பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் - உலக அளவில் பேசப்படப்போகும் நூல் - "ஜூனியர் விகடன்'' பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 ஜூன் 2012 16:11
பிரபாகரன் பற்றி 30 ஆண்டு களுக்கு முன்னால் முதன் முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ. நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன்.


வல்வெட்டித்துறையில் வேலுப் பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்து, சிங்களவர் கொடு மையை எதிர்த்துப் போராடுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி... தனியான ஒரு சுதந்திர நாட்டை அமைக்கப் போராடிய பிரபாகரனின் பெருமை பாடும் புத்தகம் அல்ல இது. பிரபாகரன் என்கிற தனி மனிதன், தமிழர் எழுச்சியின் வடிவமாக எப்படி உருவெடுக்கிறார் என்பதை வலுவாகச் சொல்கிறார் நெடுமாறன். ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் என்பதை உருவகப்படுத்தும் புத்தகங்களுக்கு உதாரணமாக உலக அளவில் சொல்லப்படுவது, ஹென்றி வோல்கப் எழுதிய "மார்க்ஸ் பிறந்தார்'. அதே போல் தமிழில் இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம். அந்த அளவுக்கு பிரபாகரனின் ஒவ்வோர் அசைவையும் தூரத்தில் இருந்தபடியே துல்லியமாகக் கவனித்து எழுதி இருக்கிறார் நெடுமாறன்.
பிரபாகரனுக்குத் தோள் கொடுத்த தோழர்கள் யார் உடனிருந்து துரோகம் செய்தவர்கள் யார் எளிய மனிதராக வளர்ந்த பிரபாகரன் தத்துவ விசாரணைகள் செய்யும் ஆய்வாளரைப் போல் எப்படி எல்லாம் பேசுவார், உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருக்கும் ஆயுதங்களை வன்னிக் காடுகளுக்குள் வைத்தே தயாரிக்கும் வித்தையை அவர் கற்றது எப்படி, கெரில்லா யுத்தம் மூலமாக சிங்கள அரசாங்கத்துக்கு சிம்ம சொப்பனமாக மாறியது எப்படி?. அந்நாடு அத்தனை படைகளை உருவாக்கியும் அதே அச்சுறுத்தலை தக்கவைத்துக்கொள்ள சாத்தியமானது எவ்வாறு... என்றெல்லாம் நெடுமாறனின் வார்த்தைகளில் படிக்கும் போதே புதிய புறநானூறாக இருக்கிறது.
ஆயுதப் போராட்டத்தில் அழித் தொழிப்புக் காரியங்களுக்கான அவசியக் காரணங்களையும் அந்த பேதத்தை வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் உருவாக்கிய விதத்தையும், எம்.ஜி.ஆர். என்ற ஒரு மனிதன் இல்லை என்றால் பிரபாகரன் இந்த அளவுக்கு வளர்ந் திருக்க முடியாதோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகின்றன பல தகவல்கள்.
ஆயுத பலத்தால் அடக்க முடியாத பிரபாகரனை, பதவி ஆசை காட்டி மயக்க முயன்றபோதும் வித்தி யாசமான மனிதனாய் அவர் வெளிப்பட்டதையும் பார்க்க முடிகிறது.
சங்ககாலத் தமிழ் மன்னர்கள் கூட.. தரைப்படை கப்பல் படை மட்டும்தான் வைத்திருந்தார்கள். வான் படையும் சேர்த்து அமைத்தவர் என்று பிரபகாரனைச் சொல்லும் நெடுமாறன், பெண் படை அணியின் உருவாக்கத்தைப் பெருமிதத்துடன் பதிவு செய்து இருக்கிறார். பிரபாகரனின் நண்பர்கள் சொன்னது மட்டும் அல்ல, எதிரிகள் சொன்னதும் இதில் நிறைய இருக்கின்றன. அத்தனை பேர் புகைப்படங்களையும் தேடித் தேடிச் சேர்த்துள்ளார்.
பிரபாகரன் இறந்துவிட்டதாக இதுவரை சொல்லப்பட்ட அத்தனை "பொய்'களையும் வரிசைப்படுத்தும் நெடுமாறன். "மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்' என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தகமாக இதனை வடிவமைத்து வழங்கி உள்ளார்.

- புத்தகன்

நன்றி : "ஜூனியர் விகடன்' 23-5-12
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.