காரைக்குடி - கோவிலூரில் அமைந்துள்ள , மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும், டி சி பி எல் இரசாயன ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் 05.05.2015 செவ்வாய் அன்று மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 400க்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,
தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர்கள் பரந்தாமன், மாறன், கண் இளங்கோ, மாநில துணைத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, அன்வர் பாலசிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் இராமன், மாவட்ட தலைவர் சோமசுந்தரம், இளைஞர் அணி மதிவாணன், ஞானம், ஆறுமுகம், மணி மற்றும் கோவிலூரைச் சேர்ந்த மகளிர் உரையாற்றினர்.
30 ஆண்டுகளுக்குமேல் கோவிலூரில் இயங்கிவரும், தனியாருக்குச் சொந்தமான இந்த ஆலை சோடியம் கைட்ரோ சல்பைட் என்ற இரசாயனப் பொருளை உற்பத்தி செய்கிறது. ஆலையின் கழிவு நீரால் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு நீர் ஆதாரமான சம்பை ஊற்று நீரை பெருமளவில் இந்த ஆலை பயன்படுத்துவதால், எதிர்காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். இப்பகுதியில் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக இருத்தல், தோல் நோய்கள், நுரையீரல் நோய்கள், புற்று நோய்கள் ஆகியவை ஆலைக் கழிவுகளால் ஏற்படுவதாக மக்கள் கருதுவதால், இதைப்பற்றி ஒரு ஆய்வு நடத்தப்படவேண்டும் என்று மக்கள் கோருகிறார்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கவேண்டும், ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடவேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
|