ஈழத் தமிழர் துயர நிலை கண்ணீர் மல்கிய வெளிநாட்டவர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 ஜூலை 2015 13:33

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 28ஆவது கூட்டத்தினை ஒட்டி 'இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமைகள்' என்ற தலைப்பில் இணைக்கூட்டம் ஒன்று மார்ச் 25 அன்று ஐ.நா. அரங்கில் நடைபெற்றது. இதனை 'Ocaproce International' மற்றும் "தமிழ்ப் பெண்கள் மற்றும் பெரியோர்களை காப்போம்' ஆகிய அமைப்புகள் இணைந்து ஒழுங்கு செய்திருந்தன. இம்மாநாட்டிற்கு 'Ocaproce International' அமைப்பின் தலைவரும் காமரூன் நாட்டைச் சேர்ந்தவருமான இளவரசி மிசெலின் மகாவ் ஜüமா அவர்கள் தலைமையேற்றார். ""தமிழ்ப் பெண்கள் மற்றும் பெரியோர்களைக் காப்போம்'' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஜினி செல்லத்துரை, சென்னைப் பல்கலைக் கழகத்தின் அரசியல் துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அங்கயற்கண்ணி இறைக்குருவனார், தமிழகத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் உமாசங்கரி நெடுமாறன் ஆகியோர் இதில் பங்கேற்று இலங்கையில் வாழும் தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை குறித்த முக்கிய ஆவணங்களைப் பதிவு செய்தனர்.

 

இந்நிகழ்விற்கு பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும், ஐ.நா. மனித உரிமைக் குழுவின் பிரதிநிதிகளும் வந்திருந்து உரைகளை கவனமாகக் கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டனர். உமா சங்கரி நெடுமாறன் உரையாற்றியவுடன் மாநாட்டிற்குத் தலைமையேற்ற இளவரசி மிசெலின் மகாவ் ஜüமா அவர்கள் நெகிழ்ச்சியுடன் ""நீங்கள் எங்களை உருக வைத்துவிட்டீர்கள். உங்களின் பதிவு எங்களை நெகிழச் செய்துவிட்டது. மிகுந்த வேதனையாக உள்ளது. ஆனால் அந்த வேதனையுடன்தான் நாம் இணைந்து மனித உரிமைகளுக்காகப் போராட வேண்டும்'' என்று குறிப்பிட்டார். நிகழ்வு முடிந்தவுடன் ருவாண்டா நாட்டின் பிரதிநிதி தன்னை உமாசங்கரி நெடுமாறனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அவரது கைகளைப் பிடித்து கண்ணீருடன் ""உங்கள் வேதனையை நாங்கள் அறிவோம். நாங்களும் இனப்படுகொலை எனும் இந்த வேதனையை அனுபவித்துள்ளோம். அதனால் உங்கள் வலியை எங்களால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் உரை உங்களது மக்களின் வலியை நன்கு உணரச் செய்வதாக இருந்தது. உங்களுக்காக எங்கள் குரலும் இணைந்து ஒலிக்கும்'' என்றார்.

வெள்ளிக்கிழமை, 03 ஜூலை 2015 22:07 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.