இந்திய வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலாளர் ஏ.பி.வெங்கடேசுவரன் மிகச்சிறந்த அதிகாரி ஆவார். தொலைநோக்குப் பார்வையும் கூர்ந்த அறிவும் நிறைந்தவர். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பிரதமருக்கு எதிரான கருத்துகள் தெரிவித்ததன் காரணமாகத் தனது பதவியை விட்டு விலகியவர். மற்ற அதிகாரிகளைப் போல அவரும் இராசீவின் விரல் அசைவுக்கு ஏற்ப ஆடியிருந்தால் பதவியில் நீடித்து இருக்க முடியும். "பதவியை விட தனது தன்மானமே பெரிது' அதைவிட நாட்டின் நலன் பெரிது' என நினைத்துப் பதவியை உதறித் தள்ளியவர் அவர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதியரசர் பஞ்சாபகேச அய்யர் அவருடைய தந்தையார் ஆவார். அவர் பெரியார் மீது அளவற்ற மதிப்புக் கொண்டவர். திருச்சி மாவட்ட நீதிபதியாக அவர் இருந்த போது பெரியார் மீதான வழக்கு ஒன்றில் விசாரணை நடத்தித் தீர்ப்பு கூற வேண்டியிருந்தது. நீதிமன்றத்துக்குப் பெரியார் தனது தொண்டர்கள் புடைசூழ வந்திருந்தார்.
"உங்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறேன்'' என நீதிபதி தனது தீர்ப்பைக் கூறியபோது பெரியார் "அபராதம் கட்டுகிற பழக்கம் தனக்குக் கிடையாது'' எனவும், சிறைக்குப் போகத் தயாராக இருப்பதாகவும் கூறினார். பெரியார் அவர்கள் இவ்வாறு கூறக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அதையடுத்து நீதிபதி கூறியது தான் யாரும் எதிர்பாராத ஒன்றாகும். "நீங்கள் அபராதப் பணம் கட்டியாகிவிட்டது. போகலாம்'' என்றார் நீதிபதி.
பெரியாருக்கு எதுவுமே புரியவில்லை. தனது தொண்டர்களில் யாரோ ஒருவர் தனக்கும் தெரியாமல் பணத்தைக் கட்டிவிட்டதாக நினைத்துக் கோபம் அடைந்தார். ஆனால் தொண்டர்களோ தாங்கள் கட்டவில்லை எனத் திட்டவட்டமாகக் கூறினார்கள். திகைக்க வைக்கும் உண்மை என்னவென்றால் நீதிபதியே அந்தப் பணத்தைக் கட்டிவிட்டார் என்பதுதான். இத்தகைய குடும்பத்தின் வழித்தோன்றல்தான் ஏ.பி.வெங்கடேசுவரன்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ராசீவ் செய்த தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டித் திருத்த முயன்றார். ஆனால் ராசீவ் அவர் மீது கோபம் அடைந்து பதவியை விட்டு விலகும்படி செய்தார்.
பெங்களூரில் சார்க் மாநாடு நடைபெற்றபோது பிரதமர் ராசீவும் இலங்கை அதிபர் செயவர்த்தனாவும் தனியாகப் பேசினார்கள். வெளியுறவுத்துறைச் செயலாளர் என்ற முறையில் ஏ.பி.வெங்கடேசுவரன் உடன் இருந்தார். அப்போது நடந்தவற்றை அவரே என்னிடம் பின்வருமாறு தெரிவித்தார்.
"இலங்கையில் உள்ள தமிழர்கள் தனி நாடு பெற்றுவிடுவதில் வெற்றி பெறுவார்களேயானால் இந்தியாவிலுள்ள தமிழர்களும் பிரிந்து போய் விடுவார்கள்'' என செயவர்த்தனா கூறி இராசீவை அச்சம் அடைய வைத்தாராம்.
இரு நாட்டுத் தலைவர்கள் உரையாடும்போது இடையில் குறுக்கிடக்கூடாது என்று பொறுமை காத்த ஏ.பி.வெங்கடேசுவரன், செயவர்த்தனா சென்ற பிறகு ராசீவிடம் "செயவர்த்தனா கூறியது உண்மையல்ல. இந்தியாவில் உள்ள தமிழர்களின் நிலைமை வேறு. இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலைமை வேறு. எனவே, அவ்வித அச்சம் தேவையற்றது'' என விளக்கமாக எடுத்துக் கூறினாராம். ஆனால் இராசீவின் செவிகளில் அவை ஏறவில்லை.
மதுரையில் 1989ஆம் ஆண்டு நாங்கள் நடத்திய ஈழ ஆதரவு மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என ஏ.பி.வெங்கடேசுவரன் அவர்களை அழைத்த போது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு, மாநாட்டுக்கு வந்து சிறப்பானதொரு சொற்பொழிவை நிகழ்த்தினார். ராசீவ்-செயவர்த்தனா உடன்பாட்டுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதியன்று தெகல்கா இதழுக்கு அவர் அளித்த நேர்காணல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பதவியிலிருந்து விலகிப் பல ஆண்டுகளுக்குப் பிறகும் அவருடைய கருத்தில் எத்தகைய மாறுபாடும் இல்லை என்பதை அந்த நேர்காணல் விளக்குகிறது. அது வருமாறு: "நான் வழங்கிய ஆலோசனையை மீறி 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையைப் பிரதமர் ராசீவ் இலங்கைக்கு அனுப்பினார். இந்திய-இலங்கை உடன்பாடு மிகத் தவறானது. நான் ஆமாம்சாமியாக இருந்திருந்தால் வெளியுறவுத்துறைப் பதவியில் தொடர்ந்து இருந்திருப்பேன். அவ்வாறு பதவி வகிக்க எனது மனச்சாட்சி இடம் தரவில்லை. இலங்கை அதிபர் இராணுவ ரீதியான தீர்வு காண்பதில் ஈடுபட்டு இருக்கிறார். அங்குள்ள நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே இருக்கிறது. அமைதியான முறையில் தீர்வு காண இலங்கை அரசு ஒருபோதும் விரும்பவில்லை.
இலங்கையிலுள்ள பிரச்சினையில் தலையிட்டு அமைதி காணக்கூடிய ஒரே நாடு இந்தியாதான். ஆனால், இலங்கையில் நிலைமை மோசமாகும் வகையில் பிரதமர் ராசீவ் 1987ஆம் ஆண்டில் இலங்கையுடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டார். இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக மட்டுமே உள்ள இந்திய இராணுவத்தை அண்டை நாட்டில் உள்ள அரசுக்கு எதிரான கிளர்ச்சியை ஒடுக்க அனுப்பக்கூடாது என்று நான் ஆலோசனை வழங்கினேன். ஆனால் இராசீவின் செவிகளில் அது ஏறவில்லை. இலங்கையின் இனப் பிரச்சினையில் இந்தியாவை எப்படியும் ஈடுபடுத்திவிட வேண்டும் எனச் செயவர்த்தனா மிகத் தந்திரமாகத் திட்டமிட்டார். ஏனென்றால், இலங்கையின் தென் பகுதியில் ஜனதா விமுக்தி பெரமுனா இயக்கமும் வட-கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளும் அரசுக்கு எதிராகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தனர். இந்த நெருக்கடியைத் தீர்க்க இந்தியா தனக்கு உதவாவிடில் தனது அரசு கவிழ்ந்து விடும் எனச் செயவர்த்தனா இராசீவிடம் கெஞ்சினார்.
இந்திய அமைதிப் படை இரண்டு ஆண்டுகள் அங்கேயே இருந்தும் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைப் பறிக்க முடியவில்லை. அவமானகரமான முறையில் இந்தியப் படை வெளியேற நேர்ந்தது. செயவர்த்தனாவுக்குப் பிறகு பதவியேற்ற பிரேமதாசா இந்தியப் படையை எதிர்ப்பதற்கு விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கினார்.''
பின்னர் தெகல்கா செய்தியாளர் வினோத்குமார் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
கே: 1980களில் பிரதமர் ராசீவ் உங்கள் அறிவுரையை ஏற்று, அதன்படி இந்திய-இலங்கை உடன்பாட்டில் கையெழுத்து இடாமலும் இந்திய அமைதிப் படையை அனுப்பாமலும் இருந்திருந்தால் இலங்கையின் வரலாறு வேறுவிதமாக இருந்திருக்குமா?
ப: நிச்சயமாக. அவ்விதமே நானும் நம்புகிறேன். ராசீவ் காந்தியும் இன்னமும் பிரதமராக நீடித்து இருப்பார். இளமைப் பருவத்திலேயே அவரது உயிர் பிரிக்கப்பட்டுவிட்டது. இந்தக் கொலைக்கு விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்தப்படுகிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆணைப்படிதான் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டது என்பதை நான் நம்பவில்லை. இந்தக் கொலை முடிவினால் இந்தியாவிலுள்ள முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இலங்கை இனப் பிரச்சினையிலிருந்து மேலும் விலகிச் சென்றுவிட்டார்கள்.
கே: பிரதமர் இராசீவோடு இலங்கைப் பிரச்சினையில் நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாமல், வெளியுறவுத்துறையில் இருந்து கொண்டு ஆமாம்சாமியாக விளங்கியிருந்தால் வெளியுறவுத்துறைச் செயலாளராகத் தொடர்ந்து நீடித்து இருப்பீர்களா?
ப: நானும் அவ்விதமே கருதுகிறேன். இலங்கைப் பிரச்சினையில் மட்டும் எங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படவில்லை. வேறுபல பிரச்சினைகளிலும் கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் நான் அவற்றை இப்போது விவாதிக்க விரும்பவில்லை.
கே: இலங்கைப் பிரச்சினை குறித்து உங்கள் கருத்துகளுக்காகப் பிறகு வருந்தியது உண்டா?
ப: நிச்சயமாக இல்லை. அரசை விட்டு நான் வெளியேறிய போது அதற்காக வருந்தவில்லை. என்னுடைய நேர்மையான கருத்துகளையே நான் தெரிவித்தேன்.
கே: உடன்பாட்டைத் தொடர்ந்து இரு அரசுகளுக்கு இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களிலிருந்து இந்தியா தனது பூகோள நலன்களையே பெரிதாகக் கருதியதாகத் தெரிகிறது. தமிழர் பிரச்சினை குறித்து அக்கடிதங்களில் எதுவும் சொல்லப்படவில்லை. இது சரியா?
ப: நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. இலங்கையில் அமெரிக்க வானொலியின் ஒலிபரப்பு நிலையம் அமைத்தலை இந்த உடன்பாட்டின் ஒரு பிரிவு குறிப்பிடுகிறது. ஆனால் தற்போது உலக அரசியலே மாறிவிட்டது. அதே அமெரிக்காவுடன் நாம் அணு உடன்பாடு செய்து கொண்டிருக்கிறோம். பின்னர் இந்த உடன்பாடு எந்தப் பயனும் தராது.
கே: இலங்கைப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு கட்சியினரும் உடன்பாடு செய்துகொள்ள ராசீவ் உதவியிருக்க வேண்டுமே தவிர, இந்தியாவும் இலங்கையும் உடன்பாடு செய்து கொண்டிருக்கக் கூடாது எனக் கருதுகிறீர்களா?
ப: இது ஒரு நியாயமான கேள்வி. இந்தியாவும் இலங்கையும் உடன்பாடு செய்திருக்கக் கூடாது. இலங்கை அரசும் விடுதலைப்புலிகளுமே இந்த உடன்பாட்டைச் செய்திருக்க வேண்டும். இந்தியா நடுநிலையாளராக விளங்கியிருக்க வேண்டும். இதற்கு மாறாக இரு நாடுகளின் அரசுகளே உடன்பாட்டினைச் செய்துகொண்டன. இந்த உடன்பாட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ விடுதலைப்புலிகள் சம்பந்தப்படவில்லை. இது வருந்தத்தக்கது. ஒரு நாள் மாலையில் நான் இந்து நாளிதழின் ஆசிரியர் ராம் அவர்களைச் சந்தித்தேன். உடன்பாட்டின் பிரிவுகள் மிக மோசமாகத் தயாரிக்கப்பட்டு இருப்பதாக நான் கூறினேன். உடன்பாட்டின் ஒரு கட்சியாக விடுதலைப்புலிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இந்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுடன் நேரடியாக உடன்பாடு செய்து கொண்டிருக்கக் கூடாது என்று கூறினேன். ஆனால் "உடன்பாட்டில் மாறுதல்கள் செய்யக் காலம் கடந்துவிட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் உடன்பாடு கையெழுத்து இடப்படப்போகிறது. இனி என்ன செய்ய முடியும்?'' என்று அவர் கையை விரித்தார். கொழும்பில் இந்த உடன்பாடு கையெழுத்து இடப்பட்டபோது பிரதமருடன் என்.ராம் சென்றிருந்தார். இதன் விளைவு என்ன என்பது வரலாறாகிவிட்டது.
(பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் நூலின் ஒரு பகுதி)
|