மாநிலக் கட்சிகள் செயல்படவேண்டிய தருணம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 ஜூன் 2012 16:21
2012ஆம் ஆண்டு ஜூலையில் இந்தியா தனது 16ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க இருக் கிறது. முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை யில் இந்தத் தேர்தலை நாடு எதிர்நோக்கியுள்ளது.
1989ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் முடிவாக டில்லியில் கூட்டணி ஆட்சிகள்தான் அமைந்தன. அகில இந்தியக் கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாவும் 25லிருந்து 28 விழுக்காடு அளவிற்கு மட்டுமே வாக்குகள் பெறும் நிலையில் உள்ளன.
சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும்தான் இந்தக் கட்சிகள் மாநில அளவில் ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றும் நிலையில் உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் மாநிலக் கட்சிகளே அந்தந்த மாநிலங்களின் ஆட்சிகளைக் கைப்பற்றியுள்ளன. கடந்த 20 ஆண்டுகாலமாக மாநிலக் கட்சிகளின் வலிமை அதிகரித்தே வந்துள்ளது. இதன் விளைவாக மத்திய ஆட்சியிலும் மாநிலக் கட்சிகளின் ஆளுமை அதிகரித்துள்ளது.
இத்தகைய வேறுபட்ட சூழ் நிலையில் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைமை உள்ளது. காங்கிரசோ அல்லது பா.ஜ.க.வோ விரும்பும் வேட்பாளரை குடியரசுத் தலைவராக ஆக்க முடியாது. மாநிலக் கட்சிகளின் ஆதரவு அவசியம் தேவையாகும். முற்றிலும் மாறிவரும் இந்தச் சூழ்நிலையை உணர்ந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இணைந்து பிற மாநிலக் கட்சிகளையும் திரட்டி தனியாக ஒரு வேட்பாளரை அறிவித் துள்ளனர். இதன் விளைவுகள் எந்த அளவுக்குக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது போகப் போகத் தெரியும்.
1969ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராக இருந்த ஜாகீர் உசேன் அவர்களின் திடீர் மறைவையொட்டி பிரதமர் இந்திரா அதிகாரப்பூர்வமான காங்கிரஸ் வேட்பாளரைப் புறந் தள்ளிவிட்டு வி.வி. கிரியை சுயேச்சை யாகப் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தார். பிரதமர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளர் ஒருவரை குடியரசுத் தலைவராக்கும் முயற்சிகள் அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குடியரசுத் தலைவர் பதவிக்குள்ள பெருமை யையே இந்தப் போக்கு சீர் குலைத்துள்ளது.
குடியரசுத் தலைவர் பதவி என்பது அலங்கார பொம்மைப் பதவி அல்ல. அரசியல் அமைப்புச் சட்டத் தின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு. இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி அவரே.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும், நீதிபதிகளையும் நியமிக்கும் அதிகாரத்தை இந்திய அரசியல் சட்டத்தின் 124(2) பிரிவு அவருக்கு வழங்கியுள்ளது.
இந்திய அரசின் வரவு-செலவுக் கணக்குகளை ஆராய்ந்து சரிபார்த்து குடியரசுத் தலைவரிடம் அறிக்கை தாக்கல் செய்யும் அதிகாரம் படைத்த இந்தியக் கணக்காய்வர் - தலைமைத் தணிக்கையர் பதவியில் தகுதி வாய்ந்த வரை அமர்த்தும் அதிகாரத்தை அரசியல் சட்டத்தின் 148ஆவது பிரிவு குடியரசுத் தலைவருக்கு அளித் துள்ளது.
மத்திய-மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகள், மாநிலங்களுக்கு இடையே எழும் பிரச் சினைகள் ஆகியவற்றில் தலையிட்டு தீர்வு காணும் அதிகாரம் படைத்த மாநிலங்களின் இடையமை மன்றம் அமைக்கும் அதிகாரத்தை அரசியல் சட்டத்தின் 263ஆவது பிரிவு அவருக்கு வழங்கியுள்ளது.
மத்திய-மாநில வருவாயைப் பங்கீடு செய்தளிக்கும் அதிகாரம் படைத்த நிதி ஆணையத்தை அமைக்கும் அதிகாரத்தை அரசியல் சட்டத்தின் 280ஆவது பிரிவு அவருக்கு வழங்கியுள்ளது.
இந்திய ஒன்றியத்திற்கான அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தை அமைப்பதற்கான அதி காரத்தை அரசியல் சட்டத்தின் 316ஆவது பிரிவு குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
நாடாளுமன்றம், மாநில சட்ட மன்றங்கள் ஆகியவற்றுக்கான தேர்தல்களை நடத்துவதும் வாக்காளர் பட்டி யல்களைத் தயாரிப்பதும் தேர்தல் ஆணையத்தின் பணிகளாகும். இதற் கான தேர்தல் ஆணையத்தை அமைக் கும் அதிகாரத்தை அரசியல் சட்டத் தின் 324ஆவது பிரிவு அவருக்கு வழங்கியுள்ளது.
அட்டர்னி - ஜெனரல், உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ஆகியோரு டன் சட்டச் சிக்கல்கள் குறித்து ஆலோசனை செய்யும் அதிகாரம் குடி யரசுத் தலைவருக்கு உண்டு. சில குறிப்பிட்ட சிக்கல்களை உச்சநீதி மன்றத்தின் பரிசீலனைக்குக் குடியரசுத் தலைவர் அனுப்பிவைக்கலாம்.
நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினை குறித்து முப்படைகளின் தளபதிகளை அழைத்து ஆலோசனை பெறலாம். எந்த மாநிலத்திலும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அம்மாநில ஆளுநரை அழைத்து ஆலோசிக்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட அரசி யல் சட்ட ரீதியான அமைப்புகளான உச்ச நீதிமன்றம், அரசு அலுவலர் தேர்வாணையம், நிதியாணையம், தேர்தல் ஆணையம் போன்றவற்றுக் கான உறுப்பினர்களைத் தகுதி, திறமை ஆகியவற்றின் அடிப்படையில் குடி யரசுத் தலைவர் நியமிக்க வேண்டும். அதனால்தான் இந்த அதிகாரத்தை அவரிடம் அரசியல் சட்டம் அளித் துள்ளது. ஆனால், ஆளுங்கட்சியின் அரசியல் தலைமை விரும்பு கிறவர்களை இப்பதவிகளில் நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் குடியரசுத் தலைவர்களுக்கு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் பணி முதிர் வைப் புறக்கணித்துவிட்டுத் தலைமை நீதிபதி பதவியில் அரசியல் தலை மையால் பரிந்துரைக்கப்பட்டவரை குடியரசுத் தலைவர் நியமித்தபோது பல மூத்த நீதிபதிகள் தங்கள் பதவி களை விட்டு விலக நேர்ந்திருக்கிறது.
நேர்மையும், நடுநிலைமையும் நிறைந்தவர்கள் தேர்தல் ஆணையர் களாக நியமிக்கப்படுவதற்குப் பதில் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களைக் குடியரசுத் தலைவர் நியமித்த நிகழ்ச்சி களும் உண்டு.
மேலும் பல எடுத்துக்காட்டு களை அடுக்கிக் கொண்டே போகலாம். குடியரசுத் தலைவரின் பதவிக்குரிய மாண்பு இதன்மூலம் சீர்குலைக்கப் பட்டது. ஆனால் அவர்களை ஆட்டிப்படைத்த அரசியல் தலைமை அதுகுறித்து கொஞ்சமும் கவலைப் படவில்லை.
அரசியல் சட்டம் அதிகாரப் பூர்வமாக அளித்திருக்கிற தனது கடமைகளை நடுநிலையுடன் செய்வ தற்குக் கூரிய அறிவும் திறமையும் அனுபவமும் குடியரசுத் தலைவராக இருப்பவருக்குத் தேவையாகும். வெறும் தலையாட்டிப் பொம்மையாக அவர் செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்படுவது நாட்டிற்கே பெரும் தீங்கை விளைவிக்கும் என்பதைக் கடந்த காலத்தில் நாம் பார்த்தோம்.
இராஜேந்திர பிரசாத், இராதா கிருஷ்ணன் ஆகியோருக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் பதவியேற்ற வர்களில் பெரும்பாலோர் ஆமாம் சாமி களாகவே செயல்பட்டனர். அப்துல் கலாம் போன்ற ஓரிருவர் விதிவிலக்காக அமைந்தனர். அந்நியக் குடியுரிமையை இறுதிவரை வைத்திருந்த காரணத்தைத் துணிவாகச் சுட்டிக்காட்டி சோனி யாவை பிரதமராக்குவதற்கு அப்துல் கலாம் மறுத்தார். இத்தகைய துணிவு பல குடியரசுத் தலைவர்களுக்கு இல்லாமல் போனது.
பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நதிநீர்ப் பிரச்சினைகளும் எல்லைப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட முடியாமல் இன்னும் உள்ளன. இதற்கென்று அமைக்கப்பட்ட நடுவர் மன்றங்கள், எல்லைப் புனரமைப்பு ஆணையங்கள் போன்றவை அளித்த தீர்ப்பை மாநிலங்கள் ஏற்க மறுக் கின்றன. உச்சநீதிமன்றம் தலையிட்டு அளித்த தீர்ப்பும் ஏற்கப்படவில்லை. இந்த நிலைமையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிலைநிறுத்த வேண் டிய பிரதமர்கள் அரசியல் காரணங் களினால் அந்தக் கடமையைச் செய் யத் தயங்குகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் குடியரசுத் தலைவரா வது தலையிட்டு நீதியை நிலை நிறுத்தியிருக்க வேண்டும். அவர் வெறும் பார்வையாளராகவே இருந்து விட்டதை நாம் பார்த்தோம்.
நாடாளுமன்ற சனநாயகத்தை ஏற்றுக்கொண்டிருக்கிற நமது நாட்டில் பிரதமரும் அவருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவையும் உள்ளனர். மத்திய அரசு தனது பொறுப்புகளை செவ்வனே செய்ய உதவுவதற்காக நிதி ஆணையம், திட்டக்குழு, மாநிலங் களுக்கு இடையேயான ஆணையம் போன்றவை உள்ளன. இவை அனைத்தும் அரசியல் சட்ட ரீதியாக இயங்குபவவை. மேலும் இவை நாடாளுமன்றத்திற்குப் பதில் கூறக் கடமைப்பட்டவை.
ஆனால் பிரதமர் பதவி மறுக்கப் பட்ட நிலையில் சோனியா காந்தி பிரதமருக்கு மேலான பிரதமராகச் செயல்படும் வகையில் தேசிய ஆலோ சனைக்குழுத் தலைவர் பதவி உருவாக் கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் சட்ட சம்மதம் இல்லை. சுதந்திர இந்தியாவில் பிரதமர்களாக இருந்த யாரும் தங் களுக்கு மேலான அதிகாரம் படைத்த ஆலோசனைக் குழுவிடம் பணிந்து தங்கள் அதிகாரத்தை ஒப்படைத்தது மில்லை.
அமைச்சரவை செய்யும் முடிவு களைக்கூட மறு பரிசீலனை செய்து நிறுத்தி வைக்கும் அதிகாரம் படைத்த குழுவாக இது விளங்குகிறது. அமைச் சரவை உருவாக்கிய பல சட்ட முன் வடிவுகளை இக்குழு தலையிட்டு நிறுத்தியுள்ளது.
தனக்கு மேலான குழுவையும் அதன் தலைவரையும் சகித்துக்கொள் வதால்தான் மன்மோகன் சிங் பிரதம ராக நீடிக்க முடிகிறது போலும். அரசி யல் சட்டச் சம்மதம் இல்லாமல் அமைந்த இந்தக் குழு அமைச் சரவைக்கு மேலான அதிகார அமைப் பாகச் செயல்படுகிறது. அரசியல் சட் டத்தை அப்பட்டமாக மீறும் இத்தகைய போக்கைத் தடுத்து நிறுத்த குடியரசுத் தலைவராக இருப்பவர் முன்வர வில்லை என்பது வெட்கத்திற்கும் வேதனைக்குமுரிய ஒன்றாகும்.
குடியரசுத் தலைவருக்கு அரசி யல் சட்டம் வழங்கி யிருக்கிற உன்னத மான அதிகாரங்களைப் பயன்படுத்த விடாமல் தடுத்து அவரை வெறும் அலங்கார பதுமையாக வைத்திருப்பது நமது சனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கி உள்ளது.
நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறை ஆகியவற்றின் பணிகளை அரசியல் சட்டம் திட்டவட்டமாக வரை யறை செய்துள்ளது. ஆனால் தற் போது நிர்வாகத்துறையில் தலையிட்டு அதிரடியான முடிவுகளை நீதித்துறை எடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
எடுத்துக்காட்டாக நாட்டின் மிகப்பெரிய ஊழல்களான ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல் போன்றவற்றில் சி.பி.ஐ.யின் செயல் பாடு சரியாக இல்லை என்ற காரணத்தி னால் இந்த ஊழல்கள் பற்றிய விசார ணையை உச்சநீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்க முடிவு செய்தது. நீதித் துறையின் இந்தத் தலையீட்டின் வழி யாக மறைக்கப்படவிருந்த மாபெரும் ஊழல்கள் அம்பலமாயின. இந்த ஊழல்களுக்குப் பொறுப்பானவர்கள் பதவிகளில் தொடர பிரதமர் அனுமதித்தபோது அதைக் கண்டிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் தலை யிட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் நீதித்துறை தலையிடவேண்டிய அவசி யம் இருந்திருக்காது. நீதித்துறையின் கண்டிப்பின் விளைவாக. பதவிப் பொறுப்புகளில் இருந்த ஊழல் பேர்வழிகள் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்கும் இடையே சமன் செய்து சீர்தூக்கும் கோலாக விளங்கும் திறன் குடியரசுத் தலைவருக்கு இருக்க வேண்டும். ஆனால் அது இல்லாமல் போனது. இதன் விளைவாக நீதித் துறையின் தலையீடு தவிர்க்க முடியாத தாகிவிட்டது. குடியரசுத் தலைவரைப் போலவே நீதித்துறையும் இப்பிரச் சினையில் தலையிடத் தயங்கியிருக்கு மானால், இந்த ஊழல்கள் மூடிமறைக்கப் பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே குடியரசுத் தலைவர் பதவி என்பது மிகமிக முக்கியமான பொறுப்பு வாய்ந்த பதவியாகும். அரசி யல் ஆதாயங்களுக்காக இப்பதவியை வெறும் பொம்மைப் பதவியாக ஆக்கும் வகையில், இப்பதவிக்குரிய வேட்பாளரை எக்கட்சி தேர்ந்தெடுத் தாலும் அது மிகத்தவறான தாகும். 16ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலில் இதை மனதில் கொண்டு அரசி யல் கட்சிகள் முடிவெடுக்க முன்வர வேண்டும். குறிப்பாக மாநிலங்களின் உரிமையையும் சுயாட்சித் தன்மையை யும் காக்கும் காவலராகச் செயல்படக் கூடிய ஒருவரை குடியரசுத் தலை வராகத் தேர்ந்தெடுக்க மாநிலக் கட்சிகள் கூட்டாகச் செயல்படவேண் டும். மாநிலக் கட்சிகளின் கரம் ஓங்கி யிருக்கக்கூடிய பொன்னான இந்த வேளையில் இந்த அருமையான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாநிலக் கட்சித் தலைவர்கள் திட்டமிட்டும் தொலை நோக்குப் பார்வையுடனும் செயல்பட வேண்டிய தருணம் இதுவேயாகும். மாநிலங்களின் உரிமைகளை நிலை நாட்ட இது உதவுவதோடு குடியரசுத் தலைவரின் மாண்பையும் இது பாதுகாக்கும்.

நன்றி : "தினமணி' 23-5-12
 
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.