18-05-14 ஞாயிறு அன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர் அமைப்புகளின் சார்பில் இனப்படுகொலை நாள் ஒன்று கூடல் நிகழ்வு நடத்தப்பெற்றது.
மாலை 4 மணிக்கு இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது எனும் மகா. தமிழ்ப் பிரபாகரன் இயக்கிய ஆவணப் படத்திரையிடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
மாலை 6 மணி அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற் சங்கத்தினர் சார்பில் கொண்டு வரப்பட்ட ‘நினைவுச் சுடரினை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் பெற்றுக்கொள்ள, முன் மேடையில் பறை ஆட்டத்துடன் நினைவேந்தல் நிகழ்வு தொடங்கியது.
ஏராளமான பொது மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் சுமார் 1000 பேர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் உள் அரங்கில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் சி. மகேந்திரன், தமிழர் தேசிய இயக்க துணைப் பொதுச் செயலாளர் அயனாபுரம் சி. முருகேசன், மருத்துவர் இரா. பாரதிச்செல்வன், வழக்கறிஞர் அ. நல்லதுரை, நா. வைகறை, குடந்தை அரசன், துரை மதிவாணன் உள்ளிட்ட தோழர்கள் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்கள். திரளான தமிழ்த் தேசியர்கள் கலந்துகொண்டார்கள்.
பிற மாநில மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்துகொண்டு நமது கோரிக்கைகளுக்கு வலுச் சேர்த்தார்கள்.
அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தி பெருந்திரளான மாணவர்களைத் திரட்டி நினைவேந்தல் நிகழ்வு சிறப்புற நடைபெற உழைத்த மாணவர் திரு. ஜோ. பிரிட்டோ மற்றும் அவரது தோழர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
|