உலகத் தமிழர் பேரமைப்பு - ஆட்சிக் குழுக் கூட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 06 அக்டோபர் 2015 13:01

17-09-2015 வியாழன் அன்று மாலை 3 மணிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக் குழுக் கூட்டம் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற போது கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதுடன் நிறைவேற்றப்பட்டன.

14-06-2015 அன்று நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் 8ஆவது மாநாட்டின் வரவு-செலவு கணக்குகளை நிர்வாகச் செயலாளர் ஜான் கென்னடி படித்தளித்தார் கணக்குகள் ஒருமனதாக ஏற்கப்பட்டன.

தீர்மானம்-1 - தனித்தமிழியக்க நூற்றாண்டு விழா

தமிழ்க்கடல் மறைமலையடிகளாரால் திருவள்ளுவர் ஆண்டு 1947 (1916)இல் தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கம் திருவள்ளுவர் ஆண்டு 2047 (2016)இல் நூற்றாண்டைக் காண்கிறது. மறைமலையடிகளாரைத் தொடர்ந்து மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட எண்ணிலடங்காத தமிழ் அறிஞர்கள் தனித்தமிழை வளர்க்கவும், தமிழின உணர்வையூட்டவும் அயராது பாடுபட்டார்கள். இன்றைக்கும் பல தமிழறிஞர்கள் தனித்தமிழ் காக்கத் தொண்டாற்றி வருகிறார்கள். எனவே, எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு 2047ஐத் தனித் தமிழ் இயக்க நூற்றாண்டாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டிக்கொள்கிறது.

தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டுத் தொடக்க விழா தி.ஆ. 2047 சுறவத் திங்கள் 16 (31-01-2016) ஞாயிறு அன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெறும். விழாவில் தனித்தமிழியக்க மூத்த போராளிகளுக்குப் பாராட்டுத் தெரிவிப்பதென்று உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு முடிவுசெய்கிறது.

தீர்மானம்-2-வைகைக்கரை அகழாய்வு

பாண்டிய நாடு பழந்தமிழ் நாடு. குமரிக் கண்டம் கடற்கோளால் அழிவுற்ற பின்பு பாண்டியர்கள் இன்றைய தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு இடம்பெயர்ந்து மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இந்த வரலாற்றை மெய்ப்பிக்கும் வகையில் மதுரைக்கு மிக அருகில் திருப்புவனம் ஒன்றியம் கீழடிப்புதூர்ப் பள்ளிச் சந்தையில் இந்தியத் தொல்லியல் துறையினரால் நடத்தப்பட்ட அகழாய்வில் பல சான்றுகள் கிடைத்துள்ளன. இந்தியாவின் வடக்கே சிந்துவெளியில் நடத்தப்பட்ட அகழாய்வுக்கு இணையாக வாழ்விடச் சான்றுகள் இதில் கிடைத்துள்ளன. இந்தியா முழுமையும் ஒரு காலத்தில் தமிழர்கள் பரவி வாழ்ந்ததற்கு அடையாளமாக இந்த ஆய்வு நடந்துள்ளது. அகழாய்வு நடந்த இடத்தைத் திறந்த நிலை அருங்காட்சியகமாக அமைத்துத் தமிழர்களின் வரலாற்றை உலகறியச் செய்ய வேண்டுமென்றும் வைகைக் கரையில் தொல்லியல் துறையினரால் அகழாய்வுக் களங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 237 நகரங்களையும் அகழாய்வு செய்யவேண்டும் என்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு வேண்டிக்கொள்கிறது.

தீர்மானம்-3- உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

உலகின் முதல்மொழி தமிழ் என்ற உண்மை உலக மொழியியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ் இவ்வளவு தொன்மையுடைய மொழியாய் இருந்தும் உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் ஆய்வு இருக்கைகள் நிறுவப்படவில்லை. இருந்த இருக்கைகளும் மூடப்பட்டுவிட்டன. போலந்து வார்சா பல்கலையில் மட்டும் இருக்கை உள்ளது. அமெரிக்கா வாழ் தமிழர்கள் தம் சொந்த முயற்சியால் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ முன்வந்துள்ளனர்.

உலகப் பல்கலைகழகங்களிலும், இந்தியப் பல்கலைக்கழகங்களி லும் தமிழ்த்துறையோ அல்லது தமிழ் இருக்கையோ இல்லாத இடங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்த தமிழக அரசு முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்று உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம்-4-சர்வதேச நீதி விசாரணை வேண்டும்

16-09-2015 அன்று வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு அறிக்கையில் பின்வரும் குற்றச்சாட்டுகள் முக்கியமாக இடம் பெற்றுள்ளன.

2002-2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களால் எண்ணற்ற படுகொலைகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடி மற்றும் படைத்தளங்களுக்கு அருகேதான் இக்கொலைகள் நடத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொடுமையான பாலியல் வன்முறைகள் இழைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாலியல் வன்முறைகளை இழைத்தவர்களில் ஒருவர்கூட இன்றுவரை சட்டத்தினால் தண்டிக்கப்படவில்லை.

போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்த பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். போரோடு நேரடியாகத் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் வெள்ளை வாகனங்களில் கடத்தப்பட்டு அதன்பின் காணாமல் போயிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி எத்தகைய செய்தியும் இவர்களின் குடும்பங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

போர் முடிந்தபிறகு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர் களுக்கு எதிராக மிகக் கொடுமையான சித்திரவதைகள் இழைக்கப்பட்டன.

அரசாங்கம் உருவாக்கிய போரில்லாத பகுதிகளில் அமைக்கப் பட்டிருந்த மருத்துவமனைகள், மனிதநேய உதவி வழங்கும் நிலையங்கள் ஆகியவற்றின் மீது அரசப் படைகள் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. பொதுமக்களின் உடைமைகள் மீதும் போரில் பங்குபெறாத பொதுமக்கள் மீதும் நேரடித் தாக்குதலை நடத்தியது போர்க் குற்றமாகக் கருதப்படலாம்.

மனிதநேயத் தொண்டர்கள், அவர்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்கள் நடமாடும் சுதந்திரத்தின் மீது தடைகளை விதித்து, மக்களுக்குத் தேவையான உணவு, மருத்துவப் பொருட்கள் சென்றடைவதைத் தடுத்து மக்களைப் பட்டினி போடுவது போர் முறையாகவே கருதப்படும். இது நிரூபிக்கப்பட்டால் அது போர்க்குற்றமாகும்.

பல ஆண்டுகளாக நடைபெற்ற உண்மைகளை மறுத்தல், மூடிமறைத்தல், உடனடி விசாரணைகளை நடத்தாமல் விடல், விசாரணை களை இடைநிறுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

மனித உரிமை மீறல்களை இழைக்கும் அரசு அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முயல்பவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், எடுக்கப்பட்ட உரிமை மீறல்கள் ஆகியவற்றையும் இந்த அறிக்கை விரிவாகக் கூறியுள்ளது.

முப்பதாண்டுக் காலமாக நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து நீதியையும் நிவாரணத்தையும் பெற்றுக் கொடுப்பதற்காகவும் இத்தகைய மீறல்கள் மீண்டும் நடைபெறாது என்று உத்தரவாதம் அளிப்பதற்காகவும் ஒரு முழுமையான இடைக்கால நீதிக் கொள்கையை உருவாக்குமாறு இந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

ஐ.நா. மனித உரிமை விசாரணைக் குழு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க இலங்கை அரசு மறுத்ததே இதற்குக் காரணமாகும்.

எனினும், இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் குறித்துச் சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் ஒழிய எதிர்காலத்தில் இத்தகைய கொடுமைகள் நிகழாமல் தடுக்க முடியாது.

எனவே, சர்வதேச நீதிமன்ற விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு வலியுறுத்துகிறது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.