தமிழர் எழுச்சிப் பயணம்... - ஆவல் கணேசன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 15 அக்டோபர் 2015 16:26

அதிகாலைப் பொழுது என் அலைப்பேசி சப்தம் ஒலிக்கிறது... "விழி தமிழா'' என விம்முகிறது. சிறிது நேரத்தில் பயணத்திற்கு தயாரானேன். சென்னை கிண்டி கத்திப்பாரா பாலம் அருகில் நான் நின்றிருக்க கொடியுடன் வந்த வாகனம் என்னையும் ஏற்றிக் கொள்ள குமரி நோக்கிப் பயணமானோம்.
அந்திமாலைப் பொழுது. தமிழகத்தின் கோடி கன்னியாகுமரி நகருக்குள் எங்கள் வாகனம் நுழைகிறது. சிவமுருகன் விடுதி வரவேற்பறையில் வழக்கறிஞர் தாமஸ், சிவக்குமார், ஜோசப் உள்ளிட்ட தோழர்கள் எங்களை வரவேற்று அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு எங்களை அழைத்துச் சென்றனர். "சீரழிந்த தமிழகம்'' என்ற நூலை எங்களுக்கு வழங்கிவிட்டு துண்டுப் பிரசுர விநியோகம், ஒலிபெருக்கி வாகனம் உள்ளிட்ட வாகன பரப்புரை குறித்தும் அய்யா விளக்கினார். பின்னர் வழக்கறிஞர் சிவக்குமார் மகள் பிறந்த நாள் நிகழ்ச்சிக்குப் புறப்பட்டோம். அய்யா அவர்களுடன் குழந்தைகளோடும் குடும்பத்தினரோடும் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு விருந்தோம்பலில் பங்கு கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

அய்யா, தோழர் பரந்தாமன் ஆகியோருடன் பேசிவிட்டு பின்னர் அங்கிருந்து கடற்கரை நோக்கி என் கால்கள் நகர்ந்தன. பகவதி அம்மன் கோவில் வாசலில் வணங்கிவிட்டு கடல் அலை ஓசை வரும் திசை நோக்கி சென்றேன். இரவு வெளிச்சத்தில் மின்மினிப் பூச்சிகள் போல் விவேகானந்தர் பாறை பளிச்சிட்டது. காந்தி மண்டபம் உள்ளிட்ட நகரின் வீதியில் வலம் வந்து பயணக் களைப்பில் படுத்து உறங்கினேன்.

05-10-15 அதிகாலை 5 மணிக்கு எழுந்து நடந்து கடற்கரையில் தஞ்சம் அடைந்தேன். காலைக் கதிரவன் புதிய விடியலுக்காய் தயாராகிக் கொண்டிருந்தது மக்கள் வெள்ளம் மலரும் சூரியனுக்காய் மண்டியிட்டு காத்திருந்தது. ஆதவன் முக்கடல் கூடுமிடத்தில் வள்ளுவன் சிலையருகே ஒளிக்கீற்றைப் பரப்பி வானத்திற்கு முத்தமிட்டு மேலெழுந்தது. ஆவலின் ஆவல் படக்கருவிகளில் பதிவு செய்யப்பட்டது. கண்கள் இயற்கை அழகை ரசித்தன. இனிமையான தருணம்.

அய்யா தங்கியிருந்த விடுதியின் நுழைவாயிலில் தம்பி தமிழ்வேங்கை அய்யாவிடம் இனிப்புப் பெட்டியை வழங்க தோழர் அய்யநாதன், பரந்தாமன் உள்ளிட்டோரும் நானும் எடுத்து சுவைத்துக் கொண்டு உண்ணாமலைக் கடை நோக்கி பயணமானோம். எங்கள் வாகனத்தைத் தொடர்ந்து ஒலிபெருக்கி இணைப்புடன் போராளித் தம்பிகள் சீலன், பிரபாகரன், இளையவன் கார்த்தி, நெடுமான், சரவணன் உட்பட சிலரும் தனி வாகனத்தில் பின் தொடர்ந்தனர்.

தோழர் சுப. உதயகுமார் உள்ளிட்ட தோழர்கள் காந்தியவாதி சசிபெருமாள் இறந்த இடத்தில் காத்திருந்தனர்.. காவல் நிலையத்தின் வாசலில் எங்கள் வாகனங்கள் தடுக்கப்பட்டு அய்யா பயணிக்கும் வாகனம் மட்டும் அனுமதிக்கப்பட்டது. உண்ணாமலைக் கடை தொலைத் தொடர்பு கோபுரத்தின் முகப்பில் மாலை அணிவித்து மது ஒழிப்புப் போராளிக்கு மரியாதை செலுத்திய பின் நகரின் முக்கிய சந்திப்பில் பத்து கோரிக்கைகளுடனான பயணத்தின் நோக்கத்தை விளக்கி அய்யா பேசினார். பிறகு சுப. உதயகுமார் எழுச்சிப் பயணத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்... பின்பு அங்கிருந்து எங்கள் வாகனங்கள் நாகர்கோவில் நோக்கி நகர்ந்தன.

நாகர்கோவில் வரவேற்பு மற்றும் தெருமுனைக் கூட்டத்தில் உரையாற்றி விட்டு பனங்குடி பயணமானோம். அங்கே பேருந்து நிலையத்தின்முன்பு பேசிவிட்டு பின் வள்ளியூரை நோக்கி வானம் புறப்பட்டது.

வள்ளியூரில் க. இளந்திரையன், சங்க வள்ளிமணாளன், அ. சேதுராமலிங்கம் சிறப்பான வரவேற்பு மற்றும் கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தனர். உரை நிகழ்த்திய பின் தோழர் சுப. உதயகுமார் எங்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். மற்றும் நாங்குநேரியில் உரை நிகழ்த்திய பின்பு நெல்லை நோக்கிப் பயணப்பட்டோம்.

திருநெல்வேலியில் முனைவர் ந. அரணமுறுவல். அ. செல்லத்துரை, அ. பாலா, யா. துரை, ச. முத்துக்குமரன், பா. மாரிகணேசன், பொ. இளஞ்செழியன் உள்ளிட்டோர் எங்களை வரவேற்றனர். நெல்லையப்பன் கோவில் எதிரே உள்ள உணவகத்தில் மதிய உணவு அருந்திவிட்டு அரணமுறுவல் அய்யாவுடன் காந்தி வீதியில் உரை நிகழ்த்திவிட்டு பாளையங்கோட்டை பயணித்தோம். மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் கூடியிருந்தனர்.

அங்கிருந்து சாத்தூரில் மாலை தேனீர் அருந்திவிட்டு விருதுநகர் கடந்து மதுரை மாவட்ட எல்லை கள்ளிக்குடியில் ஆவல்சூரன்பட்டி பாலகிருட்டிணன் தலைமையில் தோழர்கள் அய்யாவுக்கு சால்வை அணிவித்து வரவேற்க...

திருமங்கலம் கடந்து மதுரையில் தமிழர் தேசிய முன்னணியின் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. பின்னர் பொதுக்கூட்டம் நடைபெறும் சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை சென்றோம். தொழிலாளர்கள், பொதுமக்கள் மத்தியில் அய்யா. ஐ.நா.வின் விசாரணை அறிக்கையில் அமெரிக்காவின் துரோகச் செயல்கள்... அமெரிக்க பொருட்களை புறக்கணிப்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார். முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் ஈழமக்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரத்தையும் சொல்லிக் கொண்டே போனார். வானம் கண்ணீர் சிந்தியது மழைத்துளியாய்...

மதுரையில் எம்.ஆர். மாணிக்கம், மாநகர பொறுப்பாளர்கள் வெ.ந. கணேசன், பு.ரே. துவாரகநாத், சாம்பியன் புதூர் அப்துல்லா, திரவியம், , முனைவர் கு. வேலன், ச. பிச்சைகணபதி, மரு. பொ.மு. செல்வம் ஆகியோர் சிறப்பாக பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். தம்பிமார்களுடன் நான் பிறந்த மண்ணில் சுவையான உணவருந்திவிட்டு மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள தங்கும் விடுதியறையில் தஞ்சமடைந்தோம்.

Madurai

06-10-15 மீனாட்சி பட்டினத்திலிருந்து காலையில் பயணக்குழுவினருடன் புறப்பட்டு கூடல் மாநகருக்கு விடை கொடுத்தோம். திருப்பாச்சேத்தியில் பட்டாசு முழங்க தமிழ் ஆர்வலர்கள் எங்களை வரவேற்றனர். தெருமுனைக் கூட்டத்தை முடித்தபின் மானாமதுரையில் வரவேற்பை ஏற்றுக்கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு பரமக்குடியில் கூட்டத்தில் உரைநிகழ்த்திவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்.

இராமநாதபுரம் மன்னர் சேதுபதி கல்லூரி அருகே மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சிமிகு வரவேற்பு வழக்கறிஞர் திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் பசுமலை, நாகேசுவரன், வழக்கறிஞர் டேவிட், கோகுல்நாத், சுரேசு, சபரிநாதன், பிரபாகரன் ஆகியோர் இரு சக்கர வாகனங்களின் அணிவகுப்புடன் எங்களை நகரின் முக்கிய வீதிக்கு அழைத்துச் சென்றனர். இராமநாதபுரம் அரண்மனை அருகே நடந்த கூட்டத்தில் அய்யா அவர்கள் உரை நிகழ்த்திய பின் முகவையில் இருந்து விடைபெற்றோம்.

மண்டபம் கடந்து பாம்பன் பாலத்தில் எங்கள் பரப்புரை வாகனம் அணிவகுத்துச் சென்றது. ஆவல் விருப்பத்திற்கிணங்க ஈழம் இருக்கும் திசை நோக்கி மாவீரன் அய்யாவுடன் பிரத்யேக படப்பதிவு... மன மகிழ்ச்சி.

இராமேசுவரம் தளபதி கண். இளங்கோ தலைமையில் மன்மதன், பத்மநாபன், சூரியகுமார், ரீஜென், குட்டிமணி, இராசு, ஜெயகாந்தன், இரமேசு உள்ளிட்டோரின் எழுச்சிமிகு வரவேற்பை ஏற்றுக்கொண்டோம். தீவில் திரும்பிய திசையெல்லாம் தமிழர் தேசிய முன்னணியின் கொடிகள் கண்ணில் தென்பட்டன. கடலில் மீன்பிடிக்கச் சென்று 13 நாட்களாக கரை திரும்பாத மீனவர் வில்வராசு குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன அய்யா அவர்கள் கதறி அழுத மீனவச் சொந்தங்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மனது இறுக்கமாக இருந்தது.

அய்யா, தோழர்கள் பரந்தாமன், தமிழ்வேங்கை மட்டும் சைவச் சாப்பாடு உண்ண... அசைவச் சாப்பாட்டிற்கு அமோக ஆதரவு... இராமர் பாதம் அருகே தோட்டத்தின் குடிலில் சுடச்சுட மீன் சாப்பாடு சுவைத்து உண்டோம். இராமேசுவரம் நகரின் தெருமுனைக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய பின் கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணித்தோம். வழிநெடுக தமிழர் எழுச்சிப் பயணத்தின் சுவர் விளம்பரங்களும் சுவரொட்டிகளும் கண்ணில் தென்பட்டன.

தேவகோட்டை கூட்டத்தில் உரை நிகழ்த்திய பின் வானம் மழைத்துளியை மண்ணுக்கு அனுப்பிக் கொண்டிருக்க காலத்தின் அருமை கருதி, அய்யா, தோழர் அய்யநாதன் உள்ளிட்ட பிரச்சார வாகனம் காரைக்குடியில் தளபதி லெ.மாறன், புதுக்கோட்டையில் வ. சத்தியமூர்த்தி ஏற்பாடுகளை செய்திருந்த எழுச்சிமிகு கூட்டங்களில் கலந்து கொள்ள வாகனம் விரைவாக கடந்து சென்றது.

அய்யாவின் ஆணைக்கிணங்க நானும், தோழர் பரந்தாமனும் திருச்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள பயணம் மேற்கொண்டோம். வானம் கடும் மழையை பொழியத் தொடங்கினாலும் எங்கள் வாகனம் நகர்ந்து மலைக்கோட்டை மாநகர் சென்றது.
தோழர் பொன்னிறைவன் பிரம்மாண்டமான அரங்கு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். இராசேசுகண்ணா, பா. பன்னீர்செல்வம், சோலைராசு,

அழசு.மணி, வழக்கறிஞர் பானுமதி, தம்பி உலகநாதன் உள்ளிட்ட முன்னணித் தோழர்கள் சந்திப்புக்கு பின் இரயில் நிலையம் அருகே உள்ள சரசுவதி உணவகத்தில் உணவருந்திவிட்டு நான், செஞ்சி சாய்ரா, சென்னை "அச்சு' வாசன் தஞ்சை நோக்கிப் பயணமானோம். உடல் நலக்குறைவுக் காரணமாக தோழர் பரந்தாமன் மதுரை செல்ல.. நடு இரவில் முள்ளிவாய்க்கால் முற்றம் வந்தடைந்தோம். பயணக் குழுவினருடன் முற்றத்தின் முத்தமிழ் மன்றத்தில் உறங்கினோம்.

07-10-15 அதிகாலை 5 மணி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் காவலாளி தோழர் தங்கதுரையின் அலைப்பேசி சப்தம் அனைவரின் தூக்கத்தையும் கலைத்தது. காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் வணிகப் பெருமக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார் அய்யா. பின்னர் அயனாவரம் முருகேசன், சதா. முத்துகிருட்டிணன், பொன். வைத்தியநாதன், தியாக. சுந்தரமூர்த்தி, சான் கென்னடி உள்ளிட்டத் தோழர்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் வ. கெளதமன் எங்களுடன் இணைந்துகொள்ள மன்னார்குடி நோக்கிப் பயணமானோம்.

மன்னை நகரில் மருத்துவர் பாரதி செல்வன் தலைமையில் பயணக்குழுவுக்கு வரவேற்பு வழங்கப்பட்ட து. மன்னை இராசசேகர், மகேந்திரன், கோவலன், அரிகரன், தேவா உள்ளிட்ட மாவட்டத் தோழர்களுடன்... தேரோடும் வீதியில் மன்னையின் இராசகோபுரம் அருகே தெருமுனைக் கூட்டத்தை முடித்துக்கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி எழுச்சிமிகு பயண வாகனங்கள் நகரத்தொடங்கின.

ஆயக்காரன்புலம் விவசாயிகள் தமிழின உணர்வாளர்கள் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அய்யா அவர்கள் விவசாயிகள், சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் காவேரி நீர் பிரச்சினை குறித்தும் விளக்கிப் பேசினார்.

திருவாரூரில் கலைச்செல்வம், பாண்டியன், காரைக்கால் குமணன், கோ. அருண் குமார், சிவா ஆகியோர் வரவேற்றனர். பிறகு மதிய உணவை முடித்துக்கொண்டு பேருந்து நிலையம் எதிரே நடந்த கூட்டத்தில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை பட்டியலிட்டு அய்யா பேசிய பின்னர் மயிலாடுதுறை புறப்பட்டோம். மயிலாடுதுறையில் கவிஞர் வே.இரா. பூபதி, இரா. முரளிதரன், ப. சுகுமாறன், சாமி. தமிழரசன். சோம. இராசராசன் உள்ளிட்ட தோழர்கள் வரவேற்றனர்.

அய்யா அவர்களின் அறிவுறுத்தலின்படி நானும், தோழர் அய்யநாதனும் புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு பயணமானோம். புதுவையில் ந.மு. தமிழ்மணி, மா.இலெ.தங்கப்பா, பெ. பராங்குசம், துரை. மாலிறையன், இரா. இளமுருகன் ஆகியோர் ஏற்பாடு செய்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் மாணவப் போராளியாக நான் வாழ்ந்த காரைக்கால், புதுச்சேரி வாழ்க்கையை பதிவு செய்தது மண்ணின் மைந்தர்கள் இடத்தில் உற்சாகத்தை தந்தது. தோழர் அய்யநாதன் மனித உரிமை மீறல், தமிழர்களுக்கு சர்வதேச நாடுகள் இழைத்த துரோகச் செயல்களை விரிவாக எடுத்துரைத்தார்.

தமிழறிஞர் கி.த. பச்சையப்பன், உதயகுமார், வ. சத்தியமூர்த்தி, மீசா. பெரியார் அன்பன் உட்பட பல தமிழ் உணர்வாளர்கள் பலரும் கூட்டத்தில் பங்கு கொண்டனர். மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் கூட்டங்களை முடித்துக்கொண்டு நள்ளிரவு அய்யா அவர்கள் புதுச்சேரி வந்தடைந்தார்கள்.

Pondi-02

08-10-15 புதுவையில் "யாத்திரி நிவாஸ்'' விடுதியில் செய்தியாளர் களை சந்தித்துவிட்டு புதுவையில் வாழும் என் அன்புச் சகோதரி முத்து, கல்லூரித் தோழர் அபி. அறு. ஆதிசிவன், பள்ளித் தோழர் காரைக்கால் தலைமையாசிரியர் சிவக்குமார் உள்ளிட்ட தோழர்களை சந்தித்து விழுப்புரம் நோக்கிப் பயணமானோம்.

விழுப்புரத்தில் கோ. கணேசன், பா. ஜோதிநரசிம்மன், த. மங்கையர்க்கரசி, மு.யா. முஸ்தாக்தீன் ஆகியோர் வரவேற்றனர். அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வியாபாரி கள், கட்சித் தோழர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டு உரை நிகழ்த்திய அய்யா அவர்கள் அங்கிருந்து விடை பெற்று திண்டிவனம் நகருக்கு நகர்ந்தோம்.

பேராசிரியர் பிரபா கல்விமணி (எ) கல்யாணி தலைமையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தினர் திண்டிவனத்தில் வரவேற்பை வழங்கினர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக நகரின் முக்கிய வீதி வழியாக அழைத்துச் சென்றனர். நகரின் பிரதான சாலைச் சந்திப்பில் அய்யா அவர்கள் உரை நிகழ்த்திய பின் அங்கிருந்து விடை பெற்றோம்.

செங்கல்பட்டு நகரில் இறையழகன் தலைமையில் தோழர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு மதிய உணவை முடித்துக் கொண்டு பேருந்து நிலையம் எதிரில் உரை நிகழ்த்திய அய்யாவின் பேச்சை கடும் வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் கேட்டு ரசித்தது என் மனதுக்கு குளிர்ச்சி!

சிங்காரச் சென்னைக்குள் நுழைகிறது தமிழர் எழுச்சிப் பயணம். வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் பல்லாவரம் தமிழர் தேசிய முன்னணி தலைமையகத்தில்... பயணத்தில் பங்கு பெற்ற போராளித் தம்பிகளுக்கு "சீரழியும் தமிழகம்'' என்ற நூலை அய்யா கையொப்பமிட்டு வழங்க - வட சென்னை மகாகவி பாரதிநகர் தமிழர் எழுச்சிப் பயணப் பரப்புரை நிறைவு பொதுக்கூட்டத்திற்கு சென்றோம்.

DSC 2116

அருகோ, முத்தமிழ்மணி, இலாரன்சு, இயக்குநர் வ. கெளதமன், கா. அய்யநாதன் உள்ளிட்ட தோழர்களும் உரிமை முழக்கமிட அய்யா அவர்கள் எழுச்சிப் பயணத்தின் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார்.

இரவு வடசென்னை மாவட்டத் தலைவர் இலாரன்சு வீட்டில் தமிழ்ச் சொந்தங்களுடன் உணவருந்திவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

சென்னையில் வானம் மழைத்துளியாய் எங்களை வரவேற்க அண்ணா சாலை.. ஆயிரம் விளக்கு மசூதி அருகே செஞ்சி சாய்ராவை இறக்கிவிட்டு எங்கள் வாகனம் ஊர்ந்து சென்றது. கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் நான் வசிக்கும் இல்லம் இருக்கும் தெருமுனை வந்ததும் வாகனத்திலிருந்து இறங்கவில்லை. அய்யாவிடம் உங்களை இல்லத்தில் விட்டுவிட்டு பிறகு வந்து சேர்கிறேன் என்றேன்.

சென்னை புறநகர் பகுதி துரைப்பாக்கம் வழியாக மடிப்பாக்கம் கூட்டுச் சாலையை கடந்து வேங்கைவாசல் அய்யா இல்லம் சென்றடைந்தோம். நள்ளிரவில் அய்யாவின் இல்லத்திலிருந்து விடை பெற்றோம். வாசற்படிவரை வந்து அந்த நேரத்திலும் அய்யா எங்களை வழியனுப்பி வைத்தார். அய்யா வசிக்கும் தெருமுனையில் எங்கள் வாகனம் திரும்புகிறது. அதுவரை அய்யா எங்கள் வாகனம் செல்வதைப் பார்த்தபடியே நின்றிருந்தார்...

84-வயது இளைஞருடன் தமிழர் எழுச்சிப் பயணத்தில் பங்கு கொண்டதில் நான் பெருமை அடைகிறேன்.

வியாழக்கிழமை, 15 அக்டோபர் 2015 17:17 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.