அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆவது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடுவதில் பா.ஜ.க.வும் காங்கிரஸ் கட்சியும் போட்டா போட்டியில் இறங்கியுள்ளன.
அம்பேத்கர் பிறந்த ஊரான மாவ்வில் இவ்விழாவைத் தொடக்கிவைத்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல்காந்தி பேசுகையில் "மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் ஆகிய முப்பெரும் தலைவர்கள்தான் நாட்டு மக்கள் அனைவருக்கும் சமஉரிமைகளைப் பெற்றுத் தந்தனர். அதே போல் சாதியம் நிர்மூலமாக்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவு இன்னும் நிறைவேறவில்லை. நாட்டில் சாதிவெறி தலைவிரித்தாடுகிறது. தலித்துகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டுவந்தவர் அம்பேத்கர். தனது சிந்தனையின் மூலம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான சாதியக் கட்டமைப்பை அம்பேத்கர் ஆட்டம் காணச் செய்தார்'' என முழங்கியுள்ளார்.
அவரது அன்னையும் காங்கிரஸ் தலைவியுமான சோனியாகாந்தி "டில்லியில் அம்பேத்கர் ஆய்வு மையம் ஒன்றை காங்கிரஸ் கட்சி நிறுவும். இந்த ஆண்டு முழுவதும் நாடெங்கும் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடத்தப்படும்'' என அறிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளது.
197 கோடி ரூபாய் செலவில் அம்பேத்கர் சர்வதேச மையமும், 99 கோடி ரூபாய் மதிப்பில் அம்பேத்கர் மணிமண்டபமும் டில்லியில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதியை தேசிய நட்புறவு மற்றும் சகோதரத்துவத் தினமாகக் கடைப்பிடிப்பதற்கு மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.
ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும் எதிர்க்கட்சியான காங்கிரசும் இப்போதாவது முன்வந்து அண்ணல் அம்பேத்கர் அவர்களைச் சிறப்பிக்க செய்துள்ள ஏற்பாடுகள் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும் என்பதில் ஐயமில்லை.
ஆனால், இந்து சமுதாய அமைப்பில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவும் அடிமைகளைப் போல நடத்தப்பட்ட பெண்களுக்கு சமஉரிமை அளிக்கவுமான சமுதாயப் புரட்சி சட்டத்தை சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் 1948ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த போது நடந்தது என்ன?
இந்து சட்டத் திருத்த முன்வடிவை 1948ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் கொண்டுவந்தார். கூட்டுக் குடும்பம், பெண்களுக்குச் சொத்துரிமை குறித்து இச்சட்ட முன்வடிவில் சொல்லப்பட்டிருப்பதைக் கண்டு பிற்போக்குவாதிகள் அதிர்ச்சியடைந்தனர். கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதே வேளையில் முற்போக்குச் சிந்தனை படைத்தவர்கள் இதற்கு ஆதரவாக அணிதிரண்டனர். காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவகையில் இந்து சமுதாயத்தின் அடிப்படைச் சட்டங்களைத் திருத்த வேண்டியது இன்றியமையாதது என அம்பேத்கர் கருதினார். அதே ஆண்டு நவம்பர் மாதம் இந்து சட்டத் திருத்த முன்வடிவு குறித்து 39 பக்கங்களில் ஒரு சிறு நூலை அவர் எழுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பினார். அவர் எதிர்பார்த்தபடி டிசம்பரில் நாடாளுமன்றம் இந்த சட்ட முன்வடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. காலம் செல்லச் செல்ல சமூகப் பிற்போக்குவாதிகள் இச்சட்டத்திற்குக் கடும் எதிர்ப்பைத் திரட்டினார்கள்.
1945ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்து சட்டத்திருத்தம் பற்றி எதுவும் சொல்லப் படவில்லை. ஆகவே, 1952ஆம் ஆண்டு நடைபெற விருக்கும் பொதுத்தேர்தலில் மக்களின் சம்மதத்தைப் பெற்றே இந்த சட்ட முன்வடிவை கொண்டு வரவேண்டும் எனப் பொருந்தாத வாதம் செய்தார்கள்.
இந்தியா-பாகிஸ்தான் என நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது குறித்தும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. மக்கள் சம்மதத்தையும் பெறவில்லை. நாட்டைப் பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் சம்மதம் அளித்தது ஏன்? என்ற கேள்விக்கு பிற்போக்காளர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறினார்கள்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளும் ஒருபிரிவினர் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பிரதமர் நேரு இதைக் கண்டு கடும் கோபம் அடைந்தார். இந்த சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றா விட்டால் தனது அரசு பதவிவிலகும் என எச்சரித்தார். ஆனால், துணைப் பிரதமரான சர்தார் வல்லபாய் படேல் இந்தச் சட்ட முன்வடிவிற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இராசேந்திர பிரசாத் போன்ற மூத்தத் தலைவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இச்சட்ட முன்வடிவை நிறைவேற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
1949ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று இந்துச் சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து பேசும்போது அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிட்டார்.
"இந்தச் சட்ட முன்வடிவை புரட்சிகரமான நடவடிக்கை என்று கூறமுடியாது. மேலும் இது அடிப்படையையே மாற்றியமைக்கிற கோட்பாடு என்றும் சொல்ல முடியாது. திருமண உரிமைகள், நீதிமன்ற திருமண இரத்து, தத்தெடுத்தல், வாரிசு நிலை போன்றவற்றில் தலைகீழ் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை. திருமணச் சட்டத்தைப் பொறுத்த வரையில் எந்த வகையான திணிப்பும் இல்லை. தருமத்தைப் பின்பற்றும் பழமைவாதிகள் சரியெனப்படுவதை செய்யலாம். ஆனால் தருமத்தைப் பின்பற்றாமல் மனசாட்சியையும், பகுத்தறிவையும் பின்பற்றும் சீர்திருத்தவாதிகள் அவர்களுக்குச் சரியெனத் தோன்றுவதைச் செய்துகொள்ளலாம். புதிய பாதையில் நடைபோடுகிறவர்களே இறுதியாக வெல்லுவார்கள் என நம்புவோமாக. மாபெரும் அரசியல் அறிஞரான பர்க் பிரெஞ்சுப் புரட்சிக்கு எதிரான தனது நூலில் பழமையைப் பாதுகாக்க விரும்புகிறவர்கள் பழுதுபார்க்கவும் தயாராக இருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். நானும் இந்த அவையில் கூறவிரும்புவது என்னவென்றால் இந்து அமைப்பு, இந்து கலாச்சாரம், இந்து சமுதாயம் ஆகியவற்றைப் பாதுகாக்க விரும்புவீர்களானால் பழுது பார்க்க வேண்டிய அவசியம் இருந்தால் ஒருபோதும் தயங்காதீர். சீர்குலைந்து போயிருக்கும் இந்து அமைப்பை பழுதுபார்க்கவே இந்த சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது'' என்றார்.
3 நாட்கள் காரசாரமான விவாதம் நடந்த பிறகு இதன் மீதான வாக்கெடுப்பு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திப்போடப்பட்டது. செப்டம்பர் 17ஆம் தேதியன்று இச்சட்டமுன்வடிவில் இருந்த திருமணம், திருமண விலக்கு ஆகிய பகுதிகள் மட்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
பா.ஜ.க.வின் முன்னோடி அமைப்பான ஜனசங்கத்தின் நிறுவனத் தலைவரான சியாமபிரசாத் முகர்ஜி இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினார். காங்கிரஸ் தலைவரான பண்டித மதன்மோகன் மாளவியாவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். பண்டித இருதயநாத் குன்ஸ்ரு, என்.வி.காட்கில் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசினர்.
பிரதமர் நேருவின் தலையீட்டின் பேரில் இச்சட்ட முன்வடிவில் திருமணம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை தனியாகக் கருதி செப்டம்பர் 19ஆம் தேதி அப்பகுதி மட்டும் நிறைவேற்றப்பட்டது. எஞ்சியுள்ள சட்ட முன்வடிவை நிறைவேற்றவிடாமல் எதிர்ப்பாளர்கள் தடுத்தனர். திருமணம், விவாகரத்துப் பற்றிய பிரிவுகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதைக் கண்டு பெரும் ஏமாற்றம் அடைந்த அம்பேத்கர் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனாலும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிற பணிகளை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்தின் நடப்புக்கூட்டம் முடியும் வரையிலும் பதவியில் இருக்க ஒப்புக்கொண்டார்.
1951ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது அவர் தனது பதவிவிலகுவதற்கான காரணத்தை அறிவிக்க இருந்தார். ஆனால், தலைமைவகித்த துணை அவைத் தலைவர் அவருடைய பேச்சின் நகலை முன்னதாகக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அந்த நிபந்தனையை ஏற்க மறுத்து அவையில் இருந்து அம்பேத்கர் வெளிநடப்புச் செய்தார். இதைக்கண்டு அவையில் இருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர். வெளியேறிய அம்பேத்கர் அவையில் கூறமுடியாததை பத்திரிகைகளின் மூலம் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தினார்.
"நமது நாட்டில் எந்தச் சட்டமன்றத்திலும் இதுவரை மேற்கொள்ளப்படாத மிகப்பெரிய சமூக சீர்திருத்த நடவடிக்கை இந்துச் சட்ட முன்வடிவாகும். கடந்த காலத்திலோ, எதிர்காலத்திலோ இதுபோன்ற முக்கியத்துவமான சட்டம் கொண்டு வரப்பட்டதில்லை. கொண்டுவரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்து சமுதாயத்தின் ஆன்மாவாக விளங்கும் சாதி ஏற்றத்தாழ்வுகள், ஆண், பெண் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைப் போக்காமல் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கச் சட்டங்கள் இயற்றுவது நமது அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயலாகும். சாணிக்குவியல் மீது மாளிகை கட்டுவதற்கு ஒப்பாகும்'' என்றார் அம்பேத்கர்.
இந்த சட்ட திருத்த முன்வடிவைப் பொருத்தவரையில் பிரதமர் நேரு இரண்டுங்கெட்டான் கொள்கையைக் கடைப்பிடித்ததாகவும். அதை நிறைவேற்றவேண்டும் என்ற உறுதியற்றவராக இருந்தார் எனவும் அம்பேத்கர் குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் முக்கியப் பத்திரிகைகள் அம்பேத்கரை மிகவும் பாராட்டித் தலையங்கங்கள் தீட்டின. பிற்காலத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த நீதிநாயகம் கஜேந்திர கட்கர் கர்நாடகப் பல்கலைக் கழகத்தில் பேசும்போது.
"இந்துக்களுக்கு அம்பேத்கர் வழங்கிய சட்ட முன்வடிவு வரலாற்றில் அழியாத இடம்பெறவேண்டிய சாதனையாகும். ஆனால் அவரை நவீன மனு என்று பாராட்டப்படும் நிலைமையை விதி அவருக்கு வழங்க மறுத்துவிட்டது'' என்று குறிப்பிட்டார்.
சாதி அடிப்படையிலும், ஆண், பெண் ஆகிய இருபாலர் அடிப்படையிலும் பாகுபட்ட நீதியை வழங்கிவந்த இந்துச் சட்டமானது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானது என்பதால் அம்பேத்கர் இந்துச் சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். அதை நிறைவேற்றவிடாமல் யார் யார் தடுத்தார்களோ,
யார் யார் அவர் பதவி விலகுவதற்குக் காரணமானவர்களோ, யார் யார் அவர் மனதை நோகடித்து பதவி விலக வைத்தார்களோ அவர்கள் இப்போது அம்பேத்கரைக் கொண்டாடுகிறார்கள். காலம் இதைக்கண்டு நகைக்கிறது.
- நன்றி : தினமணி 8-6-2015
|