"நாம் வென்றே ஆகவேண்டும்'' சிறையிலிருக்கும் போராளிகள் வாழ்த்து PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:07

தமிழ்த் தேசிய விடுதலைக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தன்னுயிர் ஈந்த போராளிகளுக்கு எமது புரட்சிகர வணக்கம்.

முள்ளிவாய்க்கால். தமிழினத்தின் வீரத்திற்கும் மானத்திற்குமான முகவரி அழிக்கப்பட்ட இடம். அதிலிருந்தே புதிய வரலாறு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும், தஞ்சையில் கட்டி எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கூட்டப்படும் தமிழ்த் தேசிய இயக்கங்களின் ஒற்றுமைக்கான புதிய கூட்டமைப்பு தமிழினத்தின் வீரவரலாறு ஈழத்தில் முடித்து வைக்கப்பட்டதை தமிழகத்தில் (தஞ்சையில்) துவக்கி வைக்கப்பட்ட வரலாறாக மாற்றவேண்டும். இதுவே எமது அவா!

ஈழத்தின் எதார்த்தம் மீண்டும் அங்கு ஓர் விடுதலைப் போராட்டத்திற்கான நிலையில் அந்த மக்களோ அவர்களின் மனநிலையோ அணியமாவதற்கு நீண்டகாலம் தேவைப்படும். இந்திய அதிகார வர்க்கமும் சிங்கள இனவெறிபிடித்த அரசும் அந்த மக்களை அழிவின் விளிம்பில் தள்ளியுள்ளனர். தாய் நாட்டைவிட்டு உலகம் முழுவதும் ஏதிலிகளாகவும் சொந்த மண்ணில் கம்பி வேலிக்குள்ளும் சிக்குண்டும் கிடக்கும் மக்களுக்கு வேண்டுவது தனித்தமிழ் ஈழமே! அதை அடைவதற்கானப் போராட்டத்தை மீண்டும் நடத்தக்கூடாது என்பதற்காகவே மனரீதியாக, உடல்ரீதியாக, பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக முடமாக்கப்பட்டுள்ளதோடு அவர்களின் தாயக மண்ணை சிதைத்தும் ஆக்கிரமித்தும் வருகிறார்கள். இந்த ஆக்கிரமிப்பு, அநீதி, அடக்குமுறை அனைத்திற்கும் எதிராக போராட வேண்டிய அவர்கள் அடுத்தவேளை உணவிற்கும், உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்திரவாதமற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே இன்றைய எதார்த்தம். அதற்கு ஒரு முடிவுகாண வேண்டியது தமிழக மக்கள் மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்களின் தலையாயக் கடமையாகும்.

தமிழ்நாட்டில் வாழும் மக்களின் நிலை மிகவும் இழிவான நிலையில் உள்ளது. சாதியாக, மதமாக, வர்க்கமாக மட்டும் பிரிந்து கிடக்காமல் அரசியல் கட்சிகளின் அடிமைகளாக, திரைப்பட நடிகர்களின் பக்தர்களாக, சாராயம் போன்ற போதைப் பொருட்களுக்கு ஆட்பட்டவர்களாக, கிரிக்கெட் போன்ற விளையாட்டு மோகிகளாக இருப்பதோடு, எப்படியாவது பெரும்பொருள் சேர்த்து சுகபோகவாசிகளாக மாற வேண்டும் என்ற எண்ணங்கள் நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது. அறிவு, ஒழுக்கம், பண்பாடுகளை உருவாக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் இன்று பணம் செய்யும் இயந்திரங்களை உற்பத்தி செய்கின்றன. மொழி உணர்வோ, இன உணர்வோ, தேச உணர்வோ முற்றாக அற்றவர்களாகவும் சமூகம் சார்ந்த அக்கறை இல்லாதவர்களாகவும் எதிர்மறை குணமடையவர்களாகவும் திட்டமிட்டே உருவாக்கப்பட்டு வருகின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் வரலாறு அடிமை வரலாறாக இருந்து வருவதை மறுத்துவிட முடியாது. உடல் ரீதியாக, சமூக ரீதியாக, மனரீதியாக நீண்ட காலம் அடிமைத் தனத்தில் ஊறிய தமிழர்களின் மானம், வீரம், அறிவு மழுங்கடிக்கப்பட்டு காமம், கோபம், குரோதம் போன்ற உணர்ச்சிகள் நிரம்பிய கோழைகளாக உள்ளனர்; அல்லது உருவாக்கப்பட்டுள்ளனர். உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராள மயமாக்கல் போன்ற கொள்கையால் உலகப் பெருமுதலாளிகள் மக்களின் வாழ்வாதாரங்களையும், உயிராதாரமாக விளங்கும் இயற்கைவளங்களையும் சுற்றுச்சூழலையும் தமது சுயநலத்திற்காகச் சுரண்டியும் மாசுப்படுத்தியும் அழித்தும் வருவதோடல்லாமல் மக்கள் அனைவரையும் சீரழிந்த நுகர்வுப் பண்பாட்டிற்குள் சிக்க வைத்துள்ளனர். இப்படிப்பட்ட மக்கள் விரோதிகளின் சித்து விளையாட்டுக் களமாக அரசியல் கட்சிகளும் அரசாங்கமும் இருந்து வருகின்றன. இந்திய வல்லாதிக்க அரசும், தமிழகக் கங்காணி அரசும் தமிழகத்திற்கு எதிராகவும் தமிழக மக்களுக்கெதிராகவும் மிகப்பெரும் அநீதிகளை இழைத்து வருகின்றன.

காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு, கூடங்குளம் அணு உலை, தேவாரம் நியூட்ரினோ, நரிமணம் பெட்ரோல், மீத்தேன் எரிவாயு திட்டம், கடலோரங்களில் இரசாயன ஆலைகள், சாயப்பட்டறைக் கழிவுகள், ஆற்றுமணல், மலைகள், காடுகள், விளைநிலங்கள், மீனவர்கள், ஈழத் தமிழர் சிக்கல், இப்படியாக தமிழகமும், தமிழர்களும் மொழி ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்டும், கனிம வளங்கள், வாழ்வாதாரங்கள் சுரண்டப்பட்டும், உரிமைகள் மறுக்கப்பட்டும் வருகின்றன. மறுபுறம் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள் பிரச்சனைகளும், விலைவாசி ஏற்றம் என அனைத்து தரப்பு மக்களின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தமிழகமும் தமிழர்களும் சிக்கியுள்ள நிலையில் அதற்கு உடனடியாகவும் சரியான வழியிலும் உரிய திட்டங்கள் வகுத்துச் செயலை முன்னெடுக்க வேண்டியது தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவருடைய கடமையாக உள்ளது.

குறிப்பாக தமிழ்த் தேசிய அமைப்புகள் தமது கடமையை இனியாவது உணர்ந்து விரைவாக செயல்படவில்லையென்றால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.
"உரிமைக்கான, விடுதலைக்கான போராட்டத்தில் நாம் வென்றே ஆகவேண்டும். இல்லையேல் முற்றாக அழிந்து போவோம்.''

இப்படிப்பட்ட இக்கட்டான தருணத்தில் அய்யா பழ. நெடுமாறன் அவர்களின் தலைமையில் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழ்த்தேசிய அமைப்புகளின் அய்க்கியத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக கேள்விப்பட்டோம். அதில் நாங்கள் நேரிடையாக கலந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை சிறைவாசிகளாக அடைக்கப்பட்டுள்ளதால் தங்களது பெரும் முயற்சிக்கு எங்களது முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தர எப்போதும் தயாராக இருக்கிறோம். தங்கள் முயற்சி வெற்றிபெற எங்களின் உளரீதியான வாழ்த்துக்களை இக்கடிதம் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்களின் வேண்டுகோளாகவும் ஆலோசனைகளாகவும் சில கருத்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

1. காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவானாலும், இனிமேலும் காலம் கடத்தாமல் அய்க்கியத்திற்கும் செயல் முன்னெடுப்பிற்குமான வேலைத் திட்டங்களை வகுத்து உறுதியாகப் பின்பற்றுவதோடு விரைவாகச் செயல்படுத்தப்பட வேண்டுகிறோம்.

2. தான், தனது இயக்கம், கொள்கை என்றில்லாமல் மக்களின் விடுதலைக்காக, நாட்டின் விடுதலைக்காக எதையும் விட்டுக்கொடுக்க, இழக்கத் தயாராக இருந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும்.

3. நம்முடைய எதிரிகள் எல்லோரும் ஓரணியில் கூட்டு சேர்ந்து கொண்டு நமது தாயகத்தையும் மக்களையும் அழிக்கும்போது மக்களுக்காக நாட்டிற்காகப் போராடும் நாம் ஒன்றுபடாததே நமது வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

4. நம் கண்முன்னே நெஞ்சம் பதைக்க ஈழத் தமிழர்களையும் அவர்களின் விடுதலைக்குப் போராடிய மாபெரும் வீரர்களையும் அவர்களின் தலைவர்களையும் கொன்று குவித்ததற்குக் காரணம் நமது ஒற்றுமையின்மையே, தமிழீழ விடுதலைக்கு முன் நிபந்தனையாக தமிழ்த் தேசிய விடுதலை உள்ளதை அறிவியல் பூர்வமாக அனுபவப்பூர்வமாக ஏற்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

5. தமிழர்கள் வீரமற்றவர்களாக, மானமற்றவர்களாக, இன உணர்வு அற்றவர்களாக இருப்பதோடு கோழைகளாகவும் சுயநலமிகளாகவும் உணர்ச்சிகள் நிரம்பியவர்களாகவும், அடிமைச் சிந்தனை கொண்டவர்களாகவும், சாதி, மத வெறிப்பிடித்தவர்களாகவும், மது, மாது மயக்கத்தில் உள்ளவர்களாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும், உழைத்து முன்னேறாமல் குறுக்கு வழியில் முன்னேறும் (பணம், அதிகாரம்) மனநிலையில் உள்ளனர் அல்லது உருவாக்கப்பட்டுள்ளனர். உண்மைகளுக்காகப் போராட வேண்டும் என்ற உணர்வற்றவர்களாக உள்ளனர்.

6. தமிழர்களை குடிகாரர்களாக, குறுக்குப்புத்தி உள்ளவர்களாக, காமத்தை ஊட்டிச் சீரழிக்கும் திரைப்பட மோகிகளாக, கிரிக்கெட் மற்றும் நெடுந்தொடர் அடிமைகளாக, நுகர்வுப் பண்பாட்டுச் சீரழிவிற்குள் சிக்கியவர்களாக, இலவசங்களுக்கு ஏங்குபவர்களாக தன்மானம் சுயகெளரவம் அற்ற அடிமைகளாக ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும் உருவாக்கி வைத்துள்ளனர். கந்துவட்டி, கூலிப்படை, கட்டைப் பஞ்சாயத்து, நிலவணிகர், தரகர் ஆதிக்கங்கள் அதிகரித்து அநீதி எங்கும் தலைவிரித்தாடுகிறது.

7. சீரழிந்த சமூகத்தின் விளைச்சலாக உள்ள தமிழக மக்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் அனைவருக்கும் இன உணர்வையும் தமிழ் இனத்தின் விழுமிய வரலாற்று அறிவையும் கற்பிக்க வேண்டியது தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலையாயக் கடமையாகும்.

8. தமிழகத்திலும் தமிழக அரசியல் களத்திலும் எதிரிகளும், துரோகிகளும் நீக்கமற நிறைந்துள்ளதால் அவர்களையும் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு, எப்படிப்பட்டவர்களோடு (தனிநபர், அமைப்பு) அய்க்கியத்தையும் உறவுகளையும் பேண வேண்டும் என்பதில் தெளிவான பார்வையும் வரையறையும் வேண்டும். இல்லையேல் மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து பழைய நிலையை அடைவதோடல்லாமல் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் இழக்க நேரிடும், கூட்டமைப்பிற்கு சில நேர்மையான சக்திகளும், இயக்கங்களும் கலந்து கொள்ளாமல் இருக்கலாம். அவநம்பிக்கை மற்றும் தான் என்ற போக்கு காரணமாக. அப்படிப்பட்ட தன்மைகளை மேன்மையான அணுமுறையாலும் சரியான செயல்பாடுகளை முன்னெடுப்பதன் வாயிலாகவும் அய்க்கியப்படுத்துவதே வெற்றியாக அமையும்.

விடுதலைக்கான போராட்டத்தில் அதுவே சரியான செயல் யுக்தியாக இருக்க முடியும்.

9. தமிழீழ மக்கள் நீண்ட நெடிய காலமாக அந்நியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததன் விளைவாக தன்மானம், சுயகெளரவம், போராடும் உணர்வு, அநீதியைக் கண்டால் பொங்கி எழும் தன்மை, ஒற்றுமையுடன் செயல்படாமை, இழப்புகளை எதிர்கொள்ள துணிவின்மை, எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படுதல், மாயையில் எளிதில் வீழ்ந்துவிடுதல் போன்ற உளவியல் சிக்கலில் இருந்து வருகின்றனர். அதனால் உரிமைக்கான, விடுதலைக்கான கடுமையான போராட்டங்களில் நேரிடையாக பங்குபெற தயங்குகிறார்கள். அதுபோன்ற இலக்கை அடைவதற்கு எளிமையான வழியெதும் உண்டா என்றே சிந்திக்கிறார்கள். இதைப் புரிந்துகொண்ட அரசியல் கட்சித் தலைவர்கள், மக்களை மேலும் மேலும் கீழான நிலைக்கே கொண்டு செல்கின்றனர். மேற்கண்ட சிக்கலை நாம் ஆழமாக ஆய்வு செய்து அதற்கேற்ப திட்டங்கள் வகுத்து செயல்படுத்தினால் மட்டுமே வெற்றியை எளிதாக அடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.

10. தற்போதைய சூழலில், தமிழக மக்கள் மத்திய- மாநில அரசுகள் மீதும், அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் நம்பிக்கை இழந்து ஆழ்ந்த வெறுப்பைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றான ஒன்றை விரும்புகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள். இதை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டிய தக்க தருணமாக இந்த சூழலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

11. தமிழினத்திற்காக, மொழிக்காக, உரிமைக்காக, தேச விடுதலைக்காக போராடியவர்களை அங்கீகரிப்பதும், கெளரவிப்பதும் அவர்களின் ஈகங்களை உயர்த்திப் பிடிப்பதன் வாயிலாகவே தற்போது போராட வருபவர்களுக்கும், எதிர்காலத்தில் போராட வருபவர்களுக்கும் உந்து சக்தியாக அமைவதோடு எதிர்காலப் போராட்ட வரலாற்றை சரியான திசைவழியில் எடுத்துச் செல்ல இயலும்.

தமிழ்தேச விடுதலைக்காக தோழர் தமிழரசன் தலைமையில் கட்டியமைக்கப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படையில் உறுப்பினர்களாய் இருந்து பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நாங்கள் இத்தருணத்தில் தங்கள் அனைவரோடும் சேர்ந்து ஒற்றுமையாக செயல்பட முடியவில்லையே என்ற ஏக்கம் எங்களை வாட்டுகிறது. விரைவில் வெளியே வந்து உங்களோடு தோள் கொடுத்து நமது இனத்திற்காகவும் தேசத்திற்காகவும் போராடும் நாளை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அதுபோல் தாங்கள் அனைவரும் எங்களின் விடுதலைக்காகவும் வருகைக்காகவும் ஒருகணம் சிந்திப்பீர்களேயானால், அந்த ஆத்ம பலமே எங்களின் சிறை வாழ்க்கையையும் எங்களின் இலட்சிய உறுதியையும் பலப்படுத்தும் என்று ஆழமாக நம்புகிறோம், விழைகிறோம்.

வென்றேயாக வேண்டும் என்ற இலட்சிய உறுதியுடன் என்றும் உங்களவர்களாக....

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.