"இலக்கிய வழி வரலாறு என்பது இலக்கியத்தின் வரலாற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பது நிச்சயமாகிறது. ஆயினும் இக்கட்டத்தில் முக்கியமான ஒரு உண்மையினை வலியுறுத்தல் வேண்டும். நாம் இங்கு எடுத்துக்கூறும் இலக்கிய வரலாற்றினை அறிவதற்கு அத்திவாரமாக இலக்கியத்தின் வரலாறு எழுதப்பட்டிருத்தல் வேண்டும். இலக்கியத்தின் வரலாற்றினை ஐயந்திரிபற அறிந்துகொள்ளாமல் இலக்கிய வழி வரலாற்றை அறிந்துகொள்ள முடியாது. இலக்கியத்தின் வரலாற்றையே இலக்கிய வழி வரலாறாக மயங்கிக்கொள்ளும் நிலையே இலக்கியத்தின் வரலாறு எழுதப்படாமை காரணமாக ஏற்படும் ஒரு நிலை ஆகும்' என பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் கூறியுள்ளார்.
இலக்கிய வரலாறு என்பது இலக்கியங்கள் படைக்கப்பட்ட காலம், ஆசிரியர், பொருள் ஆகியவற்றைப் பற்றிக் கூறுவதாகும். ஆனால், இலக்கியத்தின் வழி வரலாறு என்பது வேறு. ஒரு நாட்டின் வரலாற்றை அதன் இலக்கியத்தின் மூலம் கண்டறிவதே இலக்கிய வழி வரலாறாகும்.
இலக்கிய வரலாற்றை அறிந்துகொள்ளாமல், இலக்கிய வழி வரலாற்றை அறிந்துகொள்ள முடியாது. இலக்கிய உருவாக்கம் இல்லாத எந்த சமூகமும் முழுமையான உருவாக்கம் பெற்றுவிட்டதாகக் கூறமுடியாது. சமூக உறவுகளில் இலக்கியம் முக்கிய இடம் வகிக்கிறது. இலக்கிய வரலாறு என்பது சமூக மாற்றத்தை எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடி ஆகும்.
இலக்கியங்கள் படைக்கப்பட்ட காலத்தினுள் நாம் வாழும் இந்தக் காலத்தை வைத்துப் பார்க்கும் போதுதான் இலக்கியம் சமூக சிந்தனைக்கான கருவியாகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் கடந்த கால இலக்கியத்தேட்டத்தைத் திண்ணமாகவும் நிலைபேறு உடையதாகவும் ஆக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியே சங்ககால இலக்கியத் தொகுப்பாகும்.
சேர, சோழ, பாண்டிய நாடுகளின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான புலவர்கள் எழுதிய பாடல்களைச் சேகரித்துப் பகுத்துத் தொகுத்து எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களாக பிற்காலத்துப் புலவர்கள் அளித்தனர். வடமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழைக் காக்க மன்னர்களும் புலவர்களும் இணைந்து எடுத்த முயற்சி தமிழ்த் தேசிய உணர்வுமிக்கதாகும். அவர்கள் இவ்வாறு பண்டைய இலக்கியங்களைத் தொகுக்காமல் போயிருந்தால் அவற்றில் பெரும்பான்மைப் பாடல்கள் அழிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
கி.மு. 7ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியர் வடமொழித் தாக்குதல்களிலிருந்து தமிழ் அழிவதைத் தடுத்து நிறுத்தினார். வடவர் பண்பாட்டுப் படையெடுப்பில் இருந்து தமிழர் பண்பாடு அழியாமல் வள்ளுவர் காத்தார்.
சங்ககாலச் சமூகத்தின் சிதைவிற்கான முக்கிய காரணம் குலக்குழு அமைப்பில் இருந்து நிலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறைக்கான மாற்றமே யாகும். இதன் விளைவாக மூவேந்தர்களின் ஆட்சி தொடங்கியது.
சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுக் காப்பியங்கள் தோன்றின. பெளத்த, சமணக் கூறுகளை, முதன்மைப் படுத்துவதற்கான முயற்சியே காப்பியங்களின் தோற்றமாகும். அதைத் தொடர்ந்து பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் தோன்றின. இவைகளின் தோற்றத்திற்கும் அடிப்படையான சமூக விழிப்புணர்வு காரணமாக இருந்தது.
கயமை, கள்ளுண்ணாமை, கொல்லாமை, சிற்றினஞ்சேராமை, சூது, வரைவின்மகளிர், பிறனில் விழையாமை ஆகிய அதிகாரங்களை திருவள்ளுவர் எழுதுவதற்குக் காரணமே சங்ககாலச் சமுதாயத்தில் பல சமூகக் கேடுகள் மலிந்திருந்ததே ஆகும். எனவேதான் வள்ளுவர் இந்த அதிகாரங்களின் மூலம் அவற்றை மிகக் கடுமையாகச் சாடினார்.
"குறிப்பாக பிறனில் விழையாமை என்ற அதிகாரம் பிற இலக்கியங்களில் காணப்படாத புதுமையானதாகும். தமிழ் இலக்கியங்களில் இக்கருத்து பேசப்படவில்லை'' என முனைவர் க.ப. அறவாணன் அவர்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். எனவே வள்ளுவர் இதைப்பற்றிப் பேசுவதற்கு சிறப்பான காரணம் இருக்க வேண்டும் என்றும் அவர் கருதுகிறார். சங்க இலக்கியத்தில் இடம் பெறாத இக்கருத்தை முதன் முதல் வள்ளுவர் கூறியது ஏன்? - என்பது சிந்திக்கத்தக்கதாகும். என்று கூறும் அவர் "பிறரின் மனைவியரோடு துறவியர் கொண்ட கள்ள உறவு காரணமா? அல்லது இந்திரன் - அகலிகை போன்ற ஆரிய புராணக் கதைகளில் இப்போக்கு காணப்பட்டது காரணமா? என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
தமிழர் சமுதாயத்தில் பரவியிருந்த ஒழுக்கக்கேடுகளை எதிர்த்து புரட்சிக்கொடியை வள்ளுவர் உயர்த்தினார். அதைத் தொடர்ந்து பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றி, தமிழ்ச் சமுதாயத்தில் ஒழுக்கம், அறம் ஆகியவை நிலவ வேண்டியதை வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து பக்தி இலக்கிய காலம் தொடங்குகிறது. நாயன்மார் பாடிய திருமுறைகளும், ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் தொகுக்கப்பட்டது மற்றொரு சிறப்பு வாய்ந்த பெரும் நிகழ்ச்சியாகும். இதற்கு சமூக, பொருளாதார அழுத்தங்களும், சமய பண்பாட்டுத் தேவைகளும் இருந்தன. இந்தப் பின்னணியில்தான் பக்தி இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. சைவத் திருமுறைகளை நம்பியாண்டார் நம்பியும், வைணவப் பாசுரங்களை நாதமுனியும் தொகுத்தளித்தனர். இவற்றைத் தொகுத்ததன் மூலம் தமிழிசை, பண் ஆகியவை மீட்டெடுக்கப்பட்டன. இம்முயற்சியில் அரசுகளின் பங்களிப்பும் இருந்தன.
தமிழ் இலக்கிய வரலாற்றில் அடுத்த முக்கிய நிகழ்வு சைவ சித்தாந்த நூல்கள் தொகுக்கப்பட்ட நிகழ்ச்சியாகும்.
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பார்ப்பனர் அல்லாத மடங்களின் அடித்தளமாயிற்று,
தமிழ் இலக்கிய மரபில் உரையாசிரியர்களின் காலம் புதியதொரு வெளிச்சத்தைப் பாய்ச்சியது. 10, 11ஆம் நூற்றாண்டுகளில் இளம்பூரணருடன் தொடங்கி 12-14ஆம் நூற்றாண்டுகளில் சேனாவரையர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் உள்ளடக்கியோர் ஆக்கிய உரைகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் தெளிவை ஏற்படுத்தின. சம காலத்தவரால் விளங்கிக்கொள்ள முடியாத நூல்களையும் நூற்பாடங்களையும் விளக்கி தமது காலத்துக் கருத்து நிலைத் தேவைகளை இந்த உரைகள் முழுமை செய்தன. அத்துடன் மட்டுமல்ல, மூல நூல்களையும் அழிந்துவிடாமல் பாதுகாத்துத் தந்தன.
14ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தோன்றிய சித்தர் பாடல்கள் அதிகார மையங்களுக்கு எதிரான கலகக் குரலாக ஒலித்தன. சமுதாயத்திலும் இலக்கியத்திலும் மாற்றுக் கருத்துக்களை விதைத்தன. சித்தர் இலக்கியங்களின் தொடர்ச்சியாகத்தான் வள்ளலாரின் திருவருட்பா எழுதப்பட்டது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் அடக்குமுறையினாலும், சாதி, வேறுபாடுகளாலும் ஒடுங்கிக்கிடந்த தமிழர்களை வள்ளலார் தட்டியெழுப்பி புதிய பாதையைக் காட்டினார்.
இன்றைய தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் தந்தையாக பாரதியை நாம் காணவேண்டும். அவன் காட்டிய புதுவழியில் புதுமைப்பித்தன் மற்றும் மணிக்கொடி எழுத்தாளர்கள் நடந்து புதிய ஆக்கங்களைப் படைத்தனர். பாவேந்தர் பாரதிதாசன் முதல், கவியரசர் கண்ணதாசன் வரை எண்ணற்ற கவிஞர்கள் தமிழின் மறுமலர்ச்சிக்காகப் பாடினர்.
சமுதாயப் பார்வையில் இலக்கியங்களை நோக்கும் புதிய முயற்சிகள் தொடரவேண்டும். இதன் மூலம் மட்டுமே நாம் சமுதாயத்திலும், இலக்கியத்திலும் எதிர்பார்க்கும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.''
(16-02-2015 அன்று பெங்களூர் "சிறகுகள்' அமைப்பு நடத்திய கூட்டத்தில் பழ.நெடுமாறன் ஆற்றிய உரை)
|