முன்னுரை
தமிழ்நாட்டில் இன்று நிலவும் பல பிரச்சனைகளில் ஒரு முக்கியப் பிரச்சனை பயிற்று மொழி. உலக அளவிலும், நாட்டு அளவிலும் அனைத்துக் கல்விக் குழுக்களும் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தாலும் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் தமிழ் வழி கற்பது குறைந்து வருகிறது; ஆங்கில வழி கற்பது நாளும் வளர்ந்து வருகிறது! 1974இல் 100-க்கு ஒருவரே ஆங்கில வழிகற்றவர்கள். இது 2006ல் பத்து பேர் என்றாகி, 2014இல் ஐம்பது பேரைத் தாண்டி விட்டது!
ஆங்கிலம் கற்கதொடங்குவது ஆறாவது வகுப்பில் என்று இருந்தது, மெள்ள மெள்ள மழலையர் பள்ளி நிலையிலேயே தொடங்கப்படுகிறது. ஏன் இந்த நிலை? என்பது சிந்திக்கத்தக்கது.
தமிழைப் பயிற்று மொழி ஆக்க எடுக்கப்பட்ட முயற்சிகள்
சுதந்திரப் போராட்டக் காலத்தில் நமது மொழி வழியில்தான் கல்வி கற்க வேண்டும் என்ற குரல் ஓங்கியது. 1937இல் தமிழ் நாட்டில் பள்ளிகளில் தமிழ் கல்வி மொழியாகியது. நாட்டில் ஆங்கில வழியில் கற்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனது. ஆனால் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழ் வழியில் பள்ளியில் படித்து முடித்து வெளியில் வந்த மாணவர்களுக்குக் கல்லூரியில் ஆங்கில வழியில் படிப்பது கடினமாக இருந்தது. ஆகவே, உயர் கல்வியிலும் தமிழில் கற்பிக்க நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை உருவானது. தமிழ் வழிக்கல்வியை வளர்க்க விரும்பிய பலர் தமிழில் கலைச் சொல்லாக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். மொழிபெயர்ப்புக் கலையையும் வளர்த்தனர். தமிழில் அறிவியல், தொழிநுட்ப நூல்கள் எழுதுவோர் எண்ணிக்கை வளர்ந்தது. அதன் பின்னர், தமிழில் ஆராய்ச்சி மாநாடுகள் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டன. அம்மாநாடுகளில் நுற்றுக்கணக்கானவர்கள் தமிழில், தமது ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி அளித்தனர்; விவாதித்தனர். ஆனால், அதே கால கட்டத்தில் பள்ளிகளில் தமிழ் வழி படிப்பது குறைந்தது!
ஆங்கிலமொழி ஆதிக்க வளர்ச்சி, விளைவுகள்
ஆங்கிலேயர்கள் தமது மொழி ஆதிக்கத்தை, அதன் வழி, தமது பண்பாட்டைப் பிறமொழி பேசும் மக்களிடையே எவ்வாறு வளர்த்தனர் என்பதைப் பார்ப்போம். முதலில் அந்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வது போல அவர்கள் நாட்டு ஆட்சியைக் கைப்பற்றினர். தம்மொழியான ஆங்கிலத்தை ஆட்சி மொழி ஆக்கினர். பிறகு, அம்மக்களுக்குப் புதிய கருத்துக்களைக் கற்பிப்பதற்கும், செம்மையான முறையில் நீதி வழங்குவதற்கும், நீதிமன்றத்திலும், கல்வியிலும் தமது மொழியைப் பயன்படுத்தினர். முக்கியமாக அந்நாட்டுத் தனவந்தர்கள், மேல் தட்டு மக்கள் ஆகியோரின் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பித்து அவர்களைத் தங்கள் ஆட்சி நீடிப்பதற்குப் பயன்படுத்தினர். முடிந்த அளவுக்குத் தமது சமயத்தையும் பரப்பி, இவை யாவற்றிலும் தமது மொழி, பண்பாடு ஆகியவை மேலானவை என்ற எண்ணம் உருவாக்குமாறு எழுதி வைத்தனர். இம்முறையை அவர்கள் தமது அண்டை நாடுகளான வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் 16-ஆம் நூற்றாண்டில் தொடங்கிச் செயல்படுத்தினர்.
இதே முறையைப் பின்பற்றி அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை உலகில் பல நாடுகளில் பரப்பினர். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர். அந்நாடுகள் பலவும் பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றன. எனினும் இன்றும் பாரத நாட்டு அரசும் தமிழ்நாட்டு அரசும், சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆன பின்னரும், ஆங்கிலத்தை விடாப்பிடியாக ஆட்சிமொழியாகப் பயன்படுத்துகின்றன. மேலும், அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆங்கிலத்தைக் கட்டாயமாகக் கற்கச் செய்கின்றன. அனைவருக்கும் கல்வித் திட்டத்தையும் "உலகமயமாக்கல்' என்ற போர்வையையும், பயன்படுத்திப் பிரித்தானிய தூதரகம், ஆங்கில ஆதிக்கத்தைப் பாரத நாட்டில் வளர்த்து வருகிறது. இத்தகைய போக்கு மற்ற காமன்வெல்த் நாடுகளிலும் காணப்படுகிறது. இத்தகைய போக்கினால் நமது மொழியையும், நமது மொழி இலக்கியங்களையும் நம் நாட்டுக் குழந்தைகளில் பலர் கற்பதில்லை. அதனால்- அவர்கள் நமது பண்பாட்டைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் பெரும்பாலும் பண்பாடற்றவர்களாக வளர்கின்றனர். பண்பாடற்ற நிலையில், நாட்டில் வன்முறை வளர்கிறது. மேலும் அவர்கள் வாழ்க்கையிலும் பண்பாட்டு முதிர்ச்சியைக் காணமுடிவதில்லை. இந்நிலை நீடித்தால், காலப்போக்கில் நமது வழித்தோன்றல்களின் வாழ்க்கை, விலங்கு வாழ்க்கை போல உணவைத் தேடுவதும், உண்பதும், உறங்குவதாகவும் முடியும். இந்நிலை வாராது, நம் சமுதாயதிற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவது நமது கடமை அல்லவா?
எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
ஆங்கில நாட்டுக்கு அண்டை நாடுகளான வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மக்கள் பல நூறு ஆண்டுகளாகத் தங்கள் மொழிகளைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடி வருகின்றனர். ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். அண்மையில், அந்நாட்டு மொழிகளை அவர்கள் பகுதிகளில் ஆட்சிமொழியாகப் பிரித்தானிய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
இதே போன்று தமிழ் நாட்டிலும், தமிழ் மாநில அரசைத் தமிழை முழுமையாக ஆட்சியில் பயன்படுத்த வற்புறுத்துவதுடன், மையக் கூட்டாட்சி அரசையும், தமிழ் நாட்டில் தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்தச் செய்ய வேண்டும்.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, தமிழ் நாட்டை ஆந்திரர்கள், மராத்தியர்கள், முசுலீம்கள் ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் யாவரும் ஆட்சியைத் தங்கள் மொழியில் நடத்தினாலும், மக்களுடன் மக்கள் மொழியில்தான் தொடர்பு கொண்டனர். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அமைந்த கூட்டாட்சி அரசுதான் ஆட்சி மொழியில்தான் தொடர்பு கொள்வேன் என்கிறது. இது மிகப்பெரிய அநியாயம் என்பதை நாம் உணர வேண்டும். தில்லியில் அமைந்த அரசு, கூட்டாட்சி அரசே அன்றி மத்திய அரசு அன்று என்பதை உணர்ந்தால், மக்களுடன் மட்டுமல்லாது மாநில அரசுகளுடனும் மாநில மொழியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற கருத்தில் உள்ள நியாயம் விளங்கும்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழக அரசுச் செயலகத்தில் ஒரு சில உயர் அலுவலர்களுக்கும், அவர்களது நேரடி உதவியாளர்களுக்கும் மட்டுமே தொடர்பு மொழியில் பயிற்சி தேவை. மற்றவர்கள் மாநில மொழியில் செயலாற்றுவதால் அவர்களுக்கு மாநில மொழி தவிர வேறு மொழி ஏதும் தெரிய வேண்டியதில்லை. கூட்டாட்சி அரசு தனது திட்டங்களின் விவரங்களை மக்கள் மொழியில் தருவது அதன் கடமை. ஆகவே, அந்த அரசு அலுவலகத்தில் மாநில மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கக் கூடியவர்கள் தேவைப்படும் அளவுக்கு பணியாற்ற வேண்டும்.
அனைத்துப் பணியாளர்களும் தங்கள் மாநில மொழியில் நல்ல அறிவு பெற்று இருப்பார்கள். அவர்களில் யாருக்குத் தொடர்பு மொழி தெரியாதோ அவர்களுக்கு மட்டுமே தொடர்பு மொழி பயிற்சி அளித்தால் போதுமானது. தேவைப்பட்டால் மூன்றாவது மொழியைக் கூட்டாட்சி அலுவலர்களுக்குக் கற்பிப்பது எளிது. 1998-ஆம் ஆண்டே, அப்போது இருந்த கூட்டாட்சி அரசு அனைத்து தேசிய மொழிகளும் கூட்டாட்சி அரசு அலுவலக மொழிகளாக ஆக்குவதாக வாக்குறுதி அளித்து அதைச் செயல்படுத்த ஒரு குழுவையும் அமைத்தது. அக்குழுவின் அறிக்கை என்னவாயிற்று? அதாவது இத் திட்டம் செயல்படுத்த முடியாததன்று. மக்கள் அரசைச் செயல்படுத்த வற்புறுத்த வேண்டும்.
ஆகவே இன்றைய அவசரத் தேவை தமிழ் நாட்டில் தமிழ் தனக்கு உரிய இடத்தை ஆட்சி, நீதிமன்றம், வழிபாடு ஆகியவற்றில் இதே வரிசையில் திரும்பவும் பெற வேண்டும். அதாவது முதலில், தமிழ் மாநிலத்தில் மாநில அரசு மட்டுமல்லாது கூட்டாட்சி அரசிலும் தமிழே ஆட்சி மொழியாக வேண்டும். பின்னர், அது தானாகவே நீதிமன்றத்திலும், வழிபாட்டிலும், கல்விக்கூடங்களிலும் தனக்கு உரிய இடத்தைப் பெறும். இதைச் செய்தால்தான் தமிழ் வாழும்; தமிழ் வழி கற்பதும் வளரும். நமது பண்பாடும் தொடரும்.
மேலும், தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழும் பல நாடுகளிலும் தமிழை ஒரு துணை ஆட்சி மொழியாக ஆக்குவதும் நமது தேவை. இந்தக் கருத்தும் புதிதன்று. வேல்ஸ் நாட்டு மொழியைப் பேசுபவர்கள் பிரித்தனில் 100-க்கு ஒருவர்தாம். எனினும் அது துணை ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த நாட்டில் எல்லாம் 100-க்கு ஒருவராவது தமிழ் பேசுபவராக உள்ளாரோ, அந்நாடுகளில் எல்லாம் தமிழைத் துணை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுகோள் விடுத்து வெற்றி பெற முயல வேண்டும். இதைச் செய்தால் தமிழ் அந்நாடுகளில் தொடர்ந்து வாழும், வளரும். நமது பண்பாடும் பேணப்படும். இதைச் செய்வது நமது கடமை. செய்வோமாக.
|