ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருள்அகற்றும் - ஆங்கவற்றுள் மின்ஏர் தனிஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது தன்னே ரிலாத தமிழ் - தண்டியலங்காரம் எடுத்துக்காட்டுப் பாடல்
புற இருளை நீக்குவது கதிரவன். அக இருளை நீக்குவது தமிழ் என்ற நிலையில், கதிரவனோடு இணைத்துத் தமிழைப் பேசுகிறது இப்பாடல். கதிரவனைப் போன்றது தமிழ். கதிரவன் என்றும் இருக்கும். தமிழும் என்றும் இருக்கும். கதிரவன் புறஇருளை மட்டும் நீக்குவான். தமிழ் அகஇருளை நீக்கும். தமிழின் வயது என்ன? தமிழ் இலக்கியங்களின் வயது என்ன? என்ற கேள்விகளைக் கேட்டால், அதற்கு விடை தொல்காப்பியத்தில் உள்ளது. தொல்காப்பியம் இன்று கிடைக்கின்ற நூல்களில் முதல்நூல். முதன்மையான நூல். எழுத்து, சொல், பொருள், என்ற முப்பொருள் கூறும் நூல் தொல்காப்பியம் போன்று ஒரு இலக்கண நூல் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முன்பு தமிழில் மிகுதியான இலக்கியங்கள் இருந்திருத்தல் வேண்டும். இலக்கியச் சுவையைக் கூட்டுவதற்குத் தொடை வகைகள் உதவுகின்றன. தொடை என்பது தொடுக்கப்பெறுவது. சொற்கள் தொடுக்கப்பெறுகின்ற நிலையில் சுவை மிகுதியாகும். முதல் எழுத்துக்கள் ஒன்றிவருவது மோனைத் தொடை. இரண்டாவது எழுத்துக்கள் ஒன்றி வருவது எதுகை. இவ்வாறே தொடை வகைகள் மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை எனப் பலவகைப்படும். மொத்தத் தொடை வகைகள் 13699. அதில் மோனை 1019, எதுகை 2473, முரண் -சொல் முரண், பொருள் முரண் என இருவகைப்படும். இயைபு 182. அளபெடை. 159, பொழிப்பு 654, ஒருஉ 654 செந்தொடை 8556. ஆகத் தொடை வகைகள் 13699. இங்கு செந்தொடை தவிர ஏனைய தொடைகளுக்கு அமைப்பு உண்டு. ஆனால், செந்தொடைக்கு இதுபோன்ற அமைப்புக் கிடையாது. மேற்கூறிய தொடைகள் வராமல் அமைவது செந்தொடை, செந்தொடை வகைகள் மிகுதியாக இருப்பதால், அதற்கு இலக்கியங்கள் மிக மிகுதியாக இருந்திருத்தல் வேண்டும். அதனால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகச்சிறந்த இலக்கியங்கள் தமிழில் இருந்திருத்தல் வேண்டும். இலக்கியங்கள் தோன்றி வளர்வதற்குப் பத்தாயிரம் ஆண்டுகளாவது ஆகலாம். ஆனால் ஒரு மொழி தோன்றிப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தான் எழுத்தே தோன்றும். இன்று உலக மொழிகள் பலவற்றிற்கு வரிவடிவங்கள் இல்லை. வரிவடிவங்கள் தோன்றி, நாட்டார் இலக்கியங்கள் போன்று பேச்சு வழி இலக்கியங்களாகிய விடுகதை, பழமொழி, நாட்டார் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள் இவையெல்லாம் தோன்றிய பின்புதான் எழுத்து இலக்கியம் தோன்ற முடியும். அதனால் பொதுநிலையில் தமிழ் மொழியின் வயது நாற்பதாயிரம் ஆண்டுகள் வரை இருக்கலாம். தமிழ் இலக்கியங்களின் வயது பத்தாயிரம் ஆண்டுகளாவது இருத்தல் வேண்டும். இல்லையெனில், தொடை பற்றிய நூற்பா உருவாக முடியாது. மெய்பெறு மரபின் தொடை வகைதாமே ஐஈர் ஆயிரத்து ஆறுஐஞ் நூற்றொடு தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே. (தொல். 1358) தமிழ்மொழி மிகத் தொன்மையானது என்பது ஐயமில்லை. இந்திய மொழிகளில் தோன்றிய இலக்கண நூல்களில் முதல் நூலாக, முதன்மையான நூலாக அமைந்தது தொல்காப்பியம், வடமொழி இலக்கண நூலாகிய பாணினி எழுதிய அஷ்டாத்தி யாயி (8 அத்தியாயங்களை உடையது) என்ற இலக்கண நூலுக்கும் முந்தியது. தமிழில் பொருள் இலக்கணம் என்பது தனித்தன்மை உடையது. உலக மொழிகளில் பொருள் இலக்கணம் உடைய மொழி தமிழ் மட்டுமே. ஒழுக்க அடிப்படையில் உயர்திணை, அஃறிணை என்று இருபிரிவினை அமைத்துக் கொண்டது தமிழ் மட்டுமே. உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே ஆ இரு திணையின் இசைக்குமன் சொல்லே (தொல். 484) உயிர்களின் வகைகளைக் கூறும்போது ஆறு வகைப்படும் என்று தொல்காப்பியர் கூறுகிறார். அதில் ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே (தொல். 1526) என்பது நூற்பா. ஆறு அறிவு உடைய மனம் உடையது மனிதம். அதனால்தான் மனிதம், மக்கள் உயர்திணை ஆகின்றது. ஏனைய உயிர்கள் அனைத்தும் உயர்வு அல்லாத திணை. அதாவது அல் திணை-அஃறிணை என்று குறிப்பிடுகின்றார். தற்கால ஆய்வு நிலையின்படி, தொல்காப்பியம்தான் உலக இலக்கணங்களில் முதல் இலக்கண நூலாக அமைகின்றது. கடல்கோள்கள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை என்ற தனித்தீவு இருந்ததா? என்பது பெருங்கேள்வி. தமிழகத்தோடு இணைந்திருந்தது. தமிழகத்தில் கடல்கோள்கள் நிகழ்ந்த காரணத்தால் இடையில் பிரிவு ஏற்பட்டு, இலங்கை தனித் தீவு ஆகியிருக்கலாம்.
மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வெளவலின் மெலிவின்றி மேற்சென்று, மேவார்நாடு இடம்படப் புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினால் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய நல்லினத்து ஆயர் ஒருங்குதொக்கு எல்லாரும் (கலி. 104. 1-6). சிலப்பதிகாரத்தில் கடல்கோள்...
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி (சிலம்பு. 11. 19-22) அடியார்க்கு நல்லார் உரை:
தொடக்கத்தில் குமரி மலை இருந்தது.பின்பு, குமரி ஆறு ஆயிற்று. கடல்கோள்களால் குமரி கடலாயிற்று.
அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னுமாற்றிற்கும் குமரியென்னுமாற்றிற்கு மிடைய எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர் மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும். ஏழ்மதுரை நாடும் ஏழ் முன்பாலை நாடும் ஏழ் பின்பாலை நாடும் ஏழ்மதுரை நாடும் ஏழ்காரை நாடும், ஏழ்குறும்பனை நாடுமென்னும் இந்த நாற்பத்தொன்பது பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பெளவமென்றாரென்றுணர்க. இஃது என்னை பெறுமாறெனின், வடிவே லெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள (11. 18-20) என்பதனாலும், கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரையானும், பிறவாற்றானும் பெறுதும்.
தொப்பூள் கொடி அறுபட்ட பிறப்பில் ஒலித்த குரல் புலம் பெயர் ஈழ இலக்கியத்தை முன்வைத்து... - ஹெச். ஜி. ரசூல்.
தெற்கு ஆசியப் பகுதி இலங்கையில் வாழும் பூர்வீக இனமக்கள் ஈழத்தமிழர். கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து வடபகுதியான யாழ்ப்பாண அரசாட்சி காலத்தில் தொன்மையாக வாழ்ந்த தமிழ்ப்பேசும் மக்கள். அப்போது கிழக்கில் வன்னி அரசாட்சியும் இருந்துள்ளது.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே அனுராதபுரம், ராஜரதா பகுதிகளில் மக்கள் பேசிய பிரகிருதி மொழி வடிவத்தில் தமிழாஸ் அல்லது தமிடாஸ் (Damelas or Damedas) சொற்களுக்குமான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
தற்போதைய புத்தக்கோவிலாகக் கருதப்படும் அனுராதபுரத்திலுள்ள டகினதுபா இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் மன்னன் ஈழரா (Elara) வின் சமாதியே என்ற அடையாள விவாதக் குறிப்பும் உண்டு. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த பாலி மொழி வரலாற்றுக் காவியமான மகா வம்சத்தில் ஈழரா தமிழ் இன மரபு பற்றிய குறிப்புகள் உள்ளன.
கி.பி. 2ஆம் நூற்றாண்டு சார்ந்த மட்பாண்ட சிதிலங்களின் அகழ்வாராய்ச்சி பூணகிரி, யாழ்ப்பாணத்தில் தமிழ் எழுத்துக்கள் கிடைத்துள்ளதாகக் கூறுகின்றன. இங்கு கிடைத்த குலப் பெயரான வேள (Vela) புராதன தமிழகத்தின் வேளிர் (Velir) பெயரோடு தொடர்புடையதாக உள்ளது. கி.மு. மூன்று முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குட்பட்ட சங்ககால தமிழ் இலக்கியத்தில் ஈழத்துபூதன் தேவனார் (Elathu poothan tevanar) வாழ்ந்த குறிப்பும் உள்ளது.
எட்டாம் நூற்றாண்டின் அகழ்வாராய்ச்சியில் தமிழ் ஒதுக்கீட்டு குடியிருப்புகள் (Demel Kaballa) தமிழ் கிராமங்கள் (Demelart Valodemin) தமிழ் கிராமம், நிலம் (Demel - gem - bim) பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. 9-10ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்திய பாண்டிய சோழ மன்னர்களின் ஆட்சியும் நடைபெற்றுள்ளது. இக்காலக்கட்டத்து தமிழ் இலக்கியங்கள் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த வடக்கு கிழக்குப் பகுதி நிலப்பரப்பை ஈழம் என்று குறிப்பிடுகின்றது.
இலங்கைத் தீவில் மன்னன் விஜயாவின் முதன்முதல் அரசாட்சி கி.மு. 486களில் நடந்துள்ளது. இது இத்தீவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் சிங்களவர்அரசாட்சியாக உருவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக மன்னன் (Dutugemunu) வடபகுதியை ஆண்ட தமிழ் மன்னரான ஈழராவை தோற்கடித்து அந்த ஆடசிப் பகுதியை ஆக்ரமித்த வரலாறும் இதற்குண்டு. இதன்பின்னரே ஒரு சிங்கம் தன் வலது முன்காலில் ஒருவாளை ஏந்தியும், கூடவே சூரியன், சந்திரன் குறியீடுகளும் உள்ள சிங்கள இனத்திற்கான கொடியும் உருவாக்கப்பட்டது. சின்ஹா (Sinha) ஹீல (Hela) சொல்லாக்கங்களிலிருந்து சிங்களவர் என்பது சிங்கத்தின் மக்கள் என்ற பொருளாக்கத்தை கொண்டுள்ளது. இதன் எதிர்விளைவுதான் சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான தமிழ்ப் போராளிகளின் அடையாளமாக புலிகள் சொல்லாடல் முன்வந்தது. தமிழக பாரம்பரிய சோழர்களின் ஆட்சியும் புலிக்கொடியும் இதன்மூலம் வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
|