எழுத்தின் சிகரத்தை எட்டியவர் ஜெயகாந்தன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 04 மே 2015 13:49

தமிழ் எழுத்தின் சிகரத்தை எட்டிய பெருமைக்குரியவர் நண்பர் ஜெயகாந்தன் ஆவார்.

அவருடைய படைப்புகளில் சமூகத்தின் போலியான மதிப்பீடுகள், கற்பிதங்கள், வரம்புகள் ஆகியவற்றை மிகக்கடுமையாக மதிப்பீடு செய்து தகர்த்தார்.

தனது எழுத்து, பேச்சு, செயற்பாடு ஆகிய அனைத்தையும் தமிழ் சமூகத்தின் மேம்பாட்டிற்காக முழுமையாக அர்ப்பணித்தார்.

இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இராசராசன் விருது, ரஷ்ய விருது, பத்மபூசண் விருது ஆகிய பல விருதுகளை குவித்த எழுத்தாளராக அவர் இருந்த போதிலும், விருதுகளை ஒரு பொருட்டாக அவர் என்றும் மதித்ததில்லை. அவற்றுக்கு மேலாக மக்கள்மனதில் நிலையான இடம்பெறுவதையே நோக்கமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றார்.

இலக்கிய உலகில் தான் வந்த நோக்கம் நிறைவேறிவிட்டதைப்போல் கருதி 1975ஆம் ஆண்டில் எழுதுவதையே நிறுத்திவிட்டார். ஆனால், அதற்குப் பிறகும் 40 ஆண்டு காலமாக சமூகம் அவரைப் பற்றிப் பேசியது. அவரைத் தொடர்ந்து படித்தது. இன்னும் பல நூறாண்டுகளுக்கு அவரைப்பற்றி தமிழ்கூறும் நல்லுலகம் பேசும், படிக்கும். அவரோடு எனக்கு ஏற்பட்ட நட்பு என்றென்றும் என்னால் மறக்க முடியாத நட்பாகும். புகழேணியின் உச்சியில் பெருந்தலைவர் காமராசர் இருந்தபோது அவரை அணுகாதவர், அவர் தோற்றபிறகு அவருக்கு பெருந்துணையாக நின்றார். அப்போது அவரும் நானும் நெருங்கிப் பழகினோம்.

கவியரசர் கண்ணதாசன், சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் ஆகியோர் தி.மு.க.வின் கவர்ச்சியில் மயங்கிக் கிடந்த மக்களை குறிப்பாக இளைஞர்களை, மாணவர்களை தெளிவித்து காமராசரிடம் கொண்டுவந்து சேர்த்தார்கள்.

தி.மு.க. ஆட்சியில் மதுரையில் என்மீது பொய் வழக்குப் போடப்பட்டு நான் சிறையில் அடைக்கப்பட்டபோது தென்மாவட்டங்களில் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகியோர் மக்களைத் திரட்டி மதுரையில் பல்லாயிரக்கணக்கானோர் கொண்ட மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தினர். பெருந்தலைவர் காமராசரும் அப் பேரணியில் பங்கேற்றார்.

மதுரையில் தேசிய திருவிழா என்ற பெயரில் காந்தி& காமராசர் பிறந்த நாள் விழாவில் 10 இலட்சம் மக்களைத் திரட்டி மாபெரும் மக்கள் திரள் விழா நடைபெற்றபோது எல்லாவகையிலும் தோள் கொடுத்து துணை நின்றவர் கள் கவிஞரும் சிறுகதை மன்னரும் ஆவார்கள்.

அவ்விழா குறித்து ஆனந்த விகடன் இதழில் ஜெயகாந்தன் எழுதிய கட்டுரையில் "இந்த மாபெரும் கூட்டத்தைத் திரட்டிய நெடுமாறனின் அயராத உழைப்பைப் பார்க்கும்போது காமராசர் இளமையில் இப்படித்தான் இருந்திருப்பார் எனத் தோன்றியது'' என்று குறிப்பிட்டு என்னைப் பெருமைப்படுத்தினார்.

கடந்த 8-4-2015 அன்று இரவு 9 மணிக்கு ஜெயகாந்தன் காலமான செய்தியறிந்தபோது அளவற்ற வேதனை அடைந்தேன். பெசன்ட்நகர் மின்சார சுடுகாட்டில் அவரது உடலுக்கு மாலை அணிவித்தபோது அந்த முகத்தில் காணப்பட்ட கம்பீரமும் ஞானச்செருக்கும் என்னைக் கண்கலங்க வைத்தன.

உலக அளவில் தமிழ் எழுத்துக்கு பெரும் மதிப்பையும் ஏற்பையும் தேடித்தந்த ஜெயகாந்தன் அவர்கள் மறைந்தபோது தமிழக அரசு முன்வந்து அவருக்கு அரசு மரியாதையை அளித்திருக்க வேண்டும்.
அவரது நூல்களை தேசிய மயமாக்கி ஒரு பெருந்தொகையை அவரது குடும்பத்தினருக்கு அளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என வற்புறுத்துகிறேன்.

திங்கட்கிழமை, 04 மே 2015 14:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.