தமிழர் கட்டுமானக் கலை - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014 13:58

தமிழகமெங்கும் வானுயர உயர்ந்து ஓங்கி நிற்கும் கோபுரங்களும் கோயில்களும் தமிழர்களின் கட்டுமானக் கலையின் சிறப்பை இன்றளவும் எடுத்துக் காட்டுகின்றன.

நகரமைப்பு நுணுக்கத்தில் பன்னெடுங்காலமாகத் தேர்ச்சிபெற்ற மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கு சிந்துச் சமவெளி நாகரிகம் அடையாளமாக உள்ளது.

பிரான்சு நாட்டு வரலாற்று அறிஞரான மிச்செல் டானினோ, சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. கல்லூரியில் 28-04-14 அன்று உரையாற்றியபோது பின்வருமாறு குறிப்பிட்டார்.

“இந்தியாவில் உள்ள நவீன நகரங்களைக் காட்டிலும் சிந்துச் சமவெளி நகரங்கள் மிகவும் முன்னேறியவை. அந்த நகரங்கள் நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்டவையாகும். அந்த நாளில் நிலவிய மற்ற நாகரிகங்களைக் காட்டிலும் மிகவும் முன்னேறிய நாகரிகம் - சிந்துச் சமவெளி நாகரிகமாகும். அரப்பா-மொகஞ்சதாரோ நாகரிகத்தில் பல குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருந்தன. மக்கள் கூடுவதற்கேற்ற மண்டபங்கள் கட்டப்பட்டிருந்தன. பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

பாதாளச் சாக்கடைகள் திட்டமிட்டு அமைக்கப்பட்டு கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. பல்வேறு நீர்த் தேக்கங்கள் அமைக்கப்பட்டு நீர் ஆதாரம் நன்கு பாதுகாக்கப்பட்டது. கிணறுகள் நன்கு திட்டமிடப்பட்டு அதற்கான செங்கல்களால் அமைக்கப்பட்டிருந்தன.

வெள்ளத்திலிருந்தும் பகைவர்களிடமிருந்தும் பாதுகாப்பதற்காகக் கோட்டைகள் நகரங்களைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்தன.

மழை நீரை அறுவடை செய்வதற்காக 6 அல்லது 7 அணைகள் அருகிலிருந்த ஆறுகளில் கட்டப்பட்டிருந்தன. கடந்த 4 ஆயிரம் ஆண்டு காலமாக கட்ச் பகுதியில் மழை பெய்யும் விதம்இன்றுவரை கொஞ்சமும் மாறவில்லை. வறண்ட அப்பகுதியில் மழை நீரைப் பத்திரமாகச் சேமிக்க வேண்டிய அவசியத்தை அந்த மக்கள் உணர்ந்திருந்தனர். நகரங்களின் சாலைகளும் நன்கு திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்தன.

தமிழ் இனத்தின் முன்னோடியான மக்கள் சிந்துச் சமவெளிப் பகுதியில் சிறந்த நகர்ப்புற நாகரிகத்தை உருவாக்கி வாழ்ந்திருந்தனர் என்பதையே பிரஞ்சுப் பேராசிரியரின் உரை நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டியது.

அதற்குப் பிறகு வாழ்ந்த தமிழர்களும் கட்டிடக் கலையிலும் நகர்ப்புற நாகரிகத்திலும் சிறந்தே விளங்கினர் என்பதை நமது இலக்கியங்கள் எடுத்துக்கூறுகின்றன.

தமிழகத்தில் மிகப் பழமையான நகரங்கள் இரண்டாகும். பல்லவப் பேரரசின் தலைநகரமான காஞ்சியும், பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையும் மிகமிகப் பழமையான நகரங்கள் ஆகும். அந்த நகரங்கள் தாமரைப் பூ போல அமைக்கப்பட்டிருந்ததாக பொருநராற்றுப்படையும், பரிபாடலும் எடுத்துக்கூறுகின்றன.

"அடையா வாயில் மினை சூழ் படப்பை
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொருட்டின் காண்வரத் தோன்றி
சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்''

என்பார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவோடு புரையும் சீர் ஊர், பூவின்
இதழகத்து அணைய தெருவம், இதழகத்து
அரும் பொருட்டு அணைத்தே, அண்ணல் கோயில்
தாதின் அணையர் தண் தமிழ்க் குடிகள்
தாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்''

என்பது பரிபாடல் வருணனையாகும்.

கோயில் கலை

கோயில்களைக் கட்டும் கலையிலும் தமிழர்கள் மிகத் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். தொடக்கக் காலத்தில் மலைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன.

பின்னர் சமவெளிப் பகுதிகளில் செங்கல், சுண்ணாம்பு, மரம் போன்றவற்றைக் கொண்டு கோயில்கள் கட்டப்பட்டன. 7ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் வாழ்ந்த காலத்தில் இருந்த கோயில்களில் பெரும்பாலானவை செங்கல் கோயில்களே ஆகும். எனவே அவற்றில் சுலபமாக செடிகொடிகள் முளைத்து வளர்ந்தன. எனவேதான் நாவுக்கரசர் தனது கையில் உழவாரப் படையைத் தாங்கி கோயில் கோயிலாகச் சென்று செடிகொடிகளை நீக்கித் தூய்மை செய்தார்.

கருங்கற்கோயில்கள்

செங்கல் கோயில்களைக் கற்றழிகளாக மாற்றும் கலை வளர்ந்தது. பல்லவர் காலத்தில் காஞ்சி கைலாச நாதர் கோயில் கருங்கல்லால் ஆன கட்டுமானக் கோவிலாகும். பிற்காலச் சோழர் காலத்தில் செங்கல் கோயில்கள் பல கருங்கல் கோயில்களாக மாற்றி அமைக்கப்பட்டன.

இராசஇராச சோழன் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் 1000 ஆண்டு காலத்திற்கு மேலாக இன்றளவும் நிமிர்ந்து நின்று தமிழர் கட்டிடக்கலையின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்கூறி வருகிறது. பெரிய கோவிலைத் தொடர்ந்து தமிழகமெங்கும் பல கோயில்கள் பல மன்னர்களால் தொடர்ந்து கட்டப்பட்டன. விரிக்கின் பெருகும்.

அணைகள்

புரண்டோடும் ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கலையை முதன் முதலில் செய்தவன் தமிழன். காவிரி ஆற்றின் குறுக்கே முதல் நூற்றாண்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை இன்றளவும் நின்று நிலவுகிறது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆண்டபோது அவர்கள் இந்த அணையைப் பார்த்து வியந்தார்கள். எப்படிக் கட்டப்பட்டது என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து அந்த அடிப்படையில் அணைகளையும் ஆற்றுப்பாலங்களையும் அமைக்கத் தொடங்கினார்கள்.

கல்லணை கட்டப்படுவதற்கு முன்பே பல அணைகள் இருந்திருக்க வேண்டும். காவிரியில் 11 அணைகள் அமைக்கப்பட்டிருந்ததாக பண்டைய கணக்கு கூறுகிறது.

கொங்கு நாட்டில் 11 ஆறுகளும், 90 அணைகளும் இருந்ததாக பழைய ஏடு ஒன்று கூறுகிறது. பவாணி ஆற்றில் கொடிவேரி அணை கட்டப்பட்டிருந்தது. அதே ஆற்றில் காலிங்கராயன் அணையும் கட்டப்பட்டது. இவைகள் 700 ஆண்டுகளுக்கு முந்தியவையாகும். நொய்யலாற்றில் 32 அணைக்கட்டுகள் இருந்தன. சேலத்தில் உள்ள திருமணிமுத்தாறு ஆற்றில் 32 அணைகள் கட்டப்பட்டிருந்தன. மிகப் பழமையான தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்ட 7 பழமையான அணைகள் இன்னமும் நல்ல முறையில் இயங்குகின்றன.

தமிழர் கட்டிடக் கலையின் நுணுக்கம்

தமிழர்கள் கட்டும் பெரும் கட்டிடங்களுக்கு அடித்தளம் அமைப்பது எப்படி? என்பது குறித்து அவர்களுக்குத் தெளிவான அறிவு இருந்தது. தேவையான அளவு பள்ளம் தோண்டிக் கொள்ள வேண்டும். அந்தப் பள்ளத்தில் முதல் வரிசையாக மணல் கொட்டப்பட வேண்டும். பிறகு இரண்டாவது வரிசையாக நாகப்பழம் அளவு உள்ள கற்களைப் போடப்பட வேண்டும். பிறகு அதன் மீது 3வது வரிசையாக தேங்காய் அளவு கற்கள் போடப்பட வேண்டும். நான்காம் வரிசையில் யானை தலையளவு கற்கள் போடவேண்டும். இவ்வாறு செய்வதை திம்மியாகப் போடுவது என்று கூறுவார்கள். நவீன பொறியியலில் இம்முறையை ஏழ்ஹக்ங்க் நற்ர்ய்ங்ள் என கூறுவார்கள். ஆனால் பல ஆயிரம் ஆண்டு முன்பே இந்த நுணுக்கத்தைத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.

அடிமானம் எதுவரை இருக்க வேண்டும் என்பதைக் குறித்தும் தமிழர்களுக்கு தெளிவான அறிவு இருந்தது.

1. கல் காணும் வரை

கீழே கருங்கல் இருக்குமானால் எவ்வளவு பாரம் வேண்டுமானாலும் தாங்கும். எனவேதான், பெரும் கட்டிட அமைப்புகளுக்கு கல் காணும்வரை தோண்டி அடிமானத்தை அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக தஞ்சை பெரிய கோயில் செம்பாறாங்கல் எனப்படும் பாறையின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் அடிமானம் 5 அடி ஆழம் மட்டுமே தரைக்குள் சென்றிருப்பதாக இந்தியத் தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது.

2. மணல் காணும் வரை

மணலில் கட்டப்பட்டிருக்கும் போது எவ்வளவு பாரமாயினும் தாங்கும். தமிழகத்தில் அமைக்கப்பட்ட நெடுநிலை மாடங்கள் மணற்பாங்கான நிலத்தில்தான் கட்டப்பட்டன.

3. நீர் காணும் வரை

அடிமானம் மட்டத்தில் தண்ணீர் வந்துவிட்டால் உலர்ந்துள்ள நிலையில் பாதிபாரம்தான் தாங்கும். நிலத்தடி நீர் மட்டம் இனி உயராது என்ற அளவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்குகீழே போகக்கூடாது என்று பொருள் கொள்ள வேண்டும்.

மண்ணின் அடர்த்தி

கட்டிடங்கள் கட்டும்போது மண்ணின் அடர்த்தியைத் தெரிந்துகொள்ள பழந்தமிழர்கள் எளிய சோதனையைக் கையாண்டார்கள். ஒரு கோல் நீளம் ஷ் ஒரு கோல் அகலம் ஷ் ஒரு கோல் உயரம் கொண்ட குழி ஒன்றை வெட்ட வேண்டும். பின்னர் வெட்டப்பட்ட மண்ணை அதே குழியில் போட்டு நிரப்ப வேண்டும். குழி நிரம்பியது போக மண் இருந்தால் அது வன்புலம். குழியில் போட இன்னும் மண் தேவைப்பட்டால் அது மென்புலம். இந்த உண்மையை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டிருக்கிறார்.

கோயில்களையும், அணைகளையும், பெரும் கட்டிடங்களையும் எழுப்பியவர்களை தச்சர்கள் என மக்கள் அழைத்தார்கள். அவர்களுக்கு தலைமை தாங்குபவர் "பெருந் தச்சன்' என அழைக்கப்பட்டார்.
பல்லவர், சோழர், பாண்டியர் காலத்து கல்வெட்டுகளில் பல்வேறு கட்டடக்கலைச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. தச்சர்களையும், பெருந் தச்சர்களையும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கட்டடக் கலை மரபில் இவர்களின் பணி குறித்தும், பெயர்க்குறித்த தரவுகளும் கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன.

தமிழகக் கட்டடக் கலை மரபில் பெருந் தச்சன் என அழைக்கப்படுபவது தமிழர் மரபில் மிகவும் மதித்துப் போற்றப்படுகிற ஒரு கலைஞனை சுட்டும் சொல்லாகும். சங்க இலக்கியங்களிலும் தச்சு, தச்சன் ஆகிய பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

தஞ்சைப் பெரிய கோவிலை கட்டியவர் பெயர் வீரசோழன் குஞ்சர மல்லனான இராசஇராச பெருந்தச்சன் என்பவர் ஆவார். இவருக்குத் துணையாக மதுராந்தகனான நித்தவினோத பெருந் தச்சன் என்பவரும், இலத்தி சடையனான கண்டாரதித்த பெருந் தச்சன் என்பவரும் இக்கோயிலை எழுப்பும் பணியில் ஈடுபட்டார்கள் என கல்வெட்டுகள் கூறுகின்றன. தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய பெருந் தச்சர்களின் இயற்பெயரோடு இராசராசன், மதுராந்தகன், கண்டராதித்தன் ஆகிய சோழ மன்னர்களின் பெயர்களும் இணைக்கப்பட்டிருப்பது எந்த அளவுக்கு இவர்களை இராசஇராச சோழன் மதித்தான் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வெளிநாட்டுத் தச்சர்கள்

வெளிநாடுகளிலிருந்தும் தச்சர்கள் தமிழகம் வந்து பணியாற்றியிருக்கிறார்கள் என்ற விவரத்தை மணிமேகலை, உதயணன் காவியம் ஆகியவை எடுத்துக்கூறுகின்றன.

யவனத் தச்சர்
அவந்திக் கொல்லர்
மகதத்து மணிவினைக்காரர்
பாடலி பசும்பொன் வினைஞர்
கோசலத்து ஓவியர்கள்
வத்தநாட்டு வண்ணக் கம்மர்
மராட்ட கம்மர்

வெளிநாடுகளில் இருந்து இவர்கள் இங்கே வந்து பணியாற்றினாலும் தமிழ்நாட்டுப் பெருந் தச்சர்களின் மேற்பார்வையில்தான் இவர்கள் பணியாற்றினார்கள்.

நூல்கள்

காலங்காலமாக தமிழர்கள் பட்டறிவினால் பெற்ற பொறியியல் அறிவு செப்பம் செய்யப்பட்டு நூல் வடிவை எட்டியிருந்ததை சங்க இலக்கியமான நெடுநல்வாடை பின்வருமாறு கூறுகிறது.

நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறிட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனை வகுத்துணி

சேரன் செங்குட்டுவன் பத்தினி தெய்வமான கண்ணகிக்கு கோயில் எடுப்பித்த முறையை இளங்கோவடிகள் பின்வருமாறு விளக்குகிறார்.

அறக் கனத் தந்தனர் ஆசான் பெருங்கனி
சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று
மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து

ஆயகலைகள் 64-இல் ஒன்றாகக் கட்டுமானக் கலை குறிக்கப்பட்டுள்ளது. கட்டடம், சிற்பம் ஆகியவை குறித்து ஏராளமான நூல்கள் தமிழில் இருந்திருக்கின்றன. ஆனால் காலப்போக்கில் அவை அழிந்தன.

மயமதம்
மானசாரம்
விசுவகர்மியம்
ஐந்திரமதம்
மனுசாரம்
காசியபம்

போன்ற நூல்கள் கிடைத்திருக்கின்றன. இவைகளில் பல நூற்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவையாகும். ஆனால், சமஸ்கிருதத்திற்கே உரிய தேவநாகரி லிபியில் இவை எழுதப்படவில்லை. வடமொழியில் எழுதுவதற்காகத் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட கிரந்த எழுத்தில் இந்நூல்கள் உள்ளன. எனவே இந்த நூல்கள் தென்னாட்டில் தோன்றிய நூல்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மயமத நூலில் பல தமிழ்ச்சொற்கள் உள்ளன. இந்நூல் தமிழில் இருந்து வடமொழியாக்கம் பெற்ற நூலே என்பது அறிஞர் கருத்தாகும்.

(தஞ்சை கட்டடப் பொறியாளர்கள் மற்றும் எழிற் கலைஞர்கள் சங்க ஆண்டுவிழாவில் திரு. பழ. நெடுமாறன் ஆற்றிய உரை).

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.