பிரெஞ்சு அகாதமியைப் போல : புலவர் குழுவிற்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 09 செப்டம்பர் 2014 11:59

பேராசிரியர் தா. மணி - ச. நீலாயதாட்சி இணையரின் மகன் மரு. குமணன், த. குஞ்சிதபாதம் - தமிழரசி இணையரின் மகள் மரு. சிவரஞ்சனி ஆகியோரின் திருமணம் புதுக்கோட்டையில் 20-08-14 புதன்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது.


திருமண விழாவிற்கு தமிழறிஞர் ப. அரங்கசாமி தலைமை தாங்கினார். தமிழறிஞர்கள் தமிழண்ணல், அவ்வை நடராசன் உட்பட பலர் வாழ்த்தினர்.

மணமக்களை வாழ்த்தி உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் பேசியதாவது :
"பேராசிரியர் தா. மணி அவர்களின் மகன் திருமண விழா தமிழ் மாநாடு போல நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் கூறினார். அதை நான் வழிமொழிகிறேன். தமிழகமெங்கிலுமிருந்து திரளான தமிழறிஞர்களும் உணர்வாளர்களும் வந்து கூடியிருப்பதைப் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பழனி ஆதினம் சாது சண்முக அடிகளார் இத்திருமணத்தை நடத்தி வைத்தார். அவர் தற்போது தமிழக புலவர் குழுவின் தலைவராக உள்ளார். அதன் செயலாளராக பேராசிரியர் மணி உள்ளார். மறைந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் புலவர் குழுவைத் தோற்றுவித்தார். தமிழ்மொழி தொடர்பாக அனைத்து அதிகாரமும் படைத்ததாக புலவர் குழு திகழவேண்டும் என அவர் விரும்பினார்; செயல்பட்டார்.

பிரான்சு நாட்டில் "பிரெஞ்சு அகாதமி' என்ற ஒரு அமைப்பு கி.பி. 1634ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரெஞ்சு மொழி தொடர்பான முழுமையான அதிகாரம் படைத்த குழுவாக இது திகழ்ந்தது. மன்னராட்சி காலத்தில் மன்னர்கள் இதற்கு உறுதுணையாகவும், ஜனநாயக ஆட்சிக் காலத்தில் மக்கள் அரசு இதற்கு துணையாகவும் நின்றன; நிற்கின்றன. நூலாக இருந்தாலும், பத்திரிகையாக இருந்தாலும் அவற்றில் பிறமொழிக் கலப்பு இருக்குமானால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து இக்குழு விசாரிக்கும்; தண்டிக்கும். பிரெஞ்சு மொழியைப் பொறுத்தவரையில் இக்குழுவே உயர் அதிகாரம் படைத்த குழுவாகத் திகழ்ந்தது. எனவேதான் பிரெஞ்சு மொழி இன்றளவும் பிறமொழிக் கலப்பு இல்லாமல் தூய்மையாக வழங்குகிறது.

தமிழகப் புலவர் குழுவிற்கும் இத்தகைய அதிகாரத்தைத் தருவதற்கு தமிழக அரசு முன்வரவேண்டும். தமிழ்மொழி குறித்த எல்லாவற்றிற்கும் புலவர் குழுவே முழுமையான அதிகாரம் படைத்தது என்ற நிலை உருவாக வேண்டும். இல்லையென்று சொன்னால் தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பதை ஒருபோதும் தடுக்க முடியாது'' என்றார்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பேராசிரியர் தா. மணி நன்றி தெரிவித்தார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.