திராவிடச் சீரழிவிலிருந்து மீள்வது எப்போது? - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 12 மார்ச் 2015 15:14

"வடநாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலை மறந்து ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது அன்பு பாராட்டி அளாவளாவும் நாகரீகத்தைப் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் துக்கவீட்டில் கூட ஒருவரையொருவர் சந்திக்க மறுக்கும், தயங்கும் நிலை அல்லவா தமிழகத்தில் இருக்கிறது'' என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் "திராவிடர் இயக்கத்தின் பிறப்புக்குப் பின் இந்நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதை நாம் வெட்கத்தோடும், வேதனையோடும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். எவ்வளவு கருத்து வேறுபாடு, கொள்கை மாறுபாடு இருந்தாலும், பிறந்த நாள்களுக்கு வாழ்த்து அனுப்பியோ, நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறுவதோ, மனித நேயத்தையும் மக்கள் பண்பையும் வளர்த்து, தொண்டர்கள் மயத்தியில் வெறுப்பு குறைய, அல்லது மறைய வாய்ப்பை ஏற்படுத்தும். அந்தக் காலத்து தலைவர்களின் அன்பும், பண்பும், அகிலம் அறிந்தவை. வட நாட்டுத் தலைவர்கள் பலரிடமும் நான் பழகியுள்ளேன். எவ்வித பந்தாவும் இல்லாமல் பழகுகிறார்கள். தமிழ்நாட்டில்தான் இப்படி வெறுக்கத்தக்க நோய் எப்படியோ கடந்த 30 ஆண்டுகளாக பரவிவிட்டது. யார்மீதும் குற்றம் சுமத்தி புண்ணைக் குடைய விரும்பவில்லை நாம்'' என்றும் வருந்தியுள்ளார்.

கி. வீரமணி அவர்களின் இந்த ஆதங்கம் அனைவராலும் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒன்றாகும். தமிழக அரசியலில் இன்று பல்வேறு துறைகளில் காணப்படும் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு திராவிடக் கட்சிகளே பொறுப்பாகும் என்பது மறைக்கமுடியாத உண்மையாகும்.

30 ஆண்டு காலமாக இந்த வெறுக்கத்தக்க நோய் எப்படியோ பரவிவிட்டது என அவர் கூறியுள்ளது முழுக்க முழுக்க உண்மையாகும். முந்திய தலைமுறைகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களான ராஜாஜி, பெரியார், காமராசர், அண்ணா, பி. இராமமூர்த்தி, ஜீவானந்தம், ம.பொ.சிவஞானம், பி.டி. இராசன் போன்றவர்களும், அரசியலுக்கு அப்பாற்பட்ட மறைமலையடிகள், கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றவர்களும் ஒருவரையொருவர் மதித்தார்கள். மாறுபட்டு நிற்கும்போதும் கண்ணியமான முறையில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டார்கள். தமிழ், தமிழர் பிரச்சினைகளில் கைகோர்த்து நின்று செயல்படும்தொலைநோக்குப் பார்வையும், பெருந்தன்மையும் அவர்களிடம் இயற்கையாகவே குடிகொண்டு இருந்தன.

திருமணம், சாவு போன்ற சமுதாய நிகழ்ச்சிகளில் எத்தகைய விருப்பு வெறுப்பும் இன்றி பங்கெடுக்க வேண்டியது தங்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட்டார்கள்.

ஆனால், தி.மு.க. பிளவுபட்டு அ.தி.மு.க. தோன்றியது முதல், இந்த இரு திராவிடக் கட்சிகளும் ஒன்றுக்கொன்று எதிரிக்கட்சிகள் போன்று செயல்பட்டன. செயல்பட்டு வருகின்றன. இதன் விளைவாக அரசியல் துறையிலும், பண்பாட்டுத் துறையிலும் பெரும் சீரழிவுகள் ஏற்பட்டுவிட்டன.

தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகளான காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற பிரச்சினைகளிலும், ஈழத் தமிழர் பிரச்சினையிலும், இந்த இரு திராவிடக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்காததின் விளைவாக மத்திய அரசு நம்மை மதிக்கவில்லை. இப்பிரச்சினைகளும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. ஆனால், இந்த இருகட்சிகளும் மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகளுடன் உறவுபூண்டு பதவி பேரம் நடத்தி மத்திய ஆட்சியில் அமைச்சர் பதவிகளைப் பெற்றார்கள். அப்பதவிகளைப் பயன்படுத்தி தமிழகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வரவில்லை. மாறாக தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சியின்மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றிக்கொள்ளும் கவசமாக மத்திய அமைச்சர் பதவிகளைப் பயன்படுத்தினார்கள்.

2009ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்கள் பேரழிவிற்கு ஆளானபோது அதைத் தடுத்து நிறுத்த நம்மால் முடியாமல் போனதற்கு இந்த இருகட்சிகளும் ஒன்றுபட்டு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காததே காரணம் ஆகும். தமிழகத்தில் உள்ள பிற கட்சிகள் ஒன்றுபட்டுப் போராடியும்கூட, அப்போராட்டங்களை திராவிடக் கட்சிகள், நீர்த்துப்போக வைப்பதிலேயே முழுக்கவனம் செலுத்தின. அடக்குமுறைகளை ஏவி இப்போராட்டங்களை ஒடுக்கின. எடுத்துக்காட்டாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் போராட்டத்தின்போது உயர்நீதிமன்ற வளாகத்திற் குள்ளேயே புகுந்து நீதிபதிகள், வழக்குரைஞர்கள் உட்பட அனைவர் மீதும் மிகக்கொடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. திராவிடக் கட்சிகளின் மறைமுகமான ஆதரவு தனக்கு இருக்கிற துணிவில்தான் அப்போதைய இந்திய அரசு சிங்கள அரசுக்கு இராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்து தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு துணைநின்றது.

தமிழ்நாட்டில் மேலிருந்து கீழ்வரை அரசு நிர்வாகத்தில் இலஞ்சமும், ஊழலும் முழுமையாக படர்ந்திருப்பதற்கு இந்த இருகட்சிகளுமே காரணமாகும். இதன் விளைவாக மக்களுக்கான நலத்திட்டங்கள் சீர்குலைந்தன. திட்ட நிதியின் பெரும் பகுதி சூறையாடப்பட்டது.

தங்கள் ஆட்சிக்கெதிராக மக்கள் கொதித்தெழாமல் தடுப்பதற்காக மதுக்கடைகளை திறந்து, மதி மயக்கத்தில் மக்களை ஆழ்த்தியதும் திராவிடக் கட்சிகளே.திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து ஊழல்களில் ஈடுபட்டதோடு, தங்களின் கட்சிக்காரர்களையும் அவ்வாறே ஆக்கினார்கள். இதன் விளைவாக அரசியலை மட்டுமே மூலதனமாகக் கொண்ட புதிய கோடீஸ்வரர்கள் உருவானார்கள்.

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழலான 2ஜி ஊழலை நடத்தியவர்கள் திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்களே. திராவிடக் கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் எவரும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கவில்லை. திராவிடக் கட்சி ஒன்றின் முதலமைச்சரே ஊழல் குற்றச்சாட்டுக்காகத் தண்டிக்கப்பட்டு சிறைசென்ற கேவலமும் நடந்தது.

அடுத்தக் கட்டமாக மக்களையும் கறைபடிந்தவர்களாக ஆக்க இலவசங்கள் என்ற பெயரில் பல்வேறு பொருட்களை வாரி வழங்கினார்கள். அவற்றுக்குரிய கையூட்டையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பெற்றுக்கொள்ள திராவிடக் கட்சித் தலைவர்கள் தயங்கவில்லை.

தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை அழித்து, பண நாயகத்தை பரப்பும் பணியிலும் திராவிடக் கட்சிகள் ஈடுபட்டன. வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கான பணத்தை வாரியிறைத்து தேர்தலில் வெற்றிபெறும் "திருமங்கலம் சூத்திர''த்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தார்கள். தேர்தல் ஆணையமே இதைக் குறிப்பிட்டு கண்டித்த அவலம் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் ஏற்பட்டது.

திராவிட இயக்கம் தோற்றுவிக்கப்பட்டபோது சாதிப் பாகுபாடுகளையும் மதவெறியையும் ஒழிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. ஆனால், அந்த இயக்கத்திலிருந்து பிறந்த தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்பதற்காக சாதிக்கட்சிகளுடனும், மதவெறிக்கட்சிகளுடனும் சமரசம் செய்து கொண்டன. சாதிவாரியாக அமைச்சர்களை நியமிப்பதிலும் இவ்விரு கட்சிகளும் போட்டி போட்டன. திராவிடக் கட்சிகளின் சார்பில் முதலமைச்சரானவர்கள் அனைவருமே சிறுபான்மை சமூகங்ளைச் சார்ந்தவர்களே. தங்கள் சாதி பலத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்கள் அல்லர். சாதி கடந்து அரசியல் ரீதியாக அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த மக்களும் வாக்களித்ததன் விளைவாக வெற்றிபெற்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்கள். அதை மறந்து, சாதிகளை திருப்தி செய்யும் கண்ணோட்டத்திலேயே ஆட்சி நடத்தினார்களே தவிர, சாதி வெறி, மதவெறி ஆகியவற்றை தூண்டிவிடும் வகையில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருகட்சிகளுமே தயங்கின.

மதவெறி அமைப்புகளை பல்லக்கில் தூக்கிச் சுமந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்தது இந்த இரு திராவிடக் கட்சிகளே. சென்ற தலைமுறை தலைவர்கள் மக்களுக்காக தொண்டாற்றினார்கள். துன்பங்களை இன்முகத்துடன் ஏற்றார்கள். சிறைசென்று தியாகம் செய்தார்கள். பதவிப் பொறுப்புகளில் அவர்கள் அமர்ந்திருந்தபோதும் எளிமையாக வாழ்ந்தார்கள். எத்தகைய ஊழல் குற்றச்சாட்டிற்கும் ஆளாகாமல் இறுதிவரை எளிமையாகவே மறைந்துபோனார்கள். இதனால்தான் இன்றளவும் அவர்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கிறார்கள்.

இன்றைய இளைய தலைமுறையினர் திராவிடக் கட்சிகளின் தலைவர்களின் ஆடம்பரம், அதிகாரத் திமிர், ஊழல் இவற்றைப் பார்த்து இவைதான் அரசியலுக்குத் தேவையான பண்புகள் என நினைக்கும் போக்கு உருவாகியுள்ளது. பணத்தைச் செலவழித்து பதவியைப் பிடித்தல், பதவியைப் பயன்படுத்தி பணம் திரட்டுதல் என்பதுதான் பொதுவாழ்வில் வெற்றிக்குரிய சூத்திரம் என இளைஞர்கள் கருதும்போக்கு ஏற்பட்டுவிட்டது. இந்தப் போக்கு முழுமையாக மாற்றப்படாவிட்டால் எதிர்காலம் இருள்சூழ்ந்ததாக அமைந்துவிடும்.

1930களில் ஜெர்மனியில் இட்லரின் மாய்மாலப் பேச்சுக்களில் மயங்கி ஜெர்மானிய மக்கள் அவரின் நாஜிக்கட்சிக்கு வாக்களித்து. ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தார்கள். ஆனால், மறுதடவை வாக்களிக்கும் வாய்ப்பை அந்த மக்களுக்கு இட்லர் அளிக்கவில்லை. சனநாயகத்தைச் சாய்த்து சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார். இட்லருக்கு எதிரான கருத்துக் கொண்டவர்கள் ஈவிரக்கம் இல்லாமல் ஒழிக்கப்பட்டார்கள். யூதர்கள் படுகொலைகளுக்கு ஆளானார்கள். அந்த நாட்டை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தி தனது நாட்டை மட்டுமல்ல ஐரோப்பாவையே சுடுகாடாக்கினார் இட்லர். இந்த அழிவிலிருந்து ஜெர்மானிய மக்கள் மீட்சிப்பெற்று எழுந்து நிற்க 50 ஆண்டு காலத்திற்கு மேலாயிற்று.

திராவிடக் கட்சிகளின் 40 ஆண்டு காலத்திற்கு மேலான ஆட்சியில் தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டிருக்கிற சீரழிவை சரிசெய்வதற்கு என்ன செய்வது? எப்படிச் செய்வது? யாரால் இயலும்? என்ற கவலை நாட்டு பற்றாளர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

அறிவியலில் மிகவும் முன்னேறிய ஜெர்மானிய மக்கள் மீண்டெழுந்து நிற்க அரை நூற்றாண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், மிகவும் பின்தங்கிய மக்கள் வாழும் தமிழகம் இந்தச் சீரழிவிலிருந்து மீளுவதற்கு எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ?

- நன்றி : தினமணி

வியாழக்கிழமை, 12 மார்ச் 2015 15:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.