நண்டுக்கு நீதிபதி நரியா? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 06 அக்டோபர் 2015 13:14

"செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து அமெரிக்கா ஒரு தீர்மானத்தை முன்மொழிய இருக்கிறது'' என அமெரிக்க வெளியுறவுத்துறையின் மத்திய -தென்னாசியா விற்கான துணைச் செயலாளர் நிஷா பிஸ்வால் கூறியுள்ளார். மேலும் இலங்கை அரசுடன் கலந்தாலோசித்து இத்தீர்மானம் கொண்டுவரப்படும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் 2009ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை குறித்து மூன்று தீர்மானங்களைக் கொண்டு வந்த மேற்கு நாடுகளில் அமெரிக்கா முதன்மை வகித்தது. ஆனால் இப்போது அமெரிக்காவின் போக்கு தலைகீழாக மாறியுள்ளது.

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் மேற்கண்ட கருத்தை உறுதிசெய்யும் வகையில் "சர்வதேச விசாரணையை இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்காது'' எனக் கூறியுள்ளார்.

தேர்தல் காலத்தில் அவர் பேசும்போது "சர்வதேச விசாரணைக்கு சிங்கள இராணுவத்தை ஒருபோதும் உட்படுத்த அனுமதிக்க மாட்டோம்' என்றும் கூறினார்.

இலங்கையின் அதிபராக இராசபக்சே இருந்தபோது சீனாவுடன் மிகநெருக்கமான உறவுபூண்டிருந்ததையும் இலங்கையிலும் இந்துமாக்கடல் பகுதியிலும் சீனா காலூன்ற அனுமதித்ததையும் அமெரிக்கா விரும்பவில்லை எனவேதான் கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் போர்க் குற்றங்கள், இனப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்காவும்மேற்கு நாடுகளும் தீர்மானங்களைக் கொண்டுவந்தன. மேலும் ஐ.நா. விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரணை யும் நடத்தின.

விசாரணைக் குழு தனது அறிக்கையை அளித்தபோது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது எனவே விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிடுவதை ஆறு மாத காலத்திற்கு தள்ளிவைக்க அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஐ.நா. மனித உரிமை ஆணயத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றின. இப்போது இலங்கை அரசே விசாரணை நடத்தலாம் என அமெரிக்கா கூறுகிறது.

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் கொடுமைகள் குறித்து அமெரிக்கா முன்பு வடித்தது முதலைக் கண்ணீர். சிங்கள அரசை சீனாவின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகவே இத்தகைய அழுத்தங்களை அமெரிக்கா கொடுத்தது. தனது நோக்கம் நிறைவேறியவுடன் அமெரிக்கா தனது நிலையை மாற்றிக்கொண்டது.

போர்க் குற்றங்கள் குறித்து கடந்த காலத்தில் அமெரிக்கா கடைப்பிடித்த நிலைப்பாடு என்ன? இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியிலும் அந்நாடு கைப்பற்றிய நாடுகளிலும் வாழ்ந்த 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளானார்கள். அவர்களுக்கு எதிராகப் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இழைக்கப்பட்டன.

இட்லரின் மரணத்திற்குப்பிறகு ஜெர்மனியின் கடற்படை தளபதியான அட்மிரல் டோயன்டிஜ் என்பவர் தலைமையில் ஒரு அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு சரணாகதி அடைய சம்மதம் தெரிவித்தது. எனவே இந்த அரசைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நேச நாடுகள் சார்பில் சிலர் ஆலோசனை வழங்கினர். டோயன்டிஜ் அரசின் மீது நடவடிக்கை எடுத்தால் ஜெர்மனியில் குழப்பம் மேலிடும் என்றும் அவர்கள் கூறினார்கள். ஆனாலும், அமெரிக்கா இதற்கு சம்மதிக்கவில்லை. போர்க் குற்றவாளிகளை விசாரிக்கும் பொறுப்பை இந்த அரசிடமே ஒப்படைக்கலாம் என அமெரிக்கா கூறவில்லை. போர்க் குற்றவாளிகளை விசாரித்தே தீரவேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடாக அன்று இருந்தது.

1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சோவியத் நாடு ஆகிய நான்கும் கூடி ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கியப் போர்க் குற்றவாளிகள் மீது விசாரணை நடத்தித் தண்டிக்க வேண்டும் என்பதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

இந்த உடன்பாட்டின்படி கீழ்க்கண்ட குற்றங்களை சர்வதேச இராணுவ நீதிமன்றம் விசாரிக்கும் என கூறப்பட்டது.

"போர்க் காலச் சட்டங்களையும் மரபுகளையும் மீறுதல் போர்க் குற்றமாகும். படுகொலைகள், மோசமாக நடத்துதல், அடிமைகளாக வேலை வாங்குதல் போன்றவையும் பொதுமக்களையும், போர்க் கைதிகளையும் சித்திரவதை செய்தல், கொடுமை செய்தல், பாலியல் வன்முறைக்கு உட்படுத்துதல், பொது மற்றும் தனியார் சொத்துக்களைச் சூறையாடுதல் நகரங்கள் கிராமங்கள் ஆகியவற்றைத் திட்டமிட்டு அழித்தல். போன்றவை போர்க் குற்றங்களாகும்.

இந்த உடன்பாட்டிற்கிணங்க ஜெர்மனியில் உள்ள நூரம்பர்க், ஜப்பானில் உள்ள டோக்கியோ ஆகிய இரு இடங்களில் சர்வதேச இராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இட்லரின் நாஜிக் கட்சி தலைவர்கள், இராணுவ தளபதிகள் மற்றும் வீரர்கள் ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட்டு 12 பேருக்கு தூக்குத் தண்டனையும் ஏராளமானவருக்கு சிறை தண்டனைகளும் விதிக்கப்பட்டன.

அதைப்போல டோக்கியோ சர்வதேச இராணுவ நீதிமன்றம் ஜப்பானியப் போர்க் குற்றவாளிகள்மீது விசாரணை நடத்தி உரிய தண்டனைகளை விதித்தது.

யூத இனத்தையே அடியோடு அழிக்கும் வகையில் சித்திரவதைகள், படுகொலைகள், உயிருடன் எரித்தல், நச்சுவாயு முகாம்களில் அடைத்துக் கொல்லுதல் போன்றவற்றை ஈவுஇரக்கமில்லாமல் செய்ததன் மூலம் மனித குலத்தையே தலைகுனிய வைத்தனர் நாஜிகள்.

சீன மக்களையும் மற்றும் தென்கிழக்கு ஆசியா மக்களையும் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாக்கிய ஜப்பானியரையும் மனிதநேயத்தை மதியாத கொடுங்கோலர்கள் என உலகம் கருதியது.

2008ஆம் ஆண்டு சூடான் குடியரசுத் தலைவர் ஓமர் அல் பஷீர் தனது நாட்டில் வாழ்ந்த 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க மலைச் சாதி மக்களை இனப்படுகொலை செய்து அழித்தார் என்பதற்காக அவரையும் கம்போடியாவின் சர்வதிகாரியான போல்பாட் 20 இலட்சம் மக்களை படுகொலை செய்தார் என்பதற்காக அவரையும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வைத்தன.

செர்பியாவின் சர்வாதிகாரியான சுலோ போடான் மிலோசேவிக் என்பவர் பல்லாயிரக் கணக்கான போஸ்னியா முஸ்லிம்களைப் படுகொலை செய்தார் என்பதற்காக ஐ.நா. படையின் மூலம் அவரைக் கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் நிறுத்தின. ஆனால் விசாரணை முடிவதற்கு முன்னாலேயே அவர் சிறையில் இறந்து போனார்.

மேற்கண்ட நாடுகள் எதிலும் அந்தந்த நாடுகளின் அரசுகளே போர்க் குற்றவாளிகளை விசாரிக்கலாம் என அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஒருபோதும் கூறியதில்லை. சர்வதேச நீதிமன்றங்களின் மூலம்தான் அவர்களைத் தண்டிக்க வைத்தார்கள்.

ஆனால், இலங்கையில் சிங்கள இனவாத அரசே போர்க் குற்றவாளிகள் குறித்த விசாரணைகள் நடத்தலாம் என அமெரிக்கா கூறுகிறது. சிங்களத் தலைவர்கள் எத்தகைய இனவெறியர்கள் என்பதை கீழ்க்கண்ட ஆதாரங்கள் நிருபிக்கின்றன.

1985ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி இலங்கையின் அதிபராக இருந்த ஜெயவர்த்தனே பின்வருமாறு கூறினார்.

"இந்திய அரசு எங்கள் மீது படையெடுக்க விரும்பினால் முழு இலங்கையையும் அவர்களால் 24 மணி நேரத்தில் கைப்பற்ற முடியும். என்னையும் கைது செய்ய முடியும். ஆனால் அவ்வாறு நடைபெறு மானால், இலங்கையில் வாழும் தமிழர்கள் அனை வரையும் சிங்கள மக்களே அழித்துவிடுவார்கள்'' சேனநாயகாவில் தொடங்கி சிறீசேனா வரை அனைத்து சிங்களத் தலைவர்களும் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் போக்கைக் கொண்டவர்களே ஆவார்கள்.

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்ப தற்கு இராணுவ பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவது ஒன்றே வழி எனக் கருதுபவர்கள் சிங்களத் தலைவர்கள். ஆனால், இந்தியா, அமெரிக்கா, மற்றும் மேற்கு நாடுகள் இந்த உண்மையைஉணர்ந்தோ உணராமலோ சிங்கள இனவாத அரசிற்குத் தேவை யான இராணுவ மற்றும் நிதியுதவிகளை தொடர்ந்து செய்து வந்திருக்கின்றன. இதன் மூலம் தமிழினப் படுகொலைக்குத் துணையாக இருந்துள்ளன.

இலங்கையில் தமிழர் பகுதியில் ஆறு பேருக்கு ஒரு இராணுவ வீரர் நிறுத்தப்பட்டிருக்கிறார். சின்னஞ்சிறிய நாடான இலங்கையில் இராணுவம் கடற்படை, விமானப்படை, காவல்படை ஆகிய வற்றில் உள்ள மொத்த வீரர்களின் எண்ணிக்கை 4 இலட்சம் ஆகும்.

2009ஆம் ஆண்டு போரில் வெற்றிப் பெற்றப் பிறகு இராணுவ வீரர்களிடையே பேசிய இராசபக்சே "போர்க்களத்தில் உங்களுடன் நாங்கள் இருந்தோம். இனியும் அவ்வாறே இருப்போம். உலகத்தின் முன்னால் உங்களை ஒருபோதும் அம்பலப்படுத்தித் துரோகம் செய்ய மாட்டோம்'' என்று கூறினார்.

போரில் பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள்மீது கொத்துக் குண்டுகளையும், இரசாயன குண்டுகளையும் வீசிப் படுகொலை செய்தவர் பொன்சேகா. ஆனால் சிறீசேனா பதவிக்கு வந்ததும் அவருக்கு மீண்டும் இராணுவத்தில் பதவி கொடுத்து பீல்டு மார்ஷல் பட்டமும் அளித்துப் பெருமைப்படுத்தினார்.

இராசபக்சே ஆட்சியில் அவரின் நம்பிக்கைக் குரிய அமைச்சராக பதவி வகித்தவர் ÿசேனா. எனவே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகள் எல்லாவற்றிலும் அவருக்குப் பங்கு உண்டு. விசாரணைக்கு உள்ளாகவேண்டிய சிறீசேனா ஆட்சி யில் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை நடை பெற்றால் அதன் விளைவு எப்படி இருக்கும்? நண் டுக்கு நீதிவழங்க நரியை நியமித்தது போல் இருக்கும்.

நன்றி : தினமணி (31-08-2015)

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.