விதைக்கப்பட்ட சசிபெருமாள்-புரட்சியாக வெடிப்பார்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:42

சமூகச் சீரழிவிற்குக் காரணமான மது என்னும் கொடிய அரக்கனை எதிர்த்து காந்தியவாதியான சசிபெருமாள் தன்னுடைய வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடி அந்தப் போராட்டத்திலேயே தன்னுடைய உயிரையும் தியாகம் செய்து மறைந்தார். இந்நிகழ்ச்சி தமிழக மக்களை மிகவும் நெகிழவைத்துள்ளது. வெடிமருந்து நிரம்பிய கிடங்கின் மீது தீப்பொறி விழுந்தால் என்னாகுமோ- அதைப்போல தமிழகம் எங்கும் சசிபெருமாளின் உன்னத உயிர்த் தியாகத்தின் விளைவாக மக்கள் போராட்டம் வெடித்தது.

சங்க காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் கள் குடிப்பது இருந்திருக்கிறது. ஆனாலும் திருக்குறள் மற்றும் நமது இலக்கியங்கள் அனைத்தும் கள்ளுண்ணா மையை வலியுறுத்தியே வந்திருக்கின்றன. அதன் விளைவாக மது குடித்தல் என்பது ஒழுக்கக்கேடாக மக்களால் கருதப்பட்டது. குடிப்பவர்கள்கூடப் பிறருக்குத் தெரியாமல் குடித்தார்கள். அவர்களைச் சமூகம் இழிவாக மதித்தது.

ஆனால் அந்நியரான ஆங்கிலேயர் ஆட்சியில் அரசுக்கு வருமானம் ஈட்டும் ஒரு கருவியாகவும், அதே வேளையில் மக்களை மது மயக்கத்தில் ஆழ்த்தித் தங்களுக்கு எதிராகப் போராடாமல் வைக்கும் உத்தியாகவும் மதுவைக் கருதினார்கள். 1790ஆம் ஆண்டில் அப்காரி சட்டத்தை ஆங்கிலேயர் ஆட்சி கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி மதுவகைகளைத் தயாரித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கான உரிமைகள் ஏலம் விடப்பட்டு, அதிகத் தொகை செலுத்துப வருக்கு வழங்கப்பட்டன. மக்கள் தொகை அதிகம் உள்ள எல்லாப் பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டும் என 1859ஆம் ஆண்டு வைசிராய் உத்தரவு பிறப்பித்தார். இதன் விளைவாகச் சாராய ஆலை அதிபர்கள் பெருகி மதுவை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடவைத்தனர். அரசின் கருவூலம் மட்டுமல்ல, சாராய அதிபர்களின் கருவூலங்களும் நிரம்பி வழிந்தன. இதன் விளைவாக ஏழை எளிய மக்கள் மேலும் ஏழைகளானார்கள். அவர்களுடைய குடும்பங்கள் பசியாலும் பட்டினியாலும் வாடித்துடித்தன.

ஆங்கிலேய ஆட்சியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாகக் கள்ளுக்கடை மறியலைக் கொண்டுவந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்களின் ஈரோட்டு மாளிகையில்தான் மதுவிலக்குத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைப்பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தை காந்தியடிகள் கூட்டினார். அங்குதான் "கள்ளுக்கடை மறியல் செய்வது'' என காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர்.

பெரியார் ஈ.வே.ரா. அவர்களும் அவருடைய துணைவியார் நாகம்மை, தங்கை கண்ணம்மாள் ஆகியோரும் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுச் சிறைசென்றனர். இச்செய்தி காந்தியடிகளின் உள்ளத்தை நெகிழ்வித்தது.

1922ஆம் ஆண்டு சனவரி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்துவது குறித்து மதன்மோகன மாளவியா, சங்கரன்நாயர் ஆகியோர் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர். பம்பாயில் காந்தியடிகளுடன் அவர்கள் பேசியபோது காந்திய டிகள் "கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டில் உள்ள இரு பெண்மணிகளிடம்தான் உள்ளது. அவர்களைக் கேட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்று கூறினார். காந்தியடிகள் குறிப்பிட்ட இரண்டு தாய்மார்களும் தங்களின் தியாகத்தினால் தமிழகத்திற்குப் பெருமை தேடித்தந்தனர்.

1937ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இராஜாஜி பொறுப்பேற்றபோது மதுவிலக்கை அமல்நடத்துவதில் தீவிரமாக முனைந்து முதலில் அக்டோபர் 2ஆம் தேதி சேலம் மாவட்டம் முழுவதிலும் பிறகு மற்ற மூன்று மாவட்டங்களிலும் மதுவிலக்கைக் கொண்டுவந்தார்.

சுதந்திர இந்தியா மதுவற்ற நாடாக இருக்க வேண்டும் என காந்தியடிகள் விரும்பினார். அவரின் விருப்பத்தை மதிக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் அரசுக்கான வழிகாட்டும் நெறிகளின் 47ஆவது பிரிவில் "உடலை கெடுக்கும் மதுவையும், போதை மருந்துகளையும், மருத்துவம் நீங்கலாக ஏனைய நோக்கங்களுக்குப் பயன்படுத்தாமல் இருக்க மதுவிலக்குக் கொள்கையை நம்முடைய அரசுகள் கடைப்பிடிக்க வேண்டும்'' என கூறப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் 1948ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் பூரண மதுவிலக்கைக் கொண்டுவந்தார். அது காமராசர், பக்தவத்சலம் ஆட்சிக்காலம் வரையிலும் தொடர்ந்தது.

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரான பிறகு 1968ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் பின்வருமாறு அறிவித்தார்: "பொருளாதாரக் காரணங்களுக்காக மதுவிலக்கை இரத்து செய்யலாம் என்ற கருத்து சொல்லப்பட்டபோது அப்படிச் செய்வதால் கொட்டக்கூடிய பணத்தில் பிணைந்து கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் ஏழை எளிய பெண்களின் முகங்களே என் கண்களுக்குத் தெரிகிறது. எனவே ஒருபோதும் அந்தத் தவற்றைச் செய்யமாட்டேன்,'' என உறுதிபடத் தெரிவித்ததோடு நிற்கவில்லை. அவர் முதலமைச்சர் பதவியிலிருந்த காலம் வரை மதுவிலக்கை இரத்து செய்யவில்லை.

பெரியார், அண்ணா ஆகியோரைப் பின்பற்றுவதாகக்கூறும் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் 1971ஆம் ஆண்டு மதுவிலக்கு இரத்துச் செய்யப்பட்டது. 23 ஆண்டுக் காலமாக தமிழகத்தில் மது என்றால் என்னவென்பதை அறியாத தலைமுறையினருக்கு மதுவை அறிமுகப் படுத்தியவர் கருணாநிதி ஆவார்.

இதன் விளைவாகத் தமிழக இளைய தலைமுறையினர் குடித்துச் சீரழிவதைக் காணச் சகியாத தலைவர் காமராசர் 1973ஆம் ஆண்டில் அக்டோபர் 8 முதல் 12 வரை ஐந்து நாட்களுக்கு மதுவுக்கு எதிரான மறியல் போராட்டத்தில் காங்கிரசுக்காரர்கள் ஈடுபடுவார்கள் என அறிவித்தார். இப்போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரசுத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். திருச்சி மத்திய சிறையில் காங்கிரசு தொண்டரான இராசாங்கம் உயிரிழந்தார். இதன் விளைவாக நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இப்போராட்டத்தின் விளைவாக 1974ஆம் ஆண்டு மதுவிலக்கைக் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஏற்பட்டது.

1981ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் மதுவிலக்கு இரத்துச் செய்யப்பட்டு இன்றுவரை தொடர்கிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே பெரும்பாலும் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை திறக்கும் உரிமைகள் வழங்கப்பட்டன.

2003ஆம் ஆண்டில் மதுபானக் கடைகளை அரசே ஏற்று நடத்தும் முடிவு அறிவிக்கப்பட்டது. தமிழக நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை 7323 (டாஸ்மாக்) மதுக்கடைகளும், 4229 பார்களும் திறக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாகத் தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை பெருகியது. அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

ஆனால், மக்களைக் குடிகாரர்களாக்கி அவர்களின் மடியிலிருந்து பிடுங்கியெடுக்கும் பணத்தின் மூலம்தான் அரசு நடத்த முடியும் என்பதைவிட அந்த அரசே இல்லாமல் போவதுதான் நல்லது.

மதுக் குடிப்பதும் அதனால் ஏற்படும் விளைவும் தனிநபரை பொறுத்தது என சிலர் வாதமிடுகிறார்கள். ஆனால், குடிப்பவர்களின் குடும்பங்களில் நிம்மதி கெடுவதையும் குடிப்பவர்களின் குடல்கள் வெந்து நோயாளி ஆவதையும் இவற்றின் விளைவாக வீட்டில் வறுமை சூழ்ந்து மனைவியும் மக்களும் பசியாலும் பட்டினியாலும் துடிப்பதையும் எண்ணிப்பார்க்காமல் குடிப்பது தனி நபரின் உரிமையாகும் என்று கூறுபவர்கள் மனச்சாட்சியைத் தொலைத்தவர்கள்.

தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். குடியினால் இந்தத் தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் குடிபோதையின் விளைவாக நினைவிழந்து கிடப்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கும் சமுதாயத்திற்கும் துரோகம் செய்கிறார்கள். இவர்களால் உருவாக்கப்பட மனித வளம் மாபெரும் சமுதாயக் கேடாக மாறுகிறது.

இந்தத் தீமைக்கு எதிராகத்தான் மக்களும், மாணவர்களும், மாற்றுத் திறனாளிகளும் குறிப்பாகப் பெண்களும் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள். எதற்காக இவர்கள் போராடுகிறார்கள் என்பதையோ தியாகி சசிபெருமாள் எதற்காக உயிர்நீத்தார் என்பதையோ கொஞ்சமும் புரிந்துகொள்ளாத தமிழக அரசு மதுக்கடைகளைப் பாதுகாப்பதற்காக சுமார் 70 ஆயிரம் போலிஸ்காரர்களையும் அதிகாரிகளையும் ஒதுக்கியுள்ளது. இதற்காகக் குறைந்தபட்சம் நாள்தோறும் 5 கோடி ரூபாய்களுக்கு மேல் அரசு செலவிடுகிறது. சட்டம் ஒழுங்கு கொலை, கொள்ளை ஆகியவற்றைத் தடுக்க வேண்டிய காவல்துறை டாஸ்மாக் கடைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. சமூக விரோதிகள் தாராளமாகத் தங்கள் தீய நடவடிக்ககைளைத் தொடர வழி கிடைத்துவிட்டது.
மதுவை நியாயப்படுத்த அரசு தரப்பில் சொல்லப்படும் ஒரே காரணம் நிதிக்கு எங்கே போவது- என்பதுதான்.

இந்தியாவில் உள்ள தாதுமணலில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமாகத் தமிழக கடற்கரையோரங்களில் குவிந்து கிடக்கிறது. தாது மணலில் கார்னெட், இலிமைனட், ரூடைல், மோனசைட் போன்றவையும் கிடைக்கின்றன. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கிரானைட் ஏராளமாக கிடைக்கிறது. தமிழக ஆறுகளில் மணல் குவிந்து கிடந்தது. ஆனால், இவற்றைக் கொள்ளையடிக்கத் தனியாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தாதுமணல், ஆற்று மணல், கிரானைட் ஆகியவற்றின் விற்பனையையும் ஏற்றுமதியையும் அரசே ஏற்று நடத்தினால் ஆண்டுக்கு பல இலட்சம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மதுவினால் கிடைப்பது வெறும் 30 ஆயிரம் கோடிதான்.

ஆனால் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் தனியாரின் பைகள் மட்டும் நிரம்பவில்லை. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரின் பைகளும் நிரம்புகின்றன. மது விற்பனையிலும் இதே நிலைதான்.

இந்தக் கொள்ளையைப் பகிர்ந்துகொள்ளும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மதுவிலக்கிற்கு எதிராக இருக்கிறார்கள். எதிர்த்துப் போராடும் மக்களை ஈவிரக்கமில்லாமல் ஒடுக்குகிறார்கள்.

தியாகி சசிபெருமாள் இன்று புதைக்கப்படவில்லை. விதைக்கப்படுகிறார். அதன் விளைவுகள் ஆட்சியை அசைக்கும் என்பதை உணர வேண்டியவர்கள் உணரவேண்டும். எந்த ஒரு நாட்டிலும் மக்கள் போராட்டங்கள் வெற்றிபெறாமல் போனதாக வரலாறு இல்லை.

நன்றி : தினமணி 08-08-2015

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.