மன்னார்குடியில் தமிழகத் திருநாள் பொதுக்கூட்டம் |
|
|
|
வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015 11:55 |
1.11.2015 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு, மன்னார்குடி பந்தலடியில், தமிழகத்திருநாள் பொதுக்கூட்டம், திருவாரூர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியால் நடத்தப் பட்டது. தமிழ்த் தேசிய இசைவாணர் சமர்ப்பா குழுவினரின் தமிழிசைப் பாடல்களோடு கூட்டம் தொடங்கியது. மாவட்ட துணைத்தலைவர் அரிகரன் கூட்டத்திற்கு தலைமையேற்க, தேவேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேடையில் கம்பீரமாக வீற்றிருந்த தமிழன்னை சிலைக்கு, மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் பானுமதி அம்மா மாலை அணிவிக்க, அனைவரும் தமிழ் வாழ்க என முழங்கினர். எல்லைப் போராட்ட ஈகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வழக்கறிஞர் சபேசன்,மாவட்ட செயலர் கலைச்செல்வம்,மாவட்டத் தலைவர் மருத்துவர் பாரதிசெல்வன், மாநில செயலர் இராமேசுவரம் கண் இளங்கோ, மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் பானுமதி, மாநில துணைத்தலைவர் அன்வர் பாலசிங்கம் ஆகியோர் மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு 1956 நவம்பர் 1ல் அமைந்தபோது 70,000 ச.கி.மீ. தாயக நிலத்தை இழந்தது, அதற்குக் காரணமான அன்றைய தமிழர்களை ஆட்கொண்டிருந்த இந்திய தேசிய, திராவிட தேசிய மாயை,அதனால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள், பிரச்சினைகள், தற்போதும் நிகழும் அயலாரால் தமிழ் மண்பறிப்பு, மீத்தேன் திட்டம் போன்ற திட்டங்களால் தாயக மண் இழப்பு, தமிழ்நாட்டுக்குள் மிகை எண்ணிக்கையில் பிற மாநிலத்தினரின் குடியேற்றம் பற்றி உரையாற்றினர். தாயக மண்ணுரிமை காக்க ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக மாவட்ட இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் இராசசேகரன் நன்றி நவில கூட்டம் இனிதே முடிந்தது.
|