தமிழர் நலனைவிட இலங்கை உறவு பெரிது! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 21 ஜூன் 2014 15:00

புதிய பிரதமர் மோடி அரசின் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த அணுகுமுறை எவ்வாறு இருக்கப் போகிறது என்பதைக் குறித்து பலவித கருத்துக்கள் பத்திரிகைகளில் வெளியாயின. பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் ஈழத் தமிழர் பிரச்சினையை மோடி அரசு விரைவில் தீர்க்கும் என்ற நம்பிக்கையை தேர்தல் நேரத்தில் வெளியிட்டார்கள்.

ஆனால் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து எவ்விதக் கருத்தும் கூறப்படவில்லை. மேலும் தமிழகத்தில் 6க்கும் மேற்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய மோடியின் இப்பிரச்சினைக் குறித்து எதுவும் பேசவில்லை. பத்திரிகையாளர்கள் கேட்டபோதும் பொதுப்படையாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பிரச்சினைக் குறித்து தனது அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்தாரே தவிர, ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிக் குறிப்பாக எதுவும் சொல்லவில்லை.

ஆனால் பிரதமர் பதவியை மோடி ஏற்பதற்கு முதல்நாள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தளபதிகளில் முக்கியமானவரும் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருக்கக்கூடிய சேஷாத்திரி சாரி என்பவர் ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து திட்டவட்டமான தெளிவான கருத்துக்களை வெளியிட்டார்.

"இந்தியா-இலங்கையின் உறவு என்பது தமிழர்கள் பிரச்சினையால் பகையாகிவிடக்கூடாது. தமிழர்களின் பிரச்சினைகளில் கொழும்பு உண்மையாகவும் சுமூகமாகவும் தீர்க்கும் என பா.ஜ.க. கருதுகிறது. மேலும் இதற்காக அந்த அரசு முயற்சிப்பதாகவும் நம்புகிறது. இதற்காக இலங்கை அரசுக்கு கால அவகாசம் தருவது அவசியம்'' என்று கூறியுள்ளார்.

அதாவது இந்தியா-இலங்கை உறவு மிக முக்கியமானது. தமிழர்கள் பிரச்சினையால் அது பகையாகிவிடக்கூடாது என்று கூறியதின் மூலம் தமிழர்கள் பிரச்சினையைவிட இலங்கையின் உறவு முக்கியமானது என்பதை அழுத்தமாகவும் திருத்தமாகவும் கூறியிருக்கிறார்.

சிங்களர் உறவுக்காக ஈழத் தமிழர்களைப் பலிகொடுத்த காங்கிரசின் கொள்கையே பா.ஜ.க. ஆட்சியிலும் தொடரும் என்பதுதான் அவர் கூறியதற்கு அப்பட்டமான பொருளாகும்.
ஜெயவர்த்தனா, பிரேமதாசா, சந்திரிகா ஆகியோர் காலங்களில் அதாவது 1987 முதல் 2003 வரை அவகாசம் அளிக்கப்பட்டும் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், நார்வே நாட்டின் மத்தியஸ்தம் மேற்கொள்ளப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளையும் சிங்கள அரசு நிறைவேற்றவில்லை. இந்த வரலாறு முழுவதையும் சேஷாத்திரி அறியாமல் இருக்க முடியாது. ஆனாலும் இன்னமும் கால அவகாசம் கொடுக்கச் சொல்கிறார். 2009ஆம் ஆண்டு போர் முடிந்து 5 ஆண்டுகள் கடந்த பின்னும் தமிழர்களின் முக்கியப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.

2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையம் இப்பிரச்சினையில் தலையிட்டு போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களையும் போர்க் குற்றங்களையும் விசாரித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு 3 ஆண்டு கால அவகாசத்தை அளித்தது. அதற்கிணங்க இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழு அளித்தப் பரிந்துரைகளையும் நிறைவேற்றுவதற்கு இராசபக்சே மறுத்துவிட்டார்.

2013ஆம் ஆண்டில் மீண்டும் சர்வதேச விசாரணையை ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கோரினார். அதே ஆண்டில் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டப்போதிலும் அதை ஏற்க இராசபக்சே மறுத்துவிட்டார்.

2014ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் சர்வதேச புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விசாரணைக் குழுவை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று இராசபக்சே திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

கடந்த காலத்தில் நடைபெற்ற இவையத்தனையும் சேஷாத்திரி போன்றவர்கள் அறிந்துகொள்ளாமல் இருக்க முடியாது. ஆனாலும் இராசபக்சேக்குக் கால அவகாசம் கொடுக்கச் செல்கிறார்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட்டிருப்பதையும் சேஷாத்திரி கண்டித்துள்ளார்.

"இந்தியாவின் பிராந்திய நலன்களுக்குட்பட்டது இலங்கை என கருதி உலக நாடுகள் இப்பிரச்சினையிலிருந்து ஒதுங்கியிருந்தன. ஆனால் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவோ குறைந்த பட்சம் கண்டிக்கவோ மன்மோகன்சிங் அரசு முன்வராத காரணத்தினால் ஐ.நா. மனித உரிமை ஆணையர் தலையிடவேண்டி நேர்ந்தது. அவரே இலங்கைக்குச் சென்று நேரில் பார்த்து அக்கொடுமைகளை கண்டறிந்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் இதில் தலையிடவேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதையே மறைத்துப் பேசுவது நியாயமற்றது.

இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் விக்னேசுவரனை தனது சாட்சிக்கு சேஷாத்திரி அழைத்துள்ளார். ஆனால் தன்னுடன் இந்தியாவுக்கு வருமாறு இராசபக்சே விடுத்த அழைப்பை விக்னேசுவரன் ஏற்க மறுத்து "தனது தலைமையில் உள்ள வடமாகாண அரசுக்கு அதிகாரங்கள் எதுவும் கடந்த 8 மாதங்களாக வழங்கப்படவில்லை. தமிழர்கள் பிரச்சினை எதுவும் தீர்க்கப்படவில்லை'' என்று கூறி இராசபக்சேவுடன் இந்தியாவுக்கு வர மறுத்துவிட்டதை சேஷாத்திரி சாமர்த்தியமாக மறைத்திருக்கிறார்.

இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். அப்படியானால் பாகிஸ்தானின் ஓர் அங்கமாக இருந்த கிழக்கு வங்க மக்கள் தனி நாடு கோரி போராடியபோது வங்க தேச சுதந்திர அரசை உடனடியாக இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ஜனசங்கத் தலைவர் ஏ.பி. வாஜ்பாய் பேசியதையும் வங்க தேசத்திற்கு உடனடியாக இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றும் கூறி டெல்லியில் 1971ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி ஜனசங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் சேஷாத்திரி மறந்துபோனாரா? பாகிஸ்தானின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டுத்தான் கிழக்கு வங்கப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று சேஷாத்திரியும் அவர் சார்ந்திருந்த ஜனசங்கமும் அன்று பேசினார்களா? இலங்கையில் பிரிவினையை எதிர்ப்பதாக இன்று கூறுகிற சேஷாத்திரி கிழக்குப் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தது ஏன்?

சார்க் நாடுகளில் ஒன்றான இலங்கையின் அதிபர் இராசபக்சேயை தனது பதவியேற்பு விழாவிற்கு மோடி அழைத்ததில் தவறு இல்லை என்று சேஷாத்திரி வாதாடுகிறார்.

இந்தியாவில் வாழும் பிற தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் சார்க் நாடுகளில் இனப்படுகொலைக்கு ஆளாகவில்லை. தமிழ்நாட்டு மக்களோடு தொப்புள்கொடி உறவுகொண்ட மக்கள்தான் இலங்கையில் படுகொலைக்கு ஆளாகியுள்ளார்கள். அதற்குக் காரணமான இராசபக்சேயை அழைப்பது பெருந்தவறு என தமிழக மக்கள் கொதிப்புடன் கருதுகிறார்கள். இந்தியாவிலும் பஞ்சாபிலும் ஹரியானாவிலும் வாழும் பஞ்சாபி மொழி பேசும் மக்கள் மேற்கு பாகிஸ்தானில் வாழ்கிறார்கள். பாஜ.க.வின் மூத்தத் தலைவர் அத்வானியின் இனமான சிந்தி இனமக்கள் பாகிஸ்தானில் வாழ்கிறார்கள். பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரில் ஏராளமான காஷ்மீரிகள் வாழ்கிறார்கள். இவர்கள் படுகொலை செய்யப்பட்டால் இந்த இனத்தைச் சேர்ந்த இந்தியாவில் வாழ்பவர்கள் மனம்கொதித்துக் கொந்தளிக்க மாட்டார்களா?

சார்க் அமைப்பில் இலங்கையும் இருப்பதனால், சிங்கள இராணுவத்திற்குப் பயிற்சி இந்தியாவில் அளிக்கப்படுகிறது. ஆயுதம் கொடுக்கப்படுகிறது என அச்செயலை நியாயப்படுத்தி மன்மோகன்சிங் அரசு பேசியது. ஆனால், சார்க் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சியோ ஆயுதமோ கொடுக்கப்படுவதில்லை. ஏனென்றால் அவ்வாறு செய்வது இந்தியாவிற்கு ஆபத்தாகும். என்பதை மன்மோகன் சிங் அரசு உணர்ந்திருந்த காரணத்தினால் அதைச் செய்யவில்லை.

ஆனால் இலங்கை இராணுவத்திற்கு அளிக்கப்படுகிற பயிற்சியும் ஆயுதங்களும் அந்நாட்டில் உள்ள தமிழர்களைக் கொன்று குவிக்க என்பதை உணர்ந்திருந்த காரணத்தினால்தான் வாஜ்பாய் அரசு அவ்வாறு செய்ய மறுத்தது.

இலங்கையைச் சுற்றி இந்தியக் கடற்படை காவல்காத்தபோது பா.ஜ.க. அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் "இந்தியக் கடற்கரையைக் காவல் காப்பதுதான் நமது கடற்படையின் கடமை மற்றொரு நாட்டின் கடற்கரையை காப்பது அல்ல'' என்று கூறி நமது கடற்படையை திரும்ப அழைத்தார்.

இந்தியா வந்த இராசபக்சே பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சு வார்த்தையில் 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்பாட்டிற் கிணங்க 13ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் சீக்கிரமாகவும் நிறைவேற்ற வேண்டும் மாகாண அரசுக்கு நிலம், காவல்துறை ஆகிய அதிகாரங்களை வழங்க வேண்டும், தமிழக மீனவர்கள் பிரச்சினை, ஆகியவை முக்கிய இடம்பெற்றதாக இந்திய வெளி யுறவுச் செயலாளர் அறிவித்திருக்கிறார். இலங்கை அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் 13ஆவது சட்டத் திருத்தம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய இலங்கை உடன்பாட்டில் வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர்களுக்கு என்று தனியாக ஒரு மாகாணம் அமைக்கப்பட வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது. அதற்கிணங்க 13ஆவது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு கொண்டுவந்தது. தமிழர்களுக்கு தனியாக ஒரு மாகாணம் தருவதை சீர்குலைப்பதற்காக சின்னஞ்சிறிய நாடான இலங்கையில் சிங்களர் பகுதிகளுக்கென எட்டு மாகாணங்களையும் தமிழர்களுக்கு ஒரு மாகாணத்தையும் உருவாக்கினார்கள். இலங்கையில் மத்திய அரசே சிங்கள அரசாக இருக்கும் போது அவர்களுக்கென்று தனியாக எட்டு மாகாணங்கள் தேவையில்லை. தமிழருக்கு அளிக்கப்பட்ட மாகாணத்திற்கு நிலம், காவல்துறை, நிதி, ஆகிய அதிகாரங்கள் அளிக்கப்படவில்லை. வேண்டுமென்றே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை துடைப்பதற்கு இராஜீவ்காந்தியின் காலத்திலிருந்து மன்மோகன் சிங் காலம் வரை காங்கிரஸ் அரசுகள் எதுவும் செய்யவில்லை.

இராசபக்சே குடியரசுத் தலைவரான பிறகு அவரின் மறைமுகத் தூண்டுதலின்பேரில் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டதை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் சிங்கள தீவிரவாத அமைப்பு ஒன்றினால் வழக்குத் தொடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி உச்சநீதிமன்றம் இந்த இணைப்பு செல்லாது என்று தீர்ப்பளித்தது. உடனடியாக இதைப் பயன்படுத்திக் கொண்டு இராசபக்சே வடக்கு-கிழக்கு மாகாணங்களை பிரித்தார்.

இராசபக்சேயின் இந்த நடவடிக்கை தவறானது இந்திய இலங்கை உடன்பாட்டிற்கு எதிரானது என கண்டிக்கவோ திருத்தவோ மன்மோகன்சிங் அரசு முன்வரவில்லை.

இப்போது புதைகுழிக்குப் போய்விட்ட 13-ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றச் சொல்லி வற்புறுத்துவது போகாத ஊருக்கு புரியாத வழி காட்டுவதாகும்.

இலங்கையில் தமிழர் பகுதியை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது. தமிழர்கள் தங்களின்சொந்த ஊர்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் விரட்டியடிக் கப்பட்டு உள்நாட்டிலேயே அகதிகளாக வாழும் அவலம் நீடிக்கிறது. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஏராளமான சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. அவர்களின் பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவ முகாம்களும் அமைக்கப்படுகின்றன.

தமிழ்ப் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் பரிதாபம் நீடிக்கிறது. சிங்கள இராணுவத்தின் பாலியல் வன்முறைக்கு அவர்கள் தொடர்ந்து ஆளாக்கப்படுகிறார்கள். தமிழிளைஞர்கள் காரணமின்றி கைதுசெய்யப்பட்டு காணாமல் போகிறார்கள். இந்த கொடுமைகளை குறித்தும் அவற்றைத் தடுத்து நிறுத்துவது குறித்தும் உறுதியான நடவடிக்கை எடுக்க மோடியின் அரசு முன்வரவேண்டும். இராசபக்சே அளிக்கும் வெற்று வாக்குறுதிகளை நம்பி செயலற்றுக்கிடந்த மன்மோகன் சிங் அரசைப் போல புதிய அரசு இருக்கக்கூடாது.

ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து சேஷாத்திரி அளித்த விளக்கத்தை தேர்தலுக்கு முன் அளிக்க தமிழக சாதூரியவான்கள் தடுத்துவிட்டதாக அவர் கூறியிருக்கிறார். அதைப் பார்க்கும் போது பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையிலும் மோடி பேசிய கூட்டங்களிலும் ஈழத்தமிழர் பிரச்சினை இடம்பெறாமல் போனதற்கும் சேஷாத்திரியின் விளக்கத்திற்கும் ஒரே பின்னணி இருப்பது புரிகிறது.
நன்றி : தினமணி

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.