"தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்'' என்று பழ.நெடுமாறன் கூறினார். மயிலாடுதுறையில் தமிழர் தேசிய முன்னணி கட்சியின் நாகை மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நாகை மாவட்டத் தலைவர் சாமி. தமிழரசன், மாவட்டச் செயலாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் பூபதி வரவேற்றார். இதில் கட்சியின் தலைவர் பழ. நெடுமாறன் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"தமிழக மீனவர்கள் பிரச்சினை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மீனவர்களுக்கு கடலில் எல்லைகள் கிடையாது. காலம் காலமாக சுதந்திரமாக மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. தற்போதுவரை சுமார் 600 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். பல ஆயிரம் கோடி மதிப்பிலான படகுகள் மற்றும் உபகரணங்கள் இலங்கை கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ளன. இதுபோல, உலகில் எந்தநாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டதில்லை. தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகும் இந்திய மீனவர்களுக்கு இந்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது.
தற்போது சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவித்தாலும் அவர்களின் படகுகளை திரும்ப தர மாட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தைரியமாக அறிவிக்கிறார். தமிழக மீனவர்கள் நிலை கவலைக்கு உள்ளாகி வருகிறது.
இது தொடர்ந்தால் விளைவுகள் மோசமாகிவிடும். அதற்குள் இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினரை இந்திய கடற்படையினர் விரட்டியடிக்க வேண்டும். மேலும் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலைதான் பா.ஜனதாவுக்கும் ஏற்படும்.
காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தமிழர்களுக்கு ஆபத்து சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழ் மொழிக்கு, மண்ணுக்கு, மக்களுக்கு ஏற்பட்டு வரும் ஆபத்தை விலக்கிவிடவும், உரிமைகளை வென்றிடவும் தமிழர் தேசிய முன்னணிக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்சியை மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் பலப்படுத்த வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள் இனியன் சம்பத், அயனாவரம் முருகேசன், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர்கள் தமிழ்வேங்கை, தியாக சுந்தரமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்க ரமேஷ், ராஜேந்திரன், செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டப் பொருளாளர் குமார் நன்றி கூறினார்.
|