ஸ்காட்லாந்து - நியூசிலாந்து - ஹாங்காங் போர்க்கொடி - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2014 14:20

கிரேட் பிரிட்டன் என அழைக்கப்படும் பிரிட்டிஷ் நாட்டில் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு பகுதிகள் உள்ளன. பிரிட்டனுடன் ஸ்காட்லாந்து இணைந்து 307 ஆண்டுகள்தான் ஆகிறது.

கி.பி. 1603க்கு முன்னர் ஸ்காட்லாந்து தனி நாடாக விளங்கி வந்தது. அதற்கென தனியான மன்னர் பரம்பரை ஆண்டு வந்தது. ஸ்காட்லாந்திற்கும், இங்கிலாந்திற்கும் இடையே பல தடவைகள் போர்கள் நடைபெற்று இருக்கின்றன. இரு நாடுகளுக்கிடையேயும் தீராத பகை எப்போதும் இருந்து வந்தது.
ஆனால், 1603ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் ஸ்காட்லாந்தின் மீது படையெடுத்து வெற்றி பெற்று அதை தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.

1707ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் கீழ் ஸ்காட்லாந்து அரசுக்கு சட்டம், கல்வி, மத அமைப்பு நிர்வாகம் ஆகிய துறைகளில் சுதந்திரம் அளிக்கப்பட்டது. 300 ஆண்டு காலமாக இந்த ஏற்பாடு நிலவியது.

பிரிட்டனின் பிற பகுதிகளைவிட ஸ்காட்லாந்து பலவிதங்களிலும் புறக்கணிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கருதினர். குறிப்பாக தங்கள் நாட்டின் பெட்ரோல் வளத்தை பிற பகுதியினர் சுரண்டிவருவதாக குற்றம் சாட்டினர்.

பிரிட்டனின் மக்கள் தொகையில் 8% உள்ள ஸ்காட்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 235 மில்லியன் டாலர்களாகும். மேலும் பிரிட்டனின் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏராளமான ஏவுகணைகளும், அவற்றைத் தாங்கி நிற்கும் 4 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்களும் ஸ்காட்லாந்து கடல் பகுதியில்தான் இருக்கின்றன. ஸ்காட்லாந்து தனி நாடானால் இந்த ஏவுகணைகளும், அணு சக்தி நீழ்மூழ்கிக் கப்பல்களும் அகற்றப்படும் என முதலமைச்சர் அலெக்ஸ் சால்மன்ட் தெரிவித்திருந்தார்.

"இங்கிலாந்தின் பிற துறைமுகங்களில் இத்தனை ஏவுகணைகளையும் நீர்மூழ்கி கப்பல்களையும் நிறுத்தும் வசதி இல்லாததால் ஸ்காட்லாந்து பிரிந்தால் பிரிட்டனின் தன்னிச்சையான அணு ஆயுத வல்லமையே கேள்விக்குரியதாகிவிடும்.

மேலும் ஸ்காட்லாந்து தனி நாடானால் ஐ.நா.வின். நிரந்தர உறுப்பு நாடுகளுள் ஒன்றாக பிரிட்டன் இருப்பது சாத்தியமற்றதாகிவிடும்'' என பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் ஜான் மேஜர் எச்சரித்திருந்தார்.
ஜி7 நாடுகள் கூட்டமைப்பிலிருந்து அதன் இடத்தை இழக்க நேர்ந்திருக்கும். உலகின் 6வது பெரிய பொருளாதார நாடான பிரிட்டன் ஸ்காட் லாந்து இல்லாமல் அந்த இடத்தை பிரேசிலிடம் பறிகொடுக்க வேண்டியிருக்கும் என்பது போன்ற சர்வதேச நெருக்கடிகளும் உருவாகியிருக்கும்.

1997ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பை அடுத்து அங்கு மீண்டும் தனி நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தலில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து பிரிட்டனில் இருந்து முற்றிலுமாக விலகி சுதந்திரம் பெற்ற தனிநாடாக ஸ்காட்லாந்து விளங்க வேண்டுமா? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இது குறித்து இரண்டரை ஆண்டு காலத்திற்கு மேல் இரு தரப்பும் மிகக்கடுமையான பிரச்சாரப் போரில் ஈடுபட்டன. "பிரிந்தே ஆக வேண்டும்' என்பவர்களும், "பிரிய வேண்டாம்' என்பவர்களும் நடத்திய பிரச்சாரத்தில் அனல் பறந்தது.

ஸ்காட்லாந்து பிரிந்து போனால் அதைத் தொடர்ந்து வேல்ஸ் பகுதியும் பிரிந்து போகும் என பிரிட்டன் அஞ்சியது. ஏற்கெனவே வட அயர்லாந்து பகுதியின்மீது அயர்லாந்து உரிமை கொண்டாடி வருகிறது. இப்பகுதிகள் பிரிட்டனிலிருந்து பிரிந்து சென்றுவிடுமானால் இங்கிலாந்து "உலக வல்லரசு' என்ற நிலையை இழந்துவிடும்.

எனவே பிரிட்டிசு பிரதமர் டேவிட் கேமரூன் ஸ்காட்லாந்திற்கு நேரடியாகச் சென்று அம் மக்களிடம் பேசியபோது "பிரிட்டனின் பகுதியாக ஸ்காட்லாந்து தொடரவேண்டும் என எங்களின் இதயங்கள் கூறுகின்றன. பிரிவினை என்பது மிகுந்த வேதனையை அளிக்கும். ஸ்காட்லாந்து பகுதியினரின் ஓய்வு ஊதியம் முதல், கரன்சி வரை ஏராளமான பொருளாதார விசயங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகும். நமது இராணுவம் துண்டாடப்படும். இரு நாடுகளுக்கிடையே உருவாகும் புதிய எல்லைக்கோட்டை, மக்கள் கடப்பது எளிதல்ல என்ற நிலை உருவாகும்.'' என வேண்டிக் கொண்டார்.
பிரிட்டனின் அரசியலில் ஒருபோதும் தலையிடாத பிரிட்டிஷ் அரசி எலிசபெத் "பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து தனிநாடாக செயல்படுவது தொடர்பான வாக்கெடுப்பின் போது தங்களின் எதிர்காலம் குறித்து நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என ஸ்காட்லாந்து மக்களை வேண்டிக் கொள்கிறேன்'' என கடைசி நேரத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

18-09-14 அன்று ஸ்காட்லாந்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 86% மக்களே வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். 14% மக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாக்களித்தவர்களில் 55% மக்கள் பிரிவினைக்கு எதிராகவும் 45% மக்கள் பிரிவினைக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

ஆனாலும் வாக்களிக்காத 14% மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக எதிர்காலத்தில் மாறக்கூடும். அப்படியானால் மறுபடியும் பிரிவினைக் கோரிக்கை கிளர்ந்து எழும். இதை உணர்ந்த பிரதமர் கேமரூன் ஸ்காட்லாந்திற்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்தங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளார்.

ஸ்காட்லாந்து முதலமைச்சரும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் தலைவருமான அலெக்ஸ் சால்மன்ட் வாக்கெடுப்பிற்குப் பிறகு தனது பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவர் "இந்த வாக்கெடுப்புடன் ஸ்காட்லாந்து தனி நாடாக பிரிவதற்கான இயக்கம் முடிவடைந்துவிடவில்லை. அந்தக் கனவு எப்போதும் அழிவதில்லை. ஸ்காட்லாந்திற்கான அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் நிர்பந்தத்தில் பிரிட்டன் உள்ளது. வாக்கெடுப்பில் நாங்கள் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், எங்கள் அரசியல் நோக்கங்களை அடையும் முயற்சிகளை கைவிடவில்லை. ஸ்காட்லாந்து தனி நாடாக உருவாவதற்கான வாய்ப்புகள் இன்னமும் உள்ளன'' என்று கூறினார்.

நியூசிலாந்து விடுதலைக் குரல்

பிரிட்டனின் குடியேற்ற நாடுகளில் ஒன்றான நியூசிலாந்து, ஸ்காட்லாந்து வழியில் நடைபோடத் துவங்கியுள்ளது.

பிரிட்டனின் ஆதிக்கத்தில் கடந்த 122 ஆண்டுகளாக இருந்து வரும் நியூசிலாந்து நாட்டின் தேசிய கொடியின் ஒரு பகுதியில் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி பதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகும் பிரிட்டனின் குடியேற்ற நாடாகத்தான் நியூசிலாந்து விளங்குகிறது என்ற தோற்றத்தை அந்நாட்டின் தேசியக் கொடி பிரதிபலிக்கிறது என மக்கள் கருதினர்.

பிரிட்டனின் குடியேற்ற நாடுகளில் ஒன்றான கனடா தனது கொடியில் இருந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் அடையாளத்தை அகற்றிவிட்டு புதிய கொடியை மாற்றி வடிவமைத்துள்ளது. அதைப் போல தாங்களும் செய்ய வேண்டும் என விரும்புகின்றனர்.

அண்மையில் நியூசிலாந்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பதவியில் அமர்ந்த பிரதமர் ஜான் கீ "நம் நாட்டுக் கொடியில் இடம்பெற்றுள்ள பிரிட்டிஷ் யூனியன் ஜாக் அடையாளம் தொடரவேண்டுமா என்ற விஷயத்தில் மக்களின் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்தப்படும்'' என அறிவித்துள்ளார்.

45 இலட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து ஒரு கருத்து வாக்கெடுப்பிற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது.

ஹாங்காங் கொடி உயர்த்துகிறது

155 ஆண்டு காலத்திற்கு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஹாங்காங் தீவை 1984ஆம் ஆண்டு செஞ் சீனத்திடம் பிரிட்டன் ஒப்படைத்தது. 1997ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஹாங்காங், மஹாவ் என்னும் இரு பகுதிகளும் சுயேச்சை அதிகாரங்களுடன் சீனத்துடன் இணைக்கப்பட்டன. இராணுவம், வெளியுறவு ஆகிய இரு துறைகள் மட்டுமே சீன அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதர துறைகள் சிறப்பு நிர்வாகப் பகுதியின் ஆட்சியின் கீழ் வரும் என உறுதியளிக்கப்பட்டது.

ஹாங்காங்கில் அரசியல் உரிமையில் தலையிடமாட்டோம் என கூறியிருந்தது சீன கம்யூனிஸ்ட் கட்சி. கடந்த சூலை மாதம் சீன அரசு வெளியிட்ட வெள்ளையறிக்கை ஒன்றில் ஹாங்காங்கின் சிறப்பு அதிகார குழுவிற்கு உள்ள அதிகாரங்கள் அனைத்தும் தங்களால் அளிக்கப்படுவது என்றும், 2017ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாகவே வேட்பாளர்கள் பற்றிய தகவலை தங்களிடம் தரவேண்டும் என்றும், தங்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக ஆகவேண்டும் என்றும் திட்டவட்டமாக கூறியது. இதற்கு ஹாங்காங் மக்கள் நடுவே கடும் எதிர்ப்பு எழுந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் போக்கைக் கண்டித்து நகரின் மையப் பகுதியில் வண்ண வண்ண குடைகளின் கீழ் திரண்டு "அரசியல் சுதந்திரத்தில் கை வைக்கக்கூடாது'' மக்கள் முழக்கமிடுகின்றனர்.

ஹாங்காங் மக்கள் வெறும் அரசியல் உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை. தங்களுடைய தனித்துவமான கலாச்சாரம், கல்வி, வணிகம், தொழில் உரிமைகள் போன்றவற்றிற்காகவும் போராடுகின்றனர். கான்டன் மொழி பேசும் ஹாங்காங் இளைஞர்கள் சீன ஆதிக்கத்தின் கீழ் வந்ததும் மன்டாரின் மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட்டனர். ஹாங்காங்கின் செல்வ வளம், கலாச்சார தனித்தன்மை, பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றிற்காக ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சீனர்கள், சீனாவின் பிற மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக வருகிறார்கள். ஹாங்காங்கில் வழங்கப்படும் அரசியல் உரிமைகள் தங்களுக்கும் வழங்கப்படவேண்டும் என பிற மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடிக்கக்கூடும் என சீன அரசு அஞ்சுகிறது. ஹாங்காங்கின் ஜனநாயக உரிமைகளில் கைவைக்கத் தொடங்கியிருக்கிறது.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.