சுதந்திர இந்தியா பிரிட்டிஷ் நாடாளுமன்ற சனநாயக முறையைப் பின்பற்ற வேண்டும் என நேருவும் மற்ற தலைவர்களும் முடிவு செய்தனர். சொத்துரிமை உடையவர்களுக்கே வாக்குரிமை என்ற நிலையை மாற்றி வயது வந்தவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்க வேண்டுமென பிரதமர் நேரு விரும்பியபோது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் திடுக்கிட்டார்.
600 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கான தேர்வில் வாக்குரிமை என்பது படிப்படியாகத்தான் கொடுக்கப்பட்டது. நீண்ட காலத்திற்கு பிறகே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டிய மவுண்ட் பேட்டன் "பெரும்பாலும் படிப்பறிவற்ற இந்தியாவில் வாக்குரிமையின் அருமை தெரியாது தவறாகப் பயன்படுத்துவார்களானால் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டுவிடும். வேண்டாம் இந்த விஷப்பரீட்சை' என எச்சரித்தார்.
"எனது மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது'' என்று கூறிய பிரதமர் நேரு இன, மொழி, மத, ஆண்கள்-பெண்கள் என்று வேறுபாடு இன்றி வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்க முடிவு செய்தார்.
1952-ஆம் ஆண்டு, முதல் பொதுத் தேர்தலின்போது மக்கள் மீது நேரு வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்பது வெளிப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது மக்களால் நிலைநாட்டப்பட்டது.
நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஏற்றுக் கொள்ளாத கட்சிகள் கூட மக்களின் பங்களிப்பை பார்த்த பிறகு ஏற்றுக்கொண்டு தேர்தல்களில் பங்கெடுத்தன. மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சி மாற்றங்களை ஜனநாயக முறையில் மக்கள் ஏற்படுத்தினார்கள். மக்கள் மீது நேரு வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.
ஆனால் நேருவின் காலத்திற்குப் பிறகு ஜனநாயகத்தை படிப்படியாக சீர்குலைக்கும் முயற்சி தொடங்கியது. அவரது காங்கிரஸ் கட்சியே அதற்குப் பெருமளவு காரணமாக இருந்தது என்பது சோகமான வரலாறு ஆகும்.
உட்கட்சி ஜனநாயகம் அழிக்கப்பட்டு இந்திரா குடும்பத் தலைமை திணிக்கப்பட்டது. கட்சியில் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை நியமன முறை கொண்டு வரப்பட்டது. காலப்போக்கில் மற்றக் கட்சிகளும் இதை பின்பற்றின. பெரும்பாலான கட்சிகளில் ஜனநாயகம் புதைக்கப்பட்டு வாரிசுத் தலைமைகள் உருவாக்கப்பட்டன.
கட்சித் தலைவர்களின் சொந்த நிறுவனங்களாக கட்சிகள் இப்போது மாற்றப்பட்டுவிட்டன. உட்கட்சி ஜனநாயகத்தை ஒழித்துவிட்ட கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க முயலுகின்றன.
ஒருகட்சி ஆட்சி என்பது இனி எக்காலத்திலும் இந்தியாவில் ஏற்படப்போவது இல்லை. எனவே பலகட்சிகளின் கூட்டணி ஆட்சி என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. இதன் விளைவாக கொள்கை - கோட்பாடற்ற கூட்டணிகள் உருவாக்கப்பட்டு பணநாயகமும், பதவிநாயகமும் கைகோர்த்துக் கூத்தாடுகின்றன. சந்தர்ப்பவாதமும், அதிகாரபோதையும் தலைவிரித்தாடுகின்றன.
துன்பம், தொண்டு, தியாகம் ஆகியவற்றை பொதுவாழ்வின் தாரகமந்திரங்களாகக் கொண்ட நிலை மாறி, பதவி, அதிகாரம், ஊழல் என்பது அரசியல்வாதிகளின் குறிக்கோள்களாக ஆகிவிட்டன. அரசியல் என்பது தொண்டு என்ற நிலை மாறி பிழைப்பிற்கான தொழிலாகிவிட்டது.
அரசியல் வழி அதிகாரம் என்பதை மூலதனமாகக் கொண்டு புதிய கோடீசுவரர்களானவர்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது. இனி தேர்தல்களில் போட்டி, பணத்தை வாரி இறைத்து பதவி, பதவியைத் தவறாகப் பயன்படுத்தி பணம் என்ற நச்சுச் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது.
ஏழை குடும்பங்களில் பிறந்து, தொண்டினாலும், தியாகத்தினாலும் உயர்ந்து பதவி நாற்காலிகளுக்குப் பெருமை சேர்த்து ஏழைகளாகவே மறைந்து போன காமராசர், கக்கன் போன்றவர்கள் இனி எக்காலத்திலும் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.
தாங்கள் கெட்டது போதாது என மக்களையும் கெடுக்க சில கட்சிகள் முயலுகின்றன. மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் இலவசங்கள்’ என்னும் இழிவை வாரி இறைத்து மக்களை மயக்குகின்றன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டங்களை நிறைவேற்றாமல் மதுக்கடைகளைத் திறந்து இளைஞர்களைச் சீரழிக்கின்றன. திட்டவட்டமான பொருளாதாரக் கொள்கைகளோ சமுதாய சீர்திருத்தங்களோ தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல் மக்களை மேலும் மேலும் ஏழ்மையிலும் வறுமையிலும் ஆழ்த்தி வருகின்றன.
தலைவர்கள் பேசும் தேர்தல்கால கூட்டங்களுக்கு தலைக்கு ரூ. 300 முதல் ரூ. 500 வரையிலும் மேலும் பிரியாணி, மதுப்புட்டி எனக் கொடுத்தும் லாரி லாரியாக மக்கள் அழைத்து வரப்படுகிறார்கள். குறைந்தபட்சம் ஒரு கூட்டத்திற்கு ரூ. 50 இலட்சம் முதல் ரூ. 1 கோடி வரை செலவு செய்யப்படுகிறது. மக்கள் ஆட்டு மந்தைகளாகக் கருதப்படுகின்றனர். தேர்தலின்போது வாக்காளர்களுக்கு தலைக்கு ரூ. 3000 முதல் ரூ. 5000 வரை அளித்து வாக்குகளை விலைக்கு வாங்க பல கட்சிகள் தயங்குவதில்லை. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் இவ்விதம் பணம் தந்து வெற்றி பெற ரூ. 50 கோடி முதல் 100 கோடி வரை செலவழிக்கவும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற, அதாவது சுமார் 300 இடங்களைப் பிடிக்க ரூ. 15, 000 கோடி முதல் ரூ. 30,000 கோடி வரை செலவழிக்கவும் கூட்டணிகள் தயாராக உள்ளன. இதற்கு பின்னணியில் பணத் திமிங்கலங்கள் பெட்டிகளுடன் காத்திருக்கின்றன. கைம்மாறாக நாட்டின் வளங்களைச் சூறையாட அனுமதி கிடைக்கும் என்ற நப்பாசையுடன் அலைகின்றனர்.
வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்கிற உறுப்பினர்கள் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையைச் செய்கின்றார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. 1952-ம் ஆண்டில் முதல் நாடாளுமன்றம் சராசரியாக ஆண்டிற்கு 120 நாட்களுக்கு மேல் கூடியது. ஆனால் கட்சி வரிசையில் இருந்தவர்களும், எதிர்க் கட்சி வரிசையில் இருந்தவர்களும் பொறுப்பு உணர்வோடு கடமையாற்றி ஜனநாயகப் பயிரைச் செழிக்க வைத்தனர். ஆனால் நாளடைவில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. நடப்பு 15-ஆவது நாடாளுமன்றம் ஆண்டுக்கு 70 நாட்கள் மட்டுமே கூடியது. அதிலும் பெரும்பாலான நாட்களில் கூச்சல், குழப்பம், மோதல் இவற்றுக்கிடையே உருப்படியாக எதுவும் செய்யாமல் கலைந்த காட்சிகளே அரங்கேறின.
நாடாளுமன்றத்தின் கண்காணிப்பு இல்லாத ஆட்சியில், ஊழலும் லஞ்சமும் நாளுக்கு நாள் பெருகி உச்சக்கட்டத்தை எட்டின. சக அமைச்சர்கள் புரிந்த பெரும் ஊழல்களைத் தடுக்க பிரதமரால் முடியவில்லை என மத்திய உயரதிகாரியாக இருந்த ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் ஊழல்கள் அம்பலமான பிறகும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதவாறு பிரதமரின் கரங்களைக் கட்டிப் போட்டது யார்? இந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்து கொள்ள சிரமப்பட வேண்டியதில்லை. காங்கிரசுத் தலைவர் சோனியாவே அந்த அதிகார மையமாவார். போஃபர்ஸ்’ ஊழல் தொடங்கி 2ஜி’ ஊழல் வரை அத்தனை ஊழல்களிலும் மக்களின் வரிப்பணம் சூறையாடப்பட்டது. இந்தப் பணம் தேர்தல்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. இப்போதும் செலுத்துகிறது.
"எம்மதமும் சம்மதமே' என்ற உன்னத நிலைக்கு மக்களை கொண்டு வர அரும்பாடு பட்ட காந்தியடிகள் இறுதியில் மதவெறி பலிபீடத்தில் தன்னையே காவு கொடுத்தார். ஆனாலும் மதவெறி சக்திகளின் இரத்த தாகம் தணியவில்லை. சமுதாய ஒற்றுமையை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் அடைய முயலுகின்றன.
சந்தர்ப்பவாதமும், பதவி வெறியும் தலைக்கு ஏறிய நிலையில் பல கட்சித் தலைவர்கள் பொது வாழ்க்கையின் நற் பண்புகளைச் சிதைக்க முற்பட்டிருக்கின்றனர். இவர்களை அடையாளம் கண்டு மீண்டும் தலை தூக்க விடாமல் செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் மக்களுக்கு உண்டு. குறிப்பாக இளைஞர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து சமுதாயத்தில் புரையோடியிருக்கிற தீமைகளை எதிர்த்துப் போராட உறுதி பூண வேண்டும்.
பிரதமராக இருந்த நேரு தனது அமைச்சரவை சகா ஒருவர் சில தொழிலதிபர்களுடன் மிக நெருக்கமாக இருக்கிறார் என்ற செய்தி அவருக்கு எட்டியபோது, உளவுத்துறை தலைவராக இருந்த பி.என்.முல்லிக் என்பவரை அழைத்து அது குறித்த உண்மையைக் கண்டறிந்து கூறுமாறு உத்தரவிட்டார். அவரும் விசாரித்து அச்செய்தியில் உண்மையில்லை எனக் கூறினார். சந்தேகத்திற்கு சிறிதளவும் இடம் தராத நேர்மையானவர்களாக தனது அமைச்சரவை சகாக்கள் விளங்க வேண்டும் என்பதில் நேரு உறுதியாக இருந்தார் என்பதை இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.
தற்போதைய பிரதமரோ, மாநில முதலமைச்சர்களோ அல்லது இவர்களின் அமைச்சர்களோ இத்தகைய நேர்மையைக் கடைப்பிடிக் கிறார்களா? என்ற கேள்விக்கு விடை தேடினால் ஒன்றிரண்டு பேர்களாவது தேறுவார்களா?
தங்கள் கட்சிகளில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்த தலைவர்களிடம் நாட்டின் ஆட்சி சிக்குமானால் நாட்டிலும் சர்வாதிகாரம் வேரூன்றிவிடும். நடைபெறப்போகும் தேர்தலில் இத்தகையவர்களை அடையாளம் கண்டு புறக்கணிப்பது மட்டும் போதாது. ஜனநாயகத்தை காப்பதிலும் பொது வாழ்க்கையின் நற்பண்புகளைத் தவறாமல் கடைப்பிடிக்கவும் மக்கள் தொண்டுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளவும் உறுதிபூண்டு தொண்டாற்றி தியாகத் தழும்புகளை ஏந்திய கறைபடியாத நேர்மையாளர்களை வெற்றி பெறச் செய்வது நமது கடமையாகும்.
சிறை புகுந்தும், தூக்குக் கயிற்றில் தொங்கியும், எண்ணற்ற வகையில் தியாகம் செய்தும் நமது முன்னோர் பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றத் தவறுவோமானால் வருங்காலத் தலைமுறை நம்மை சபிக்கும்.
நன்றி : "தினமணி' 22-4-2014
|