இந்தியாவின் அரசியல் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, கூட்டங்கள் கூடும் உரிமை, ஆகியவை தமிழகத்தில் துச்சமாக மதிக்கப்படுகின்றன.
ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக காவல்துறை மாறி சனநாயக உரிமைகளை அடியோடு பறிக்கிறது.
நல்ல வேளையாக நீதிமன்றங்கள் தலையிட்டு பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுக்கொடுக்கும் கடமைகளைச் செய்கின்றன.
அண்மையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதிபெற்றுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.
இலங்கையில் நடந்த போரில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்கான கூட்டங்கள் ஆண்டுதோறும் தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலுமுள்ள தமிழர்களால் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு தமிழகத்தில் நவம்பர் 27ஆம் தேதியன்று நடைபெறவிருந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையின் உச்சக்கட்டம் என்னவென்று சொன்னால் புதுக்கோட்டை அருகேயுள்ள தோப்புக்கொல்லை என்ற இடத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாமிற்குள் பிள்ளையார் கோவில் ஒன்று கட்டப்பட்டு அதனுடைய குடமுழுக்கு விழா நவம்பர் 27ஆம் தேதியன்று நடைபெறவிருந்தது. அதிகாலையில் யாகசாலைப் பூசைகள் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென குவிந்த காவல்துறையினர் அதற்குத் தடை விதித்துள்ளனர். அதைத் தட்டிக்கேட்ட 50க்கு மேற்பட்ட அகதிகளைக் கைது செய்தனர். இதற்கு ஒரே காரணம் குடமுழுக்கு நவம்பர் 27ஆம் தேதி நடத்தப்பட்டதுதான். அன்றைய தினம் எங்கேயாவது திருமணம் நடந்தால் கூட காவல்துறை தடைவிதித்திருக்கும்.
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சனநாயக உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டே வந்துள்ளன. 19-1-1997ஆம் நாளில் மதுரையில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு ஒன்றை நாங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்தோம். முதலில் எங்களுக்கு அனுமதி வழங்கிய மதுரைக் காவல்துறை ஆணையர் 18ஆம் தேதியன்று நள்ளிரவில் அந்த ஆணையை இரத்து செய்வதாகத் தெரிவித்தார்.
அதற்குரிய காரணம் எதையும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. ஆனால் அதற்குள் மாநாட்டில் பேச வேண்டிய தலைவர்கள், கலந்து கொள்ளும் மக்கள் ஆகியோர் வரத்தொடங்கிவிட்டனர்.
காலையில் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டப்பிறகு நீதிநாயகம் ஆர். ஜெயசிம்மபாபு அவர்கள் அளித்த தீர்ப்பில் பின்வருமாறு காவல்துறைக்கு கடுமையானக் கண்டனம் தெரிவித்தார்.
"சென்னை மாவட்ட காவல்படைச் சட்டத்தின் 41வது பிரிவின்படி ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் வரையறையற்றதாகும். எனவே உரிய கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் அந்த அதிகாரம் கையாளப்படவேண்டும். சென்னை மாகாண காவல்படைச் சட்டம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இயற்றப்பட்ட சட்டமாகும். அந்தச் சமயத்தில் நாடு அந்நிய நாட்டினரின் ஆட்சியின் கீழ் இருந்தபோது அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரமாகும்.
அந்நிய ஆட்சியில் செலுத்தப்பட்ட அதிகாரத்தை அதேமுறையில் அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு செலுத்தப்படுதல் கூடாது. இந்த நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள புலனாய்வுத் துறையின் அறிக்கையின்படி காவல் துறையினரின் செயற்பாடுகளைப் பார்த்தால் நாடு சுதந்திர நாடாகத் தெரியவில்லை. இங்கு ஒவ்வொரு குடிமகனும் அரசின் நடைமுறையில் முழுவதுமாக பங்குபெற உரிமையுடையவர் ஆவார். குடிமக்களின் உரிமைக் குரலினைக் கேட்டு நாட்டின் பகைக்குரல் என்று அதிகாரிகள் முடிவு செய்யக்கூடாது.
காவல்துறையினரிடம் குவிந்து நிற்கிற அதிகாரம் தங்களின் விருப்பம்போல் செலுத்துவதற்கான அதிகாரமென்று நினைக்கக்கூடாது. அரசியல் சட்ட அமைப்பின் வகைமுறைகளின் வரம்பிற்குள் அந்த அதிகாரமானது செலுத்தப்படுதல் வேண்டும். குறிப்பாக அடிப்படை உரிமைகளின் மீதான கட்டுப்பாடு எதுவும் நியாயமான கட்டுப்பாடாக இருக்க வேண்டும். மற்றும் அவை தேவையான கட்டுப்பாடுகளாகவும் விளங்க வேண்டும். மேலும் எந்த நோக்கத்திற்காக அவை அனுமதிக்கத் தக்கனவோ அந்த நோக்கத்திற்கானதாகவும் இருக்க வேண்டும்.
மனுதாரரின் அமைப்பு கூறும் கருத்து மக்களிடையே செல்வாக்குப் பெறாமல் இருக்கலாம். அதற்காக அந்தக் கருத்தோட்டத்தைத் தடை செய்வதும், மனுதாரரின் அமைப்பை சட்டவிரோதமானது என்று கருதுவதும் சரியல்ல.'' காவல்துறையினரின் போக்கை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்த நீதிநாயகம் மீண்டும் மாநாடு நடத்துவதற்கு அனுமதி அளிக்கும்படி ஆணை பிறப்பித்தார்.
இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் காவல்துறை திருந்தவில்லை. 6-5-2000 அன்று சிதம்பரத்தில் நாங்கள் நடத்தவிருந்த ஈழ ஆதரவு மாநாட்டையும் கடைசி நேரத்தில் தடை விதித்து எங்கள் அனைவரையும் கைது செய்தனர். பிறகு உயர்நீதிமன்றத்தில் நாங்கள் முறையீடு செய்தோம். எங்கள் முறையீட்டை விசாரித்த நீதிநாயகம் பி. சண்முகம் அவர்கள் 16-7-2001 அன்று அளித்த தீர்ப்பில் காவல்துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
"நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட புலனாய்வுத் துறையின் அறிக்கையை படித்தபோது இந்த நாடு ஒரு சனநாயக நாடு இதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் முழுமையான சமமான உரிமைகள் உள்ளன என்பதை காவல்துறை சற்றும் உணராத தன்மையே உள்ளது என்பது தெரிகிறது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒருவருக்கு பிடிக்காத கருத்தை ஒரு குடிமகன் கூறுவதாலேயே அவர் அரசுக்கு எதிரி என்று கருத முடியாது.
பொது அமைதி மற்றும் மனித உயிர்களுக்கு பங்கம் ஏற்படுவதைத் தடுக்க காவல்துறை அதிகாரி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ஐ பயன்படுத்தியுள்ளார். இந்த வழக்கில் மேற்படி பிரிவைப் பயன்படுத்த எந்தவிதமான உடனடித் தேவையான முகாந்திரம் இல்லை. அரசியல் சட்டத்தின் 14, 19 மற்றும் 27ஆம் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை அற்பக் காரணத்திற்காகவும் ஆராயாமலும் உரிய காரணம் இல்லாமலும் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.'' இவ்வாறு கண்டித்த நீதிநாயகம் மீண்டும் மாநாட்டிற்கு அனுமதி அளிக்கும்படி காவல்துறைக்கு ஆணை பிறப்பித்தார்.
உயர்நீதிமன்றத்தின் கண்டனங்களுக்கு காவல்துறை மீண்டும் மீண்டும் ஆளானபோதிலும் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. 19-7-2002 அன்று நடைபெறவிருந்த உலகத் தமிழர் பேரமைப்பின் தொடக்க விழா மாநாட்டிற்கு தடைவிதித்தது. மீண்டும் உயர்நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி நாங்கள் முறையிட்டபோது நீதிநாயகம் வீ. கனகராஜ் அவர்கள் இருதரப்பு கருத்தையும் கேட்டறிந்த பிறகு காவல்துறைக்கு பின்வரும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு மாநாடு நடத்துவதற்கு அனுமதி அளித்து ஆணை பிறப்பித்தார்.
ஏறத்தாழ 20 க்கும் மேற்பட்ட முறை காவல்துறை எங்களின் கூட்டங்களுக்கோ மாநாடுகளுக்கோ, பேரணிகளுக்கோ தடைவிதித்தபோது உயர்நீதிமன்றம் தலையிட்டு எங்களின் சனநாயக உரிமைகளைப் பாதுகாத்திருக்கிறது. காவல்துறையைக் கடுமையாகச் சாடியிருக்கிறது. ஆனாலும், காவல்துறை தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.
காவல்துறைக்கு எதிராக நாங்கள் தொடுத்த 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் மூத்த வழக்கறிஞர் கே. சந்துரு அவர்கள் வாதாடி நீதிமன்றத்தின் மூலம் எங்களுக்கு சனநாயக உரிமைகள் வழங்கப்படச் செய்தார். (பிற்காலத்தில் அவரே உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் விளங்கினார்.)
ஒவ்வொரு முறையும் எங்கள் மாநாடுகளுக்கு அல்லது கூட்டங்களுக்கு கடைசி நேரத்தில் காவல்துறையால் தடைவிதிக்கப்படும் போதெல்லாம் நாங்கள் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டிகளில் ஏறி ஏறி நீதிகேட்க வேண்டியுள்ளது. எங்களின் ஒவ்வொரு முறையீட்டிலும் எங்களுக்கு நட்டஈடு அளிக்க வேண்டும் என வேண்டியிருக்கிறோம். என்ன காரணத்தினாலோ நீதிமன்றங்கள்
நட்டஈடு அளிப்பதைப் பற்றி எதுவும் கூறாமல் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்து எங்களுக்கு அனுமதி வழங்கியதோடு நிறுத்திக்கொள்கின்றன. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் எதிர்க் கட்சிகளை அல்லது எதிர்க் கருத்து கொண்டவர்களை ஒடுக்குவதற்காக காவல்துறை பயன்படுத்தப் படுகிறது. காவல்துறை சுதந்திரமாக செயல்படாத
துறையாகிவிட்டது. எனவே, இதுபோன்று சனநாயக உரிமைகளைத் தவறாகப் பறிக்கும் காவல்துறை அதிகாரிகளே இந்த நட்ட ஈட்டை வழங்க வேண்டும் அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றங்கள் ஆணை பிறப்பித்தால் ஒழிய காவல்துறையின் தவறானபோக்குத் தொடரும். ஆளுங்கட்சியினரின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியே தீரும்.
நன்றி : தினமணி 5-12-14
|