"அக்டோபசு படர்வதற்கு பல கைகள் இருப்பதைப் போல வெறுப்பு அரசியலில் அவதூறான பேச்சு, கெட்ட எண்ணத்துடன் கூறிய எழுத்து, எதிரணியினர் மீது வழக்கு தொடர்தல், கொலை செய்தல், தாக்குதல் போன்ற பல்வேறு கெட்ட விழுதுகளும் படர்ந்துள்ளன.
ஒரு அரசியல் கட்சி என்பது எதிர்க்கட்சியாகத்தான் இருக்கமுடியுமே தவிர, பகைகொண்ட எதிரிக்கட்சியாக இருக்கக்கூடாது. கட்சிகளுக்கிடையே வளர்ந்துவரும் பகையின் விளைவாக மக்கள் நலன்களை மறந்துவிடுகிறார்கள்.
தேர்தலில் வெற்றிபெற்று ஒருவர் முதலமைச்சர் ஆக பதவியேற்கும்போது பதவியை இழந்த முன்னாள் முதலமைச்சர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை. நாகரீகமான அரசியல், வன்முறை பகைமை ஆரோக்கியமற்ற அரசியலாக மாற்றப்பட்டுவிட்டது. ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதே முக்கிய நோக்கமாகிவிட்டது. இதனால் பாதிக்கப்படுவது ஜனநாயகமும் அப்பாவி மக்களும்தான். பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாரிசு அடிப்படையிலேயே வருகிறார்கள். தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களது வாரிசுகள்தான் அடுத்தத் தலைவர்களாக வருகின்றனர்.
சனநாயக வழியில் ஆரோக்கியமான, நாகரீகமான அரசியலை மேற்கொள்ள தங்களின் தொண்டர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிவுரைகளை வழங்கி வழிநடத்த வேண்டும்.
தலைவர்கள் சுயகட்டுப்பாடு, மாண்பு, நாகரீகம் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்த வேண்டும். தலைவர்கள் இவ்வாறு செயல்படவில்லை என்றால் அசிங்கமான அரசியல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. அவதூறாக பேசும் அரசியல்வாதிகளை அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளிலிருந்து நீக்க வேண்டும்'' என உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் வேதனையுடன் தனது தீர்ப்புரை ஒன்றில் கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலரின் செயற்பாடு அவர் உள்ளத்தில் எத்தகைய வேதனையை ஏற்படுத்திவிட்டது என்பதை இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டியிருக்கிறது."
தி.மு.க. பொருளாளரான ஸ்டாலின் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகப் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் சிறிது நேரம் தங்கிச் சென்றது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது' எனவே அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த வழக்கில் தீர்ப்பளிக்கும்போதே மேற்கண்டவாறு வேதனை வார்த்தைகளை நீதிநாயகம் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது தீர்ப்புரையில் "கடந்த கால அரசியல் நாகரீகம் என்பது வரலாறுபோல் காட்சி தருகிறது'' என்று குறிப்பிட்டிருப்பது முக்கியமானதாகும். தமிழகத்தில் கடந்த தலைமுறை தலைவர்களான ராஜாஜி, பெரியார், திரு.வி.க., காமராசர், ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, அண்ணா போன்ற தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் எத்தகைய நாகரீகமான அரசியலை அவர்கள் நடத்தினார்கள் என்பதைத்தான் நீதிநாயகம் கிருபாகரன் நினைவுபடுத்தியிருக்கிறார்.
தங்களுக்குள் எத்தகைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவர்மீது மற்றொருவர் வைத்திருந்த மதிப்பு, நட்பு ஆகியவற்றை ஒருபோதும் மறக்கவில்லை. இராஜாஜியும் பெரியாரும் காலமெல்லாம் கருத்து மோதலில் ஈடுபட்டிருந்தபோதிலும் ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருந்த அன்பு என்பது அளப்பரியது. இராஜாஜி அவர்கள் காலமானபோது அவருக்கு இறுதி மரியாதை செலுத்த நடமாட முடியாத நிலைமையில் தள்ளுவண்டியில் வந்த பெரியார் அவர்கள் கதறிக்கதறி அழுதுகொண்டே வந்ததை நான் பார்த்து வியந்து மனம் உருகி இருக்கிறேன்.
அதைப்போலவே இராஜாஜி அவர்களுடன் காமராசருக்கு இருந்த கருத்து முரண்பாடு அனைவரும் அறிந்ததே. தான் வளர்த்த காங்கிரசை ஒழித்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு தனது முதிய வயதில் களத்தில் இறங்கிய ராஜாஜி, காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்திற்கு வந்தபோது அவர் வருவதற்கு முன்னாலேயே சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்து அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டுச் சென்றார். "நானே வந்து உங்களிடம் ஆசிபெற்றிருப்பேனே! நீங்கள் வரவேண்டுமா?'' என காமராசர் நெஞ்சம் நெகிழ்ந்தார்.
பெரியார் அவர்களிடம் கருத்து வேறுபாடு கொண்டு அண்ணா அவர்கள் பிரிந்து தி.மு.க. அமைத்தபோது பெரியார் மிகக்கடுமையாக அவரைச் சாடினார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராகக் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் பெரியார். ஆனாலும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அண்ணா அவர்கள் நேரடியாக திருச்சிக்கு வந்து பெரியாரைக் கண்டு அவரது வாழ்த்தைப் பெறத் தவறவில்லை. பெரியாரும் உள்ளம் நெகிழ்ந்தும் மனமுவந்தும் அவரை வாழ்த்தினார்.
1952ஆம் ஆண்டு ராஜாஜி முதலமைச்சரானபோது சட்டமன்றத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி வலுவான எதிர்க்கட்சியாக இருந்தது. "எனது முதலாவது எதிரி கம்யூனிஸ்டுகளே'' என சட்டமன்றத்திலேயே அறைகூவல் விடுவதற்கு ராஜாஜி தயங்கவில்லை. ஆனால், முல்லைப்பெரியாறு அணை நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்க கேரள முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளையைச் சந்தித்து அனுமதி பெறுவதற்காக ராஜாஜி யாரைத் தேர்ந்தெடுத்தார் தெரியுமா? யாரை முதல் எதிரி என்று கூறினாரோ அந்தக் கட்சியின் தலைவரான பி. இராமமூர்த்தி அவர்களையே ஆகும்.
அவரும் சென்று அந்தப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்க வழிசெய்தார். அதே சட்டமன்றத்தில் கம்யூனிஸ்டுக் கட்சியின் துணைத் தலைவரான ஜீவானந்தம் அவர்கள் தனது தொகுதியில் உள்ள குறைகளையெல்லாம் சுட்டிக்காட்டிப் பேசியபோது ராஜாஜி அவர்கள் குறுக்கிட்டு "ஜீவா சர்வதேசியம் பேசுபவர். கேவலம் ஒரு தொகுதியைக் குறித்துக் கவலைப்படுகிறாரே' என கிண்டல் செய்தார். ஜீவா உடனடியாக "உண்மைதான். நாங்கள் சர்வதேசியவாதிகள்தான். ஆனால் ஒரு தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அவைக்கு வந்திருக்கிறேன். எனவே அந்த மக்களின் குறைகளைக் கூறவேண்டியது எனது கடமை. ஆனால்,
மாண்புமிகு முதலமைச்சருக்கு அந்தக் கடமை கிடையாது. எந்தத் தொகுதியிலிருந்தும் மக்களால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆளுநரால் நியமிக்கப்பட்டு வந்திருக்கிறார். எனவே ஆளுநருக்கு மட்டும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்.' என்று கூறியபோது ராஜாஜி உள்பட சபையே கலகலத்தது.
1954ஆம் ஆண்டில் காமராசர் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபோது சட்டமன்றத்தில் உறுப்பினராக இருக்கவில்லை. எனவே குடியேற்றம் தொகுதியில் அவர் போட்டியிட்டார். அவரை தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தபோது, கம்யூனிஸ்டுக் கட்சி மட்டும் எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியது. காமராசர் வெற்றிபெற்றார். அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் நீண்டகால சிறை தண்டனை பெற்றிருந்த கம்யூனிஸ்டுத் தலைவர்களான பாலதண்டாயுதம், ப. மாணிக்கம், ஆர். நல்லகண்ணு உள்பட பலரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
பி.இராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் காமராசருடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்கள். ஆனால், அரசியலில் அவரை மிகக்கடுமையாக விமர்சிக்க அவர்கள் தயங்கியதில்லை. தாம்பரத்தில் குடிசை வீடு ஒன்றில் ஜீவா வாழ்ந்தபோது, முதலமைச்சராக இருந்த காமராசர் அவர் வீட்டிற்கே சென்று அவர் வாழ்ந்த நிலையைப் பார்த்து நெக்குருகிய வரலாறு அனைவரும் அறிந்தது. காமராசருக்கும் இந்திராகாந்தி அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தபோது இருவருக்குமிடையே தூது சென்று இருவரையும் ஒன்றுபடுத்த முயற்சிகளை மேற்கொண்டவர் பி.இராமமூர்த்தி என்பதை நான் நேரடியாகவே அறிந்தவன். காங்கிரஸ் கட்சி பிளவுபட்டால் அது தனது கட்சிக்குத்தானே ஆதாயம் என பி. இராமமூர்த்தி நினைக்கவில்லை. மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பி. இராமமூர்த்தி தங்களுக்கிடையே சமரசம் ஏற்படுத்த முயன்றபோது அதை சந்தேகக் கண்கொண்டு காமராசரும், இந்திராவும் பார்க்கவில்லை. அவர் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
தமிழ்நாட்டுப் பிரச்சினைகளிலும் அந்தத் தலைவர்கள் ஒன்றுபட்டு நின்றார்கள். ஆந்திர மாநிலம் பிரிந்தபோது, சென்னை நகரின்மீது ஆந்திரர்கள் உரிமை கொண்டாடினார்கள். அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமானது என்பதில் உறுதியாக இருந்தார். இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரமாக சென்னை இருக்கட்டும் என நேரு யோசனை கூறியபோது ராஜாஜி அதை ஏற்க மறுத்து "இதுதான் உங்கள் முடிவு என்று சொன்னால் இந்தக் கடிதத்தையே எனது பதவி விலகல் கடிதமாக வைத்துக்கொள்ளலாம்'' என ராஜாஜி நேருவிற்கு எழுதினார். அவரின் நிலையை பெரியார், காமராசர், அண்ணா, ம.பொ.சி. ஆகியோர் ஆதரித்து உறுதியாக நின்றார்கள். இதன் விளைவாக சென்னை நகரம் தமிழர்களுக்குச் சொந்தமாயிற்று.
அதைப்போலவே தட்சிணப் பிரதேசம் அமைக்க பிரதமர் நேரு முயற்சி செய்தபோது முதலமைச்சர் காமராசர் அதை ஏற்கவில்லை. அவருடைய நிலையை பெரியார், அண்ணா, ம.பொ.சி. போன்றவர்கள் ஆதரித்து நின்று தட்சிணப் பிரதேசத் திட்டத்தைத் தகர்த்தார்கள். 1967ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் காமராசர் தோற்றபோது அண்ணா மிகவருந்தினார். அதை பகிரங்கமாக வெளியிட அவர் தவறவில்லை.
அதைப்போலவே அண்ணா அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அவரைச் சென்று பார்த்த காமராசர் மனம் கலங்கி, உடனடியாக மருத்துவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து முதல்வரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என தி.மு.க. தலைவர்களிடம் அன்புடன் கடிந்து கொண்டார்.
சென்னையில் 2ஆம் உலகத் தமிழர் மாநாடு நடைபெற்றபோது இராஜாஜி, பெரியார், ஜீவா, ம.பொ.சி. உள்ளிட்ட தலைவர்களை முதலமைச்சராக இருந்த அண்ணவே நேரில் சென்று அழைத்தார். இந்த உயர்ந்த பண்பாடு பிற்காலத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடுகளில் காணப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் தி.மு.க. தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது அ.தி.மு.க. கலந்துகொள்ளவில்லை.
தமிழக சட்டமன்றத்திலும் மக்கள் பிரச்சினைகளைக் குறித்த தரமான விவாதங்கள் நடைபெறுவதற்குப் பதில் தரங்கெட்ட வகையிலும் தங்களது பகைமையை வெளிக்காட்டும் வகையிலும் தி.மு.க. - அ.தி.மு.க. மோதல்களமாக மாற்றப்பட்டுவிட்டது. இருகட்சித் தலைவர்களும் முதல்வராக இருந்தால் மட்டுமே சட்டசபைக்குச் செல்வது, இல்லாவிட்டால் செல்வதில்லை என்ற சனநாயக விரோதப் போக்கை கடைப்பிடிக்கிறார்கள். சட்டமன்றத்திற்கு செல்ல விரும்பாவிட்டால் பதவியை விட்டு விலகி வேறு ஒருவர் அந்தத் தொகுதி மக்களின் பிரதிநிதியாக செல்வதற்கு வழிவிடவேண்டுமே "தவிர பதவியை விடமாட்டேன். சட்டமன்றத்திற்குப் போகமாட்டேன்' என்று சொல்வது சனநாயகத்தை மதிக்காதப்போக்காகும்.
சட்டமன்றத்திற்கு உள்ளே மட்டும் அல்ல, வெளியேயும் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று எதிரிக்கட்சியாக நடந்துகொள்கின்றன. இதன் விளைவாக இந்த தீய அரசியல் போக்கு மற்ற கட்சிகளுக்கும் பரவுகிறது.
தமிழ்நாட்டு அரசியல் தலைமை இந்திய அரசியலுக்கு வழிகாட்டிய இருந்த நிலை போய்விட்டது. இன்று தமிழக அரசியலைப் பார்த்து இந்தியாவின் பிற மாநில அரசியல்வாதிகள் எள்ளி நகையாடும் போக்கு பெருகிவிட்டது. இவற்றைக் கண்டு மனம் பொறுக்காத நிலையில்தான் உயர்நீதிமன்றத்தில் நீதிநாயகம் கிருபாகரன் தனது வேதனையை வடித்திருக்கிறார்.
- நன்றி : தினமணி
|