தன்னிகரில்லாத தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாக் கட்டுரை - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 06 ஜூன் 2014 13:14

தமிழ்த் தூதராக உலக மெல்லாம் சுற்றிச் சுற்றிவந்து தமிழ் ஆய்வின் பரப்பை விரிவாக்கிய பெருமை தனிநாயகம் அடிகளாரையே சாரும். தமிழிலக்கியத்தின் தொன்மை, தன்னிகரற்றத் தன்மை ஆகியவற்றைப் பிற நாட்டாரும் அறிந்துகொள்ளச் செய்ததில் அவருக்கு மிகப் பெரியப் பங்கு உண்டு.

தமிழ்,ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஸ்பானிஷ், போர்த்துகேயன், ரஷ்ய மொழி, இலத்தின், எபிரேயம், கிரேக்கம், சமஸ் கிருதம், மலாய், சிங்களம் ஆகிய 14 மொழிகளில் புலமைபெற்றவர். பிறமொழி இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். தமிழிலக்கிய மரபுவழி கோட்பாடுகளை மேலை இலக்கிய கோட்பாடுகளுடன் ஒப்பிட்டுத் தமிழாய்வை மேற்கொண்டு அத்திசையில் தமிழறிஞர்கள் பலருக்கும் வழிகாட்டியவர்.

Thani

அமெரிக்க நாட்டு அறிஞரான வெண்டல் வில்கி என்பவர் ஒரே உலகம் (one world) என்ற தத்துவத்தைப் பரப்ப முயன்றார். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு "ஒன்றே உலகம்' என்பது தமிழர்களின் கோட்பாடாகத் திகழ்ந்தது. அந்தக் கோட்பாட்டினைத் தனது குறிக்கோளாகக் கொண்டு உலக அரங்கில் தமிழுக்கு உயர்வான, நிலையான இடத்தைப் பெற்றுத்தர அயராது பாடுபட்டார்.

1952ஆம் ஆண்டில் Tamil Culture என்ற ஆங்கில இதழைத் தொடங்கி வெளிநாட்டுத் தமிழறிஞர்களின் தமிழாய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டார். 1954ஆம் ஆண்டில் Academy of Tamil Cultrue என்ற அமைப்பைத் தொடங்கி தமிழர் பண்பாட்டைப் பரப்பினார். சென்னையைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் 1968ஆம் ஆண்டில் Journal of Tamil Studies என்ற இதழைத் தொடங்கியபோது அம்முயற்சிக்குப் பக்கபலமாக தனிநாயகம் அடிகளார் இருந்தார்.

தமிழில் முதன்முதலாக அச்சேறிய நூல் பற்றி பலகருத்துக்கள் உள்ளன. இதைப்பற்றி ஆராய்வதற்காக தனது மேனாட்டுச் சுற்றுப்பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டார். போர்த்துகேய நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் உள்ள அருங்காட்சியகத்தில் 1554ஆம் ஆண்டில் அச்சிடப்பெற்ற நூல் ஒன்றை அடிகளார் பார்வையிட்டார். cஹழ்ற்ண்ப்ட்ஹ என்னும் அந்நூலில் தமிழ் எழுத்துக்கள் கையாளப்படாமல் ரோமன் எழுத்துக்கள் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்கு கையாளப்பட்டிருக்கின்றன. இந்நூலின் ஒரேயொரு பிரதிதான் பத்திரமாக அங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்திய மொழிகளுக்குள்ளும், கிழக்கு ஆசிய மொழிகளுக்குள்ளும் அச்சு கண்ட முதல் மொழி தமிழ்மொழி என அடிகளார் உறுதியாகக் கூறினார்.

இந்தியச் சிந்தனையென்றால் சமஸ்கிருதத்தின் வாயிலான ஆரிய சமயம் சார்ந்த சிந்தனைகளே என்ற கருத்து எந்த வகையில் தவறானது என்பதையும் இந்திய சிந்தனையென்றால் தமிழ் வழியிலான சிந்தனையே என்பதையும் அடிகளார் தமது ஆய்வின் மூலம் உலகிற்கு உணர்த்தினார். உலக சிந்தனையாளர்கள் வரிசையில் கிரேக்கத்திற்கு சாக்ரடீஸ், பிளேட்டோ என்றும் இந்தியா என்றால் மகாவீரர், புத்தர் என உலக அறிஞர்கள் கூறிய கருத்துக்கு மாறாக அந்தச் சிந்தனை வரிசையில் திருவள்ளுவரும் இடம்பெறவேண்டும் என அழுத்தமாக வலியுறுத்தியவர் அடிகளாரே.

திருவள்ளுவர் அவரது சமகால சமயங்களையும் சமஸ்கிருதம் பாலி போன்ற மொழிகளையும் நன்கு அறிந்திருந்தார். திருக்குறளில் இடம்பெற்றுள்ள சமயம் பற்றிய பொதுமைக் கருத்துக்களை சுட்டிக்காட்டி பல சமயத்தவரும் வள்ளுவரை உரிமை கொண்டாடுவதையும் அவர் எடுத்துரைத்துள்ளார். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இருந்த தமிழ்ச் சமுதாயத்தின் பண்பட்டத் தன்மையை அடிகளார் எடுத்துக்காட்டி வள்ளுவரும் சங்ககால தமிழ்க்கவிஞர்களும் வியக்கத் தக்க வகையில் தத்துவ முதிர்ச்சிப் பெற்றிருந்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழ் மொழி, நாடு, இனம் ஆகிய மூன்றின் மாண்பை ஒப்புநோக்கி அறிந்து அதனை உலகெலாம் பரப்பும் முயற்சியை அடிகளார் இடைவிடாமல் மேற்கொண்டார். தமிழின் பெருமை புறக்கணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து வருந்திய அடிகளார் அதை மாற்றுவதற்கான முயற்சியில் இடைவிடாமல் ஈடுபட்டார்.

ஜப்பானிய மொழிக்கும் பண்பாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு பற்றி ஆய்வு செய்வதற்கான பல செய்திகளை அடிகளார் கண்டறிந்து கூறினார். சாவகம், சுமத்திரா, இந்தோனேசியா போன்ற கீழ்த்திசை நாடுகளில் தமிழ்ப் பண்பாடு மிகப் பழமையான காலத்திலேயே பரவியது இந்நாடுகளில் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழ் மக்கள் குடியேறி இருந்திருக்க வேண்டும் என்பது கெல்டோன் போன்ற அறிஞர்களின் கருத்தாகும்.

அய்ரோப்பிய நாடுகளின் சமயங்களின் மொழியாக இலத்தீன் விளங்கி வந்தது. சமஸ்கிருதத்தில் இந்தியாவின் சமயங்களைப் பற்றிய நூல்கள் எழுதப்பெற்றுள்ளன. ஆனால், தமிழிலக்கியத்தில் சிறந்து விளங்கும் பல்வேறு சமய இலக்கியங்களைப் போல வேறு எம்மொழிகளிலும் இல்லை என்பது அடிகளார் கண்ட முடிவாகும்.

சைவம் - திருமுறைகள், பெரியபுராணம்,
வைணவம் - ஆழ்வார் பாசுரங்கள்,
கம்ப இராமாயணம்.
சமணம் - சீவகசிந்தாமணி
பவுத்தம் - மணிமேகலை
இஸ்லாம் - சீறாப்புராணம்
கிறிஸ்தவம் - தேம்பாவணி

தமிழில் பல்வேறு சமய இலக்கியங்கள் இருப்பதைப் போல வேறு எந்த மொழியிலும் இல்லை என்பது அவரின் துணிவான கருத்தாகும்.

மேலும் ஆங்கிலம் வணிகத்தின் மொழி, இலத்தீன் சட்டத்தின் மொழி, கிரேக்கம் இசையின் மொழி, ஜெர்மன் தத்துவத்தின் மொழி, இத்தாலியம் காதலின் மொழி, தமிழ் பக்தியின் மொழி என்றார் அடிகளார்.

இந்தியாவின் கங்கை சமவெளிப் பரப்பிலும், எகிப்தின் நைல் நைதி பள்ளத்தாக்கிலும் சொல்லாப்படாதவை. இந்தியாவின் தென்கோடியில் தமிழில் படைக்கப்பட்ட அகம், புறம் பற்றிய கவிதைகளில் சொல்லப்பட்டுள்ளன. இச்செய்திகள் உலக இலக்கியங்களுக்கு புதியவை என்றும் அவர் கூறினார்.

கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைப் போல் சங்க இலக்கியத்தில் கடவுளைப் பற்றிய செய்திகள் இல்லை. பிறமொழிப் புலவர்களைப் போல பழைய புராணங்களில் சங்க காலப் புலவர்களுக்கு ஈடுபாடு கிடையாது. தமிழ்ப் பாடல்களில் இயற்கை பேராற்றல் படைத்த ஒன்றாகவே குறிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதப் புலவர்களைவிட பன்மடங்கு சிறந்த முறையில் தமிழ்ப் புலவர்கள் இயற்கையைப் பாடியுள்ளனர் என்பது அடிகளாரின் முடிவாகும்.

1964ஆம் ஆண்டு தில்லியில் அகில உலக "கீழ்த்திசை ஆய்வு மாநாடு' நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 2000த்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். தமிழ்நாடு இலங்கை மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளிலிருந்து பல தமிழறிஞர்கள் கலந்துகொண்டனர். அதைப்போல மேற்கு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களும் பங்குகொண்டனர். எனவே உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த தமிழறிஞர்களை ஒன்றுகூட்டி தமிழுக்கு என உலக அமைப்பு ஒன்றை உருவாக்குவது பற்றி தனிநாயகம் அடிகளாரும் முனைவர் வ.அய். சுப்பிரமணியமும் கலந்து ஆலோசித்து 7-12-1964 அன்று ஒரு கூட்டத்தைக் கூட்டினர். இக்கூட்டத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்டது. 1966ஆம் ஆண்டிலிருந்து 1995ஆம் ஆண்டு வரை எட்டு மாநாடுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளன.

உலக அளவில் உள்ள தமிழறிஞர்களை ஒன்றுகூட்டவும் அவர்களின் ஆராய்ச்சிகளை ஒப்பிட்டு அறியவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் தனிநாயகம் அடிகளாரின் பங்கு மிகப்பெரியது.

அடிகளாரின் மற்றொரு கனவுத் திட்டம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமாகும். அதன் முதல் இயக்குனராக தனிநாயகம் அடிகளார் நியமிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அரசியல் காரணங்களினால் அவருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்காக அவர் தனது தமிழ்த்தொண்டினை நிறுத்திக்கொள்ளவில்லை. அவரின் சீரியத் தொண்டு தொடர்ந்தது.

வெள்ளிக்கிழமை, 06 ஜூன் 2014 14:38 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.