"பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்'' - உலகுக்கு அரைகுறையாய் தெரிந்ததை ஆணித்தரமாக வெளிப்படுத்துகிற உண்மைத் தொகுப்பு - ஈழமுரசு பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூன் 2012 16:56
வீறுகொண்ட வேங்கையாய் "தமிழனின் உணர்ச்சியாய் ரத்தத்தில் கலந்துவிட்ட தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைப் பற்றிய முழு விவரம் அடங்கிய புத்தகம் இல்லையே எனும் குறையை போக்குகிறது இந்த புத்தகம்.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். 1988ஆம் ஆண்டு முதல் பதிப்பாக 104 பக்கங்களை கொண்டு வெளிவந்தது. இரண்டாம் பதிப்பாக 1208 பக்கங்களுடன் வெளிவந்து இருக்கிறது.

தேசியத் தலைவர் பற்றிய முழு விவரமும் அடங்கிய புத்தகம் வரவேண்டும் என்றால் அது அவரே சுயசரிதை எழுதி இருந்தால் தான் சாத்தியப்பட்டு இருக்கும். ஏனெனில் அவரின் வாழ்க்கை அவ்வளவு துன்பங்களும், சாகசங்களும் நிறைந்தது. ஆனால் இந்த புத்தகத்தில் அவரே பகிர்ந்து கொண்ட பல தகவல்கள் உள்ளன என்று விளக்கம் அளிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

புத்தகத்திற்கு அணிந்துரை கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள். தேசியத் தலைவரின் வாழ்க்கையை வெறும் வரலாறாக மட்டும் சொல்லாமல் அத்துடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றியும் விரிவான விளக்கம் உள்ளது.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், தளபதி கேணல் கிட்டு, தளபதிகள் புலேந்திரன், பொன்னம்மான், விக்டர், சீலன், இளங்குமரன், குமரப்பா ஆகியோர் உடனான தேசியத் தலைவரின் நட்பை பற்றிய குறிப்புகள் சுவாரசியமானவை. தேசியத் தலைவர் கைப்பட எழுதிய கடிதங்கள், சிறு வயதில் இருந்து இளமைப் பருவம், போராட்டக் களத்தில், குடும்பத்துடன் என அவரது அழகான வண்ணப்படங்கள் தொகுப்பு அருமை.

மேலும், பெட்டிச் செய்தியாக பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக நெடுமாறன் அய்யா அவர்களின் இல்ல திருமண விழாவில் தவறாமல் பிரபாகரனின் பெற்றோர்கள் கலந்துகொண்டார்களாம். அதே சமயத்தில் மணமக்களுக்கு தேசியத் தலைவர் சார்பாக மோதிரம் பரிசளிக்கப்பட்டது போன்ற இரகசிய தகவல்களை எல்லாம் இப்புத்தகத்தில் படிக்கும் போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

இராசீவ்காந்தி - தேசியத் தலைவர் சந்திப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், தியாகத்தீபம் திலீபனின் உண்ணாநிலை போராட்டம் ஏற்படுத்திய புரட்சி, அமைதிப்படை ஏற்படுத்திய அழிவு, தலைவரும் அவரது துணைவியரும் தமிழீழப் போராட்டத்தில் தம்பதியானது என ஒவ்வொரு தகவலும் உலகுக்கு அரைகுறையாய் தெரிந்ததை ஆணித்தரமாக வெளிப்படுத்துகிற உண்மைத் தொகுப்பு இந்தப் புத்தகம்.

விடுதலைப் புலிகளைப் பற்றியும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும், அதனை தலைமையேற்று நடத்திய தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றியும் என அனைத்து தகவல்களையும் ஒரே தொகுப்பில் கொண்டுள்ள இந்தப் புத்தகம் ஒரு வகையில் களஞ்சியமாகிறது.

இந்திய இலங்கை உடன்படிக்கை, ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை, இடைக்காலத்தில் தன்னாட்சி அதிகாரத் திட்டம் ஆகியன இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு இனத்தின் போராட்ட வரலாற்றையும் அதை செயலாக்கிய தலைவரைப் பற்றியும் விளக்கம் அளிக்கும் இந்த புத்தகம் தமிழர்கள் படித்து பாதுகாக்க வேண்டிய பொக்கிசம்.

நன்றி :

ஈழமுரசு 2-5-2012
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.