தமிழர் பண்பாட்டு விழாக்களில் ஒன்றாக உரக்கப் பேசப்படும் விழாவாக உள்ளது இந்த பூப்புனித நீராட்டு விழா. ஒரு பெண்ணின் முதல் மாத விடாயை ஊரையும் உறவையும் கூட்டி பெரும் விழாவாக நடத்தி அறிவிப்பதே இவ்விழாவின் முதன்மை நோக்கமாக உள்ளது. அத்துடன் இந்து மத அடிப்படையிலான தீட்டுக் கழித்தல் சடங்குகளும் இவ்விழாவில் முக்கிய இடம் பெறுகின்றன.
இவ்வாறு முதல் மாதவிடாயை பெரும் விழாவாக கொண்டாடுபவர்களும் சரி, அக்கொண்டாட்டத்திற்கு ஆளாக்கப்படும் பெண் குழந்தையும் சரி உண்மையில் மாதவிடாயின் அறிவியல் பின்னணியை அறிந்து வைத்துள்ளனரா என்றால், நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தகுதி மாதவிடாய் வந்த பெண்ணிற்கு வந்து விட்டது என்பதற்கு மேல் பெரியவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை. அக்குழந்தைக்கோ, நேற்று வரை குழந்தையாக உற்சாகமாக சுற்றிக் கொண்டிருந்த நாம் இனி “பெரிய மனுசியாக, இலட்சணமாக, அடக்க ஒடுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை கடந்து ஒன்றும் புரிய வைக்கப்படுவதில்லை. கூடுதலாக திரைப்படங்கள் ஒரு பெண்ணிற்கு முதல் மாதவிடாய் வந்து விட்டாலே அவளுக்கு காதலும் காதல் உணர்வுகளும் ஏற்பட்டு விடும் என்று கற்றுத் தருகின்றன. இவை அனைத்தும் எந்த அளவிற்கு அறிவியலுக்குப் புறம்பான அபத்தங்களோ அந்த அளவிற்கு நம் குழந்தையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை.
தன் உடலில் ஏற்படும் மாற்றங்களை கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு குழந்தையின் மேல் திணிக்கப்படும் வன்முறையாகவே இந்த பூப்புனித நீராட்டு விழாக்களும் அதை தொடர்ந்த மனப்பான்மையும் உள்ளன. இந்நிலையில் உண்மையில் மாதவிடாய் என்றால் என்ன என்பது பற்றிய அறிவியல் உண்மைகளை பார்க்கலாம்.
பெண்ணின் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி (கப சுரப்பி) ஒன்பது வகையான ஹார்மோன்களை சுரக்கிறது. அவை பல வித மனித செயல்பாடுகளுக்கு காரணமாக உள்ளன
வளர்ச்சி இரத்த அழுத்தம் கர்ப்பம் மற்றும் குழந்தைப்பேற்றின்போது, கருப்பையைச் சுருக்குவது போன்ற குழந்தைப்பேறு ஆகியவற்றின் சில கூறுகள் மார்பக பால் உற்பத்தி ஆண் மற்றும் பெண்களுடைய பாலியல் உறுப்பு செயல்பாடுகள் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு உணவை சக்தியாக மாற்றுதல் (வளர்சிதைமாற்றம்) உடலில் நீர் மற்றும் சவ்வூடுபரவல் ஒழுங்குப்படுத்தல் சிறுநீரகங்களில் நீர் உறிஞ்சப்படுவதைக் கட்டுப்படுத்தும் ஆஉஐ (ஆன்டிடையூரிடிக் ஹார்மோன்) சுரப்பு வெப்பநிலை ஒழுங்குப்படுத்தல்
பூப்பெய்தலுக்கான மாற்றங்கள் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் மட்டும் ஏற்படுவதில்லை. மூளையில் இருந்து GNHR என்ற ஹோர்மோன் சுரந்து அது மூளையின் அடிப்பகுதியில் உள்ள பிட்யூட்டரி (Pitutary) என்ற சுரப்பியை தூண்டி, அந்த சுரப்பியிலிருந்து சுரக்கும் FSH(Follicular Stimulating Hormone) என்கின்ற சினைவளர்ப்பு ஹோர்மோனை நேரடியாக இரத்தத்தினுள் சுரந்து விடுகிறது. இந்த ஹோர்மோன் சினைப்பையினுள் போய் அங்குள்ள திசுவைத் தூண்டியதும், உடனே அது, ஈஸ்டிரஜன் (Estrogen) என்கின்ற இன்னொரு ஹோர்மோனை உற்பத்தி செய்து விடுகிறது. இந்த ஈஸ்டிரஜன் கர்ப்பப்பையினுள்ளும், சினைப்பையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அதாவது மூளையில் ஒரு பகுதியிலிருந்து வரும் அந்த ஜி.என்.ஹெச்.ஆர். (GNHR) ஹோர்மோன்தான் அத்தனை நிகழ்வுகளுக்கும் மூலகாரணம். இது குழந்தையாக இருக்கும்போதே சுரக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது. முதலில் அவ்வப்போது குறிப்பாக இரவு மட்டுமே சுரக்கும். பின்பு இடைவெளி குறைந்து அளவு அதிகமாகி 90 நிமிடத்துக்கு ஒரு முறை உதிரத்தில் கலக்கும் அளவுக்கு சுரக்க ஆரம்பிக்கும். அப்போது சினைப்பை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அதன் போதுதான் முதல் உதிரப்போக்கு ஏற்படத் தொடங்குகிறது
கருப்பையின் இருபுறமும் சினைப்பைகள் உள்ளன. மாதம் தோறும் ஒரு கருமுட்டை சினைக்குழாயின் வழியே கருப்பையை வந்தடைகிறது. கருவாக உருவாவதற்காக அது காத்திருக்கிறது. அதன் பாதுகாப்பிற்காக கருப்பை தனது ஓரங்கள் முழுவதும் ஜவ்வு மெத்தை போன்ற ஒரு அமைப்பை உருவாக்குகிறது. 28 நாட்கள் காத்திருக்கும் கருமுட்டை, கருவாக உருவாகும் வாய்ப்புக் கிடைக்காவிடின் கரைந்து வெளியேறுகிறது. அப்படி அது வெளியேறும் போது, அதன் பாதுகாப்பிற்காக கருப்பையின் ஓரங்களில் உருவான ஜவ்வு மெத்தைப் போன்ற அமைப்பும் கிழிந்து வெளியேறுகிறது. அப்படி அது கிழியும் போதுதான் ரத்தப் போக்கும், வலியும் உண்டாகிறது. முழுமையாக அந்த ஜவ்வுப் பகுதி வெளியேறி, கருப்பை சுத்தமாகி, மற்றொரு கருமுட்டைக்காகக் காத்திருக்கத் தொடங்குகிறது.
அப்படி உடலிலிருந்து வெளியேறும் ரத்தமும், ஜவ்வுப் பகுதிகளும், கரு முட்டையும் தீங்கானவை அல்ல. கருப்பைக்குள் ஒரு குழந்தையை பாதுகாக்கும் தன்மை கொண்டவை. ஒரு பெண்ணுக்கு ரத்தம் சார்ந்த நோய் எதுவும் இருந்தால் ஒழிய அவை தீங்கானவை அல்ல.
அறிவியல் வளர்ச்சியற்ற ஆதி மனிதன் காலத்தில் பெண்ணின் உடலில் இருந்து இரத்தம் வெளியேறும் இந்த மாற்றமும், அவள் குழந்தையை பெற்றெடுப்பதும் ஆணை அச்சத்திற்குள்ளாக்கியது. அதனை பெண் மிக சாதாரணமாக கையாள்வது ஆணுக்கு பெண்ணின் மீது பிரமிப்பை ஏற்படுத்தியது. குழந்தை பிறப்பு என்பது பெண்ணின் இரகசியமாகவே இருந்தது. இதனால் பெண் வணங்கப்பட்டாள்.
குழந்தை பிறப்பிற்கு தானும் தேவை என்பதை ஆண் உணர்ந்த போது, தனக்கு குழந்தை பெற்றுக் கொடுக்கும் ஒரு கருவியாக பெண்ணை ஆண் அடக்க விழைந்தான்.
பெண்ணின் மீதான கரிசனமாக வெளிப்பட்டது அடக்குமுறை. மாதவிடாய் காலத்தில் பெண்ணுக்கு ஏற்படும் உடல், மன சோர்வு ஆணுக்கு தேவையான கருவியாக மாறிப் போனது. அதை காரணம் காட்டி பெண்ணை வலுவற்றவள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தினான்.
அதுவரை மாதவிடாய் ரத்தப் போக்கை தாங்கியவள் என்பதாலேயே வலுவானவளாக கருதப்பட்டப் பெண், தலைகீழ் மாற்றமாக அதன் காரணமாகவே வலுவற்றவளாக முன்னிறுத்தப்பட்டாள். பெண்ணும் அதை நம்பும் வண்ணம் தொடர்ச்சியான அழுத்தம் ஏற்படுத்தப்பட்டது.
இந்து மதம் ஒரு படி மேல் சென்று மாதவிடாய் ஏற்படுவதே தீட்டு என்றும் அசுத்தமானது என்றும் சொன்னது. அதில் இல்லாத கிருமிகளை, விஷத் தன்மையை இருப்பதாகச் சொன்னது. ஒரு குழந்தையை பாதுகாக்க உருவாக்கப்பட்ட வற்றை விஷத்தன்மை உடையதாக சொல்வது எத்தனை அபத்தமானது?
உலகின் பல பகுதிகளிலும் முதல் மாதவிடாயைக் கொண்டாடும் வழக்கம் இருந்திருக்கிறது. அது அடிப்படையில் தாய்மையைக் கொண்டாடும் பண்பிலிருந்து எழுந்ததாக உள்ளது. ஆனால் இங்கு இந்தக் கொண்டாட்டங்களுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது.
முதல் மாதவிடாயை ஊரைக் கூட்டி அறிவித்துக் கொண்டாடுவதற்கு வரலாற்று ரீதியாக இரண்டு காரணங்கள் உள்ளன. அக்காலத்தில் பெண்ணுக்கு முதல் மாதவிடாய் ஏற்படும் முன்னரே, அதாவது ஒரு பெண், குழந்தை பிறப்பிற்கு தயாராவதற்கு முன்பே மணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்தது. அப்படி மணம் செய்தாலும் அப்பெண் உரிய பருவம் அடையும் வரை பெற்றோர் வீட்டிலேயேதான் இருப்பாள். இந்த நிலையில் முதல் மாதவிடாய் ஏற்பட்ட உடன், ஊரைக் கூட்டி அறிவித்து அப்பெண்ணை கணவன் வீட்டிற்கு அனுப்பும் வழக்கம் இருந்தது. இதற்காக இந்தக் கொண்டாட்டம் ஏற்படுத்தப்பட்டது
அதற்கு அடுத்த காலத்தில், பெண்ணிற்கு முதல் மாதவிடாய் வந்து விட்டாலே உடனடியாக மணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்தது. அண்மைக் காலப் படங்களில் கூட "நான் சடங்காகி இத்தனை வருசமாகிப் போச்சு. இன்னமும் கல்யாணம் ஆகலை' என்ற வசனங்களைக் கேட்டிருக்கலாம். இந்த வழக்கத்தின் காரணமாக, பெண் உரிய பருவம் அடைந்து விட்டதை உலகுக்கு அறிவிப்பதன் மூலம், "அவளை மணம் முடிக்க விரும்புபவர்கள் அணுகலாம்' என்ற அறிவிப்பே அதில் அடங்கியுள்ளது. அதாவது ஏலத்தில் ஒரு பொருளை விற்பதற்கு முன், அதனை மேடையில் காட்டி, அதன் பெருமைகளை அறிவிப்பது போல, ஒரு பெண் மணமாவதற்கு தயாராகி விட்டாள் என்று அறிவிக்க, அவரை அலங்கரித்து மேடையேற்றி அனைவர் முன்பும் காட்டுவதே பூப்புனித நீராட்டு விழா சடங்காகும்.
தீட்டுக் கழிக்கிறோம், மஞ்சள் நீராட்டி பெண்ணை சுத்தம் செய்கிறோம் என்பதெல்லாம், மாத விடாயைத் தீட்டாக, அசுத்தமானதாக ஒதுக்கி, பெண்ணை அசுத்தமானவளாக குறுக்கி, அடக்கும் ஆணாதிக்க மனவியலின் வெளிப்பாடே ஆகும்.
மேற்கண்ட இரு தேவைகளும் இன்று இல்லாத நிலையில் ஒரு பெண் குழந்தைக்கு ஊரைக் கூட்டி இத்தகைய சடங்கை நடத்துவது என்பது, அவரை ஏலத்திற்கான பொருளாக்கி நாமே நம் குழந்தையை அவமானப்படுத்துவதாகும்.
ஊரைக் கூட்டிச் சொல்லாவிடினும், இதை ஒரு செய்தியாக வெளியே சொல்வதே, என் மகள் திருமணத்திற்கு தயாராகிவிட்டாள் என்ற செய்தியைப் பரப்புவதே ஆகும். 10, "12 வயது சிறுமியைப் பற்றி இப்படியான செய்தியை வெளியே சொல்வது எத்தனை மோசமானது? ஆபத்தானது? மனதளவில் இன்னமும் குழந்தையாகவே இருக்கும் அவளை, பருவப் பெண்ணாக சுற்றியிருப்பவர்கள் பார்ப்பதற்கு நாமே தூண்டுவது போலாகாதா? இன்று குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகமாகியுள்ள சூழலில் நாமே நம் குழந்தையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாமா?
இதற்கு மாற்றாக, குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே எது சரியான தொடுதல், எது தவறான தொடுதல், நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை எப்படி கையாள்வது போன்றவற்றை சொல்லிக் கொடுத்து வளர்ப்பதன் மூலமும் தற்காப்புக் கலைகள், தன்னம்பிக்கை, துணிச்சலை ஊட்டி வளர்ப்பதன் மூலமுமே ஒரு பெண் சமூக இழிவுகளிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும். அதை விட்டு, நம் மகளை நாமே சமூகத்தின் இழிவுகளுக்கு பலியாக்கும் வண்ணம் அவள் "பூப்படைந்ததை' அறிவிப்பது அப்பெண்ணிற்கு நாம் செய்யும் துரோகம் ஆகாதா?
அப்படி நம் குழந்தையைக் கொண்டாட ஒரு விழா எடுக்க வேண்டும் என நினைத்தால், அக்குழந்தைக்கு ஏதேனும் கலைகளை சொல்லித்தாருங்கள். அதில் அவர் சிறப்புப் பெறுவதை விழாவாக எடுங்கள். அல்லது நன்றாக படிக்க வைத்து, அவர் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேறினால் அதை விழாவாக எடுங்கள். அவ்விழாவில் நீங்கள் பூப்புனித நீராட்டு விழாவிற்கு அழைக்க நினைத்தவர்கள் அனைவரையும் அழைத்துச் சிறப்புச் செய்யுங்கள். அதைவிட்டு நம் குழந்தையை நாமே அவமானப்படுத்துவது பகுத்தறிவுக்கு முரணானது இல்லையா? - நன்றி : காட்டாறு மாத இதழ்
|