தோழமை - சங்க காலம் முதல் திரு.வி.க. காலம் வரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 21 ஜூன் 2014 14:56

வழக்கறிஞர் த. பானுமதி - தோழர் ஆத்மநாதன் இல்லத் திறப்பு விழாவில் தலைவர்கள் உரை

வழக்கறிஞர் த. பானுமதி, தோழர் க. ஆத்மநாதன் இணையர், மதுரை புதுத்தாமரைப்பட்டி ஜெ.பி. நகரில் கட்டியுள்ள புதிய இல்லத் திறப்பு விழா மிகவும் சிறப்புடன் 24-04-2014 அன்று மாலை நடந்தது.
"தோழமை இல்லம்'' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அவ்வில்லத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர். இரா. நல்லகண்ணு அவர்கள் திறந்து வைத்தார்கள். அதனோடு இணைந்துள்ள வழக்கறிஞர் அலுவலகத்தை உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

அதன் மாடியில் உள்ள நூலகப் பகுதியை தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ. மணியரசன் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் மூவரும் இல்லத்தின் அருகில் மூன்று மரக்கன்றுகளை நட்டார்கள்.

பின்னர் உரையரங்கம், கருத்தரங்கம் போல் நடந்தது.

உரையரங்கத்திற்கு வழக்கறிஞர் த. பானுமதி அவர்களின் தமையனாரும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழக நிர்வாகக் குழு உறுப்பினருமான தோழர் த. மணிவாசகம் தலைமை தாங்கினார்.
வழக்கறிஞர் த. பானுமதி க. ஆத்மநாதன் இணையரின் மகள் முனைவர் ஆ. திவ்யா வரவேற்புரை ஆற்றினார்.

"சாதிக் கட்சி மதக் கட்சிகளையெல்லாம் இந்த சமூகம் ஏற்றுக்கொள்கிறது. ஏன் பெண்களுக்கென்று தனிக்கட்சி தொடங்கப்படவில்லை' இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.' வீடு என்கிறோம் அதற்குள் சமத்துவம் இருக்கிறது பெண்ணுரிமைப் போராட்டங்கள் தேவை பெண்கள் பங்கெடுக்காத எந்தப் போராட்டமும் வெற்றிபெறாது என்றார்.''

அடுத்துப் பேசிய தோழர் பெ. மணியரசன் கூறியதாவது:

தோழமை இல்லம் என்று நம் தோழர்கள் தங்கள் இல்லத்திற்குப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். வீட்டுக்குள் இருப்பவர்களுக்குள்ளும். தோழமை இருக்கும் வெளியிலிருந்து வருபவர்களுக்கும் இங்கு தோழமை கிடைக்கும். அப்படிப்பட்டவர்கள் தாம் வழக்கறிஞர் பானுமதி அவர்களும் தோழர் ஆத்மநாதன் அவர்களும்

தோழமை என்பது சங்க காலம் தொட்டு தமிழ் மக்களிடையே வழங்கிவரும் அருமையான சொல் பாரி மகளிரை கபிலர் அழைத்துக் கொண்டு மன்னன் இருங்கோவேளிடம் சென்றபோது தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"யார் இவர் என்குவை ஆயின் இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
முல்லைக்கு ஈந்த செல்லா நல்லிசை
படுமணி யானைப் பறம்பின் கோமான்
நெடுமாமப் பாரி மகளிர் யானே
தந்தை தோழன் இவர்என் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே!
பாரிமன்னணும் தானும் தோழர்கள் என்று கபிலர் கூறினார்.

தமிழர் மரபை ஒட்டி தோழமை தோழன் என்ற சொற்களைக் கம்பர் கையாண்டுள்ளார் கைகேயியின் சூழ்ச்சியினால் முடிசூடாமல் காட்டுக்குப் போன இராமனை மீட்டுக்கொண்டுவந்து அண்ணனுக்கே முடிசூட்ட வேண்டும் என்று பரதமன் இராமனைத் தேடி காட்டுக்குப் போகிறான் இராமனை காட்டை விட்டும் விரட்டுவதற்காகப் பரதன் படையோடு வருகிறான் என்ற தவறாகப் புரிந்து கொண்டான்

குகன். பரதனுக்கெதிராக வீரமுழக்க மிட்டான் குகன்.
அழநெடுந்திரை ஆறுகடந்திவர் போவாரோ?
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
தோழமை என்றவர் சொல்லிய சொல்லொடு சொல்லன்றோ
ஏழமைவேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ

என்றான். வேடனாகிய என்னை அரசகுமாரனாகிய இராமன் தன்னுடைய தோழன் என்று கூறி உறவு கொண்டான். அந்த இராமனுக்கு ஆபத்தாக வரும் பரதனை நான் விரட்டியடிக்க வில்லை என்றால்'' "தோழமை'' என்பதற்கு என்ன பொருள் இருக்கிறது என்றான் குகன்.

பிற்காலத்தில் "உயிர்காப்பான் தோழன்'' என்ற பழமொழியும் உருவானது. அப்படிப்பட்ட தோழமை இல்லமாக இவ்வீடு விளங்கும்.

அடுத்துப் பேசிய உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் பேசியதின் சுருக்கம்.

"இங்கு பேசிய நண்பர் மணியரசன் "தோழர்'' என்ற சொல் சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டிருப்பதைச் சொன்னார். நவீன காலத்தில் தோழர் என்பது பரவலாகப் புழக்கத்தில் இருக்கிறது. பாரதியார் 1917 இரசியப் புரட்சி பற்றி எழுதிய கட்டுரையின் கடைசியில் "இரசிய போல்ஷ்விக் தோழர்களுக்கு ஈசன் பேரருள் புரிவானாக'' என்று முடித்திருப்பார். நவீன கால இலக்கியத்தில் அதில் தான் தோழர் என்ற சொல்லை நான் பார்த்தேன். பின்னர் இங்கிலாந்து சென்று திரும்பிவந்த பி.பி. வாடியா அவர்களுக்கு தொழிலாளர்கள் சென்னையில் வரவேற்புக் கொடுத்தனர். வாடியா ஆங்கிலத்தில் பேசினார். உடனுக்குடன் திரு.வி.க. மொழியாக்கம் செய்தார் எடுத்த எடுப்பில் "காம்ரேட்'' என்று வாடியா தொடங்கினார்.

உடனே திரு.வி.க. "தோழர்களே'' என்று விளித்தார். அது முதல் கம்யூனிஸ்டுகளும் மற்ற முற்போக்காளர்களும் "தோழர்'' என்று விளித்துப் பேசும் பழக்கம் வந்தது. அந்த வகையில் இங்கு தோழமை இல்லம் திறக்கப்பட்டுள்ளது வாழ்த்துகிறேன்'' என்றார்.

நிறைவாகப் பேசிய தோழர் இரா. நல்லகண்ணு அவர்கள் தோழமையின் சிறப்பை இரசியப் புரட்சி நிகழ்வொன்றை நினைவூட்டிச் சொன்னார்.

இரசியப் புரட்சி நடந்து கொண்டிருந்தபோது ஜாரின் படைகளை செம்படை வென்றது. செம்படை வீரர்கள் குதிரைகளில் கண்காணிப்புப் பணியில் வீதிகளில் வந்தனர். ஒரு தெரு அக்காலத்தில் விலை மாதர் என்று சொல்லப்பட்ட பெண்கள் வசிக்கும் ஒரு தெரு அங்கு வசிக்கும் பெண்கள் ஜாரின் இராணுவத்தால் மிக மோசமாகத் துன்புறுத்தல்களுக்கு உள்ளானவர்கள். குதிரைப்படை வீரர்கள் என்றவுடன் அப்பெண்கள் நடுநடுங்கினர். அந்தக் குதிரை வீரர்களைச் சூழ்ந்துகொண்டு. தங்களை விட்டு விடும்படி வேண்டிக் கண்கலங்கினர். குதிரை மீதிருந்த செம்படை வீரர்கள் சொன்னார்கள். நாங்கள் தவாரிஷ் நாங்கள் உங்களின் தோழர்கள், உங்களைத் துன்புறுத்த மாட்டோம் என்றார். தவாரிஷ் என்ற சொல் அந்தப் பெண்களுக்கு பெரு மகிழ்ச்சியையும் பெருமதிப்பையும் தந்தது.
அப்படிப்பட்ட உயரிய சொல் தோழமை. அச்சொல்லில் இலலத்திற்குப் பெயர் வைத்திருப்பதைப் பாராட்டுகிறேன்'' என்றார்.

க. ஆத்மாநாதன் த. பானுமதி இணையரின் மருமகளும் ஆ. தமிழ்நிலவன் மனைவியுமான ராஜ்தீபா நன்றியுரை நவில வாழ்த்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.