1. இந்திய மாநிலங்கள் அனைத்திலும் மழலையர் முதல் தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்க. இங்கு அரசு நிலையில் அதற்கு மாறான நிலை ஏன்?
2. பைந்தமிழ் மொழியாம் தாய்த்தமிழைப் படிக்காமலே பட்டப் படிப்பு முடியப் படிக்க வாய்ப்பளிக்கும் அவமானம் தரும் அவல நிலை இங்கு மட்டும் ஏன்?
3. நடுவணரசின் தேர்வாணையம் முதலாக. இந்தியப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் அனைத்திலும் எந்த ஒரு படிப்பையும் தேர்வையும் தத்தம் தாய்மொழியிலும் படிக்கலாம், தேர்வெழுதலாம் என இருக்கும் நிலை தமிழகத்தில் மட்டும் மறுக்கப்படுவது ஏன்? 4. உயர்கல்வி அனைத்திலும் தாய்மொழி அல்லது ஆங்கிலம் என இரண்டிற்கும் சம உரிமை தரும் பிற மாநிலங்கள் பின்பற்றுவது இருமொழிக் கொள்கையா? அல்லது ஆங்கிலமே உயர்கல்விக்கு எனத் தாய்த் தமிழைப் புறக்கணிப்பது இருமொழிக் கொள்கையாகுமா? எந்தப் படிப்பிலும். எந்தத் தேர்விலும் தமிழுக்கும் இடம் தந்து முதலிலிருந்து முடிவுவரை இருமொழிக்கொள்கையைப் பின்பற்றாமல் தமிழகம் மட்டும் தள்ளாடுவது ஏன்? 5. கர்நாடக அரசு தொடக்கக் கல்வி தாய்மொழி அல்லது கன்னடம் மட்டுமே எனப் பிறப்பித்த ஆணையை ஆங்கில வழிப் பள்ளியினரும் சிறுபான்மையினரும் எதிர்த்தபோதும, உச்சநீதிமன்றம், கர்நாடக அரசின் மொழிக் கொள்கையை ஆதரித்துப் பாராட்டித் தீர்ப்பு அளித்துள்ளதே. இது போல் தாய்மொழிக்கு ஆதரவான பல தீர்பபுகளை, நீதிமன்றங்கள் வழங்கியுள்ளனவே. அவை தமிழகத்திற்கு மட்டும் பொரூந்தாவா? ஒரு மாநிலத்திற்கு ஒரு நீதி மற்றதற்கு அநீதியா? 6. ஆங்கில மொழியை ஒரு பயன்பாட்டு மொழியாக உரையாடல் மொழியாக எடுத்துரை மொழியாக எழுத வல்ல மொழியாக, அவற்றிற்கு ஏற்ற பாடத்திட்டங்களுடன் கற்பித்தாலல்லவா, அம்மொழியில் பேச, தொடர்பு கொள்ள முடியும்? ஆங்கில வழியில் படிப்பதால் இது முழுமையாக வாய்ப்பதில்லையே? கல்வி மொழி வேறு. தொடர்பு மொழி வேறு இருமொழிக் கொள்கை பேசுபவர்கள் இதை மறந்தது ஏன்? 7. தமிழகத்தில் தமிழே முழுமையான ஆட்சிமொழி ஆக வேண்டும். நடுவணரசில் தமிழும் ஓர் ஆட்சி மொழி ஆக வேண்டும். இன்றைய ஐம்பதாயிரம் நர்சரி மெட்ரிக் பள்ளிகளில் படிப்பவர்களால் இது நிறைவேறுமா? ஒருபுறம் தமிழே தெரியாத, அறியாத, புரியாத பல நூறாயிரம் பிள்ளைகளை வளர்த்துக்கொண்டு தமிழகத்திலும் மத்தியிலும் தமிழ் ஆட்சி மொழி - அலுவல்மொழி ஆகவே ண்டும் எனப் பேசுவதைப் பிறர் "அடிமுட்டாள் தனம்' எனச் சிரிக்கமாட்டார்களா? 8. தமிழ் செவ்வியல் மொழியாக வேண்டும். அதற்காகக் குரல் கொடுக்கிறோம். ஆனால் ஏனைய உலகச் செவ்வியல் மொழிகள் எல்லாம் பேச்சு வழக்கை இழந்தன. தமிழ் அவ்வாறு ஆகிக் கொண்டு வருகிறது. மேல்தட்டு நடுநிலை மக்கள் அவர்களைப் பின்பற்றும் கீழ்த்தட்டு மக்கள் அனைவர் தம் பிள்ளைகளையும் தமிழ் எண் தெரியாமல்,எழுத்துத் தெரியாமல் சிறுவர் மணியைக்கூட வாசிக்கத் தெரியாமல், உறவுப் பெயர் தெரியாமல் தங்கள் சுற்றுப்புறமான நிறப்பெயர், மரப் பெயர், காய்கறிப் பெயர், பொருட்பெயர் எதுவும் தெரியாமல் வளரவிட்டுவிட்டு தமிழைச் செவ்வியல்' மொழியாக்க நடுவணரசை வேண்டுவதை என்னவென்று சொல்வது? "வெட்கக்கேடு என்று சொன்னால். அது கூட "வெட்கப்படுமே! 9. சான்றோர்கள் உலகப் பெரியோர்கள் வழிகாட்ட உலக அரசுகள் நல்ல நெறியில் மக்களை அழைத்துச் செல்கின்றன. நல்ல வழியில் மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும்.
மக்கள் குடிப் பழக்கத்தை விரும்பலாம். பஞ்சமா பாதகங்களைச் செய்யலாம். மக்கள் விருப்பம் அவை. அவர்கள் விருப்பம்போல் நடக்கட்டும் என விட்டுவிடலாமா? ஆங்கில மோகமும் ஓர் அறியாமையின் விளைவு தானே? அதை நெறிப்படுத்தாமல், நழுவுவதன் காரணம் என்ன? முதலாளியின் வாணிகமும் பணப்பெட்டிகளின் பரிமாற்றமும் தாய்த்தமிழுணர்வை முடக்க நினைப்பது கொடுமை அல்லவா?
10. பிற மாநிலங்கள் அனைத்திலும் "நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள். திமிர்ந்த "ஞானச் செருக்கு' உடைய கல்வியாளர்களைப் பார்க்கிறோம். இங்கு உயர்கல்வியாளர்கள் யாருமே இப்பண்புகளில் ஒன்றைக்கூடப் பெறாது போனதன் அடிப்படை என்ன? பதவியும் பரிசுமா பெரிது?
தமிழகத்தில் நீதி தடுமாறுவதற்கு இவர்கள் அல்லவா பெரிதும் துணை போகின்றனர். இது முறையா? இது தகுமா? (தமிழ் வழிக் கல்வி வழக்கு - பக்கம் 3-5)
|