முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் - 17-ஆம் தமிழாய்வுக் கூட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:40

உலகத் தமிழர் பேரமைப்பின் முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றம் திங்கள் தோறும் இரண்டாம் ஞாயிறு மாலை தமிழாய்வு நடத்தி வருகிறது. 09/08/15 அன்று மாலை 4.00 மணிக்கு 17ஆவது தமிழாய்வுக் கூட்டம் தொடங்கியது.

நிகழ்விற்கு செந்தமிழ்த் திரு முனைவர் ஆ. சந்தனசாமி அவர்கள் தலைமையேற்றிருந்தார்கள். முதலில் உலகத் தமிழர் பண் ஒலித்த பின்பு வரவேற்புரையை இலக்கிய முற்றத்தின் செயலாளர் செந்தமிழ்த்திரு. சே. அரசு அவர்கள் வழங்கினார்கள். இலக்கியமுற்றத்தில் பயிற்சி பெற்றுவரும் நாட்டிய, இசை வகுப்பு மாணவர்களின் தனித்திறன் வளர்க்கும் முயற்சியில் இலக்கிய முற்றம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அகல்யா எனும் மாணவி ிதமிழின் பெருமைீ எனும் தலைப்பிலும், இராசராசேசுவரி, மீனாசிறீ எனும் மாணவிகள் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு ஓர் இரங்கற்பாவும் பாடினர். இராசராசேசுவரி "வெள்ளிப் பனி மலையின்' எனும் பாரதியார் பாடலைப் பாடினார். பாலசுப்பிரமணி பாரதி எனும் மாணவர் ஆறுமுக நாவலரைப் பற்றிப் பேசினார்.

இலக்கிய முற்றத்தின் துணைத்தலைவர் முனைவர் ஆ. சந்தனசாமி அவர்கள், சென்ற திங்கள் திருவையாறு சுழற்சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றமையைப் பாராட்டி இலக்கிய முற்றத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் பெ. இராமலிங்கம் அவர்கள் பயனாடை அணிவித்துப் பரிசளித்தார்கள்.

இலக்கிய முற்றத்தின் இளம்புயல் சு. தமிழினி 07/08/15 அன்று முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் அமைப்பு நடத்திய "கலை இலக்கிய இரவு விழா' கூட்டத்தில் இயற்கை பற்றிப் பேசி பரிசு பெற்றதைப் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.

"கனவின் மீதி' எனும் தலைப்பில் தமிழ்ப்பல்கலைக் கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையின் பேராசிரியர் முனைவர் தெ. வெற்றிச் செல்வன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார்கள்.

"கனவின் மீதி' என்பது ஈழத்துக் கவிஞர் கி.பி. அரவிந்தன் அவர்களின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். இது ஒரு கவிதை நூல். கி.பி. அரவிந்தன் ஐரோப்பாவில் குடியேறியவர் . இறுதிவரை தமிழ் ஈழத்தைத் தவிர வேறெங்கும் குடியுரிமை பெற மாட்டேன் என்பதில் உறுதியாக நின்றவர். மற்ற புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளைவிட இவர் தனிச்சிறப்பிற்குரியவர் ஆவார். உரிமை பெற்ற தமிழீழத்தைக் காணவேண்டும் என்பதே கவிஞரின் கனவாக இருந்தது. அக்கனவு நிறைவேறுமுன் கவிஞர் கி.பி. அரவிந்தன் மறைந்துவிட்டதால் அக்கனவின் மீதியை நனவாக்கும் முயற்சியில் நாம் இறங்கவேண்டும் என்பதே சிறப்புப் பேச்சாளரின் உரை வீச்சாகும்.

நன்றியுரையை ரேவதிச் செல்வி வழங்க தமிழாய்வுக் கூட்டம் நிறைவுற்றது. நிகழ்ச்சியை இலக்கிய முற்றத்தின் செயலாளர் முனைவர் இரா. தமிழ்க்குயில் தொகுத்து வழங்கினார்.

மேலும், பொருளாளர் திரு. தியாக. சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் ஆழி ஐயா, பத்மா அம்மா மற்றும் அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் கூடியிருந்தனர்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.