முப்பால் பெருமை உணர்ந்த மூவர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014 15:01

"வள்ளுவன் தன்னை உலகிற்கே அளித்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு''


என பாரதி செம்மாந்து பாடினார். ஆனால் வள்ளுவரின் திருக்குறளை உலகறியச் செய்த பெருமை தமிழர் யாருக்கும் கிடையாது. பிரிட்டானிய நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர் ஆங்கிலேய பாதிரியாரான ஜி.யு. போப். சமயப் பரப்புரைக்கு உதவும் என்ற நோக்கத்தில் தமிழைக் கற்ற அவர், தமிழின் சிறப்பில் தன்னைப் பறிகொடுத்தார். தமிழ் இலக்கியங்களில் தோய்ந்து மகிழ்ந்தார். திருக்குறள் அவரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.

"நூற் சிறப்பில் அது (குறள்) மற்ற எல்லாத் தமிழ் நூல்களையும் தாழ்த்தித் தான் உயர்ந்து நிற்கிறது; ஒரு நாட்டு மக்களின் உள்ளத்தினுள்ளே உயிரிலே இடங்கொண்டுள்ளனவும், என்றென்றும் மாயாது திகழ்வனவுமாகிய ஒருசில பெருநூல்களில் அதுவும் ஒன்று.'' என ஜி.யு. போப் பாராட்டினார். தான் பெற்ற இன்பத்தை வையகமும் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கில் குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

மணிவாசகரின் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் பெயர்த்த அவரது செயலை என்னென்பது? பைபிளில் தோய்ந்த அவரது உள்ளம் திருவாசகத்தைப் படிக்கும்போது உருகியது. அவரின் இந்த உணர்வு சமய எல்லைகளைக் கடந்ததாகும்.

அவர் மொழியாக்கம் செய்த இந்த இரு நூற்களும் ஆங்கிலம் அறிந்தோரின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டன. குறிப்பாக, குறளின் கருத்துக்கள் படித்தோரை மெய்ச் சிலிர்க்கச் செய்தன. ஆங்கிலம் பரவிய அத்தனை நாடுகளிலும் குறள் பரவியது. இத்தகைய உயர்ந்த இலக்கியம் எந்த மொழியில் படைக்கப்பட்டது என்பதை பிற நாட்டார் ஆராய்ந்தபோது தமிழின் பெருமையை அவர்கள் நன்கு உணர்ந்தனர். திருக்குறளால் தமிழும், தமிழால் குறளும் உலகப் பெருமையைப் பெற்றன. இதற்குக் காரணமானவர் ஜி.யு. போப் ஆவார்.

பிறப்பினால் ஐரோப்பியராக இருந்தாலும் உள்ளத்தால் தமிழராக வாழ்ந்த ஜி.யு. போப் 11-02-1908 அன்று காலமானார். அவரது கல்லறையை அமைக்க சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியர் செல்வகேசவராய (முதலியார்) தமிழர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்திற்கு அனுப்பிவைத்தார்.

தமிழினம் அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. ஆங்கிலேயராகப் பிறந்தாலும் தமிழராக வாழ்ந்தார். எனவேதான் தனது கல்லறையில் "இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்'' எனப் பொறிக்கச் செய்தார்.

நோபல் பரிசுபெற்ற ஜெர்மானியர்

ஜெர்மனியில் பிறந்த ஆல்பர்ட் சுவைட்சர் மருத்துவப் பட்டம் பெற்று ஆப்பிரிக்காவின் பழங்குடி மக்களுக்குத் தொண்டு செய்ய தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார். அப்போது அவர் திருக்குறளையும், பகவத் கீதையையும் படிக்க நேர்ந்தது. இந்த இரு நூல்களுக்குமிடையே காணப்பட்ட வேறுபாடுகளை மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடாக அவர் கண்டறிந்தார்.

கீதை ஒரு சமய நூல் என்ற வகையில் ஒரு எல்லைக்குட்பட்டு நிற்பது. எனவே அதை பொது நூலாகக் கருத முடியாது.

குறள் நூலுக்கு சமய எல்லை அறவே இல்லை. அன்பு, அறம் ஆகிய அடித்தளத்தின் மீது அமைந்து மானுடத்தை நேசிக்கும் நூலாகத் திகழ்கிறது. எனவேதான் சமயம், இனம், நாடு ஆகியவற்றைக் கடந்து உலக மக்கள் அனைவரும் திருக்குறளை தங்களின் உடைமையாகக் கருதுகிறார்கள்.

கீதை வர்ண சார்பு நலன் நிறைந்த நூல்.
குறள் மக்கள் நலன் சார்ந்த நூல்.
கீதை வேத மரபின் வாரிசு.
குறள் தமிழ் மரபின் விழுமியங்களின் வாரிசு.
கீதை பிராமணியத்தின் சாரம்
குறள் தமிழர் பண்பாட்டின் சாரம்.
கீதை பிறப்பினால் ஏற்றத்தாழ்வு உண்டு எனக் கற்பிக்கிறது.
குறள் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என முழங்குகிறது.

சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், வில்லிப்புத்தூரார் பாரதம், கம்பராமாயணம் உட்பட பல்வேறு நூல்களில் பகவத் கீதையைப் பற்றிய குறிப்போ, அந்நூலின் தாக்கமோ அறவே காணப்படவில்லை என்பது தெளிவான உண்மையாகும்.

சங்க இலக்கியத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டுவரை தோன்றிய தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவற்றில் குறளின் தாக்கம் ஆழமாகப் படிந்துள்ளது. தமிழ் இலக்கியங்களில் குறள் ஏற்படுத்திய தாக்கத்தினுக்கு நிகரான தாக்கத்தினை வேறு எந்த நூலும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் குறளின் கருத்தோட்டம் தமிழர்களின் பண்பாட்டுக் கருத்தோட்டமாகும்.

ஆனால், தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிரிடையான கருத்துக்கள் கொண்டதும், வேத மரபின் வாரிசுமான கீதையின் தாக்கம் தமிழ் இலக்கியத்தில் படியாதது ஒரு உண்மையை எடுத்துக்காட்டுகிறது. அதாவது, கீதையை தமிழர்கள் ஏற்கவில்லை என்பதுதான் அந்த உண்மையாகும்.

ரஷ்யப் பேரறிஞர் போற்றிய குறள்

ஜார் மன்னனின் ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவில் வாழ்ந்த பேரறிஞரான டால்ஸ்டாய் எழுதிய "கடவுளின் திருநாடு' உன் உள்ளத்திலேயே உள்ளது''

(The Kingdom of God is within you) என்ற நூலைத் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காந்தியடிகள் படித்து அதில் தனது உள்ளத்தைப் பறிகொடுத்தார். தனது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தினை இந்த நூல் ஏற்படுத்திற்று என காந்தியடிகளே குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

திருக்குறளைப் பற்றியும், திருவள்ளுவர் குறித்தும் டால்ஸ்டாய் மூலமே காந்தியடிகள் அறிந்துகொண்டார் என்பது வியப்பான செய்தியாகும். சென்னையிலிருந்து வெளியான "தி ஆர்யா' என்னும் இதழின் ஆசிரியரான இராமசேஷன் என்ற தமிழர் டால்ஸ்டாயுடன் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார். இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு நடத்திவரும் தாங்கமுடியாத அடக்குமுறைகளைப் பற்றி தனது கடிதங்களில் குறிப்பிட்ட இராமசேஷன், இந்த அடிமைத்தளையிலிருந்து விடுபடத் தங்களுக்கு அறிவுரை கூறும்படி டால்ஸ்டாயை வேண்டிக்கொண்டார்.

அவரின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு டால்ஸ்டாய் எழுதிய விரிவான கடிதம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் திருப்பத்தினை ஏற்படுத்திற்று. வன்முறைக்கு எதிராக அறவழிப் போராட்டத்தைக் கடைப்பிடிக்கும்படி இந்திய மக்களுக்கு டால்ஸ்டாய் அறிவுரை கூறினார்.
திருக்குறளில் உள்ள இன்னா செய்யாமை என்னும் அதிகாரத்தில் இருந்து ஆறு குறட்பாக்களை குறிப்பிட்டு அவற்றை சொல்லாலும், செயலாலும் பின்பற்றும்படி டால்ஸ்டாய் வேண்டிக்கொண்டார்.

"சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்'' (311)

"பிறருக்குத் துன்பத்தைச் செய்வதால் பல்வேறு சிறப்புகளைத் தரும் செல்வத்தைப் பெற இயலும் என்றாலும், அத்தகைய துன்பத்தைச் செய்யாமல் இருப்பதே குற்றமற்ற பெரியோர்கள் கொள்கை'' என இக்குறள் கூறுகிறது.

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும் (313)

ஒரு தீங்கும் செய்யாதவனைப் பகைத்து அவனுக்குப் பெருந்தீமைகளைச் செய்தால் அது, தப்பமுடியாத துன்பத்தைத் தரும்.

"கறுத்து இன்னா செய்தவக் கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்' (312)

தம் மீது பகைமை கொண்டு ஒருவன் தமக்குத் துன்பம் பலவும் செய்த அந்த நேரத்திலும், அந்தத் துன்பங்கட்கு எதிராக அவனுக்குத் தீங்கு செய்யாமல் இருத்தலே குற்றமற்ற பெரியோர்களது கொள்கையாகும் என்ற கருத்தை விளக்குகிறது.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல் (314)

என்ற குறள் தனக்குத் தீங்கு செய்தவர்களைத் தண்டித்தற்குரிய சிறந்த வழி, தீங்கு செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்களுக்கு நன்மை தரும் செயல்களைச் செய்து அவர்கள் செய்த தீங்கினையும், தான்செய்த நன்மையினையும் மறந்து விடுவதேயாகும் என்ற அறிவுரையைக் கூறுகிறது.

இது இயேசு பெருமானின் அறிவுரையினும் உயர்ந்தும், உளவியல் நுட்பம் வாய்ந்தும் காணப்படுவதாக டால்ஸ்டாய் குறிப்பிட்டுள்ளார்.

"அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போல் போற்றாக் கடை' (315)

"பிற உயிருக்கு நேர்ந்த துன்பத்தைத் தமக்கு நேர்ந்த துன்பமாகக் கருதி அவ்வுயிரைக் காப்பாற்றாவிட்டால் ஒருவர் பெற்றுள்ள அறிவினால் "உண்டாகக் கூடிய பயன் யாது' எனக் கூறும் திருக்குறட் கருத்து,

கிறித்துவ சமய அருள் கொள்கையை உணர்த்துவதாகத் டால்ஸ்டாய் கருதுகிறார்.

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும் (319)
- என குறள் அறிவிக்கிறது.

ஒருவர் ஒரு நாளின் முற்பகலில் பிறர்க்குத் துன்பந் தருவனவற்றைச் செய்வாரேயானால், அந்நாளின் பிற்பகலில் துன்பந்தருவன தாமே (பிறரால் செய்யப்படாமல்) அவரை வந்தடையும் என்பதைக் கூறுகிறது.

இந்த ஆறு குறட்பாக்களும் டால்ஸ்டாயின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்துள்ளன. அவருடைய ஊறுசெய்யா (அகிம்சை)க் கொள்கையை உருவாக்க உதவியுள்ளன. அறநெறியில் போராடுவது பற்றிய சிந்தனைக்கு உரமாக அமைந்துள்ளன.

இராமசேஷனுக்கு டால்ஸ்டாய் எழுதிய இக்கடிதத்தை இந்து நாளிதழ் அப்படியே வெளியிட்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தியடிகளுக்கு இதனுடைய பிரதி எப்படியோ கிடைத்தது. அதைப் படித்த அவரது உள்ளத்தில் புதிய ஒளி பிறந்தது. அக்கடிதத்தின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள காந்தியடிகள் டால்ஸ்டாயிக்கே நேரடியாகக் கடிதம் எழுதி அதை உறுதிசெய்து கொண்டபின், அதை அச்சிட்டு வெளியிட்டார்.

பேரறிஞர் டால்ஸ்டாயின் உள்ளத்தைக் கவர்ந்த திருக்குறளை படிக்க காந்தியடிகள் விரும்பினார். ஆனால் அவருக்கு பிரெஞ்சு மொழியில் ஏரியல் என்பவர் மொழி பெயர்த்த குறளின் பிரதி கிடைத்தது. அதைப் படித்த காந்தியடிகள் தனது வாழ்க்கையையே குறள் வழியில் செலுத்தத் தொடங்கினார்.

தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய அறப்போராட்டமும், அதற்குப் பிறகு இந்தியாவிற்குத் திரும்பி இந்திய விடுதலைப்போரில் அறநெறியைக் கையாண்டு வெற்றிப்பெற்றதும் உலகம் வியக்கும் வரலாற்று உண்மைகளாகும்.

காந்தியடிகள் தனது குருநாதராக டால்ஸ்டாயை ஏற்றுக்கொண்டார். டால்ஸ்டாயின் உள்ளத்தை கவர்ந்தவராக திருவள்ளுவர் திகழ்ந்தார். எனவே இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் புதிய நெறியைக் காட்டிய பெருமை திருவள்ளுவரையே சார்ந்ததாகும்.

பிற நாட்டார் திருக்குறளின் பெருமையை உணர்ந்த அளவுக்குத் தமிழ் நாட்டார் உணரவில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும். வள்ளுவப் பேராசான் தனது நூலில் எந்த இடத்திலும் தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களைப் பயன்படுத்தவில்லை. மிகுந்த தொலைநோக்குப் பார்வையோடும், தன்னம்பிக்கையோடும் திருக்குறளை அவர் யாத்தார். உலகமெலாம் வாழ்கிற மக்கள் அனைவருக்கும் உரிய பொதுமறையாக இந்நூலினை அவர் படைத்தார் என்று சொன்னால் மிகையாகாது.

கி.மு. 7ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியர் வடமொழிப் படையெடுப்பினால் தமிழ் அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார். திருவள்ளுவர் வடவர் பண்பாட்டுப் படையெடுப்பினால் தமிழ்ப் பண்பாடு அழியவிடாமல் பாதுகாத்தார்.

வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் பல்வேறு சீர்கேடுகள் மலிந்து கிடந்தன. அவற்றை யெல்லாம் ஒழித்துத் தமிழர்களை மீட்கவேண்டும் என்பதற்காகவே வள்ளுவப் பேராசான் இந்நூலினை எழுதினார்.

இரவச்சம், உட்பகை, கள் குடித்தல், கூடா ஒழுக்கம், சிற்றினஞ்சேருதல், பிறனில் விழைதல், பெண்வழிச்சேரல், வரைவின் மகளிர், சூது, கயமை போன்ற கேடுகள் தமிழ்ச் சமுதாயத்தில் பரவியிருந்ததை எதிர்த்து அவற்றுக்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்யவேண்டும் என்பதற்காக திருக்குறளை வள்ளுவர் பாடினார். இதன் மூலம் சமுதாயப் புரட்சியை உருவாக்கவேண்டும் என விரும்பினார்.

ஆனால், வள்ளுவர் வாழ்ந்த காலத்திற்குப் பிறகு அதாவது, 2000-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகும் மேலே கண்ட தீமைகளிலிருந்து தமிழ்ச் சமுதாயம் இன்னமும் விடுபடவில்லை. முன்னைவிட அதிகமாக இத்தீமைகளும், புதிய தீமைகளுக்கும் இணைந்து நமது சமுதாயத்தை அழித்துக்கொண்டிருக்கின்றன. தமிழ்ப் பண்பாட்டுப் புரட்சியைத் தமிழகத்தில் நடத்தவேண்டிய இன்றியமையாமை உருவாகியுள்ளது. இந்தப் புரட்சிக்கும் வள்ளுவரே நமக்கு வழிகாட்டியாவார்.

சீரிளமைத்திறன் குன்றாத நமது தமிழ்மொழி அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக் கிறது. யுனெஸ்கோ பேரமைப்பு தனது ஆண்டறிக்கையில் உலகில் அழியப் போகும் 25 மொழிகளில் எட்டாவது இடத்தில் தமிழைக் குறிப்பிட்டிருக்கிறது.

ஒரு மொழியைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்ட மக்கள், பிறமொழி ஆதிக்கத்திற்கு அடிமைப்படுதல், பிறமொழிச் சொற்களைத் தங்கள் மொழியில் கலந்து பேசுதல் ஆகியவையே ஒரு மொழியின் அழிவுக்கு அடிப்படையான காரணங்களாகும்.

தமிழகத்தில் மேலே கண்ட இரண்டும் தங்குதடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழர்கள் ஆங்கில மொழியின் ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுப் போனார்கள். ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டுப் போனாலும், ஆங்கிலம் இன்னமும் இங்கு கோலோச்சுகிறது. ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, கல்வி மொழியாக ஆங்கிலம் இன்னமும் நீடிக்கிறது. ஆங்கிலத்தைக் கல்வி மொழியாகக் கொண்ட பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தங்களின் குழந்தைகளைப் போட்டி போட்டுக்கொண்டும் பெருந்தொகையை அள்ளிக்கொடுத்தும் தமிழ்ப் பெற்றோர் சேர்க்கும் கொடுமைகளை நாம் பார்க்கிறோம். தமிழர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது கூட ஆங்கிலச் சொற்களைக் கலவாமல் பேசுவது இல்லை. அவ்வாறு பேசுவதே பெருமைக்குரியது எனக் கருதும் சிறுமைத் தனத்திற்குத் தமிழர்கள் ஆட்பட்டுக் கிடக்கிறார்கள்.

மொழி அழிந்தால் இலக்கியம் அழியும், பண்பாடு சிதையும், இறுதியில் அம்மொழி பேசும் மக்கள் உருமாறிப்போவார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் எபிரேய மொழி பேசிய யூதர்கள் ரோமர்களின் படையெடுப்புக்கு அஞ்சி பாலஸ்தீன நாட்டைவிட்டுப் பறந்தோடினார்கள். ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தஞ்சம் புகுந்தார்கள். எந்த நாட்டில் தஞ்சம் புகுந்தார்களோ அந்த நாட்டின் மொழியையும், பண்பாட்டையும் ஏற்றுக்கொண்டு தாங்கள் யார் என்பதையே மறந்து போனார்கள்.

ஆனால், இரண்டாம் உலகப்போரில் இட்லர் யூத இனத்தையே கருவறுக்க முடிவு செய்து ஐம்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்களைக் கொன்று குவித்தான். அந்தப் பேரழிவிற்குப் பிறகு யூதர்கள் விழிப்புணர்வு பெற்றார்கள். தங்கள் மண்ணையும், மொழியையும் இழந்ததின் விளைவே இந்த பேரழிவு என்பதை உணர்ந்தார்கள். புதைகுழிக்குப் போன எபிரேய மொழி தோண்டியெடுக்கப்பட்டுப் புத்துயிர் கொடுக்கப்பட்டது. அவர்களின் பண்டைய பண்பாட்டினை உயிர்தெழ வைத்தார்கள். யூதர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு எபிரேய மொழியையும், பண்பாட்டினையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என முனைந்து செயல்பட்டார்கள். இதன் விளைவாக

யூத இனம் இன்று உலகில் வலிமை வாய்ந்த இனமாகத் திகழ்கிறது.
தாயகத் தமிழர்கள் இந்த உண்மையை உணர்ந்து தங்களின் மொழியையும், மண்ணையும் காப்பாற்றாவிட்டால், ஈழத் தமிழர்கள் உட்பட உலக நாடுகளில் வாழும் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது.

வள்ளுவத்தை புறக்கணித்ததால் நமக்கு நேர்ந்த இன்னல் இதுவாகும். தமிழினத்தை உலகின் சிறந்த இனமாக மாற்ற வள்ளுவமே வழிகாட்டும்.

(31-08-2014 ஞாயிறு அன்று மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவை இரண்டாம் ஆண்டு விழாவில் பழ. நெடுமாறன் ஆற்றிய உரை)

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014 15:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.