார்வே முன்னெடுத்த அமைதி நடவடிக்கைகளின் போது, இராணுவ வாய்ப்புகளை தொடர்ந்து ஆராய மகிந்த இராஜபக்சேவை ஊக்குவித்துக் கொண்டு, மறுபுறம் அமைதி நடவடிக்கைகள் குறித்து பாராமுகமாக இருந்து, மறைமுகமாக நார்வேயின் அமைதி நடவடிக்கைகளை இந்தியா சீர்குலைத்தது. பாகிஸ்தான் மற்றும் சீனா ஏற்படுத்திய தடைகளை உருவாக்கக் கோடாரியைப் பரிசளித்த பிறகு அய். நா. வின் மனித உரிமைக் குழுக் கூட்டம் நடந்த இடத்தில் இந்தியா தன் முகத்தை மறைத்துக் கொள்ள எவ்விடமும் இல்லை. இந்தியா தனது நிலையை அறிவித்த உடன் எழுந்த மகிழ்ச்சியையும் வெற்றிப் பெருமிதத்தையும் இலங்கைப் பிரதிநிதிகளால் மறைக்க முடியவில்லை.
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான பெண்களின் நிலை கேள்விக்குரியதாக இருப்பதை மறைக்கவும் புதைக்கவும் நாம் எடுத்த முயற்சிகள் குறித்து எவ்வித குற்ற உணர்ச்சியோ அவமானமோ நமக்கு இல்லை. இலங்கை இராணுவத்தினர் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததை இலங்கை அரசே ஒப்புக் கொண்டு, அய். நா. மனித உரிமைக் குழுவின் வாக்கெடுப்புக்கு முன் தன் முகத்தைக் காப்பதற்கான இறுதிக் கட்ட கேவலமான முயற்சிகளில் ஒன்றாக அவ்வாறு தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் தாக்குதல் புரிந்த இராணுவத்தினர் குறித்த உலக நாடுகளின் அக்கறைக்குப் பதிலளிக்கும் விதமாக தானே நடவடிக்கை எடுப்பதாகக் கூறி தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது.
தமிழ்ப் பெண்கள் மீது மட்டுமல்லாது அவர்களது உயிரற்ற உடல்கள் மீதும் இலங்கை இராணுவத்தினரின் மனிதத்தன்மையற்ற பாலியல் தாக்குதல்கள், அய். நா. வின் செயலாளர் நாயகத்தின் அறிக்கை வெளிப்படுத்தியவாறு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு இலங்கை அரசு உணவும் மருந்துகளும் மறுத்தமை, இலங்கை ஆயுதப் படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது, 70,000 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டது, 146,749 தமிழர்கள் காணாமல் போனது, 300,000 தமிழர்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டது, போருக்குப் பின்னான காலத்தில் தமிழ் பொது மக்கள் துன்புறுத்தப்பட்டது மற்றும் அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டது, சிங்கள குடியேற்றங்கள், தனியார் மற்றும் பொது நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டமை, வடக்கு மற்றும் கிழக்கு இராணுவமயமாக்கப்பட்டது ஆகியவை, இந்திய அரசைப் பொறுத்த வரையில், இந்திய அரசின் அக்கறைக்குரியதாகவே உள்ளன. தமிழர்கள் மீதான இந்திய அரசின் அக்கறை ஆவணங்களை கடந்து நடைமுறை செயற்பாடுகளாக மாற்றப்படவே இல்லை.
ஆனால் வாக்கு என்னவோ இந்த குற்றச்சாட்டுகள் மீது எவ்வித நம்பகத்தன்மையுள்ள தரமான பன்னாட்டு விசாரணையையும் தடுக்க முற்படும் இலங்கை அரசுக்குதான். என்ன ஒரு நேர்மையற்ற தரமற்ற வெளியுறவு கொள்கையினை காங்கிரசு தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியும், வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் உள்ள அதன் ஜால்ராக் கூட்டமும் உருவாக்கி உள்ளன! வாக்கெடுப்பில் இருந்து விலகி நிற்பது, அதாவது, மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பது என்ற இந்த நிலைப்பாடு எந்த வகையில் இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதாக உள்ளது?
தமிழ்நாடு சட்டமன்றமும், தமிழ்நாட்டு மக்களும் கடந்த காலத்தில் உலகளாவிய மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனித நேய சட்டங்கள் ஆகியவை மீறப்பட்டது குறித்து சுதந்திரமான, நம்பகத்தன்மையுள்ள பன்னாட்டு விசாரணையை மட்டுமே கோரினர். தமிழ்நாட்டு மக்களாகிய நாங்கள் யார் இந்திய அரசுக்கு? இந்திய குடியரசின் கீழ், இந்திய கூட்டாட்சி அமைப்பின் பகுதியாக மாநில சட்டமன்றம் மற்றும் அதன் கோரிக்கைகளும் என்ன பொருளும் முக்கியத்துவமும் கொண்டுள்ளன? இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இலங்கை ஆயுதப் படையினரும் அரசு அதிகார வர்க்கமும் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மையுள்ள பன்னாட்டு விசாரணை கோரி தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்திற்கும் தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கும் இந்திய அரசு குறைந்த பட்ச மரியாதையேனும் தந்திருக்க வேண்டும்.
தேச நலன் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டதாக வாதிடுபவர்கள், நமது கடந்த காலத்தை குறைவாக மதிப்பிட்டு விடாமல், போர்க் குற்றவாளிகள், ஓடுக்குமுறையாளர்கள், உலகளாவிய மனித உரிமை மற்றும் மனித நேயச் சட்டங்களை மீறுபவர்கள் ஆகியோருக்கு ஆதரவாக இருப்பது நமது தேச நலனாக இருந்ததே இல்லை என்பதை மறந்து விடக் கூடாது. பன்னாட்டு விசாரணை அல்லது பன்னாட்டுப் பங்கேற்பு ஆகியவற்றிற்கு ஆதரவாக நாம் இது வரை வாக்களித்தது இல்லை என்றும், குறிப்பாக இந்தத் தீர்மானம் இலங்கையின் இறையாண்மையை மீறுவதாக உள்ளது என்றும் இந்திய அரசு குறிப்பிட விரும்பினால், வங்காள தேச மக்கள் மற்றும் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்பு இயக்கம் ஆகியோரிடம் இந்தியா வகித்த பங்கு மற்றும் பொறுப்பு குறித்து தற்போதைய கொள்கை வகுப்பாளர்களுக்கு நாம் நினைவூட்ட விரும்புகிறோம்.
கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட காலப் பகுதியில் இலங்கையில் இரு தரப்பினரும் நிகழ்த்திய மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும், நீதிக்கு அப்பாற்பட்டு நிற்பதை தவிர்க்கவும் பொறுப்பேற்பதை உறுதிப்படுத்தவும் இந்த மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் நடந்த குற்றங்கள் குறித்த உண்மைகளையும் சூழலையும் தகுதி வாய்ந்த நிபுணர்கள் மற்றும் சிறப்பு நடைமுறைகள் மூலம் கண்டறிந்து...' என்றுதான் இத்தீர்மானத்தின் வாசகங்கள் சொல்கின்றன. பன்னாட்டு விசாரணைக்கான கோரிக்கை இலங்கை அரசுக்கு எதிராக மட்டுமல்ல, விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும்தான். பின் ஏன் இந்தியா இந்த பன்னாட்டு விசாரணையைத் தடுக்க இலங்கை அரசுடன் இணைந்து நிற்க வேண்டும்?
இறுதியாக, மகிந்த இராஜபக்சே, கோத்தபாய இராஜபக்சே, பசில் இராஜபக்சே மற்றும் முன்னாள் இராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய அனைவருமே, போர்க் காலத்திலும் சரி, அதற்கு பின்னும் சரி, இலங்கை இந்தியாவின் போரைத்தான் நடத்துகிறது என்றும் அதையும் இந்தியாவின் ஆதரவுடன்தான் நடத்துகிறது என்றும் தொடர்ந்து சாதித்து வந்தனர். இந்த கருத்து இந்திய அரசியல் தலைமையாலோ அல்லது இந்திய வெளியுறவு அமைச்சகத்தாலோ இதுவரை மறுக்கப்படவோ கேள்விக்குள்ளாக்கப்படவோ இல்லை.
"இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பணர்வு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது' என்ற இந்த அய். நா. மனித உரிமைக் குழுவின் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலிருந்து இந்தியா விலகி நின்றது என்பது, இலங்கை ஆயுதப்படையினராலும் இலங்கை அரசு அதிகார வர்க்கத்தாலும் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றறங்கள் குறித்த நமது மவுனத்தையும் அதில் நமக்கிருக்கும் பங்கையும் மீண்டும் உறுதி செய்கிறதா? இது தார்மீக கடமை அல்லது தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தைப் பற்றியது அல்ல. ஆனால் இக்குற்றங்களில் இந்தியா வகித்த பங்கு என்பது இந்தியாவை நீண்ட காலத்திற்கு துன்புறுத்தும். உலகளாவிய மனித உரிமை மற்றும் மனித நேய சட்டங்களை பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை திருத்திக் கொள்ள துணிச்சலான முடிவுகளை எடுக்கும் ஒரு புதிய அரசு 2014-மே-சூன் மாதங்களில் பதவி ஏற்கும் வரை இந்த குற்ற உணர்ச்சி இந்தியாவை விடாது.
(பேராசிரியர் இராமு. மணிவண்ணன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியற் துறைத் தலைவர். கடந்த 5 ஆண்டுகளாக ஜெனிவாவில் நடக்கும் அய். நா. மனித உரிமைகள் குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பல நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து தமிழர்களுக்காக ஆதரவு திரட்டியவர்)
- தமிழில் : பூங்குழலி
- நன்றி : SAAG
|