ஐ.நா. பொது விசாரணைக் குழு - விசா தர இந்திய அரசு மறுப்பு - பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
திங்கட்கிழமை, 04 ஆகஸ்ட் 2014 16:42 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.
இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகள் மற்றும் மனித உரிமைக்கு எதிரான செயல்கள் ஆகியவற்றைக் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐ.நா. பொது விசாரணை குழுவினரை இலங்கைக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு மறுத்து விட்டது. எனவே அவர்கள் இலங்கைக்கு அருகே உள்ள இந்தியாவில் விசாரணையை நடத்தத் திட்டமிட்டு இந்திய அரசிடம் விசாவுக்காக விண்ணப்பித்த போது விசா தர இந்திய அரசு மறுத்து விட்டது.
போரில் பாதிக்கப்பட்ட ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழ் நாட்டில் தங்கியுள்ளனர். ஐ.நா. பொது விசாரணைக் குழு தனது விசாரணையை தமிழ் நாட்டில் நடத்தினால் ஏராளமானபேர் சாட்சியம் கூற முன்வருவார்கள். அதைத் தடுக்கும் நோக்கத்துடன் விசாரணைக்குழு உறுப்பினர்களுக்கு விசா தர இந்திய அரசு மறுத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இராஜபக்சே அரசு நடத்திய இனப்படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் மூடி மறைக்க இந்திய அரசு துணைபோய் உள்ளது. கடந்த காலத்தில் இருந்த காங்கிரஸ் அரசு என்ன செய்ததோ, அதையே பா.ஜ.க. அரசும் செய்கிறது. கொலைக் குற்றவாளியைவிட அவனது குற்றத்தை மறைத்து பாதுகாக்க நினைப்பது கொலையைவிடக் கொடியதாகும். தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற பெரும் அநீதியாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
|