வானினும் கடலினும் பெரியர் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:35

"கானினும் பெரியர் ஓசைக் கடலின் பெரியர் சீர்த்தி
வானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ'' - என கம்பன் பாடினான்.

அடர்ந்த மரங்களின் நெருக்கத்தால் காடு பெரியது, நீர்ப்பெருக்கத்தால் கடல் பெரியது. எல்லை காண முடியாத விரிந்த வானம் பெரியது. அளவற்ற உயரத்தால் மலை பெரியது இவ்வனைத்தையும்விட ஆன்றவிந்து அடங்கிய சான்றோர் மிகப்பெரியவர்கள் என்பது கம்பனின் பாடலின் பொருளாகும்.

அப்துல் கலாம் கான், வான், கடல், மலை ஆகியவற்றைவிட மிகப்பெரியவர் என்பதை அவருடைய மறைவு கண்டு கண்ணீர் சிந்திய மக்களின் பெருங்கூட்டம் நிலைநிறுத்திவிட்டது.

அப்துல்கலாம் எந்த அரசியல்கட்சியுடனோ, இயக்கத்துடனோ தன்னைப் பிணைத்துக்கொண்டது கிடையாது. அவருக்கு எந்தக் கட்சியும் பின்புலமாக இருந்ததில்லை. பின் அவருக்கு மக்கள் செல்வாக்கு எப்படி ஏற்பட்டது?

விஞ்ஞானிகள் குறித்து மக்கள் அறிவதற்கு அவ்வளவாக விரும்புவதில்லை. அப்படியே இருந்தாலும் அவர்களது சாதனைகளைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வரும்போது மட்டுமே அறிவார்கள்.

ஆனால் கடைக்கோடியில் உள்ள ஒரு ஊரில் பிறந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தது நம்ப முடியாத ஒன்றாகும். அதைவிட முக்கியமாக அவர் பதவியில் இருந்த போதும் இல்லாதபோதும் மாணவர்களும் இளைஞர்களும் அவரை மிகவும் நேசித்துக் கொண்டாடினார்கள். இமயம் முதல் குமரி வரை உள்ள மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுபவராக, வழிகாட்டுபவராக உந்து சக்தியாக அப்துல்கலாம் திகழ்ந்தார்.

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது'' என்ற பழமொழியை அவர் நன்கு அறிந்திருந்தார். எனவேதான் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உணர்வூட்டுவதின் மூலமே நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாகத் திகழும் என்பதை உணர்ந்திருந்தார்.

இந்தியக் குடியரசின் தலைவராகப் பதவி வகித்தவர்கள் யாருக்கும் கிடைக்காத மக்கள் செல்வாக்கு அப்துல்கலாம் அவர்களுக்குக் கிடைத்தது. பதவியில் இருந்தபோதைவிட பதவியை விட்டு இறங்கிய பிறகு அவர் மாபெரும் மக்கள் தலைவராகத் திகழ்ந்தார்.

இனம், மொழி, மதம், சாதி, வேறுபாடுகளையும் செல்வ-ஏழை, படித்தவர்-பாமரர், பெரியவர்கள் - இளைஞர்கள் என்ற வேறுபாடுகளையும் மீறி அனைவராலும் மதித்துப்போற்றப்பட்ட மாமனிதர் அப்துல்கலாம்.

இந்திய விண்வெளித் துறை, அணு ஆயுதம், அணுசக்தித் திட்டம் ஆகியவற்றில் அவர் ஆற்றியப் பணிகள் அளப்பரியதாகும்.

விண்வெளி தொழில்நுட்பத்திலும் அதைத் தொடர்பான ஆய்விலும் உலக அரங்கில் பெருமைமிக்க ஒரு இடத்தை இந்தியாவுக்குப் பெற்றுக் கொடுத்தார்.

தனது அளப்பரிய சாதனைகள் மூலம் உலக நாடுகள் அனைத்தையும் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் அவர். பாதுகாப்புத் தொழில் நுட்பங்களில் இந்தியா தன்னிறைவுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் அவர்.

1998ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி அமெரிக்க செயற்கைக்கோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பொக்ரான் அணு ஆயுதச் சோதனைகளை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். இதன் விளைவாக உலக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. 1950களில் தொடங்கி 2000 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஒரு வல்லரசாக அமெரிக்கா கருதவில்லை. ஆனால் அணு ஆயுத சோதனைக்குப் பிறகு அமெரிக்காவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அப்துல் கலாம் வெடித்த அணுகுண்டு பிறநாடுகளை இந்தியாவை மதிக்க வைத்தது.

நாட்டின் பாதுகாப்பு குறித்த ஆய்வுகள் எதிரிகளைக் கொல்வதற்காக மட்டுமல்ல, மக்களின் உயிர்களைக் காப்பதற்காகவும் இருக்க வேண்டும் என கருதினார். எனவேதான் இருதய நோய் நிபுணரான சோமராஜு என்பவருடன் இணைந்து சுருங்கிய இரத்தக் குழாயை மீண்டும் சுருங்காமல் தடுக்கும் உலோகச் சுருளைக் கண்டுபிடித்தார். ஏவுகணைக்குப் பயன்படுத்தப்படும் கனம் குறைந்த உலோகத்தினால் இது ஆக்கப்பட்டதாகும். இரண்டரை இலட்ச ரூபாய்க்கு மேல் இருந்த இந்த உலோகச் சுருள் 10 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்க வழிவகுத்தவர் அப்துல் கலாம்.

கை, கால் ஊனமுற்றவர்களுக்கு பயன்படுத்தப் படும் செயற்கை கருவிகள் மெல்லிய உலோகத்தினால் செய்யப்பட வேண்டும் என கருதினார். அவ்வாறே செய்து குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்தார்.

தனக்கு அனுப்பப்படும் தமிழ் நூல்களை படித்து தன் கருத்தை கடிதத்தின் வாயிலாக அந்நூல்களின் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க நேரத்தை அவர் ஒதுக்கியிருந்தார்.

என் மகள் பூங்குழலி "தொடரும் தவிப்பு' என்ற தலைப்பில் எழுதிய நூலை அவருக்கு அனுப்பியிருந்தாள். ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவளின் குடும்பங்களின் பரிதவிப்பையும் அந்த வழக்கு நடைபெற்ற விதத்தையும் கதைபோல எழுதியிருந்தாள். முன்பின் அறியாத சிறு பெண் ஒருத்தி எழுதிய நூலை அவர் படித்துவிட்டு பின்வருமாறு ஒரு கடிதத்தை அவளுக்கு அனுப்பினார்.

செல்வி பூங்குழலி அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களது கடிதம் கிடைத்தது நன்றி.
தங்களது "தொடரும் தவிப்பு' புத்தகத்தில் 123 - 124வது பக்கங்கள் நன்றாக எழுதப்பட்டு உள்ளது.
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
(ஆ.ப.ஜெ. அப்துல்கலாம்)

கீழ் நீதிமன்றத்தில் 26 பேருக்கும் தூக்குத் தண்டனை ஒட்டுமொத்தமாக விதிக்கப்பட்டதை மேற்கண்டப் பக்கங்கள் விவரிக்கின்றன. என் மகள் அந்தக் கடிதத்தை என்னிடம் கொடுத்தப்போது திடுக்கிட்டுப்போனேன். மரண தண்டனை குறித்த அவரது கருத்தை மறைமுகமாக அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். எனவே இக்கடிதத்தை வெளியிட வேண்டாம். யாருக்கும் கூறவேண்டாம் என்று அவளிடம் நான் கூறினேன். குடியரசுத் தலைவராக உள்ள ஒருவரைப் பற்றி தேவையற்ற வாதப் பிரதிவாதங்கள் எழவேண்டாம் என்பதற்காகவே அக்கடிதத்தை இதுவரை வெளியிடவில்லை. அவர் பதவியில் இருந்த காலம் வரை தனக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்களில் எந்த முடிவும் எடுக்காமல் கட்டிவைத்து தன்னுடைய மாந்தநேயத்தை வெளிப்படுத்தினார்.

தனது தாய்மொழியான தமிழ் மீது அளவற்றப் பற்றுக் கொண்டவர். தமிழில் பேசுவதையும் அதன் புகழைப் பரப்புவதிலும் முன் நின்றார். தமிழைப் பேசத் தவறினால் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்துவிடுவார்கள் என்பதை செல்லுமிடமெல்லாம் வலியுறுத்தினார்.

"தொழில்புரட்சி முதல் அறிவியல் புரட்சி வரை எந்த மொழியினரால் நடத்தப்படுகிறதோ அந்த மொழியே ஆதிக்கம் பெறுகிறது. அவ்வாறு ஆதிக்கம் பெறும் மொழி வழக்கு மொழியாகி அது பின்னர் வாழ்வியல் மொழியாக மாறுகிறது. எனவே தமிழ் பேசலாம், கேட்கலாம், எழுதலாம், படிக்கலாம் என்ற நிலை மாறி வாழ்வின் அனைத்துத் தேவைகளுக்கும் தமிழைப் பயன்படுத்தலாம் என்ற நிலை என்று வருகிறதோ அன்றைக்குத்தான் தமிழ் வளரும்.

தமிழர்களின் கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல், மின்னியல், கணிதம், நீதி, வங்கித் துறைச் செயல்பாடுகள், அரசியல், திரைப்படம், ஊடகங்கள் என அனைத்திலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தி அதைப் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் மட்டுமே தமிழ் மேன்மேலும் செழித்து வளரும். மேலே கண்ட துறைகளில் தமிழைக் கொண்டுவர தேவையான தமிழ்ச்சொற்களை உருவாக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் உள்ள பாடப்புத்தகங்களை, உலக மொழிகளில் வெளிவரும் ஆராய்ச்சி நூல்களை அதன் செழுமை மாறாமல் தமிழ் மொழியில் மாற்றம் செய்ய வேண்டும். முதலில் தமிழ்மொழியில் உயர் கல்வியை கற்பிக்கச் செய்து அதன் பிறகு ஆராய்ச்சியை நமது மொழியிலேயே மேற்கொள்ள வேண்டும்.

ஆட்சி அதிகாரத்திலும், சட்டம், நீதித் துறையிலும் தமிழ்மொழியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். தமிழ் நூல்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதோடு, மற்ற மொழிகளின் நூல்களை தமிழில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிடவேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருக்குறளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என அறிவுரை கூறினார். முயற்சி உழைப்பு ஆகியவற்றைக் குறள் வழியில் நின்று செயல்படுத்தியதால்தான் தன்னுடைய வாழ்வில் பல்வேறு சாதனைகளைப் புரிந்ததாக அவர் கூறினார்.

குமரி மாவட்டத் தமிழர்கள், அளித்த திருவள்ளுவர் சிலையை குடியரசுத் தலைவர் மாளிகையில் முக்கியமான இடத்தில் நிறுவினார். அம்மாளிகையின் வரவேற்பறையில் திருக்குறள் பெரிதாக தெரியும்படி டிஜிட்டல் பலகையை மாட்டி வைத்தார்.

அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களிடையே உரையாற்றும்போது அப்துல்கலாம் "1940இல் 5ஆம் வகுப்பில் நான் படித்துக்கொண்டிருந்தபோது இராமேசுவரத்தில் தங்கியிருந்தவரும் தமிழீழத்தைச் சேர்ந்தவருமான கனகசுந்தரம் அடிகளார் என்ற துறவியிடம் ஒவ்வொரு நாளும் காலையில் 5 மணிக்குச் சென்று கணிதம் படித்தேன். கனக சுந்தரம் அடிகளாரிடம் நான் கற்ற கணிதப் பாடமே எனது அறிவியலின் தொடக்கமாகும். எனவே தமிழீழத்திற்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். என்று குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் தமிழின் பாரம்பரிய பெருமை குறித்துப் பேச அவர் ஒருபோதும் தவறியதில்லை.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்'' என்று தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக மக்களை உறவுகளாக கருதியுள்ளனர் என்பதை செல்லுமிடமெல்லாம் கூறியுள்ளார்.

2020ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா என்பதற்கான திட்டத்தை தயாரித்தார். கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக நகரங்களை நாடிவருவதற்கு காரணம் என்ன? நவீன வேலைவாய்ப்பு கிராமங்களில் இல்லை. எனவே அவர்கள் நகரங்களைத் தேடி வருகிறார்கள். எனவே ஒவ்வொரு கிராமத்திலும் மின்சாரம் தொலைப்பேசி தொடர்பு, பிராட்பேண்ட் இண்டர்நெட் இணைப்பு ஆகியவை அமைக்கப்பட்டால் இளைஞர்கள் கிராமங்களில் இருந்தே உலக நாடுகளுடன் தொடர்பு கொள்ள முடியும். இந்த நிலை உருவாக்கப்பட வேண்டும் என அவர் விரும்பினார். இதன் மூலம் மட்டுமே இந்தியா வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை சுட்டிக்காட்டினார்.

தான் பிறந்த தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறைகொண்டிருந்தார். தமிழ்நாடு - தொலை நோக்கு 2030 என்ற ஒரு திட்டத்தை வகுப்பதில் ஈடுபட்டிருந்தார்.
நாடெங்கும் குறுக்கும் நெடுக்குமாக இடைவிடாமல் பயணம் செய்து இளைஞர்களையும் மாணவர்களையும் தட்டி எழுப்பினார். அந்த முயற்சியிலேயே தனது உயிரை அவர் தியாகம் செய்தது. மக்கள் அனைவரையும் நெகிழவைத்துவிட்டது.

உலகம் முழுவதும் சுற்றிச் சுழன்ற அப்துல்கலாம் தான் பிறந்த மண்ணை ஒருபோதும் மறக்கவில்லை. அந்த மண்ணிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டபோது பிரதமரும், மத்திய அமைச்சர்களும், மாநில முதல்வர்களும் அமைச்சர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும் பல இலட்சம் மக்களும் எத்தகைய வேறுபாடும் இன்றி ஒருங்கே அவரது இறுதிச் சடங்கில் பங்குக்கொண்டது அவரது மக்கள் செல்வாக்கிற்கு எடுத்துக்காட்டாகும்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.