"ஊரடங்கு உத்தரவு-புதுச்சேரி போராட்ட வரலாறு' - தேனியில் விசாகன் நூல் வெளியீட்டு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015 11:51

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் சார்பாக தேனியில், புதுச்சேரி பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான பி.என்.எஸ். பாண்டியனின் "ஊரடங்கு உத்தரவு-புதுச்சேரி போராட்ட வரலாறு' என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன், ரஷ்யப் புரட்சி பற்றி அமெரிக்கப் பத்திரிக்கையாளர் ஜான் ரீட் எழுதிய "உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்' என்ற நூலுக்கு இணையான வகையில் பி.என்.எஸ். பாண்டியன் இந்த ஊரடங்கு உத்தரவு நூலினை எழுதியிருப்பதாக புகழாரம் சூட்டினார். மேலும் அவர் குறிப்பிடுகையில், உலகில் தமிழர்கள் பிரச்சனைகளுக்கெல்லாம் இரண்டு மாநில முதல்வர்கள் குரல் கொடுத்தால் அது மிகவும் வலிமையாக இருக்கும். அந்த வகையில் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்கும் பட்சத்தில் தமிழர்களின் பிரதிநிதிகளாக இரண்டு முதல்வர்கள் நமக்குக் கிடைப்பார்கள்.

எனவே தமிழ்நாட்டு மக்களாகிய நாம் புதுச்சேரி மக்களின் தனி மாநில அந்தஸ்திற்கான கோரிக்கைக்கு பக்கபலமாக நிற்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவரும், மக்கள் மன்றக் கூட்டமைப்பின் தலைவருமான எம்.கே.எம். முத்துராமலிங்கம் தலைமை தாங்க, தமிழக மக்கள் கட்சித் தலைவர் மீத. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் தமிழ்வாணன், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.ஆர். சக்கரவர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பெத்தாட்சி ஆசாத், சமூக ஆர்வலர்கள் மா. தங்கப்பாண்டி, சந. இளங்குமரன்,தமிழர் தேசிய முன்னணி மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தமிழ்வேங்கை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தேனி மாவட்டத்துணைச் செயலாளர் இதய நிலவன் உள்ளிட்டோர் சிறப்புரையாறறினார்கள். நிறைவாக எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான புதுச்சேரியைச் சேர்ந்த பி.என்.எஸ். பாண்டியன் ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் நாணயம் சிதம்பரம், பேராசிரியர், துரை கருபபையா, கவிஞர் கலைதாசன், முகம்மது சஃபி, முஸ்லீம் லீக் கட்சியின் நகரச் செயலாளர் சர்புதீன் உள்ளிட்ட தேனி நகரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.