உலகப் பெருந் தமிழர்நா. மகாலிங்கம் அவர்கள் காலமான செய்தி தமிழ் கூறும் நல்லுலகை மீளாத் துயரத்தில் ஆழ்த்திற்று.
வள்ளலார் - காந்தியடிகள் ஆகியோரை வாழ் நாள் முழுவதும் அடியொற்றி பின்பற்றி வாழ்ந்த நா. மகாலிங்கம் அவர்கள் வள்ளலார் - காந்தியடிகள் ஆகிய இருவருக்கும் அவர் நடத்திய விழா மேடையிலேயே உயிர் துறந்தது அனைவரையும் உலுக்கிவிட்டது.
காந்தியத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த அவர் காந்தியடிகளின் நூல்கள் அனைத்தையும் தமிழில் குறைந்த விலையில் வெளியிட்டு பரப்பினார். அதைப்போல வள்ளலாரின் திருஅருட்பாவின் ஆறு திருமுறைகளையும் அவரின் உரைநடைகளையும் பதிப்பித்து வள்ளலாரின் சன்மார்க்க நெறியை பரப்பத் துணை நின்றார்.
தமிழ் வளர்ச்சிக்கு அவர் ஆற்றியத் தொண்டு அளப்பரியதாகும். ஏட்டுச் சுவடியாக இருந்த பஞ்ச மரபு நூலை முதன் முதலில் அச்சிட்டு வெளியிட்டார். திருக்குறளை ஆங்கிலம், இந்தி, ஒரியா, மலையளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டார். திருமந்திரத்தின் ஆங்கிலப் பதிப்பை வெளியிட்டார்.
சட்டமன்றத்தில் அங்கம் வகித்து தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குரிய ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கியது. மொழி வழி மாநிலப் பிரிவினையின்போது பாலாக்காடு, தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழர்களுக்கே உரியவை என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திப் போராடினார்.
தமிழ்நாட்டில் கொங்கு மண்டலப் பகுதியில் தொழிற்துறையிலும், வேளாண்மைத் துறையிலும் முன்னேறியதற்கு அவர் ஆற்றியத் தொண்டு அனைவராலும் பாராட்டப்படுவதற்குரியதாகும். அப்பகுதியில் கல்வி நிலையங்களை உருவாக்கி, ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி பெற வழி வகுத்தவர்.
தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் அவர் ஆற்றிய அரிய தொண்டினை பாராட்டும் வகையில் அவருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் உலகப் பெருந்தமிழர் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் ஆற்றிய உரை என்றும் மறக்க முடியாததாகும். அவரின் மறைவு தமிழக பொது வாழ்வில் யாராலும் இட்டு நிரப்ப முடியாததாகும்.
|