மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் தொடங்கிய உலகத் தமிழ்க் கழகத்தின் ஐந்தாவது பொது மாநாட்டில் பங்கெடுப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சரியான காலகட்டத்தில் உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் உணர்வு மங்கிக் கிடந்த காலத்தில் தமிழர்களிடையே தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டி வளர்த்தது. தமிழ்ப் பெயர்களைச் சூட்டுதல், தூய தமிழில் பேசுதல், எழுதுதல் போன்றவை பரப்பப்பட்டுத் தமிழ் இளைஞர்கள் ஊக்கம் பெற்றனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்களாக இருந்தபோது நானும் எனது தோழர்களும் எங்களுடைய பெயர்களை தூய தமிழில் மாற்றிக்கொண்டோம். தமிழகமெங்கும் மாபெரும் எழுச்சியை உலகத் தமிழ்க் கழகம் ஏற்படுத்தியது.
"தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் ஒருமுறை என்னிடம் பின்வருமாறு பாராட்டினார். “உலகத் தமிழ்க் கழகம் நடத்திய மாநாடுகளிலும், கூட்டங்களிலும் நானும் எனது தோழர்களும் பங்குகொண்டு புத்துணர்வையும், எழுச்சியையும் பெற்றிருக்கிறோம்''.
1968-ஆம் ஆண்டு பாவாணர் அவர்கள் தலைமையில் இக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை அதில் அங்கம் வகித்து, வயது முதிர்ந்து போனாலும் உணர்வு குன்றாத நிலைமையில் என் முன் வீற்றிருக்கிற பல பெரியவர்களைப் பார்க்கும்போது மனம் நெகிழ்கிறேன். இன்னமும் தமிழ்ப் போராளிகளாக வாழ்ந்துவரும் அவர்களுக்கு முதலில் எனது பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலத்திற்கு மேலாக எந்தெந்த உணர்வுகளை வளர்க்கவேண்டுமென்று நீங்களும் உங்களைப் போன்ற உணர்வாளர்களும் போராடினீர்களோ, அவை இன்னமும் முழுமையாக நிறைவேறவில்லை. தொடர்ந்து களத்திலேயே நாம் நின்று போராடவேண்டியிருக்கிறது.
தலைமுறை தலைமுறைகளாக நாம் காத்துவந்த உயர்ந்த பண்பாடுகள், சிறந்த விழுமியங்கள் சிதைந்து வருகின்றன. இளம் தலைமுறையினர் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுகின்றனர். மது, சூது, இலஞ்சம், ஊழல், ஒழுக்கமின்மை, எதைச் செய்தாவது எப்படியும் பதவியை அடைவது, அடைந்த பின் பணத்தைத் திரட்டுவது, திரட்டிய பணத்தைக்கொண்டு பதவியைத் தக்கவைத்துக் கொள்வது போன்ற நச்சுச் சூழலில் நமது இளைஞர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
சங்க கால மன்னர்கள் யவனர் கொண்டுவந்த மதுவிற்கும், மாதருக்கும் அடிமையான வரலாற்றைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. யவன வீரர்கள் அரண்மனைகளைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டனர். தமிழ்ச் சமுதாயத்தில் கூடா ஒழுக்கம், சூது, பிறனில் விழைதல், பொது மகளிர் சேர்தல் போன்ற சீரழிவுகளைக் கண்ட வள்ளுவர் அவற்றை எதிர்த்துப் படைத்த இலக்கியம்தான் திருக்குறளாகும்.
குறளின் தாக்கம் என்பது சங்க நூல்களில் தொடங்கிக் காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம், சிற்றிலக்கியங்கள் மற்றும் பாரதி, பாரதிதாசன் பாடல்கள் வரை அத்தனை இலக்கியங்களிலும் முத்திரை பொறித்தது.
நோபல் பரிசுபெற்ற ஆல்பர்ட் சுவைட்சர் குறளையும் படித்தார்; கீதையையும் படித்தார். இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாடு மலைக்கும் மடுவிற்கும் உள்ளது என்பதை உணர்ந்தார். பின்வருமாறு கூறினார்.
"கீதை பிராமணியத்தின் சாரம். ஆனால், குறள் தமிழர் பண்பாட்டின் சாரம். வேத மரபின் வாரிசு கீதை. தமிழ் மரபின் விழுமியங்களின் வாரிசு குறள். வர்ண தர்மத்தை நிலைநாட்ட எழுந்தது கீதை. பிறப்பினால் ஏற்றத் தாழ்வு இல்லை என்றது குறள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் வள்ளுவர்.''
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பேரறிஞரான டால்ஸ்டாய் குறளின் பெருமையை உணர்ந்தார். குறிப்பாக, இன்னா செய்யாமை என்ற அதிகாரம் அவரது உள்ளத்தைத் தொட்டது.
திருக்குறளைப் பற்றியும், திருவள்ளுவரைப் பற்றியும் காந்தியடிகள் டால்ஸ்டாய் மூலமே அறிந்துகொண்டார் என்பது மற்றொரு வியப்பான செய்தியாகும். அதன் பிறகு திருக்குறளைப் படித்து அதன் சிறப்பைத் தான் உணர்ந்துகொண்டதாகக் காந்தியடிகளே தமது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்.
சென்னையில் இருந்து வெளியான தி ஆர்யா என்னும் சமூக-அரசியல் பத்திரிகையின் ஆசிரியரான இராமசேஷன் என்ற தமிழர் டால்ஸ்டாயுடன் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார். இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திவரும் தாங்க முடியாத அடக்குமுறைகளைப் பற்றி டால்ஸ்டாயிக்கு எழுதிய தமது கடிதத்தில் குறிப்பிட்ட இராமசேஷன் தங்களை ஊக்குவிக்கும் வகையில் அறிவுரை கூறுமாறு வேண்டிக்கொண்டார். டால்ஸ்டாய் கூறும் ஊக்க மொழிகள் மதிப்புடன் வரவேற்கப்படும் என்றும், அதற்கு நல்ல விளைவுகள் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்கு டால்ஸ்டாயை இக்கடிதம் தூண்டியது. இதன் விளைவாக "இந்துக்களுக்கு ஒரு கடிதம்' என்ற தலைப்பில் டால்ஸ்டாய் எழுதிய கட்டுரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்திய மக்கள் அடிமைப்பட்டதற்கான காரணங்களையும், அவர்கள் விடுதலை பெறுவதற்குரிய வழிகளையும் டால்ஸ்டாய் விளக்கியிருக்கிறார்.
"வன்முறையின் மூலம் இந்தியர்கள் அடிமைப்பட்டதற்குக் காரணமே அவர்கள் வன்முறை வாழ்வு வாழ்ந்ததுதான். வன்முறையின் துணைக்கொண்டு வாழ்வது மனித சமுதாயத்தின் அன்பினை உணராததன் விளைவாகும். வன்முறை என்னும் தீமையை அகற்றுவதற்கு அன்பே வழியாகும். அன்பை அடிப்படையாகக் கொண்டு வாழ்வதற்கு மனிதன் முடிவு செய்தால் அதற்குரிய ஆயுதமாக ஒத்துழையாமை விளங்கும். இது மனிதனுக்குக் கிடைத்த இயற்கையான ஆயுதமாகும். வன்முறை ஏவப்பட்ட போதிலும் அதற்கு எதிராக இது எந்தக் கட்டத்திலும் தலை தூக்காது. பல கோடி மக்களைச் சில நூறு பேர் அடிமை கொள்வதை இது தடுக்கும். அதைப்போலவே பல இலட்சக்கணக்கானவர்கள் ஒரு தனி மனிதனை அடிமைகொள்வதையும் இது தடுக்கும். தீமையை எதிர்க்கவேண்டியது இல்லை. ஆனால் நீங்கள் தீமைகளில் பங்கெடுக்காதீர்கள். நீதி, சட்டம், வரி வசூல் எல்லாவற்றிற்கும் மேலாக இராணுவ வீரர்கள் ஆகியோரைக் கொண்ட நிர்வாகத் தீமைகளில் நீங்கள் பங்கெடுக்காதீர்கள். அவ்வாறு செய்வீர்களேயானால் உலகத்தில் யாரும் உங்களை அடிமைப்படுத்த முடியாது''. வன்முறைக்கு எதிராக அறவழிப் போராட்டத்தைக் கையாளும்படி இந்திய மக்களுக்கு டால்ஸ்டாய் அறிவுரை கூறினார்.
மேலும் இக்கடிதத்தில் தமது உள்ளத்தைக் கவர்ந்த திருக்குறள் பாக்கள் சிலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். "இன்னா செய்யாமை' என்னும் அதிகாரத்தில் இவை உள்ளன.
பிறருக்குத் துன்பத்தைச் செய்வதால் பல்வேறு சிறப்புகளைத் தரும் செல்வத்தைப் பெற இயலும் என்றாலும் அத்தகைய துன்பத்தைச் செய்யாமல் இருப்பதே குற்றமற்ற பெரியோர்கள் கொள்கை என்பதனை டால்ஸ்டாய் விளக்கியுள்ளார்.
"சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள்' (311)
என்று குறட்பா தெரிவிக்கின்றது.
"செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும்' (313)
ஒரு தீங்கும் செய்யாதவனைப் பகைத்து அவனுக்குப் பெருந்தீமைகளைச் செய்தால் அது, தப்பமுடியாத துன்பத்தைத் தரும். தம் மீது பகைமை கொண்டு ஒருவன் தமக்குத் துன்பம் பலவும் செய்த அந்த நேரத்திலும், அந்தத் துன்பங்கட்கு எதிராக அவனுக்குத் தீங்கு செய்யாமல் இருத்தலே குற்றமற்ற பெரியோர்களது கொள்கையாகும் என்ற கருத்தை விளக்குகிறது.
"கறுத்து இன்னா செய்ததவக் கண்ணும் மறுத்து இன்னா செய்யாமை மாசற்றார் கோள்' (312)
என்ற பாடல் தனக்குத் தீங்கு செய்தவர்களைத் தண்டித்தற்குரிய சிறந்த வழி, தீங்கு செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்களுக்கு நன்மை தரும் செயல்களைச் செய்து அவர்கள் செய்த ‘தீங்கினையும், தான்செய்த நன்மையினையும் மறந்து விடுவதேயாகும் என்ற அறிவுரையை
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். (314)
என்ற பாடல் தெரிவிக்கிறது. இது இயேசு பெருமானின் அறிவுரையினும் உயர்ந்தும், உளவியல் நுட்பம் வாய்ந்தும் காணப்படுவதாக டால்ஸ்டாய் குறிப்பிட்டுள்ளார். பிற உயிருக்கு நேர்ந்த துன்பத்தைத் தமக்கு நேர்ந்த துன்பமாகக் கருதி அவ்வுயிரைக் காப்பாற்றாவிட்டால் ஒருவர் பெற்றுள்ள அறிவினால் உண்டாகக் கூடிய பயன் யாது| எனக் கூறும் திருக்குறட் கருத்து.
"அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதினோய் தந்நோய்போல் போற்றாக் கடை' (315)
கிறித்துவ சமய அருள் கொள்கையை உணர்த்துவதாகத் டால்ஸ்டாய் கருதுகிறார்.
ஒருவர் ஒரு நாளின் முற்பகலில் பிறர்க்குத் துன்பந் தருவனவற்றைச் செய்வாரேயானால், அந்நாளின் பிற்பகலில் துன்பந்தருவன தாமே (பிறரால் செய்யப்படாமல்) அவரை வந்தடையும் என்பதை
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும் (319) என அறிவிக்கிறது.
இந்த ஆறு குறட்பாக்களும் டால்ஸ்டாயின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்துள்ளன. அவருடைய ஊறுசெய்யாக் (அகிம்சை) கொள்கையை உருவாக்க உதவியுள்ளன. அறநெறியில் போராடுவது பற்றிய சிந்தனைக்கு உரமாக அமைந்துள்ளன.
பிறருக்கு ஊறு செய்யாத அறநெறித் தத்துவங்களின் அடிப்படையில் போராடுமாறு உலக மக்களுக்கு அறிவுரை வழங்கிய டால்ஸ்டாய், தமது கொள்கைக்கு உரம் சேர்க்கக் குறள் காட்டிய நெறியைச் சுட்டிக்காட்டியுள்ளார். திருக்குறளின் சிறப்பினை நாமெல்லாம் உணர்வதற்கு முன்பாகவே உணர்ந்து, அதை உலக மக்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகக் கருதிக் குறளைப் பின்பற்றி வாழ்ந்த அவரைத் தமிழ்கூறும் நல்லுலகம் வியந்து பாராட்டுகிறது.
தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தியடிகளின் கைக்கு யார் மூலமோ இக்கடிதத்தின் பிரதி கிடைக்கிறது. அதை அவர் படித்துப்பார்த்து மெய்மறந்து போகிறார். உடனடியாக டால்ஸ்டாயிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். டால்ஸ்டாயை தமது குருநாதராகக் காந்தியடிகள் ஏற்றுக்கொள்கிறார். அவர் அமைத்த பண்ணைக்கு "டால்ஸ்டாய் பண்ணை' என்று பெயரிடுகிறார். திருக்குறளின் பெருமையை டால்ஸ்டாய் மூலம் அறிந்துகொண்ட காந்தியடிகள், பிறகு முழு நூலையும் படித்து அதன் பெருமையை உணர்கிறார்.
தென்னாப்பிரிக்காவிலும், பின்னர் இந்தியாவிலும் வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அறநெறி என்ற ஆயுதமே சிறந்தது என்பதை உணர்கிறார். அதன் வழியே போராடுகிறார்.
காந்தியடிகளுக்கு டால்ஸ்டாய் குருநாதர். டால்ஸ்டாயிக்குத் திருவள்ளுவர் குருநாதர். இந்திய விடுதலைக்கான வழியைக் குறள் மூலமே காந்தியடிகள் பெற்றார். நம்முடைய மூதாதையரான வள்ளுவர் காட்டிய வழியில் போராடி இந்தியா விடுதலை பெற்றது.
நாம் நமது மூதாதையரான வள்ளுவரையும் மறந்தோம், அவர் படைத்த குறளையும் மறந்தோம். அதன் விளைவாக விடிவைக் காண முடியாத இருளில் தவிக்கிறோம்.
வள்ளுவரின் குறள் காந்தியடிகளுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்ந்தது. ஆனால், வள்ளுவரின் வழிவந்த நாம் திசை தெரியாது தடுமாறி நிற்கிறோம்.
ஒளி சிந்தும் விளக்கின் அடியில் இருள் சூழ்ந்திருப்பதைப் போல நமது நிலை உள்ளது.
வள்ளுவர் காட்டிய நெறியைப் பின்பற்றித் தமிழகத்திற்கு விடியலைக் கொண்டுவருவது நமது கடமையாகும்.
(19-04-2014 அன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற உலகத் தமிழ்க் கழக ஐந்தாம் பொது மாநாட்டில் முது முனைவர் இரா. இளங்குமரனார் தலைமையில் பழ. நெடுமாறன் ஆற்றிய சிறப்புரை)
|