தமிழ் இளைஞர்கட்கு அன்பு வேண்டுகோள்! - பேரா. ம.இலெ. தங்கப்பா PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 12 மார்ச் 2015 15:09

அன்புக்குரிய தமிழ் இளைஞர்களே,
வணக்கம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழ்நாட்டிலும், தமிழ்பேசும் புதுவைப் பகுதியிலும் வாழ்ந்து வரும் நாம் தமிழர்கள். நாம் வாழும் இந்நிலம் தமிழ் நிலம். தமிழ் மக்களிடையே நம் சொந்தத் தன்மை அழியா வண்ணம் வழி வழியாக நிலவி வரும் பண்பாடு தமிழ்ப் பண்பாடு. தமிழ்மொழி, தமிழ் மண், தமிழ்ப் பண்பாடு இம் மூன்றுமே நம் அடையாளங்கள். இந்த அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்வதே நம்மை நாம் பிறர் ஊடுருவல்களினின்று காப்பாற்றிக் கொள்ளும் வழியாகும்.

இந்த அடையாளங்கள் இன்று அழிந்து கொண்டு வருகின்றன. நம் விழிப்பின்மையால் நம் மொழி, நிலம், பண்பாடு ஆகிய மூன்றுக்குமே இன்று பேரழிவு ஏற்பட்டு வருகின்றது.

1. தமிழ் மொழியின் அழிவு

நம் தமிழ் மொழி இன்று பல வகையில் அழிக்கப்பட்டு வருகின்றது. எழுத்திலும் பேச்சிலும் இன்று தமிழுக்குத் தேவையில்லாத பிற மொழிச் சொற்கள் புகுந்து தமிழின் அழகைக் கெடுக்கின்றன.

ஒரு மொழிக்குத் தேவையானால் பிற மொழிகளிலிருந்து சொற்கள் எடுக்கப்பட்டு அம் மொழிக்கேற்ப உருவும் ஒலிப் பும் மாற்றி அமைக்கப்பட்டுக் கையாளப்படுவது வேறு. தேவையில்லாமல் பிறமொழிச் சொற்களை அப்படி அப்படியே புகுத்தி மொழியின் மரபையும் அழகையும் சிதைப்பது வேறு.

தமிழ் மொழியின் அழகையும் மரபையும் சிதைக்கும் வண்ணம் தேவையில்லாமல் வேற்று மொழிச் சொற்களைப் புகுத்துவதுதான் இன்று நடக்கின்றது. இவ்வாறு தேவையற்ற சொற்கலப்பே மொழியின் அழிவுக்கு அடி கோலுகின்றது. இச் சொற்கலப்பே பண்பாட்டின் அழிவுக்கும் காரணமாகின்றது. தமிழரால் வடசொற்கள் எனப்படும் சமற்கிருதச் சொற்களும், சிறிதும் பொறுப்பில்லாமல் நாம் கலந்து பேசும் ஆங்கிலச் சொற்களும் இந்தக் கேட்டைச் செய்கின்றன. நம் குழந்தைகட்கு இன்று வைக்கப்படும் பெயர்களைப் பாருங்கள்: ஜலஜா, கிரிஜா, புஷ்பா, சங்கீதா, ஜோதிகா, கனிஷ்கா, போன்ற பெண்பாற் பெயர்களும், ரமேஷ், சுரேஷ், முகேஷ், பாலாஜி, ரஜினி, ஆனந்த், சந்துரு போன்ற ஆண்பாற் பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல. இவை நாம் தமிழர் என்ற அடையாளத்தையே அழித்து விடுகின்றன. (இங்குத் தரப்பட்டுள்ள ஜ, ஷ, ஸ, ஹ போன்ற ஒலிகள் தமிழ் ஒலிகள் அல்ல).

தமிழில் வெளிவரும் செய்தி இதழ்கள் நல்ல தமிழை வேண்டுமென்றே ஒதுக்கிவிட்டுக் கலப்படத் தமிழையே முன்னிறுத்துகின்றன. சமற்கிருதச் சொற்களும் ஆங்கிலச் சொற்களும் கலந்த நடையையே பல நாளிதழ்களும் மாத, கிழமை இதழ்களும் பரப்பிக் கொண்டும், அவையே மக்கள் தமிழ் என்று பாராட்டிக் கொண்டும் வருகின்றன. பேசும் பொழுதும் தேவையில்லாமல் ஆங்கிலச் சொற்களை மிகுதியாகக் கலந்து பேசுகிறோம். இது தொடர்ந்தால் நல்ல, அழகிய தமிழ் என்பதே இல்லாமல் போய்விடும்.

"நான் நேற்று என் நண்பனைப் பேருந்து நிலையத்தில் சென்று கண்டேன். இருவரும் உணவு விடுதியில் பகல் உணவு உண்டோம். பூங்காவில் சற்றே இளைப்பாறி மாலையில் கடற்கரையில் உலாவச் சென்றோம். நாள் மகிழ்வாகக் கழிந்தது.''

இப்படிப் பேசுவதில் என்ன தவறு? இதுதானே இயல்பான தமிழ். இதை விட்டுவிட்டு -

"நான் நேற்று என் பிரண்டை பஸ் ஸ்டான்டில் மீட் பண்ணினேன். ஹோட்டலில் லன்ச் சாப்பிட்டோம். பார்க்கில் ரெஸ்ட் எடுத்துவிட்டு ஈவினிங்கில் பீச்சில் வாக்கிங் போனோம். நாள் ஜாலியாகக் கழிந்தது'' என்று பேசுவது தமிழா? இத்தகைய கலப்படங்களே இன்று தமிழைச் சிதைத்து வருகின்றன.

மக்கள் தாம் அறியாமையால், பொறுப்பின்மையால் இப்படிப் பேசுகிறார்கள் என்றால், படித்தவர்கள் அவர்களைத் திருத்த வேண்டுமே தவிர அவர்கள் பேசுவதுதான் தமிழ் என்று அதையே நூல்களில் எழுதிக்காட்டவும் முன்வந்து விட்டார்கள்.

அணிந்திருக்கும் ஆடை அழுக்கானால் அதனைத் துவைத்துத் தூய்மையாக்கி அணிந்து கொள்கின்றோம். அதுபோல் பேச்சு வழக்கில் பிழையும் கலப்படமும் நேர்ந்தால் அவற்றைத் திருத்தி நல்ல தமிழைப் பேசுவதுதானே முறை. இதை நீங்கள் நன்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டரசும் சரி, புதுவை அரசும் சரி, மழலை வகுப்பு முதல், உயர் கல்வி வரை பயிற்று மொழியாக இருக்க வேண்டிய நம் தாய்மொழியாம் தமிழை ஒப்புக்குச் சில பள்ளிகளில் மட்டுமே வைத்துவிட்டு மிகமிகப் பெரும்பான்மையான பள்ளிகளில் ஆங்கிலத்தையே பயிற்றுமொழியாகக் கொண்டு வந்துவிட்டன. தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம் இல்லை என்ற அவல நிலையும் இங்கு ஏற்பட்டது. இதற்கும் மேல் இழிவாகத் தமிழைத் தேர்வு நிலையிலிருந்து ஒதுக்கி வைக்கும் நடுவண் கல்வி வாரியப் பாடத் திட்டமும் பள்ளிகளில் புகுத்தப்பட்டுவிட்டது. ஏற்கெனவே பல்லாண்டுகளாகத் தமிழை ஒழித்துக்கட்டும் தனியார் ஆங்கில வழிப் பள்ளிகள் அரசின் ஆதரவுபெற்று வளர்ந்து முள்மரங்களாக நிற்கின்றன. வளர்ந்துவிட்ட மேலை நாடுகளில்கூடக் கல்வி அரசுகளின் பொறுப்பில் இருந்து வருகின்றது. மக்களைப் பற்றிக் கவலைப்படாத நம் அரசியல் வாணர்கள்தாம் தாங்கள் தரகுபெறுவதற்காகக் கல்வியைத் தனியாருக்கு விற்று எளிய மக்களின் வாழ்வை இடர்ப்பாட்டுக் குள்ளாக்கிவிட்டனர். தனியார் பள்ளிகளோ தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தையே பயிற்றுமொழியாகக் கொணர்ந்துவிட்டன. கல்வியில் தாய்மொழியாம் தமிழுக்கு இருக்க வேண்டிய இடம் இவ்வாறு ஆங்கிலத்தால் தட்டிப்பறித்துக் கொள்ளப்பட்டு விட்டது.

தமிழ் நாட்டிலும், புதுவை மாநிலத்திலும் தமிழே ஆட்சிமொழி என்று சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆயினும் அரசுகளின் ஒழுங்கின்மையாலும், இயல்பாக இருக்க வேண்டிய தாய்மொழிப் பற்றின்மையாலும் தமிழ் முழுமையான ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசுப் பதவிகளில் வேற்றுமொழியாளர்களின் ஊடுருவல் வேறு. தொடக்கத்தில் தமிழுக்கு இருந்த இடம்கூட இன்று முழுதும் ஆங்கிலத்துக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது! என்ன கொடுமை! இதனால், தமிழ்நாட்டிலும், புதுவையிலும் தமிழ் இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசு அலுவல்களும் அவர்களிடமிருந்து தட்டிப்பறித்துக் கொள்ளப்படுகின்றன. தமிழுக்கு ஆட்சிமொழியாக இருக்க எல்லாத் தகுதியும் தேவையும் இருக்கும் பொழுது ஆங்கிலத்துக்கு என்ன வேலை? தமிழ் ஆட்சிமொழியாக இருந்தால் அரசில் அலுவல் பெறத் தமிழ் வழிக் கல்வி தாராளமாய்ப் போதுமே! ஆங்கிலம் வல்ல மேல்தட்டுக்காரர் முன்னிடம் பெறவும் வேற்றுமொழிக்காரர் இங்கே ஊடுருவவும் தானே ஆங்கிலம் வழி திறந்துவைக்கின்றது! உலக முழுவதிலும் அவரவர் நாட்டில் (இந்தியாவிலும், தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில்) அவரவர் மொழியே ஆட்சிமொழியாக இருக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் ஆங்கிலம் ஏன்? இது ஆட்சியாளர்களால் தமிழ் மக்கட்கு இழைக்கப்படும் பெருங்குற்றம் ஆகும். இதைத் தடுத்து நிறுத்த வேண்டியது தமிழராகிய நம் கடமை ஆகும்.

வாணிகத் துறையிலும் தமிழ் உரிய இடத்தினைப் பெறவில்லை. கடைகளின் பெயர்ப்பலகைகளில் ஆங்கிலமே முன்னிற்கின்றது. ஏன், முழுதும் நிற்கின்றது என்றே சொல்லலாம். எப்படி என்றால், கடைப் பெயர்களை ஆங்கிலத்தில் வைத்துக்கொண்டு தமிழ் எழுத்தில் அவற்றை எழுதுகின்றார்கள்.

அன்னை மெடிக்கல்ஸ், ராம் எலெக்ட்ரிக்கல்ஸ், செயின்ட் பால் எலெக்ட்ரானிக்ஸ் என்று எழுதுகிறார்கள். அரிசிக்கடை, எண்ணெய்க்கடை என்பவைகூட ரைஸ் ஸ்டோர், ஆயில் ஸ்டோர் என்று எழுதப்படுகின்றன. குருட்டுத்தனமான ஆங்கில மனப்போக்கு என்பதைத் தவிர இதன் நடைமுறைத் தேவை என்ன? தமிழ் மட்டுமே தெரிந்த தமிழ் மக்களுக்கு இவை புரியுமா?

ஒரு காலத்தில் மருந்துகளைப் பற்றிய விளக்கத் தாள்களில் தமிழ் இருந்தது. இன்று ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே இருக்கின்றன. தமிழ் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றது. வெள்ளையன் காலத்தில் கூட நாணயத்தாளில் தமிழ் இருந்தது. வடநாட்டான் எல்லாத் தமிழையும் ஒழித்துவிட்டான்.
பண்டைத் தமிழ் மன்னர் கட்டி வைத்த கோவில்களிலும் தமிழுக்கு இடமில்லை. போற்றியுரைகள் சமற்கிருதத்திலேயே சொல்லப்படுகின்றன. தமிழ் மக்கள் தேவாரம், திருவாசகம் போன்ற தங்கள் தமிழ்ப்பாடல்களைப் பாடி இறைவனை வழிபட உரிமை மறுக்கப்படுகின்றது!

நாம் எவ்வளவு இளித்தவாயர்களாக இருக்கின்றோம். தமிழ் நாட்டின் இசையரங்குகளில் இன்றும்கூடத் தெலுங்கு, வடமொழிப் பாடல்களே மிகுதியாகப் பாடப்படுகின்றன. இசைக் கலைஞர்கட்கு இன்றும் தமிழில் பாடவேண்டும் என்ற உணர்ச்சி இல்லை. குருட்டுத்தனமாகப் பொருள்புரியாத தெலுங்குப் பாடல்களையே உளறித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

இவையெல்லாம் மொழித் தொடர்பானவை. இவை தவிர, நம் வாழ்வுரிமைக்கே உலைவைக்கும் வகையில் - 1. நமக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய காவிரி நீர் நமக்கு மறுக்கப்படுகின்றது. 2. ஆற்றுநீர்ப் பங்கீட்டு ஒழுங்குமுறையை மீறி ஆந்திர மாநிலத்ததவர் பாலாற்றில் தொடர்ந்து பல அணைகளைக் கட்டியிருப்பதால் தமிழ்நாட்டுக்குப் பாலாற்று நீர் வரத்தே இல்லாமல் போய்விட்டது. 3. முல்லைப் பெரியாற்று நீரும் முறைப்படி தமிழருக்குத்தான் தரப்படவேண்டும். அவ்வாறு தரப்படாமல் கேரள மலையாளிகள் முறைமன்றத் தீர்ப்பைக்கூட மதிக்காமல் வேண்டுமென்றே முட்டுக்கட்டை போடுகின்றனர். காரணம் என்ன என்பதைத்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் நாட்டு மக்களும் சரி, தொடர்ந்து தமிழ்நாட்டை ஆண்டு வந்திருக்கும் அரசுகளும் சரி, நம் உரிமைக்காகப் போதிய வலிமையுடன் குரல்கொடுக்காமலும் கொந்தளித்து எழும்பிப் போராடாமலும் ஏனோதானோ என்று இருந்து வந்திருப்பதுதான் காரணம். நமக்குரிய உரிமையை நாம் பெற்றுக்கொள்ள வேண்டியதில்லையா?

இளைஞர்களே, நம் தமிழ்மொழியின் நன்மைக்காகவும், தமிழ்நாட்டின் நன்மைக்காகவும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்ற உணர்ச்சி உங்கட்கு ஏற்பட வேண்டும். இளைஞர் போராட்டமும், மக்கள் போராட்டமும் வலிமையாக நடந்தாலன்றி நம் உரிமைகளை நாம் பெறமுடியாது. இது உறுதி.

இன்னும் தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கும் பல்வேறு அவலங்களையும், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும் பெரும் தொழில் நிறுவனங்கள் எல்லாம் வெளி மாநிலத்தவர் கைகளிலேயே உள்ளன. வடநாட்டுச் சேட்டுகளான மார்வாரிகளும், குசராத்திகளும், மலையாளிகளும் பெரும் பெரும் கொள்ளை முதலாளிகளும் தமிழ்நாட்டின் தொழில் வணிகத் துறைகளில் அளவுக்கு மீறிப் பெருகித் தமிழ்நாட்டுப் பொருளைக் கொள்ளையடித்துச் செல்கின்றனர். தமிழர்கள் சிறுதொழில்கள் கூடச் செய்யமுடியாத அளவுக்கு அரசு பெருமுதலாளிகளுக்கு இடம் கொடுத்து வருகின்றது.

தமிழ்நாட்டு அரசின் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களும், காவல்துறையின் உயர் அதிகாரிகளும் வேற்று மொழிக்காரர்களாகவே இருக்கின்றனர். சிறு சிறு பதவியினர் அலுவலக ஊழியர்களில் கூடத் தமிழர் அல்லாதவர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கின்றது. வெளிமாநிலங்களில் தமிழருக்கு யாரும் இத்தகைய உயர்ந்த இடங்களைக் கொடுப்பதில்லை. தமிழராகிய நாமே எல்லாருக்கும் இடம் கொடுத்து நம் உரிமைகளை இழந்துபோகின்றோம். அண்மைச் சில ஆண்டுகளாகக் கூலித் தொழிலாளிகள் பலர் வட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாட்டுக் கூலித் தொழிலாளிகளின் வேலை வாய்ப்பை இவர்கள் பறித்துக் கொள்கின்றனர். இதில் கொடுமை என்ன என்றால் வடநாட்டுக் கூலித் தொழிலாளிகள் தாங்களாக இங்கு வரவில்லை. இங்குள்ள வடநாட்டுத் தொழில் முனைவர்களே அவர்களை இங்கு வரவழைக்கின்றனர்!

தமிழ்நாட்டின் நகரங்களைப் பார்ப்போமானால், செல்வ வளம் மிக்கவர்களும் உயர் பதவியில் இருப்பவர்களும் வாழ்ந்துவரும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் எல்லாம் மிக வாகாக வாழ்ந்து வருபவர்கள் தமிழர் அல்லாதவர்களே. எல்லா உரிமைகளோடும் இனச் செருக்கோடும் வெளிமாநிலத்தவர் இப்படி இங்கே உலாவருகின்றனர். தமிழ்நாட்டில் தமிழரைவிட மற்ற மொழிக்காரர்கள் வளமாகவும் செருக்கோடும் வாழ்ந்து வருவது மொழி வழி மாநிலக் கொள்கைக்கு எந்த வகையில் பொருத்தமுடையது? வேறு எந்த மாநிலத்திலும் இப்படி வேற்றாள்கள் மேலாண்மை செலுத்துவதில்லையே! அந்தந்த மாநில அரசுகள் விழிப்பாயிருக்கின்றன. தமிழராகிய நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதிருக்கிறோம் என்பதுதானே இதன் பொருள்.

மொழிவழி மாநிலப் பிரிவுக்குப் பின் அந்தந்த மாநில உரிமைகளைக் காப்பாற்றி வைத்துக்கொள்வது அந்தந்த மாநில அரசின் முதற்கடமையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அவ்வப்பொழுது ஆட்சியில் இருந்து வந்தவையும், இருப்பதுமான அரசுகள் இக்கடமையைச் செய்யவில்லை என்பதே மெய்ம்மை. தங்கள் ஆட்சிப் பாதுகாப்பும் ஆதாயமும் கருதி இவை வேற்றவர்கட்குப் பெரும் பெரும் பதவி வழங்கி அவர்களைத் தங்கள் பக்கம் வைத்துக்கொள்கின்றன. இதற்காகவே இவை வேற்றவர் நுழைவைக் கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகளை, அல்லது ஒழுங்கு முறைகளைப் பின்பற்றாமல் விட்டுவிட்டன.

சுருக்கமாகச் சொன்னால் தமிழ்நாட்டு அரசுகள் தமிழ், தமிழர் நலம் பேணும் அரசுகளாக இல்லை. முல்லைப் பெரியாற்று நீர் தமிழர்கட்குக் கிடைக்கவில்லை என்றால் தமிழ் நாட்டில் வாழும் பல்லாயிரக்கணக்கான மலையாளிகட்குக் குடிநீர் வழங்க மாட்டோம் என்று ஏன் கூறக்கூடாது? கேரளத்துக்குத் தமிழ்நாட்டிலிருந்து பேரளவில் செல்லும் காய்கறிகள், இறைச்சிக்கான மாடுகள், மற்ற உணவுப் பொருள்கள் ஆகியவற்றை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது? காவிரி நீர் நமக்குக் கிடைக்காத நிலையில் கருநாடக மாநிலத்துக்குச் செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தரமாட்டோம் என்று ஏன் கூறக்கூடாது?

சிறியதொரு பிழை நேர்ந்தாலும் மிகக்கொடிய கதிர்வீச்சுக்கும் உயிரழிவுக்கும் காரணமாகிவிடும் உலகப் பேரிடராகிய அணுஉலையை மற்ற மாநிலங்கள் வேண்டாம் என்று மறுத்துள்ள நிலையில் தமிழ்நாட்டு அரசு கூடங்குளத்தில் அமைக்க ஒப்புக்கொண்டது ஏன்? அணுவுலை வேண்டாம் என்று மறுத்துள்ள கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்கட்கு கூடங்குளத்தில் உருவாகும் மின்சாரத்தைப் பகிர்ந்தளிக்கத் தமிழக அரசு உடன்படலாமா?

மற்ற மற்ற மாநிலங்களெல்லாம் தங்கள் தங்கள் உரிமைகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கையில் தமிழ்நாடு மட்டும் அவ்வாறு காப்பாற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

தமிழக அரசுகளிடத்தில் தமிழ் உணர்வில்லை. தமிழ் மக்களுக்குத் தங்கள் மொழி இன நலம் பற்றிய ஓர்மை சிறிதும் இல்லை.

அதனாலேயே மக்கள் தங்கள் சொந்தத் தமிழரை ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கவில்லை. தமிழர்க்கு உண்மைத் தமிழரே தலைவராக வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லையே. இந்த விழிப்பு இளைஞர்களாகிய உங்கட்கு ஏற்பட வேண்டும். நம் தாய் மொழியாகிய தமிழையும் அதன்வழி உங்கள் கல்வியையும் வேலை வாய்ப்பையும் நீங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

நம் மொழி, இந்தி, ஆங்கில மேலாண்மைகட்கு உட்பட்டுத் தன் உரிமை இழந்துவிடக்கூடாது.
நம் சொந்தத் தமிழ் மண்ணில் நமக்கே உரிமையில்லாத அளவுக்கு வேற்றவர்கள் அதனைக் கைப்பற்ற விட்டுவிடக்கூடாது.

பெரும் பெரும் பதவிகளிலும், தொழிலிலும், வணிகத்திலும் வேற்றவர்களின் ஊடுருவலால் நாம் நம் சொந்த வேலை வாய்ப்புகளையும் பொருளியலையும் இழப்பதோடு, நம் சொந்த அடையாளங்களையும், சொந்தப் பண்பாட்டையும் இழந்து வரும் நிலையும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவற்றையெல்லாம் செய்வதற்காகவே இன்று தமிழர் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களே, உங்கள் வருங்காலத்தை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால், தமிழ்த் தேசிய உணர்வை வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

வேறு யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்காமல் நம் சொந்த மொழி, மண், இன உரிமைகட்காக நாம் போராடுவோம்! ஒன்று திரண்டு போராடுவோம்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.