தமிழ்நாட்டில் தொல்காப்பியர், திருவள்ளுவர் காலம் முதல் பாரதி காலம் வரையிலும் இன்னும் எதிர்காலத்திலும் தமிழர்கள் வாழையடி வாழையாகக் கட்டிவந்த, இனி எதிர்காலத்திலும் கட்டப் போகிற வேட்டிக்குப் பெரும் இழுக்கு நேர்ந்திருக்கிறது. அதிலும் தமிழ்நாட்டின் தலைநகரிலேயே வேட்டி கட்டிய தமிழர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டுப் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி டி. ஹரிபரந்தாமன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ஆர். காந்தி, ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் வேட்டி கட்டிக்கொண்டு சென்றதால் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்காமல் அவமதித்துள்ளனர். இது இன்று அல்ல, ஆங்கிலேயர் ஆண்ட காலம் முதல் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
1980ஆம் ஆண்டில் இதே சங்கத்திற்குச் சென்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் வேட்டி கட்டிய குற்றத்திற்காக அவமதிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் சங்கத்தில் மட்டுமல்ல ஜிம்கானா சங்கம், போன்ற பல அமைப்புகள் ஆங்கிலேயர்களின் பொழுதுபோக்கு சங்கங்களாக உருவாயின. அவர்கள் வேட்டி கட்டியவர்களை இழிவாகப் பார்த்தார்கள். அடிமைகளாகப் பார்த்தார்கள். எனவே அனுமதிக்க மறுத்தார்கள். சுதந்திரம் கிடைத்த பிறகும் இந்நிலை தொடர்வது, அதிலும் தமிழர்களே நிர்வாகிகளாக இருந்து நடத்தும் இத்தகைய சங்கங்களில் ஏகாதிபத்திய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது, அவர்கள் சட்டத்தையும் மனிதநேயத்தையும் மதிக்கத் தயாராக இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
காந்தியடிகளை "அரைநிர்வாணப் பக்கிரி' என பிரிட்டனின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஏளனம் செய்தார். ஆனால், அதே காந்தியடிகள் வட்ட மேஜை மாநாட்டிற்கு பிரிட்டிஷ் அரசால் அழைக்கப்பட்டு அங்கு சென்றபோது தமிழ்நாட்டு உழவர்களைப் போல இடுப்பில் தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேட்டியும் மேலே ஒரு துண்டும் மட்டும் அணிந்திருந்தார். அந்தக் கோலத்துடன் பிரிட்டிஷ் பேரரசின் சக்கரவர்த்தியான ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தார். மன்னரும் அவரை கைக்குலுக்கி வரவேற்று உபசரித்தார். இது வரலாற்று ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
1966ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர் சோவியத் நாட்டிற்குச் சென்றபோது, வேட்டிக் கட்டியே சென்றார். அவருக்கு வேறு உடை அணிந்து பழக்கமில்லை. கடும் குளிரில்கூட வேட்டியும் சட்டையும் மட்டுமே தரித்திருந்தார். அந்த திருக்கோலத்தில் மாஸ்கோவில் வந்திறங்கிய அவரை சோவியத் நாட்டு உயர் தலைவர்கள் வரவேற்றனர். எளிய கோலத்தில் காட்சி தந்த காமராசரைக் கண்டு சோவியத் மக்கள் வியந்தனர். குளிருக்கான உடைகூட வாங்குவதற்கு வழியில்லாத பரம ஏழையா?' என மனம் கசிந்தனர்.
நல்ல வேளையாக காந்தியடிகளும் காமராசரும் இன்று உயிரோடு இல்லை. இந்நாட்டு மக்கள் ஆங்கிலேய ஆதிபத்தியத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காக மேற்கண்ட தலைவர்களும் மற்றவர்களும் எண்ணற்ற தியாகம் செய்தனர். துன்பங்களை அனுபவித்தனர். அவ்வாறு அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை சுவாசிக்கும் இந்நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் அவர்கள் விட்டுச்சென்ற ஆதிபத்தியத் திமிர் இன்னும் நிலவுகிறது. தீண்டாமையை ஒழிக்க காந்தியடிகள் விடாது போராடினார். ஆனால் புதிய வகை தீண்டாமை இன்று ஆங்கிலேய அடிவருடிகளால் கையாளப்படுகிறது.
கிரிக்கெட் சங்கத்திலோ, ஜிம்கானா சங்கத்திலோ, இன்னும் இவைபோன்ற சங்கங்களிலோ நிர்வாகிகளாக இருப்பவர்கள் தமிழர்களே. இவர்கள் வெளியில் இல்லாவிட்டாலும் வீட்டிற்குள் வேட்டி கட்டுபவர்களே. ஆனாலும் ஆங்கிலேயர் விட்டுச்சென்ற மேல்தட்டு வர்க்க உணர்வு அவர்களின் உள்ளங்களில் இன்னமும் குடிகொண்டு இருக்கிறது. அதன் காரணமாகவே பழைய உளுத்துப்போன விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி நீதிநாயகங்களை, மதிக்கத்தக்க மூத்தவர்களை அவமதிக்கத் துணிந்துள்ளனர்.
மானமே பெரிதெனக் கொண்டு வாழ்பவர்கள் தமிழர்கள். நமது இலக்கியங்கள் மட்டுமல்ல, நாட்டுப்புற பழமொழிகளும் மான உணர்வை வெளிப்படுத்துகின்றன. "மதியாதார் தலைவாயில் மிதிக்க வேண்டாம்'' என்பது பொருள் பொதிந்த பழமொழியாகும்.
இந்நிகழ்ச்சியின் காரணமாக எழுந்த மக்களின் கொதிப்புணர்வைப் புரிந்துகொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா மிகக் கடுமையாக கிரிக்கெட் சங்கத்திற்கு எச்சரிக்கை செய்ததோடு, இத்தகைய அமைப்புகளின் உரிமங்களை இரத்து செய்வதற்கான சட்டம் கொண்டுவரப்போவதாக அறிவித்திருப்பதை தமிழர்கள் வரவேற்றுப் பாராட்டுகின்றனர்.
சங்கங்களின் பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றுவதின் மூலம் இத்தகைய திமிர் அமைப்புகளின் கொட்டத்தை ஒடுக்க முடியும். - நன்றி : தினமணி 24-7-2014
|