வள்ளலார் வாழ்ந்த வீடு பொதுமையாகட்டும் - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015 12:03

"இற்றைக்கு ஒரு நூறாண்டுக்கு முன்னர் நாட்டில் இருள் படரலாயிற்று. அவ்விருள் கடிய எழுந்த ஞாயிறு நம் இராமலிங்க சுவாமிகள்'' என்று தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் கூறினார்.

வள்ளலார் பிறந்த காலத்தில் தமிழகத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி வலுவாக காலூன்றி இருந்தது. அவர் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில்தான் அந்த ஆட்சிக்கு எதிராக 1857ஆம் ஆண்டு முதல் சுதந்திரப்போர் வெடித்தது. அதன் விளைவாக பிரிட்டிஷ் அரசு நேரடியாக இந்தியாவின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

குறுநில மன்னர்களின் ஆட்சிக்கும் ஆங்கிலேயரின் ஆட்சிக்கும் மிகுந்த வேறுபாடு இல்லை. மக்களிடம் விழிப்புணர்வும் இல்லை. அவர்களுக்கிருந்த பொருளாதார, சமுதாய, சமய சிக்கல்கள் ஆகியவற்றுக்கிடையே சிக்கித் தவித்தனர்.

நான்கு வருணங்கள் பேசப்பட்டன. எண்ணற்ற சாதிகள் மக்களைக் கூறுபோட்டுக்கொண்டிருந்தன. சமுதாயம் புரையோடிப்போய் கிடந்தது. தீண்டாமை என்னும் தீமை புற்றுநோயாக வளர்ந்திருந்தது. இவற்றைப் பற்றிச் சிந்திப்பதும் பேசுவதுமே பாவம் என்ற மனப்பான்மை மக்களிடம் குடிகொண்டிருந்தது.

இத்தகைய சூழலில்தான் வள்ளலார் தோன்றினார். அக்காலத்திய சமுதாய சூழல் மனிதனை முழுமைபெறத் தடையாக இருந்ததை உணர்ந்த அவர். ஆன்ம நேய ஒருமைப்பாட்டையும் சுத்த சன்மார்க்க நெறியையும் மக்களிடையே பரப்புவதற்கு முயன்றார். சாதிப் பிரிவுகளை எதிர்த்துப் போராடினார்.

"சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழ கலவே''
- என்றும்

"நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே.''

எனப் பாடினார். வள்ளலாரின் சாதி ஒழிப்புக் கருத்து அக்காலத்தில் மிகப்புரட்சிகரமானது எனக் கருதப்பட்டது. மனித குலத்தின் ஒற்றுமைக்குத் தடையாக உள்ள சாதி, குல, வர்ண பேதங்களை அடியோடு ஒழிக்கப்பாடுபட்ட முதல் சமூக சீர்த்திருத்தவாதியாக தமிழகத்தில் திகழ்ந்தவர் வள்ளலாரே. எம்மதமும் சம்மதமே என்னும் உயரிய தத்துவத்தை முதல் முதலில் போதித்தவர் அவரே.

தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாத காலத்தில் அவர்கள் மட்டுமல்ல சகல மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றுகூடி வழிபடக்கூடிய சத்தியஞான சபைக் கோவிலை அமைத்தவர் வள்ளலார் ஆவார்.

வள்ளலார் காலத்தில் வடஇந்தியாவிலும் சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. வங்காளத்தில் இராசாராம் மோகன்ராய் தோற்றுவித்த பிரம்ம சமாஜத்தின் மூலமும், பஞ்சாபில் தயானந்த சரசுவதி தோற்றுவித்த ஆரிய சமாஜத்தின் மூலமும் இந்து சமயத்தில் மாறுதல்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதைப்போல இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான விவேகாநந்தர் இந்து சமயத்திற்குப் புதிய வடிவைக் கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டார்.

வடக்கே மேற்கண்ட மூவரும் சமய சீர்த்திருத்தப் பணிகளை மேற்கொண்டபோது அங்கு நகர்ப்புறங்களில் ஆங்கிலக் கல்வியின் மூலம் ஒருவகையான விழிப்புணர்வு உருவாகி இருந்தது. எனவே அவர்கள் வேலை சுலபமாயிற்று, ஆனால் வள்ளலார் தமது இயக்கத்தை வடலூர் என்ற சிற்றூரை மையமாகக் கொண்டு, தமிழ்க் கவிதையை கருவியாக ஏற்று ஆங்கிலம் அறியாத பாமர மக்களிடம் தனது கருத்துக்களை பரவச் செய்தார்.

வள்ளலார் காலத்தில் தமிழகமும் இந்தியாவும் அதற்கு முன்பு எப்போதும் கண்டிராத வகையில் வறுமைத் துன்பத்தில் வாடின. 19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் 7 கடுமையான பஞ்சங்கள் ஏற்பட்டன. இதில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே நூற்றாண்டின் பிற்பகுதியில் 24 பஞ்சங்கள் தோன்றின. இதில் கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் மாண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

"பசியினால் இளைத்து வீடுதோறும் இரந்தும், பசி அறாதயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்'' என்று வள்ளலார் மனம்வாடிப் பாடினார். இதன் விளைவாகச் சத்திய தர்மசாலையைத் தோற்றுவித்து மக்களின் பசிப்பிணியைப் போக்கும் பணியில் ஈடுபட்டார். அவருக்கு முன்பு தோன்றிய எந்த சமய ஞானியும் இத்தகைய தொண்டில் ஈடுபடவில்லை.

வள்ளலார் காலத்தில் வடலூரில் நான்கு நிறுவனங்களை நிறுவினார். அவை இன்றும் நடைபெற்று வருகின்றன.

1. சன்மார்க்க சங்கம்
2. சத்திய தர்மசாலை
3. சத்திய ஞான சபை
4. சித்தி வளாகம்

முதன் மூன்றும் வடலூரிலும் நான்காவது அருகில் உள்ள மேட்டுக்குப்பத்திலும் அமைந்துள்ளன.

தமிழகத்தில் வள்ளலாருக்கு முன்பிருந்த சமய ஞானிகள் மடங்களையே நிறுவினார்கள். ஆனால், காவியாடை தரிக்காமல் வெண்மை நிற ஆடை தரித்த வள்ளலார் மடம் நிறுவாமல் சங்கம் நிறுவினார். மடம் என்பது துறவிகளுக்கு மட்டுமே உரியது. அதிலும் ஆண்களுக்கு மட்டுமே அங்கு இடமுண்டு. ஆனால், சங்கம் என்பது ஆடவருக்கும் பெண்டிருக்கும் உரியது. பக்குவம் பெற்றவர்கள், பெறாதவர்கள் ஆகிய அனைவருக்கும் சங்கம் உரியது. அனைவருக்கும் இடம் தந்து அவர்களைத் திருத்த வேண்டும் என்பதற்காகத்தான் மடம் என்று பெயரிடாமல் சங்கம் என்று வள்ளலார் பெயரிட்டார்.

19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தில் மறுமலர்ச்சி பிறந்தது. ஆனால், ஆங்கிலமோகம் ஒருபக்கம் படர்ந்தது. வள்ளலார் இனிய, எளிய, அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய தமிழில் தனது நூல்களை எழுதினார். அவர் எழுதிய திருஅருட்பா 19ஆம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற படைப்பாகத் திகழ்ந்தது, திகழ்கிறது.

ஆனாலும் அவரது அருட்பாவை மருட்பா என கூறி இகழ்ந்துரைக்க சிலர் முன்வந்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நா. கதிரைவேற் பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோர் இக்கிளர்ச்சியில் முன் நின்றனர். இருசாராரும் நீதிமன்றம் வரை சென்றனர். நீதிமன்றத்திற்கு வள்ளலார் வந்தபோது ஆறுமுகநாவலர் உட்பட அவர்களுடன் வந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தியதைக் கண்ட நீதிபதி வழக்கைத் தள்ளிவிட்டதாக ஒரு செய்தி உண்டு. வள்ளலார் மறைவுக்குப் பின்னும் இந்த வாதம் தொடர்ந்தது. நா. கதிரைவேற்பிள்ளை அருட்பாவிற்கு எதிராக தனது பரப்புரையை நிறுத்தவில்லை. ஆனால் இதுகுறித்து மறைமலையடிகளுக்கும் கதிரைவேற் பிள்ளைக்கும் சென்னையில் 20-09-1903இல் வாதப்போர் நிகழ்ந்தது.

திருஅருட்பா குறித்து மறைமலையடிகள் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. தலைமை தாங்கிய நீதிபதி அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார். தொடர்ந்து இரண்டு மூன்று இடங்களில் நடந்த வாதப்போரிலும் திருவருட்பா என்ற பெயரே வென்றது.

கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்குப் பிறகு அவரைவிட அதிகமான பாடல்களைப் பாடிய பெருமைக்குரியவர் வள்ளலார் ஆவார். இவ்வளவு பாடல்களை அவர் எழுதிக் குவித்திருந்தாலும் மனிதர் எவரையும் மறந்தும் பாடாத மாண்பு அவருக்கே உரியதாகும். அவர் தொடங்கிய பல அமைப்புகளுக்கும் வாரிவழங்கியவர்களைக் குறித்துக்கூட அவர் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கடல் கடந்த நாடுகளில் வாழும் தமிழரிடையே வள்ளலாரின் கொள்கைகள் பரவிநிற்கின்றன. தென்னாப்பிரிக்காவில் வாழும் தமிழர்கள் வள்ளலாரை முழுமையாகப் பின்பற்றுவதை நான் நேரில் கண்டேன். வள்ளலார் கூறியதற்கிணங்க இறைவனை ஜோதிவடிவாக வழிபடக் கோயில்களைக் கட்டி வள்ளலார் படங்களை வைத்து திருவருட்பா பாடி அவர்கள் அனைத்தையும் செய்கிறார்கள். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் வள்ளலார் வழிபாடு பரவியுள்ளது.

இராமகிருஷ்ணருக்கு விவேகாநந்தர் கிடைத்ததைப் போல வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவருக்கு விவேகாநந்தரைப்போல ஒரு சீடர் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் இராமகிருஷ்ண மிஷன் போன்று வள்ளலாரின் பெயராலும் ஒரு அமைப்பு உருவாகியிருக்கும். ஆனாலும் அருட்செல்வர் நா. மகாலிங்கம், இராமலிங்கம் புகழ் பரப்பும் தொண்டாற்றினார். தற்போது ஊரனடிகள் போன்றவர்கள் வள்ளலாரின் கொள்கைகளைப் பரப்பிவருகிறார்கள்.

51 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த வள்ளலார் அதில் 33 ஆண்டுகள் சென்னையில் ஏழு கிணறு பகுதியில் உள்ள 31, வீராச்சாமி தெரு இல்லத்தில் வாழ்ந்தார். இந்த இடத்தில் உள்ள சிறு அறையில்தான் அவர் திருவருட்பாவில் 5 அருட்பாக்களை எழுதினார். ஆன்மநேயமும் பெற்றார். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்று கூறிய வள்ளலாரைப் பெருமைப்படுத்துகிற வகையிலும் அவரது நினைவை மக்கள் போற்றும் வகையிலும் இந்த இல்லத்தை நினைவிடமாக ஆக்குவது என தமிழக அரசு 4-4-2003இல் முடிவுசெய்தது. இதை அப்போதைய அமைச்சர் செ. செம்மலை அவர்கள் சட்டமன்றத்திலேயே அறிவித்தார். ஆனால் 12 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த இல்லம் இன்னமும் நினைவிடமாக ஆக்கப்படவில்லை.

சில நாட்களுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் வாழ்ந்த இல்லம் இடிக்கப்பட்டதைப்போன்ற நிலை வள்ளலார் வாழ்ந்த இல்லத்திற்கும் வந்துவிடக்கூடாது. வள்ளலார் வாழ்ந்த இல்லம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு உரியது. உலகமெல்லாம் வாழ்கிற தமிழர்கள் யாராக இருந்தாலும் சமய வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் வந்து வள்ளலாரின் நினைவைப் போற்றுகிற இல்லமாக இது இருக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக தனது வாக்கினை நிறைவேற்றும் வகையில் இந்த இல்லத்தை வள்ளலார் இல்லமாக மாற்ற வேண்டும் என்பதே கோடானுகோடி தமிழர்களின் விருப்பமாகும்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.