வள்ளலார் பற்றிய கட்டுரைக்கு வரவேற்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015 12:42

திரு. பழ. நெடுமாறன் ஐயா அவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட வள்ளலார் சன்மார்க்க சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாகவும் வள்ளலார் சன்மார்க்க கழகத்தின் சார்பாகவும், வள்ளலார் அறக்கட்டளை சார்பாகவும் எழுதும் கடிதம்.

11-02-2015 அன்று தினமணி நாளிதழில் தாங்கள் எழுதிய வள்ளலாரைப் பற்றிய கட்டுரையைப் படித்து சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியடைந்தோம். உலகத்தில் வள்ளலாரைத் தெரியாமல் ஒருவர் வாழ்ந்தால் மனிதனாக முடியாது என்ற நிலையை வள்ளலாரின் "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க' என்ற சொற்றொடர் மூலம் உணரலாம். இச்சொற்றொடரில் மனித சமூகத்தின் சமரசமும் அடங்கும். இதன்படி தாங்கள் வள்ளலாரைப் பற்றிய கட்டுரை எழுதியதற்கு மேற்கண்ட அமைப்புகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
- ப. இராஜபூபதி, வள்ளலார் அறக்கட்டளை, விழுப்புரம்
பல்லாண்டுகளுக்கு அவசிமான யாவற்றையும், குறுகிய காலத்திலேயே வாழ்நாள் சாதனைகளாகப் படைத்த வள்ளலார் என்பதை தெளிவுறவே அறிந்து தெளிவுதர மொழிந்துள்ள, செறிவுள்ள கட்டுரையை (வள்ளலார் இல்லம் பொதுமையாகட்டும்) 11-2-15 அன்று தினமணியில் வந்துள்ளதை உருக்கமுடன் படித்தேன்! வருத்தமுடன் எழுதுகிறேன்.
அவர் தம் வாழ்நாளில் (5.10.1823 - 30.1.1874) 51 வயதிலேயே தமிழர் சமுதாயம் மேம்பட அவர் ஆற்றிய ஆற்றல் மகத்தானது! கடல் அலைபோன்ற அவருடைய ஆற்றல், அனைவருடைய உள்ளத்திலும், அலைமோதிக் கொண்டிருப்பதற்கு மேற்படி கட்டுரையே போதிய சான்றாகும்! மேலும் அவருடைய செயற்பாட்டில் பெருகிய இறையாண்மை, சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளாக பலவகையில் அல்லல் படும் குடி மக்களுக்கு அவசியம் தேவை என்பது காலத்தின் கட்டாயமாகும்!
ஆகவே குடி மக்களை நல்வழிப்படுத்துகின்ற பேருதவியாக விளங்கச் செய்யும் வள்ளலார் இல்லத்தின் அவசியத்தை 12 ஆண்டுகளாக அரசுத் துறை புரிந்து கொண்டதாக இல்லை என்பதை வாசகர்களுக்கு இன்று அறிவுறுத்திய முக்கியமான கட்டுரையாகும்!
மேலும் "வள்ளலார் இல்லம்' என்பது அவரை உயிர்ப்பித்தல் ஆகும்! உயிர், உடல் அவசியமில்லாமல் அவருடைய ஆற்றலைத் தொடரச் செய்யும் இல்லமாகும்! அன்று "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று கூறிய வள்ளலாரை வற்றாத ஆறு போன்று காட்டக்கூடிய இல்லம்!
எனவே, உண்மையில், இந்த இல்லம் அவருக்காக அல்ல, அவர் விரும்பிய தமிழக மக்கள் குடி உயர பயன்படக்கூடியதாகும்! இதுவும் அரசுத் துறையைப் போன்றதாகும்!
ஆகவே, மேற்படி கட்டுரையில் உள்ள அவசியமான கோரிக்கையை உண்மையின் அடிப்படையில், கருணையோடு மறுபரிசீலனை செய்து, "வள்ளலார் இல்லத்தை' உடனே உருவாக்கித் தரும்படி பணிவன்புடன் மூத்த குடிமகன், தமிழ்த்தொண்டர், வாசகர் என்ற முறையில் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்!
இதற்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஏற்படுத்திய வள்ளலார் வழியில் தொண்டு நிறுவனம் மற்றும் ஊரனடிகள் போன்றவர்கள் அனைவரும் அரசுத் துறைக்கு உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறேன்! - இன்றைய சூழலில், இறையாண்மை பெருக ஓர் இல்லம்!
"வாழ்வியலே வரலாறு' படைத்த வள்ளலார்,
"வள்ளலார் இல்லத்தில்' வாழ்க பல்லாண்டு!
பா. இராமமூர்த்தி
பழ. நெடுமாறன் அவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட வள்ளலார் கொள்கை பரப்புச் செயலாளர் ஆர். சீனிவாசன் அன்புடன் எழுதிக் கொண்டது. ஜோதிதான் (ஒளி) உலகையும், உலக உயிரையும் இயக்குகிறது. அதனால் ஜோதிதனையே நினைமின்கள் சுகம் பெறுவீர் என்று கூறியது மட்டுமல்ல, மற்ற வழியில் கூறும் கடவுளர்கள் மாயை என்றும் கூறி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் எனக்கூறிய வள்ளலாரின் வாழ்த்துக்கள் தங்களுக்கும் சேர வேண்டும் என வேண்டுகிறேன். வள்ளலாரைப் பற்றி அறிந்து இவரின் சமுதாய தொண்டை உலகறிய 11-2-2015 ஆம் நாள் தினமணியில் கட்டுரையாக எழுதி வெளிப்படுத்தியமைக்கு சன்மார்க்க அன்பர்களின் சார்பாக பல்லாயிரக்கணக்கில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ நினைத்தால் மட்டும் போதாது, தன் தகுதிக்கான செயலிலும் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற நிலையில் கடவுள் ஒருவரென்றும், (ஏனெனில் கடவுள் வழிபாடு இல்லாமல் பல மனிதர் வாழவில்லை) சாதி, மத, சம்பிரதாயம் மூடப்பழக்கமென்றும், ஆண்டான் அடிமையென்ற நிலையை மாற்றிட சமரசசன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தும், பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்தும், தமிழ் வளர வேண்டுமென்பதால் தன் அருட்பாவை இலக்கியத்துடனும் இசையுடனும், எளிமையுடனும் எழுதியும், மனிதர் எளிமையாக வாழ்ந்தால்தான் மழை பொழியும் என்ற நிலையில் ஒரே வெண்ணிற ஆடை உடுத்தியும், காம, கோப, அகங்கார, ஆடம்பரம் போன்றவற்றை வெறுத்து ஆன்ம நேயத்தை கடைப்பிடித்தால் மனிதர் புனிதர் ஆகலாம் எனக்கூறியது மட்டுமல்ல கூறியவாறே நடந்து அருட்ஜோதி ஆனேன் என்றும் தன் நிலையை உயர்த்தியவர் வள்ளலார் என்பதை தாங்கள் மிக நுணுக்கமாக தங்களின் கட்டுரையில் பதிவு செய்ததற்கு மீண்டும் ஒருமுறை பல கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
- ஆர். சீனிவாசன்
விழுப்புரம் மாவட்ட அனைத்து சன்மார்க்க அன்பர்கள் சார்பாக

திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015 12:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.